Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தனை


இந்த தலைமுறையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவரும் எனக்கு பிடித்தவருமான இயக்குனர் ஜனநாதன் அவர்களின் பேட்டியை இணையதளம் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. இதில் அவர் சொன்னார் "என்னை சினிமாவை நோக்கி நகர் செய்தது மார்க்சிய சிந்தனைகளே". சந்தேகமே இல்லாமல் என்னை கவர்ந்த படங்களில் "அன்பே சிவம்" முதலிடத்தில் இருக்கும். இப்படி என் எண்ணங்களில் சிவப்பு சாயம் பூசப்பட்டது நான் வேலைக்கு வந்த பிறகு தான். அதற்கு முன்பு அம்மாவும்,அப்பாவும் ஒருசராசரி அரசாங்க ஊழியர்கள் எனவே
அவ்வப்பொழுது என்னால் தொழிலாளர் உரிமை,கோரிக்கை என சிலவற்றை காதால் கேட்டிருக்கிறேன். அவற்றை உணர எனக்கு பல ஆண்டுகள் ஆனது. என்ன இருந்தாலும் நாமலே முன்னின்று குத்தை வாங்கும் போதுதானே அதன் வலி தெரிகிறது. சமீபத்தில் தான் 2007 ல் வெளிவந்த "கற்றது தமிழ்" படத்தின் மதன்ஸ் திரை பார்வை என்ற நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. அதில் அந்த படத்தின் இயக்குனர் ராம்  சொல்வார்,"மென் பொருள் துறையில் உள்ளவர்களை பார்த்தால்
பாவமாகத்தான் இருக்கிறது. ஏன்னா அவர்களின்  வாழ்கை முறை, பத்து பேர்களை கணக்கில் காண்பித்துவிட்டு மூன்று பேர்களை மட்டுமே வைத்து தொழில் நடத்துவார்கள், நிறுவனத்தின் முதலாளி என்னவோ பத்து பேரின் சம்பளத்தையும் பெற்று கொள்வார் ஆனால் மூன்று பேர்கள் பத்து பேர்களின் வேலையை செய்ய நேரிடுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பணி சுமை. இது மட்டுமின்றி இவர்களுக்கு வேலையில் நிலவும் ஒரு நிலையாமை இதனால் ஏற்படும் ஒரு வித மன இறுக்கம். இது போக இவர்கள் நிறுவனத்தில்  யாரையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டால் இவர்கள் வேறு எங்கு வேலைக்கு போனாலும் அங்கு முன்பு வேலை செய்த நிறுவனத்திலிருந்து சரியானபடி இவர்களை பற்றி அறிக்கை தர மாட்டார்கள்.மற்றபடி எனக்கு மென் பொருள்  துறையில் வேலை செய்பவர்கள் எந்த வித காழ்புணர்ச்சியும் கிடையாது. " என்றெல்லாம் சொன்னார்.
நானும் இந்த துறையில் கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாக வேலை செய்பவன் என்ற முறையில் ஒன்றை சொல்ல முடியும். இயக்குனர் ராம் சொன்னதில் 80% உண்மை இருக்கிறது. இந்த துறை உலக மயமாக்கலின் முகமாவே பார்க்கப்படுகிறது. ஆனால் நான் இதை முதலாளித்துவ சித்தாந்தங்களின் முகமாவே பார்க்கிறேன். இன்னும் இந்த துறையில் தொழிற் சங்கங்கள் நுழைய முடியாமல் இருப்பதே இதற்கான சான்று. காரணம் என்னன்னு பார்த்தால் வேறு ஒண்ணுமில்லை இந்த துறையில் பெரும்பாலான வேலைகளை தருவது அமெரிக்கா அது பின்பற்றுவது  முதலாளித்துவம். இங்கே இருந்தாலும்  என்னால் முதலாளித்துவ சித்தாந்தங்களை ஏற்றுகொள்ள முடிவதில்லை. சரி அப்ப உனக்கு கம்யூனிசம் தான் பிடிக்கும், அப்படின்னு முடிவு பண்ணிடாதிங்க. மக்களாட்சியை விட சிறந்த ஆட்சி முறை இந்த உலகில் இல்லைன்னு மிக தீவிரமாக நம்பும் சராசரி ஆளு தான்.
பள்ளி கூடம் படிக்கிற காலத்துல எப்படா இந்த பரீட்சை எல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கிறதுன்னு தோணும். வேலைக்கு போயிட்டா நிம்மதியா இருக்கலாம் அப்படின்னு நினைக்க தோணும். ஆனா வேலைக்கு வந்த பிறகு தான் தெரிந்தது பேசாம சின்ன பையனா பள்ளிக்கு போற காலத்திலேயே இருந்திருக்கலாமோன்னு. அது மாதிரி முதலாளித்துவத்தை ஆதாரமாக கொண்டு செயல்படும் அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்த பிறகு "சிவப்பு சிந்தனை" அதிகமாகியது. ஏன் எனது முதலாளிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அதற்காக அவரை அலட்சியமோ அவமானமோ செய்யனும்னு சொல்ல வரலை. அவரும் ஒரு மனிதர் தான். ஆனா இங்கே நடப்பது என்ன தெரியுமா..? முதலாளிகள் கூட இவ்வளவு மரியாதையை எதிர்பார்க்க மாட்டார். ஆனால் ஒரு குழு தலைவன் (TEAM LEADER) எதிர் பார்க்கும் மரியாதையை யாராலும் கொடுக்க முடியாது. அதாவது அவனை பார்த்து பயப்படனும் ஆனா அதை அவன் நேரடியா உணரக்கூடாது. என்ன அவன் ஒரு வேலை இவன் நம்மளை காக்கா புடிக்கிரான்னு நினைச்சுற கூடாது.  நாம நினைக்கிற விஷயங்களை அவனிடம் சுதந்திரமா சொல்ல கூட முடியாது. அவன் சொல்றதை கேட்டு அதை வரி மாறாமல் செயல் படுத்தனும், சுருக்கமா சொல்லனும்னா ஒரு ராணுவ வீரனை போல.  வேலைபளு அல்லது மனஅழுத்தம் ஏன் இந்த துறையில் இருப்பவர்களுக்கு  வருதுன்னா இந்த மாதிரியான மேல் அதிகாரிகளின் மிரட்டலினால்தான். அவனை கேட்டால் அவனுக்கு மேல் உள்ள அதிகாரியை சொல்லுவான் அவன் அவனுக்கு மேல் உள்ளவன் இப்படியே போயி அது அந்த நிறுவனத்தின் முதலாளியில் முடியும். அர்ஜுன் "முதல்வன்" படத்துல சொல்ற மாதிரி "Hey everybody man"   என்பது போலதான் சொல்ல தோணும். இங்கே என்ன கடைசியா ஒரு முதலாளி அல்லது முதலாளிகள் குழு சந்தோசாமா இருக்கணும்.  கீழே இருக்குறவன் எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை. இன்னொரு விஷயம் தெரியுமா எவ்வளவு வேலை செஞ்சாலும் திருப்தியடையாத மாதிரியே தன்னை காமிச்சுகிரவந்தான் நல்ல தலைவன் அப்படின்னு சில வெறி பிடிச்ச தலைவர்கள் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். இதை எதிர்த்து கேட்டால் என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன். சரி வேற தொழிலை பாருன்னா.. நான் அதுக்குதானே படிச்சிருக்கேன், அந்த வேலையைதானே பார்க்க முடியும்...? கீழே வேலை செய்யும் தொழிலாளியும் தன்னை போலவே ஒரு மனித பிறவிதானே அப்படின்னு எண்ணி பார்க்க சொல்லக்கூடாது இதை சொன்னா உனக்கு ஏன் இந்த சிவப்பு (கம்யூனிச) சிந்தனைன்னு என் சக ஊழியர்களே சொல்ல கேட்டிருக்கிறேன். அப்ப யோசிச்சதுதான் இந்த கட்டுரை பிறக்க காரணம். இது ஒரு வகைல தவறு என்பது போல தோன்றலாம். எனக்கு தெரியல. ஆனா இப்போதைக்கு, இந்தநொடிக்கு நான் "சிவப்பு சிந்தனை" கொண்டவனகா த்தான் சிலருக்கு தோன்றுகிறேன்.  அதுக்காக நம்ம ஊர்ல இருக்குற கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கிற ஆளு நானில்லை. "அன்பே சிவம்" படத்தில் கமல் சொல்வதைபோல கம்யூனிசமும் ஒரு வகை உணர்வுதான். அதை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.
எல்லாருக்கும்
 எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை விட எல்லாருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அவசியம். இதில் நிறமோ,இனமோ மொழியோ, ஏனைய பிரிவினைகளோ காரணமாக இருத்தல் கூடாது. இதை நிறைய வகைகளில் ஒத்து போவது சிவப்பு சிந்தனைகளே.


