அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 2
அடுத்த தலைமுறைக்கான அரசியலில் தமிழ் நாட்டில் நடக்கும் விஷயங்களை விவாதித்த இந்த வேளையிலேயே அமெரிக்காவில் நடந்த சமீபத்திய தேர்தலில் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்த வெற்றி எண்ணங்களின் பயணத் திசை சரி என்றே உணர்த்துகிறது. நாம் வசிக்கும் இந்த 2008 மாவது ஆண்டில் நிறவெறி என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக யாரவது கருதுவீர்களேயானால் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் அதுதான் உண்மை. FOX NEWS என்னும் செய்தி தொலைக்காட்சியில் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான மாலை பொழுதில் ஒளிபரப்பான அனைத்து விவாத நிகழ்ச்சிகளிலும் பட்டவர்த்தனமாக தெரிந்ததை பார்த்தவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். ஒபாமாவிற்கு வெற்றி என்ற செய்தி கிடைக்க கிடைக்க FOX NEWS தன்னுடைய விவாதங்களை இப்படியாக முன் வைத்தது, அதாவது O Rellly Factor என்னும் நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் O'Rellly "நான் பார்த்த ஒரு தொலைக்காட்சியில் ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்த நிருபர் ஒபாமா வெற்றியை கண்ணீருடன் விவரித்ததை பார்த்து அதிர்ந்து போனேன் என்ன கொடுமை அது, ஒரு நிருபர் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் ? இது அவர் இந்த தொழிலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இதையெல்லாம் சொன்னால் ஏதோ வயசானவன் புலம்புகிறான் என்று சொல்வார்கள் மேலும் இதை எல்லாம் பார்ப்பதற்கு பேசாமல் செத்து விடலாம்னு தோன்றுகிறது " . குறித்து கொள்ளுங்கள் இதை சொன்ன அவர் ஒரு வெள்ளைக்காரர். அதே FOX NEWS தொலைக்காட்சியில் அடுத்ததாய் வந்த மற்றுமொரு நிகழ்ச்சியான Hannity's America யில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் சொல்கிறார் "நான் குடியரசு கட்சிக்குத்தான் வாக்களித்தேன், அதனால் நான் இப்பொழுது வருத்தப்படவும் இல்லை." இப்படி சொன்னவரும் ஒரு வெள்ளைக்காரர் தான். ஓபாமா வெற்றி பெற்றதற்காக அழுத ஓர் கறுப்பின நிருபருக்காக "செத்து விடலாம்னு" நினைத்த O'Rellly இந்த நிகழ்வு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை..? சரி அவர் மறுநாள் நிகழ்ச்சியிலாவது சொல்லுவார் என்று எதிர் பார்த்து ஏமாந்துதான் மிச்சம். சரி இந்த நிகழ்வை உங்களால் ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணத் தோன்றுகிறதா..? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அந்த நியதி ஏன் பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாகவே வளர்க்கப்பட்டு இன்று தேசத்தின் ஏன் இந்த உலகத்தின் உயர்ந்த பதவியை அடைந்த தன் இனத்தை சேர்ந்தவருக்காக கண்ணீர் விட்டதை ஏன் "செத்து விடலாம்னு" தோணுகிற அளவிற்கு எடுத்துக்கொண்ட நண்பர் O'Rellly-க்கு சொல்ல கூடாது ? அமெரிக்காவில் இன்றும் கறுப்பின மக்கள் பல விதங்களிலும் ஒதுக்கபடுகிறார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சி. சரி விஷயத்திற்கு வருவோம், ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை பல விதங்களிலும் முன்னேற்றுவதே ஒரு நல்ல அரசியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டிற்கு அழகு. இலங்கை தமிழருக்கான உண்ணா நோன்பில் பேசிய நடிகர் கமல் சொன்னதை போல "உரிமைகள் மறுக்க படும் வேளையில் தீவிரவாதம் பிறக்கும்". அது மனித இனத்திற்கு நல்லதல்ல.