Read more...

அட ஆமாம் இல்லை


"அட இதுதான் இதுல மேட்டரா..?" "அட இது எப்படி நமக்கு தோணாமல் போயிற்று..?" "அட இதுல இப்படி ஒரு ஆச்சர்யம் இருக்கா..?"  இப்படி நம்மை கேட்க வைத்த
 சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கலாம். நம்மில் ஏற்படும் பெரிய பெரிய மாற்றங்களுக்கு, நல்ல சிந்தனைகளுக்கு  அன்றாடம் நாம் சந்திக்கும் சாதரண  மனிதர்களின் ஒரு சொல் கூட காரணமாக இருக்கலாம்.      சில விடயங்கள் நாம்  எதிர்பார்க்காத அல்லது மிகவும் பரிச்சயமில்லாத  ஒருவர் மூலமாக நம்மை வந்தடையும் ஆனால் அதைத்தான் நாம் வாழ்கை முழுமைக்கும் பயன்படுத்துவோம். சில பேர் சொல்வதை போல "சத்தியசோதனை" படித்தேன் சத்தியம் தவறாமல் நடக்க கற்றுக்கொண்டேன் அப்படின்னு என்னால சொல்ல முடியல. ஏன் நீங்க கூட அப்படித்தான்னு நான் நினைக்கிறேன். ஒரு சில விடயங்களை ஒரு சிலர் சொல்வதால் மட்டுமே அது நமக்கு பிடித்துபோகிறது. ஆனால் பெரும்பாலான விடயங்கள் நமக்கு பிடித்து போவதற்கு அதை சொல்லும் நபரை விட சொல்லப்படும் காலமும் நேரமும் முக்கியம் அப்படின்னு நான் நினைக்கிறேன்.அது வரலாற்று  உண்மையாக இருந்தாலும் கூட.
ஒரு நண்பரை, நண்பரின் உறவினர் என்று கூட சொல்லலாம், அவர் பெயர் கோபி. அவருடன் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது காரில் ஒரு தத்துவ பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அவர் கேட்டார் "பெரும்பாலனவர்களுக்கு ஏன் தத்துவ பாட்டு பிடிக்குது தெரியுமா..?" அப்படின்னு "தெரியலையே" அவர் சொன்னார் "நம்மில் பெரும்பாலனவர்கள் நிச்சயம் தத்துவ பாடலில் அடிக்கடி வரும் தோல்வி,துரோகம்,ஏமாற்றம் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம் அதனால்தான் அது பிடிக்கிறது". என்றார். நான் அப்படியே ஒரு கணம் உறைந்தே போனேன். அட ஆமாம் இல்லை  என்று தோன்றியது. இதுல மிகப்பெரிய உண்மை இருக்குது. எந்த ஒரு சிறு நிகழ்வும் நம்மை பாதிக்கிறது என்றால் அது நம்மை கடந்து போனதாக இருக்கும் இல்லை நம்மை கடக்க கூடாது என நம் மனம் எண்ணியதாக இருக்கும். அதில் ஒளிந்திருப்பது ஒரு சுயபட்சாதாபமோ அல்லது சுயநலமோ தான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பாட்டு கேட்டு வருகிறேன், இது நமக்கு தோணலையே. அப்படின்னு அவர் சொன்னதும் தோணியது. என்னை விட வயதில் பத்து வயது சின்னவர்தான் என்றாலும் அவர் சொன்னதை நான் பல சந்தர்பங்களில் நினைப்பதுண்டு. அவரையும் தான்.
அமெரிக்க கனவில் மிதந்து கொண்டே அலுவலகம் போன நாட்களில் அங்கு கூட வேலை பார்க்கும் நண்பர் சேதுசரவணன் என்பவர் கேட்டார். "நாம எல்லாம் ஏன் அமெரிக்கா போயி அங்க வெள்ளைகாரனுக்கு உழைச்சு கொட்டுறதை பெருமையா நினைக்கிறோம்னா, அதுக்கு காரணம் நம்ம உடம்புல ஓடுற அடிமை ரத்தம்தான்" அப்படின்னு சொன்னார். இதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது அது இப்படி நீ அப்படி சொல்லலாம்னு சொன்னேன் சண்டை போட்டேன். ஆனா அமெரிக்கா வந்த பிறகும், அமெரிக்காவிலிருந்து இந்தியா போய் வரும்போதும், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அவர் சொன்னது உண்மைதான் என உணரவைத்தன. இங்கு நான் பார்க்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஒரு அமெரிக்கன் நண்பர் இருக்கிறார் என்று சொல்வதையே பெருமையாக கருதுகின்றனர்.  (இங்கு நான் அமெரிக்கன் என்று குறிப்பிடுவது அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்களை. ஆமாம் வெள்ளையர்கள் ஒன்றும் இந்த அமெரிக்க நிலத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல இங்கிருந்து செவ்விந்தியர்களை வெள்ளைக்காரன் பாணில சொல்றதுன்னா நேடிவ்  அமெரிக்கன்ஸ், அவுங்களை எல்லாம் துரத்திட்டு ஆக்கிரமிச்ச பகுதிதான் இது).  அதாவது வெள்ளைக்காரர்கள் மன ரீதியாக நம்மை மாற்றியமைத்ததுதான் இதற்கான காரணம். நம்ம பாட்டன், முப்பாட்டன் மட்டுமல்ல நமக்கும் அதே உணர்வு இருக்குன்னா அதன் வீரியம் புரிகிறது.  அட ஆமாம் இல்லை ன்னு நானும் அதை சந்திக்க நேர்ந்த பொழுதுதான் தோன்றியது.  "அப்ப நாம காலா காலத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து இந்த மண்ணுக்கு உரமாக வேண்டியது தானா..?" அப்படிங்குற ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை அவருக்கிட்ட கேட்டப்ப அவரு சொன்னது "நாம வெள்ளைகார வுங்கலால மட்டுமல்ல பல வேற்று தேசத்து நாட்டவர்களால் படையெடுக்கப்பட்டு ஆளப் பட்டிருக்கிறோம். எனவே அது அவ்வளவு சீக்கிரமா நம்ம உடம்புல(மனசுல) இருந்து போகாது, ஆனா நாம கொடுக்கிற நல்ல சூழலால நம்ம குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இந்த மாதிரியான அடிமை புத்தியிலிருந்து விடுபட நிறைய வாய்ப்பிருக்குது. இது எனக்கு எங்க சிதம்பரம் காலேஜ் பேராசிரியர் ஒருவர் சொன்னார்". இவ்வாறாக நண்பர் சொன்னதை நான் பலமுறை உணர்ந்ததோடு மட்டுமல்ல வெள்ளைக் காரர்களுக்கென்று கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும், அதாவது எதிரிலிருப்பவன் வெள்ளைக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம், குறைத்துக்கொண்டுள்ளேன். அப்ப நீ சுத்தமா அதை போக்கலையா அப்படின்னு கேட்டா நண்பர் சொன்னதுதான் "அவ்வளவு சீக்கிரம் இந்த அடிமை புத்தி போகுமா..?"
இது மட்டுமில்ல இன்னும் பல விடயங்கள்  நம்மை சும்மா அப்படி கடந்து போகிறவர் கூட சொல்லிவிட்டு போயிருக்கிறார், அவற்றை அப்பப்ப உங்ககிட்ட சொல்றேன்.


Read more...

மனிதம் வளர்ப்போம்



. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரிச்மொன்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக  சீரழித்துள்ளது. இதை இன்னும் ஒரு பத்து பேர் பார்த்திருக்கிருகிறார்கள் ஆனால் யாருமே போலீசை கூப்பிடவில்லை. அத்துடன் இந்த "பார்வையாளர்கள்" அந்த கொடூரத்தை படம் பிடித்துள்ளார்கள். எங்கே போனது மனிதாபிமானம்..? குற்றம் செய்பவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களுக்குதான் தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்லுகிறது (அமெரிக்க சட்டமும் இதை சொல்லுதான்னு தெரியலை). அப்படி பார்த்தால் இந்த பதினைந்து பேரும் மிகப் பெரிய தண்டனைக்குரியவர்கள். இது குறித்து சமீபத்தில் C.N.N டி.வியில் வந்த ஒரு கலந்தரையாடல் நிகழ்ச்சி (LARRY KING LIVE), பல விஷயங்களை அலசியது. அதில் குறிப்பாக தீபக் சோப்ரா என்பவர் சொன்ன விஷயம், இது போன்ற கொடூர மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் வளர்க்கப்படும் சூழலில் இது போன்ற கொடூர விஷயங்கள் மிகவும் சாதரணமாகவும் அன்றாட நிகழ்வுகளாகவும் ஆகிப்போவது தான். வன்முறை அவர்கள் வாழ்கையின் ஒரு அங்கம், எனவே இதை அவர்கள் சாதரண நிகழ்வுகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மனித மூளையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. இவற்றை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை அதனால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1. Limibic Brain
2. Reptalian Brain
3. Cardical Brain
இதில் Limbic Brain என்பது மனிதனின் உணர்வு சம்மந்தபட்டவைகளை தீர்மானிப்பவை. இந்த பகுதி பாதிக்கப்பட்டாலோ அல்லது பழுதடைந்தாலோ சமூகத்திற்கெதிரான சிந்தனைகளும்,அடுத்தவர்களின் நலனை பற்றி அக்கறை கொள்ளாத மன நிலையும் ஏற்படும். இதை சரி பண்ணி கொள்வதற்காகத்தான் ஆன்மிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களை குழந்தை பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் அதாவது நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது அது நாம் தவறு செய்யும் போது தண்டிக்கும். என்றெல்லாம் விளக்கி சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்தே தியானம் போன்றவற்றை கற்று கொடுத்தலின் மூலமாக அவர்கள் மூளையின் Limbic பகுதி பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளலாம். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Daniel Amen என்ற உளவியாளர் (Psychiatrist) சொல்கிறார், மூளையின் முன் பகுதியில் தான் நல்லது கெட்டதை பகுத்தறியும் தன்மை உள்ளதாகவும் அதை குடியின் மூலமாகவும், போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதன் மூலமாகவும் இழக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் படத்தில் வரும் வாலி பாடலை போல "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." . குழந்தைகளுக்கு மனிதத்தை போதிப்போம் மனிதம் வளர்ப்போம்.


Read more...

ஆணியே புடுங்கவேணாம்


அனில்அம்பானிக்கும், முக்கேஷ்அம்பானிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக நிலை ஏற்படாததால்  அன்றைய தினம் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தாக நான் சில தினங்களுக்கு முன் செய்தி படித்தேன்.  ஆனால் கிட்டத்தட்ட அதே நாளில் அமெரிக்காவில் ஒரு அறிக்கை வெளியடப்படுகிறது அதில் ஒருநாளைக்கு சராசரியாக 7000 பேர் வேலை இழப்பதாக. ஆனால் அன்றைய அமெரிக்க பங்கு சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது. அது அமெரிக்கா, இது இந்தியா அப்படின்னு கைப்புள்ள மாதிரி நீங்கள் சொல்லலாம். ஆனால் இங்கு நிகழ்பவை எல்லாம் காமெடியா தெரியலை, ரொம்ப சீரியசான ஒரு கொள்ளை சட்ட பூர்வமாக அரங்கேறுதொன்னு தோணுது.
பங்கு சந்தை கிட்டத்தட்ட நம்ம சுதந்திரம் வாங்குற காலத்திலிருந்தே இருந்து வருவதாக அறிகிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் பங்குசந்தையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்ததான்னு தெரியலை. ஏன்னா என்னை பொறுத்தவரை பங்கு சந்தை என்பது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான ஒரு அமைப்பு. சரி அது பாட்டுக்கும் அது வேலைய  பண்ணட்டும் எனக்கென்ன அப்படின்னு நடுத்தர மக்களோ, அன்றாடம் தான் சம்பாதிப்பதை ஒரு சிறு சேமிப்பாக்க வங்கி கணக்கு தொடங்கும் சாதரண மக்களோ இருக்க முடியாது. இதன் வளர்ச்சிக்கு முழுதாக துணைபோவதுதான் உலக தாரளமயமாக்களின் குறிக்கோள் அல்லது செயல்பாடு. சாதாரண குடிமகன் ஒருவன் தான் பங்குசந்தையின் நிழல் படியாமல் தனது வாழ் நாளை கடத்த நினைத்தால் அது  இன்றைய சூழலில் நடக்காத காரியம்.
தெரிந்தோ தெரியாமலோ  ஒவ்வொருவரின் பாக்கெட் பங்குசந்தையால் திருடப்படுவதை எல்லோரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.  ஒருவன் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையில் வைக்கப்படும் பணம் போய் சேருமிடம் பங்குச்சந்தை.இப்படி எப்படி பார்த்தாலும் பணம் போய் சேருமிடம் பங்குசந்தைதான்.  சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு பங்கு சந்தைகளின் குறீயீட்டு எண் குறைவதை கொண்டே கணக்கிட பட்டது. இந்த சூதாட்டத்தில் கை தேர்ந்தவர்களே பணத்தை பெற முடியும்.  அப்படி பட்ட பங்கு சந்தை அனில் அம்பானிக்கும் முக்கேஷ் அம்பானிக்கும் ஒரு சண்டைன்னா தன்னை சுருக்கி கொள்ளுமாம் ஆனால் அதே பங்கு சந்தைக்கு தனது வேர்வையால் பங்கு சேர்க்கும் சாதாரண மனிதனின் வேலையிழப்பிற்கு செபி மன்னிக்கவும் செவி சாய்க்கதாம். இது எப்படி இருக்கு..? ஒரு நாட்டின் பங்கு சந்தை அந்த நாட்டின் பொருளாதாரத்தின்  முகமாவே பார்க்கப்படுவது. அப்படி இருக்கும் பொழுது நாட்டில் உள்ள குப்பனுக்கும்,சுப்பனுக்கும் ஆதரவா இருக்கனுமில்லையா..? ஆனால் அது இங்க நடப்பதில்லை அதான் இங்கே பிரச்சனையே.
 "எனக்கு தான் கோபம் வராதுங்க்றேன்ல அப்புறம் ஏன்யா அதையே தூண்டுறீங்க..? " அப்படின்னு கைப்புள்ள சொல்ற மாதிரி, நான்தான் பங்குசந்தையே வேனான்கிறேன் அப்புறம் வலுகட்டாயமா PF ங்குற பேர்ல வாங்கி அதை பங்குல போட்டா என்ன அர்த்தம்..? சரி அப்படியே போடட்டும் அப்புறம் ஏன் என்னை போல ஏழாயிரம் பேருக்கு வேலை போறப்ப பங்கு சந்தை கீழே போக மாட்டேங்குது..? மேலே உள்ள பணக்காரர்களுக்கு கீழே உள்ளவன் காசு வேணும், அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. இப்படி நினைக்கிறவங்க திருடனைவிட மோசமானவங்க. இவங்க எங்களுக்காக ஆணியே புடுங்கவேனாம். எங்களை தொந்தரவு பண்ணாம அவுங்க வேலைய பார்த்தா போதும்.  அப்படிங்கறது தான் என்னை போன்றவர்களின் வேண்டுகோள்.


Read more...

பதிவுலகம் பற்றிய ஒரு பதிவு


சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களின் விமர்சனத்தை அன்றைய தினமே
படித்து தெரிந்து கொள்ள முடிகிறது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூகுள் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது, மனசு சோர்வாக இருக்கும் போது படித்து தெளிந்து கொள்ள என்னை மாதிரியே தவறு செய்து திருத்திக்கொண்ட ஒரு சக நண்பனை பார்க்க முடிகிறது, இவற்றை எல்லாம் எம் தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளமுடிகிறது.  காரணம் தமிழ் வலைபூக்கள் அல்லது வலைப்பதிவுகள். ஒரு தமிழனா பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தாலும், அந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் உணர ஆரம்பித்துள்ளேன். எனக்கு தெரிந்து வேறு எந்த இந்திய மொழிகளுக்கும் இவ்வளவு வலைப்பூக்கள் அந்தந்த மொழிகளிலே இருக்கிறதா
என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. அனேகமாக இதற்கான விடையையும் நான் ஒரு தமிழ் வலைப்பூவிலேயே காண்பேன் என்று நம்புகிறேன்.  குடும்ப சண்டை,
சொந்த அனுபவங்கள்,தகவல் தொழில் நுட்பம்,இனப்பிரச்சினை,
சர்வதேசபிரச்சனை,ஜாதகம்,ஆன்மிகம்,பகுத்தறிவு,
இன்னும் எவ்வளவோ, விஷயங்களை அலசும் ஒரு பண்பு அல்லது திறமை நம்ம
தமிழ் மக்களுக்கே உரித்தானதாக நான் உணர்கிறேன். தொலை தொடர்பு துறை வளர்ந்த பிறகு நம் மக்களின் வாழ்க்கை முறையிலேயே ஒரு மாற்றம் தெரிகிறது, தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், அதன் பாதிப்பை தனது சக மனிதர்களுக்கு உணர்த்தவும் மக்கள் பழகி கொண்டது என்னை பொறுத்தவரை வரவேற்கத்தக்கதே. சிலர் இதை வியாபரமாக்கலாம், சிலர் தங்கள் மீதான கவனத்தை ஒட்டுமொத்த இந்த சமூகமும்  திருப்பவேண்டும் என்ற நோக்கிலும் சொல்லலாம் ஆனால் அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவு. 
பதிவுலகம் நிறைய கதவுகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும்  திறந்துவிட்டுள்ளது. எல்லா விஷயத்திலும் விதிவிலக்குகள் உண்டு, அது மாதிரி ஒன்றிரண்டு தவறான வலைப்பதிவுகள் இருக்கலாம். ஆனால் பல தமிழ் பதிவுகள் சரியான திசையை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகிறேன். 
இந்த மாதிரியான ஒரு  கும்பலில் நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன்.


Read more...

விசுவாமித்திரனின் கம்யூனிச சிந்தனை

கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜரிஷி-ங்குற படம் பார்த்தேன். அதுல விசுவாமித்திரன் எப்படி முனிவரானர்..? ஒரு நாட்டின் அரசனாக இருந்த விசுவாமித்திரன் (அரசராக இருக்கும் பொழுது அவர் பெயர் என்ன என்பதை நான் மறந்துட்டேன்), தனது நாடு அண்டை நாடுகளுடன் போர் புரிந்து வெற்றி மேல் வெற்றி குவிப்பதை கண்டு பெறும் மகிழ்ச்சி கொள்கிறார். அரசவையில் ஒரு நாள் தனது மகிழ்ச்சியை தனது அரசவை சகாக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வழக்கு வருகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான தேரில் வந்த பொருள்களை சில கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள் அவர்களை காவலர்கள் பிடித்து வந்து அரசர் முன் நிப்பாட்டுகின்றனர். அரசருக்கு ஆச்சர்யம் என் நாட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன், என் நாட்டில் திருட்டா..? அதுவும் மன்னருக்கு வந்த உணவுகளை திருட முற்பட்டிருக்கிறார்களே..? அப்படின்னு ஆச்சர்யம். அமைச்சரிடம் விளக்கம் கேட்கிறான் அரசன், அமைச்சர் சொல்கிறார் நாம் தொடர்ந்து போர் மேற்கொண்டிருந்ததால் மக்கள் விவசாயம் பக்கம் கவனம் செலுத்தமுடியவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. உணவு பஞ்சம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது. அரசர் கேட்கிறார் அப்ப இந்த உணவு ..?  "இது வஷிஷ்டர் என்ற முனிவரின் ஆசிரமத்திலிருந்து வருகிறது" என்று அமைச்சர் விளக்குகிறார். "நாடே பஞ்சத்தில் இருக்கும்போது அந்த முனிவரிடம் மட்டும் எப்படி..? " என்று அரசர் வினவ, மீண்டும் அமைச்சர் விளக்குகிறார் "அரசே அவரிடம் காமதேனு என்று ஒரு பசு இருக்கிறது, அது கேட்டவை எல்லாம் தரக்கூடியது. அதன் மூலமாகத்தான் இந்த உணவை வரவழைத்து நீங்கள் பசி ஆற வேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளார். " என்று. அரசன் உடனே அந்த முனிவரின் ஆசிரமம் நோக்கி விரைகிறான், "நீங்கள் எனக்கு உணவு கொடுத்தது போலவே அந்த காமதேனுவை கொண்டு என்நாட்டு மக்களுக்கும் கொடுத்து அவர்கள் பசியார வேண்டும்" என்று கேட்டு கொள்கிறான். முனிவர் அதற்கு மறுப்பு தெரிவப்பதுடன் அது நாட்டை ஆளும் அரசரின் கடமை என்றும் எடுத்துரைக்கிறார். அரசன் கோபம் கொள்கிறான் படை வீரர்களை அனுப்பி அந்த காமதேனு பசுவை பிடிக்க ஏற்பாடு செய்கிறான், ஆனால் முழு படையும் தோற்றுவிடுகிறது.  அந்த பசுவை எப்படி பெறுவது என்ற கேள்வியில் அதை மிகப்பெரிய தவம் மேற்கொள்வதன் மூலமாக பெற முடியும் என்று அறிந்து தவம் மேற்கொள்கிறான். அந்த தவத்தின் வாயிலாக தனது நாட்டு மக்களின் பசியை தீர்க்கிறார்.
 நீங்கள் சமீப காலமாக பங்கு சந்தையை உற்று நோக்கினால் அது உயர்ந்து கொண்டேதான் போகிறது ஆனால் ஆட்குறைப்பும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பங்கு சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மைய புள்ளியாக பார்க்கப்படும் பட்சத்தில், வேலையிழப்பு நடக்கும் போது எப்படி பங்கு சந்தை உயரும்..? இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது, பங்கு சந்தை, பெரிய பெரிய பண முதலைகள் பணத்தை பங்கு போட்டுக்கொள்ளும் சந்தை, அதில் மற்றவர்களுக்கு தொடர்பில்லை. அதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. எனவே இதை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிடுவது என்பது ஏமாற்று வேலை. நேற்று CNN தொலைகாட்சியில் ஒரு செய்தி, வெள்ளை மாளிகை, WALL STREET -இ எச்சரித்துள்ளதாக. ஏன்னா அங்கு நடந்து வரும் குளறு படிகள். அதாவது நட்டத்தில் இயங்குவதாக கூறி அரசாங்கத்திடம் நிதியுதவி பெற்ற நிறுவனங்கள், இன்று பணத்தை திரும்ப அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு பதிலாக அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (C.E.O) தங்களது சம்பளத்தை உயர்த்தி கொள்வது, ஊழியர்களுக்கு அதிகபடியான போனஸ் கொடுப்பது என்று தங்களை வளர்த்து கொண்டுள்ளது.
சரி இதற்கும் முதலில் சொன்ன விசுவாமித்திரன் கதைக்கும் என்ன சம்மந்தம், அந்த கதையை பார்த்தீர்களேயானால் தனது நாட்டு மக்கள் பசியால் தவிப்பதை பொறுக்க முடியாமல் தனது பதவியையே துறந்து, துறவறம் பூண்ட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. விசுவாமித்திரன் காலத்திலேயே தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் சிந்தனை எல்லாம் வந்தாச்சு. ஆனால் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கால மன்னர்களோ பணக்காரர்களின் கல்லா நிரம்பவும், தங்களையும் அவர்களில்  ஒன்றாக இணைத்துக்கொள்ளும் முயற்சியையுமே சிரமேற்கொண்டு செய்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் நலிந்த நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை நிதிஉதவியாக கொடுத்தது எல்லாம். அமெரிக்கா மட்டுமல்ல முதலாளித்துவ சிந்தனைகள் கொண்ட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் அடித்தட்டு மக்களையும் நடுத்தர மக்களையும் காப்பாற்றுவதற்கு வழி பார்க்க வேண்டும். இது கம்யூனிச சிந்தனையோ இல்லையோ தெரியாது ஆனால் எக்காரணம் கொண்டும் சமுதாயத்தின் ஒரு தட்டு மக்களின் வளர்ச்சிக்கு மட்டும்  துணை போவது என்பது மற்ற மக்களின் ஒட்டு மொத்த கோபமும் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் மேல் திரும்புவதற்கு வழி வகுக்கும்.


Read more...

அவசர சட்டமும் அதனால் நிகழப்போகும் விபரீதமும்

நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

மேற்கண்ட செய்தியை இன்றைய செய்திகளில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ரொம்ப நாளா எனக்குள் ஒரு கேள்வி இருந்துகிட்டே இருக்கு.  சமீபத்தில் PROJECT MANAGEMENT குறித்த ஒரு தேர்வு எழுதினேன் நான் 63% மதிப்பெண் பெற்றேன். ஆனால் நான் தேர்வில் பாஸாகவில்லை என கூறிவிட்டார்கள். விசாரித்த பொழுதுதான் தெரிந்து கொண்டேன் அதற்கு 80% மதிப்பெண்கள் தான் குறைந்த பட்ச தகுதி என்று.  பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு கல்வி எட்டா கனியாக இருந்த பொழுது அது கிடைக்க போராடியவர்களை நமக்கு தெரியும், அதன் மூலம் கல்வி பயன் அடைந்தவர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வியாப்பித்திருக்கிருகிறார்கள். இது பாராட்ட பட வேண்டிய ஒன்று.  தொழில் நிமித்தமாக தான் சார்ந்திருக்கும் சிறிய ஊரில்  ஒருவன் சாதரண கல்விநிலயத்தில் கல்வி கற்க நேர்ந்தால் அவனை மேலே கொண்டுவரவும் ஒரு சட்டம் போடப்பட்டு அவனுக்கிருந்த தடைகல்லும் நீக்கப்பட்டது. ஆனால் என்னை போல 60% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு என்னதான் கதி..? எங்களால் எல்லாம் உயர் பதவிகளை அடையவே முடியாதா..?  அப்படிங்கிற கேள்வி என் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் நீயும் 80% மதிப்பெண் வாங்க வேண்டியது தானே..? அப்படிங்கிற கேள்வி வரும்,சரி நாங்க முயன்றோம் முடியவில்லை ஆனால் அதற்காக அந்த வாய்ப்பு என்னை போன்றோருக்கு முற்றிலுமாக மறுக்க படுவது என்பது என்ன நியாயம்..? இது இன்னொரு வகையில் அடிமைகளை தோற்றுவிக்கும் வழிதானே.? இப்படியே போனால் வருங்காலத்தில் 80% வாங்கியவர்கள்தான் வாழலாம், மற்றவர்கள் எல்லாம்...?! என்ற நிலை  கூட வரலாம்.  அது
 எப்படின்னு கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம் ஒரு வளமான பொருளாதாரம் என்பது அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களது அடிப்படை தேவைகளை குறைந்த அளவு பணம் செலவு பண்ணினாலே கிடைக்கும் படி இருக்க வேண்டும் அப்பொழுது தானே அந்த நாடு நல்ல வளமான பொருளாதாரத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதை விடுத்து ஒரு வேளை சோற்றுக்கே சில ஆயிரங்களை செலவு பண்ணும் படி இருந்தால் அது எப்படி நல்ல பொருளாதாரம் ஆக முடியும்..?
அப்புறம்  கல்வியும், மதிப்பெண்ணும் மதிக்கப்படமால் போவதற்கே வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான திட்டங்களுக்காக  அவசர சட்டம் போட்டுபவர்கள் வருங்காலத்தில் அது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.


Read more...

பாரதியை சாரா தீ -- சாதி



"பாரதியும் சாதீயும்" -- பற்றி நண்பர் ஒருவர் சரியான தகவல்களை நான் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், பாரதி சாதி பற்றுள்ளவர் தான் என்றும் சற்று விரிவாகவே கூறியிருந்தார் (படிக்காதவர்கள் "பாரதியும் சாதீயும்" தலைப்பின் கீழ் வந்துள்ள கமெண்ட்ஸ் பகுதியை பார்க்கவும்).
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதன் முதலில் நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டால் எப்படி அதற்கு செயல்படனும்னு நமக்கு ஒரு கணம் தோன்றாது. கிட்டத்தட்ட அப்படி நிகழ்ந்ததுதான் பாரதியை பற்றிய அந்த கட்டுரை படித்த பொழுது ஏற்பட்டது. அதை எழுதியவர் பெயர் வே.மதிமாறன் , இவர் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார் என்று அவரது ஒளி (வீடியோ) காட்சி பார்த்த பொழுது தெரிந்து கொண்டேன். அவரது வலைத்தளத்திற்குரிய முகவரியை நான் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை அதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்து கொள்ள வேண்டியதாயிற்று. நிச்சயம் வரும் காலங்களில் அந்த வலைப்பதிவை கடந்து வர நேரிட்டால் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். அதனால் இதற்கு மேலும் காலம் கடத்த வேண்டாம் என்று இந்த பதிவை இடுகிறேன்.
பாரதியாரின் பல பாடல்கள் சாதி ஒற்றுமையை சுட்டிக்காட்டியுள்ளது. இது நமக்கும் தெரியும், உதராணத்திற்கு சிலவை இங்கே..
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதியராயினரும் ஒன்றே - அன்றி
வேறு குலத் தினராயினும் ஒன்றே
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்போர் அன்றோ
--இந்த வரிகள் "வந்தே மாதரம் என்போம்.." எனத்தொடங்கும் பாடலில் வரும் சரணம். "ஈனப் பறையர்களேனும்" -- என்று சொன்னதன் மூலம் தன்னுடைய பார்ப்பன குல அறிவை காட்டிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. தயவு செய்து அடுத்த வரியையும் பாருங்கள் அவர்கள் அனைவரும் என்நாட்டு மக்கள் என்று அவர் உரிமையுடன் கூறுவதை. முதல் வரியில் கண்டது தவறென்றால் இரண்டாவது வரியில் உள்ள உரிமையையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்..?
கடவுளை கூட "அவனே" என்று விளித்தல் நாம் பல பக்தி பாடல்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் கண்டதே. இது ஒரு வித உரிமை தான். பாரதி இங்கே சொன்னதும் அப்படித்தான், ஏன் பாரதியே பராசக்தியை அப்படி விளிப்பதை "காணி நிலம் வேண்டும் ... " பாடலில் காணலாம்.


இன்னொரு குற்றச்சாட்டாக "சிந்து நதியின் இசை நிலவினிலே.." எனத் தொடங்கும் பாடலில், "காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான், காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்..." 'காசி', 'காஞ்சி' இரண்டையும் இணைத்து பேசியதும் அவரது சாதி பற்றை விளக்குவதாக வே. மதிமாறன் சொல்லி இருந்தார். நான் இதை இப்படித்தான் பார்க்கிறேன், காசியிலிருந்து பேசும் புலவர்கள், காஞ்சியில் உள்ள சாமியாரிடம் தானே பேசுவார்கள் .. பின்ன ஈரோட்டில் உள்ள கவுன்சிலர் கூடவா பேசுவர் ...? ஒரு கவிஞன் என்பவன் எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் அல்லவா..? இதில் என்ன குறை...? ஏன் சிதம்பரம் அல்லது திருத்தணியை சொல்ல வேண்டியதுதானே..? அப்படின்னு இன்னொரு கேள்வியும் கேட்கலாம்...? காசியில் உள்ள "கா"வும் காஞ்சியில் உள்ள "கா" வும் தானே ஒரு எதுகை மோனைக்கு கூட சொல்லி இருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது..?


இதை எல்லாம் விட மிகப் பெரிய உண்மை, பாரதி தன்னை 'பகுத்தறிவாளி' என்று என்றாவது சொன்னாரா..? ஆரம்பம் முதல் கொண்டே அவர் 'காளியையும்' , 'சர்வேசரனையும்' ,'எமனை எட்டி உதைப்பேன்' என்று தானே சொல்லி வருகிறார் . அவர் இந்து கடவுளை துனைக்கழைத்தால் என்ன குற்றம்...? அவர் காசியையும், காஞ்சியையும் இணைப்பதில் தவறோ, வியப்போ இல்லையே..?


அப்புறம் இன்னொரு குற்றச்சாட்டு வர்ணாசிரமத்தை ஆதரித்தார் பாரதியார் என்பது. "வேதமறிந்தவன் பார்ப்பான்.." என்றார் சரி, ஆனால் தயவு செய்து அதற்கு கீழ் வரும் வரியையும் பாருங்கள் "தொண்டரென் றோர் வகுப்பில்லை .." என்று சொல்லி யாரும் அடிமை என்று இல்லை என்று சொல்கிறாரே..? அதை எப்படி எடுத்துக்கொள்வது..? அதே பாடலில் "சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தனில் செழித்திடும் வையம் ..." என்று சொல்கிறாரே அதை எப்படி எடுத்துக் கொள்வது..? பூனை பாட்டில் கூட வேறு வேறு வண்ணங்களில் இருந்தாலும் யாரும் ஓர் குலம் என்று சொல்கிறாரே அதில் என்ன சாதி பாகு பாடுகளை சொன்னார் பாரதி என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இன்னும் ஒரு படி மேலே போயி, எல்லா மதத்தினரும் ஒன்றே என்று சொல்கிறார். இப்படி அவர் மதநல்லிணக்கம், சாதி ஒற்றுமை என்ற விஷயங்களை தன் கவிதை நெடுக பதிய வைத்தே சென்றுள்ளார் .

அப்புறம் பாரதியின் போதை அடிமை பற்றி சொன்னார்கள், அதை பற்றிய தகுந்த விஷயங்கள் வலையில் கிடைக்க வில்லை, விளக்கமாக சொல்லும் புத்தகமும் கையில் இல்லை எனவே அதை பற்றி தெரிந்த வுடன், விளக்கமாக சொல்கிறேன்.

இறுதியாக ஒரு விஷயம்...பாரதியின் சில வரிகள் சொல்லி இருப்பதை மட்டும் பார்க்காமல், முழு பாடலையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது தெளிவாக விளங்கும். சம காலத்தில் எல்லாரும் விமர்சனத்திற்குள்ளாவது என்பது இயல்பு ஆனால் அந்த தனிப்பட்ட நபரின் மறைவுக்கு பின் வரும் சந்ததிகள் அவரது விமர்சனங்களை புறம் தள்ளி, அவரது பெருமைகளை எடுத்துரைப்பது அவரது விமர்சனத்தை மறைக்கும் எண்ணம் அல்ல. அவரது வாழ்க்கையின் அடி நாதமாக அமைந்த உயரிய கொள்கைகளுக்கு கொடுக்கும் மரியாதை. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொண்டாலும் மகிழ்வே.

பாரதியை தீண்டாத தீ சாதி.


Read more...

பாரதியும் சாதீயும்


பாரதி என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது தமிழ்,கவிதை,பெண்ணடிமை, சுதந்திரம் இவற்றின் கூட சாதி எதிர்ப்பும். சமீபத்தில் நான் படித்த ஒரு வலைப்பதிவில் பாரதி தன் கவிதைகளில் இந்து மத வெறியையும், சாதி வெறியையும் புகுத்தி இருந்தார் என்றும் அவர் ஒரு பிரமாணர் என்பதாலேயே இந்த முன்னுரிமை என்றும் ஒருவர் எழுதியிருந்தார், பேசியும் இருந்தார் (ஒளி காட்சியும்) இருந்தது. எனககு இது முதல் அனுபவம் முண்டாசு கவிஞனின் முதுகிலும் சாதி முத்திரையா..? எப்படி பாரதி மீது இப்படி ஒரு அவச்சொல் வந்தது...? இதை எப்படி ஏற்றுக்கொள்வது...? எல்லா மனிதர்கள் மீதும் சாதியின் நிழலாவது படிந்துள்ளது, ஆனால் அதை காரணமாக வைத்து எப்படி அவர்கள் அந்த சாதியின் பிரதிநிதிகளாகவே பார்க்கப்படுகிறார்கள் ..? இது முற்றிலும் தவறானது. இதே மாதிரிதான் கட்டபொம்மன்,சிதம்பரனார், இன்னும் பலரும் தலைமுறையின் சாதி தீனிக்கு பலியானார்கள் என்பதை முன்பே சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் "சாதிகள் இல்லையடி பாப்பா..." என்ற பாடலை எழுதிய பாரதியையே அந்த கூண்டில் ஏற்றுவார்கள் என்பதை கனவிலும் ஏற்கமுடியவில்லை. இந்த மாதிரியான சிந்தனைகள் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. பாரதியையும் சாகா வாரம் பெற்ற சாதி என்ற தீ கொண்டு தயவு செய்து யாரும் சுடாதீர்கள்.


Read more...

முதலாளித்துவம் தோற்றுப்போன தத்துவம்...?!


மைக்கேல் மூர் (MICHAEL MOORE) ஒரு மிக சிறந்த ஆவண பட இயக்குனர்,தயாரிப்பாளர். இவரது செப்டம்பர்-11, பற்றிய திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், நிறைய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறது. இவர் சென்ற வாரம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறார் படத்தின் பெயர் CAPITALISM - A LOVE STORY. இந்த படத்தை பற்றியும் அதில் தான் சொல்லியுள்ள கருத்துக்களை பற்றியும் ஒரு விவாதம் CNN-LARRY KING LIVE என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது, அதை பற்றிதான் இங்கே சொல்ல போகிறோம். அதற்கு முன் முதலாளித்துவம் எப்படி, ஏன் தோற்றுபோனது என்பதை பார்ப்போம்.

இந்த படம் நம்ம நாட்டிற்கும் தேவையான ஒன்றாக நான் நினைக்கிறேன், ஏனெனில் அமெரிக்காவின் சுவடுகளை ஒற்றி நமது பொருளாதாரம நடை போட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட நாம் அதை முழுவதுமாக அடைவதற்குள் தடுத்துவிட வேண்டும். சின்ன வயதில் என்னுடைய உறவினர் ஒருவர் சொல்வார் "அழ அழ சொல்பவர்கள் நல்லா இருக்க சொல்றவங்க, சிரிக்க சிரிக்க சொல்றவங்க, நீ கெட்டுபோக சொல்பவர்கள்" அப்படின்னு. கிட்டத்தட்ட இந்த முதலாளித்துவ கொள்கையில் அமைந்ததுதான் அமெரிக்காவின் பொருளாதாரம். எப்படி..? அள்ளி அள்ளி கொடுத்தது சம்பளத்தை எப்படி ...? ரொம்ப சுலபம், மகாநதி படத்தில் வி.எம்.சி. ஹனீபா சொல்வார், "பெரிய அளவு முதலீடு செய்யனும்னா ஏன் கை காசை போடணும், OPM (Other People Money) இருக்கே " அப்படின்னு, அதாவது Finance Company நடத்தி அதில் வரும் காசை மற்ற தொழிலில் முதலீடு பண்ணுவது. அதேமாதிரியான விஷயத்தை ஒரு நாடு கையிலெடுத்தால் அதுதான் இந்த முதலாளித்துவம் (CAPITALISM) . நீங்க நினைக்கிறது முற்றிலும் சரி கமலுக்கு அந்த படத்தில் ஏற்படும் நிலை தான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படீன்னா யாரு வி.எம்.சி. ஹனீபா ..? வேற யாரு நம்ப பணக்கார முதலாளிகள் தான்.

எப்படி இந்த முதலாளிகள் கைகளில் அரசாங்கம் சிக்கிகொண்டது அப்படின்னு நீங்க கேட்கலாம், அரசாங்கங்களை வழி நடத்துவதில் பணக்காரர்கள் தங்களது பங்கை செவ்வனே (!!) ஆற்றி கொண்டுள்ளார்கள். அதை நாம் நன்கறிவோம், சரி இது எப்படி சாத்தியம், தனது நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தையில் வெளியிட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ அவை ஒரு ஐந்தாறு பக்கங்களில் மிகவும் நுண்ணிய எழுத்துக்களில் கொடுத்திருப்பார்கள், (நியாயமா செயல்படுபவர்கள் அல்லவா), நடுத்தர மக்களே நீங்களும் பணக்காரர் ஆகா வேண்டுமா எங்க நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஆகுங்கள், ஆமா நீங்களும் முதலாளிதான். எல்லாருமே முதலாளீ தான் அப்படீன்னா யாரு வேலை பார்க்கிறது ..? முதலாளியாவும் தொழிலாளியாவும் யார் வேலை செய்கிறார்களோ அவுங்கதான். யார் அவுங்க வேற யார் நம்ம நடுத்தர வர்க்கம்தான். சரி இப்படி எல்லா நடுத்தர மக்களின் பணத்தை எல்லாம் பங்கு வர்த்தகம்கிற பேர்ல சுருட்டியாச்சு அடுத்து என்ன ஓட்டம் தானே, அது தான் கொஞ்சம் வித்தியாசமா நிறுவனத்தை "திவால்" ஆக்கிவிடுவது. அப்படி பண்ணினா என்ன பாதிப்பு ஒன்னும் இல்லை இதுவரை எந்த பேர்ல இந்த தொழில் பண்ணாங்களோ அது இனிமேல் பண்ண முடியாது. பணம் தான் கைக்கு வந்தாச்சே இனிமே தொழில் பண்ணா என்ன பண்ணாட்டி என்ன..? அப்படியே தேவை பட்டால் சொந்தங்களின் வழி பண்ணி கொள்ளவேண்டியதுதான். இப்ப பொருளாதாரம் போற போக்கு அப்படிதான். பங்கு சந்தையை ஒரு பங்காக வைக்காமல் மொத்தமும் அதுதான்னு நம்புவதுதான் முதாலாளித்துவம். இப்ப புரிஞ்சுதா ஏன் இது இந்தியாவிற்கும் பொருந்தும்னு நாம சொல்றதுன்னு ...?

சரி மூர் நேர்காணலை பற்றி பார்ப்போம்...

கேள்வி: நீங்கள் CAPITALISM ஒரு தோற்றுப்போன விஷயமா நினைக்கிறீங்களா..?

பதில்: நிச்சயமா... 2008 ஆம் ஆண்டு தெளிவா நமக்கு இதை தானே சொல்கிறது. இங்கே என்ன நடந்தது நம்முடைய பணத்தை போட்டு தொழில் செய்தவர்கள் தங்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவுடன் நம்முடைய வரி பணத்தை bail-out என்ற முறையில் அரசாங்கத்திடம் பெற்றார்களே..? அது எப்படி நியாயம் ஆகும் ..? ஒரு நிறுவனம் தோற்பது அதை வழி நடத்துபவர்களின் கைகளில் உள்ளது. அதற்கு எப்படி அரசாங்கம் பொறுப்பேற்று பணம் கொடுக்க முடியும்...?

சொல்லப்போனால் ஒரு சூதாட்டம் நடந்திருக்கிறது, அதில் வெற்றி பெற்றவர் பணத்தை கொண்டு போயி விட்டார். இவர்கள் என்ன செய்தார்கள் பந்தயத்தின் மேல் இன்னொரு பந்தயம் கட்டினார்கள், அது காணாமல் போனது. ஒரு காப்பீடு அதற்கு இன்னொரு காப்பீடு இப்படி தானே மொத்த பணமும் காணாமல் போனது.

கேள்வி: இந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலாகவில்லை, ஆனால் எடுக்க ஆரம்பித்தவுடன் சிலவை நடந்தன அவை இந்த படத்திற்கு எப்படி உதவியாக இருந்தது. ..?

பதில்: உதவி என்றால் .. நான் சொல்ல வந்த கருத்தை மேலும் வலுவுடன் சொல்வதற்கு உதவி கரமாக இருந்தது. நம்முடைய பொருளாதாரத்தில் கொஞ்சம் கூட மக்களுக்கான வசதிகள் இல்லை, இது சாதாரண மக்களுக்கான பொருளாதாரம் கிடையாது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் கொள்ளவும் தான் இந்த பொருளாதாரம் உதவுகிறது. பங்கு சந்தையில் உள்ளவர்கள் தொழிலாளர்களை பற்றி கவலை படுவதில்லை.

கேள்வி: அப்படீன்னா முதலீட்டாளர்கள் தான் முக்கியம் தொழிலாளர்கள் இல்லை என பங்கு சந்தையில் ஈடு பட்டிருப்பவர்கள் நினைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா..?

பதில்: நிச்சயமா..! இப்ப பாருங்க வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே போகிறது, ஆனால் பங்கு சந்தையின் புள்ளிகள் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. எப்படி..? தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை கொண்டே இந்த லாபம் காட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த கால கட்டத்தில் நிறைய லாபம் ஈட்டும் போக்கை கடை பிடிப்பதாலேயே இது நிகழ்கிறது. சொல்லப்போனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக அதிக அளவிற்கு சீரழிந்துள்ளது.

கேள்வி: வீடுகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் அந்த வீட்டின் முதலாளி தவணைகளை ஒழுங்காக செலுத்தாத பட்சத்தில் பாதிக்க படப்போவது அந்த குறிப்பிட்ட வங்கிகள் தானே, அவர்கள் அந்த வீட்டை ஜப்தி செய்து மட்டும் என்ன அடைந்து விட போகிறார்கள். ..?

பதில்: நீங்கள் சொல்வது சரி தான் அதனால் அவர்களுக்கு ஒன்றும் பெரிய லாபம் இல்லை தான். இதில் இன்னொரு விஷயம் வங்கிகள் சொல்கின்றன நிறைய மக்கள் பணம் கட்டாததால் ஜப்தி செய்கிறோம், பணம் திரும்ப வராததால் எங்களுக்கு நஷ்டம் அப்படின்னு சொல்றாங்க. அது தவறு நான் ஆய்வு செய்த விதத்தில் அப்படி நடந்ததை விட வங்கிகளின் தவறான முதலீடுகளே அதன் சரிவிற்கு காரணம். FBI-தான் இதை நன்கு விசாரித்து உண்மைகளை கொண்டுவரவேண்டும்.

கேள்வி: FBI விசாரிக்கனும்னா அங்கே (வங்கிகளில்) குற்றம் நடந்திருககும்னு நீங்க நம்புறீங்களா...?

பதில்: நிச்சயமா..மக்களின் பணம் தவறான முறையில் முதலீடு செய்யப்பட்டு காணாமல் போயிருக்கிறது. எங்கே போனது அந்த பணம்..? எப்படி போனது...? இது ஒரு குற்றம்தானே அதை விசாரித்து மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசு.

(இது அந்த பேட்டியின் சாரம்சமே. இதில் சொல்லி இருக்கும் விஷயங்கள் வரிக்கு வரி அப்படியே பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அதே நேரம் அவர் சொல்லிய கருத்துக்களில் இருந்து மாறுபடவும் இல்லை என்பதை உறுதியுடன் சொல்லி கொள்கிறேன்.)


Read more...

தமிழ் போதும் இந்தியா வேண்டாம் கோஷம்.

"தமிழ் போதும் இந்தியா வேண்டாம்" என்ற கோஷம் வலையில் மிக பிரசித்தம். நான் சொன்னது இன்டர்நெட் வலையை நீங்க பாட்டுக்கும் பழக்க தோஷத்துல மீனவர் வலைனு நினைச்சுக்காதீங்க. ஆனா அதிலிருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு வலைப்பதிவில் பார்த்தேன் "இந்தியா ஆசியோடு தமிழர்களை கொல்லும் சிங்கள அரசு" - என்ற தலைப்பை பார்த்தவுடன் எனககு ஒன்று தோன்றியது. அப்படி தமிழர்களை கொல்ல ஏன் இந்திய அரசு முயல வேண்டும்..? அப்படின்னு கேட்டா இப்படி சொல்லலாம் "இந்த தி.மு.க தொந்தரவு தாங்க முடியலை, அப்படி அவுங்களை அடக்கனும்ணா என்ன பண்ணலாம், அவுங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை கொடுமை படுத்தலாம். சரி அதை நாமலே செய்தால் நல்லா இருக்காது. அதுனால சிங்களவங்ககிட்ட சொல்லி பண்ண சொல்லலாம் (!!!???)" அப்படின்னு இந்திய அரசாங்கம் அதாவது காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். இல்லன்னா "என் புருஷனை கொன்னது தமிழ் பேசும் விடுதலைப்புலிகள்தான் அதனால் தமிழ் பேசும் தமிழர்களை கொல்லலாம் " என்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருக்கலாம்.
என்னங்க ரொம்ப குழப்பமா இருக்கா, எனக்கும் இப்படிதாங்க இருக்குது. தமிழர்களுக்கு சரியான முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது ஓரளவு உண்மைதான் அதற்காக தமிழர்களை (தமிழ்நாட்டில் வாழும்) கொன்று (அதிலும் குறிப்பாக மீனவர்களை) காங்கிரஸ், வாழும் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அப்படியே காங்கிரஸ் செய்தாலும் அதற்காக காங்கிரசை தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமே தவிர, இந்தியாவை துண்டாட நினைப்பது அபத்தத்திலும் அபத்தம். தமிழர்களுக்கான உரிமையை ஜனநாயக ரீதியிலேயே போராடி பெற்று விடும் அளவிற்கு தான் நிலைமை உள்ளது. இதை ஏன் சில துண்டாடும் சக்திகள் அதிக அளவில் ஊதி பெரிசாக்கி விடுகின்றன என்று தெரியவில்லை. எனககு தெரிந்த ஒருவர் தனது கணவனை பறிகொடுத்த சோகத்தில், தெருவில் போகும் தன் கணவர் வயதொத்தவர்களை எல்லாம் காட்டி "இவரெல்லாம் உயிரோடிருக்கிறார் என் கணவர் இறந்து விட்டாரே " என்று வருத்தப்படுவார்(!!!??). இத்தனைக்கும் இவரது கணவர் எழுபது வயதுக்கு மேல் கடந்து நோய்வாய் பட்டுதான் இறந்தார். இதிலிருக்கும் நியாயம் தான் இப்பொழுது நீலி கண்ணீர் வடிப்பவர்களின் பக்கம் இருக்கும் நியாயமும்.
இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களிலும் இந்த துண்டாடும் சக்திகள் தங்களது நாக்கினை நுழைக்க தவறுவதில்லை. குறிப்பாக சீன அரசின் ஊடுருவலை பற்றி விவாதிக்கும் பொது கூட இந்தியாவிற்கு இது தேவை தான், இதை விட கொடுமையான விஷயங்கள் நடந்தால் கூட நான் சந்தோஷ படுவேன் , என்ற தொனியில் கூட பதிவுகள் வலையில் இடப்படுகின்றன. உஷாராக இருக்க வேண்டிய நேரம்.
மத்திய அரசு தாமதமாக செயல் படுகிறது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எல்லாம் காரணம் வைத்து இவ்வாறு பேசுவது, சரியான முறையாக தெரியவில்லை. துண்டாடுவது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ அதற்கு பலியாகி விடாமல் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.


Read more...

வேண்டாம் வெளிநாட்டினர் அமெரிக்கா

செப்டம்பர்-18 தேதியில் வெளிவந்த INDIA IN NEWYORK என்ற பத்திரிகையில் வந்த ஒரு பேட்டி தான் இந்த கட்டுரையின் சாராம்சம். நாட்டமை படத்தில் வர்ற மாதிரி (வேற உதாரணமே உனக்கு தெரியலையான்னு நீங்க சொல்றது கேட்குது, அடுத்த முறை நிச்சயம் வேற நல்ல உதாரணமா சொல்றேன்) இந்த பேட்டியில் "குற்றவாளிகள்" என்று சுட்டிகட்டப்படும் கும்பலில் நானும் இருப்பதால் என்னுடைய "சாட்சி(!?)" இங்கே செல்லுபடி ஆகாது, இருப்பினும் இது பலருக்கும் பொருந்துவதால், நீங்களே நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக்கொள்ளுங்கள். சரி இதோ அந்த பேட்டி.
Norman Matloff, (Professor of Computer Science in University of California). என்பவரை பி.ராஜேந்திரன் என்பவர் கண்டது இந்த பேட்டி. நோர்மன் முழுக்க முழுக்க H1-B விசாவை ஒழிக்க வேண்டும் அல்லது இப்பொழுதுள்ள நடைமுறையை மாற்றவேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்க கூடியவர். இவரது மனைவி சீனாவை சேர்ந்தவர், இவரது தந்தை லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு கீழ் வரும் பேட்டியை படியுங்கள்.
கேள்வி: நீங்கள் அடிக்கடி H1-B விசாக்களை சரியானவை அல்ல என்று கூறுவது ஏன்?
பதில்: நான் இந்த H1-B அறவே வேண்டாம் என்று சொல்லவே இல்லை.
கேள்வி: சரி அதில் உள்ள குறைபாடுகள் தான் என்ன, மேலும் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் அதை பற்றி பேசுவது ஏன்..?
பதில்: நான் எந்த காலகட்டத்திலும் சொல்லுவேன் இது நல்ல முறை அல்ல, இதில் ஏமாற்றுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று. சரி இந்த விசாவை அறிமுகபடுத்தியதன் நோக்கம் தான் என்ன..? மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே பணிக்கு அமர்த்துவதுதான். ஆனால் இப்பொழுது இது எதற்கு பயன்படுத்தபடுகிறது? குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பணி அமர்த்து வதற்கான ஒரு வழியாக போயி விட்டது. இது முற்றிலும் ஒரு சட்ட மீறலாகாவே நான் கருதுகிறேன். நான் இன்னும் சொல்கிறேன் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே கொண்டுவர செய்வதை வரவேற்கிறேன்.
கேள்வி: சரி மிகச்சிறந்த அப்படி என்றால் உங்கள் அளவு கோல் என்ன..?
பதில்: இங்கே கிரீன் கார்டு விஷயத்தில் EB-1(Employment Based). அப்படி என்று ஒரு பிரிவு இருக்கிறது அதில் பின் பற்றப்படும் நடை முறைகள், H1-B விசாவிற்கான நடை முறைகள் போல் அல்ல. குறைந்த பட்சம் அந்த விதிமுறைகளை H1-B விசாவிற்கும் கொண்டுவரவேண்டும்.
கேள்வி:இதற்கு பேசாமல் நேரடியா EB-1 கிரீன் கார்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா..?
பதில்: நிச்சயமா. என்ன இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னா ஒரு h1-b விசா பெற்றவர் வேலை நீக்கம் செய்யப் படுகிறார் என்றால் அவர் பத்து நாட்களுக்குள் நாட்டை விட்டு (எனககு தெரிந்து இது பத்து அல்ல முப்பது நாட்கள்) வெளியேற வேண்டும். அதாவது அதற்குள் வேலை கிடைக்காத பட்சத்தில். ஆனால் இங்கே நடை முறை என்ன. யாருமே வெளியேறுவதில்லை. மேலும் அமெரிக்கர்களுக்கு வேறு நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மீது கோபம் வருகிறது. மேலும் இப்பொழுதெல்லாம் அமெரிக்காவின் மீதிருந்த அந்த கவர்ச்சி குறைய ஆரம்பித்து விட்டது. சீனர்கள் அவர்கள் நாடே அமெரிக்காவை விட மேலானது என்ற எண்ணம் சமீப காலமாக மேலோங்கி விட்டது. எனவே அவர்களில் சிலர் தங்களது நாட்டை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டார்கள் அதே மாதிரியான ஒரு சூழல் இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது.
கேள்வி: H1-B விசா பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஏற்கனவே பெற்றவர்கள் வர மறுக்கின்றனர். அப்படி இருந்தும் இந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதாக கருதுகிறீர்களா...?
பதில்: பின்ன, முக்கியம்தான். இங்கிருக்கும் H1-B விசா பெற்றவர்களால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் இடம் குறைகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
கேள்வி: அதே மாதிரி நீங்கள் வயது ஒரு முக்கியமான அம்சமாக சொல்கிறீர்கள். அதாவது 30 அல்லது 40 வயதில் உள்ள H1-B விசாக்காரர்கள் தேவை இல்லை என்பது போல் சொல்லி இருந்தீர்களே...?
பதில்: ஆமாம் 35 வயதானவர்கள் பெரும்பாலும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் தொழில் நுட்ப ரீதியாக தங்களை வளர்த்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தவரையில் வயது முக்கியம் அதுவும் 35 இ தொட்டவர்கள் வயதானவர்களாகவே கருதப்படுகிறார்கள். இங்கே தேவை இளைய தலை முறையினர் மட்டுமே.
இப்படியாக செல்கிறது இந்த பேட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP