விசுவாமித்திரனின் கம்யூனிச சிந்தனை
கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜரிஷி-ங்குற படம் பார்த்தேன். அதுல விசுவாமித்திரன் எப்படி முனிவரானர்..? ஒரு நாட்டின் அரசனாக இருந்த விசுவாமித்திரன் (அரசராக இருக்கும் பொழுது அவர் பெயர் என்ன என்பதை நான் மறந்துட்டேன்), தனது நாடு அண்டை நாடுகளுடன் போர் புரிந்து வெற்றி மேல் வெற்றி குவிப்பதை கண்டு பெறும் மகிழ்ச்சி கொள்கிறார். அரசவையில் ஒரு நாள் தனது மகிழ்ச்சியை தனது அரசவை சகாக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வழக்கு வருகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான தேரில் வந்த பொருள்களை சில கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள் அவர்களை காவலர்கள் பிடித்து வந்து அரசர் முன் நிப்பாட்டுகின்றனர். அரசருக்கு ஆச்சர்யம் என் நாட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன், என் நாட்டில் திருட்டா..? அதுவும் மன்னருக்கு வந்த உணவுகளை திருட முற்பட்டிருக்கிறார்களே..? அப்படின்னு ஆச்சர்யம். அமைச்சரிடம் விளக்கம் கேட்கிறான் அரசன், அமைச்சர் சொல்கிறார் நாம் தொடர்ந்து போர் மேற்கொண்டிருந்ததால் மக்கள் விவசாயம் பக்கம் கவனம் செலுத்தமுடியவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. உணவு பஞ்சம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது. அரசர் கேட்கிறார் அப்ப இந்த உணவு ..? "இது வஷிஷ்டர் என்ற முனிவரின் ஆசிரமத்திலிருந்து வருகிறது" என்று அமைச்சர் விளக்குகிறார். "நாடே பஞ்சத்தில் இருக்கும்போது அந்த முனிவரிடம் மட்டும் எப்படி..? " என்று அரசர் வினவ, மீண்டும் அமைச்சர் விளக்குகிறார் "அரசே அவரிடம் காமதேனு என்று ஒரு பசு இருக்கிறது, அது கேட்டவை எல்லாம் தரக்கூடியது. அதன் மூலமாகத்தான் இந்த உணவை வரவழைத்து நீங்கள் பசி ஆற வேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளார். " என்று. அரசன் உடனே அந்த முனிவரின் ஆசிரமம் நோக்கி விரைகிறான், "நீங்கள் எனக்கு உணவு கொடுத்தது போலவே அந்த காமதேனுவை கொண்டு என்நாட்டு மக்களுக்கும் கொடுத்து அவர்கள் பசியார வேண்டும்" என்று கேட்டு கொள்கிறான். முனிவர் அதற்கு மறுப்பு தெரிவப்பதுடன் அது நாட்டை ஆளும் அரசரின் கடமை என்றும் எடுத்துரைக்கிறார். அரசன் கோபம் கொள்கிறான் படை வீரர்களை அனுப்பி அந்த காமதேனு பசுவை பிடிக்க ஏற்பாடு செய்கிறான், ஆனால் முழு படையும் தோற்றுவிடுகிறது. அந்த பசுவை எப்படி பெறுவது என்ற கேள்வியில் அதை மிகப்பெரிய தவம் மேற்கொள்வதன் மூலமாக பெற முடியும் என்று அறிந்து தவம் மேற்கொள்கிறான். அந்த தவத்தின் வாயிலாக தனது நாட்டு மக்களின் பசியை தீர்க்கிறார்.
நீங்கள் சமீப காலமாக பங்கு சந்தையை உற்று நோக்கினால் அது உயர்ந்து கொண்டேதான் போகிறது ஆனால் ஆட்குறைப்பும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பங்கு சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மைய புள்ளியாக பார்க்கப்படும் பட்சத்தில், வேலையிழப்பு நடக்கும் போது எப்படி பங்கு சந்தை உயரும்..? இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது, பங்கு சந்தை, பெரிய பெரிய பண முதலைகள் பணத்தை பங்கு போட்டுக்கொள்ளும் சந்தை, அதில் மற்றவர்களுக்கு தொடர்பில்லை. அதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. எனவே இதை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிடுவது என்பது ஏமாற்று வேலை. நேற்று CNN தொலைகாட்சியில் ஒரு செய்தி, வெள்ளை மாளிகை, WALL STREET -இ எச்சரித்துள்ளதாக. ஏன்னா அங்கு நடந்து வரும் குளறு படிகள். அதாவது நட்டத்தில் இயங்குவதாக கூறி அரசாங்கத்திடம் நிதியுதவி பெற்ற நிறுவனங்கள், இன்று பணத்தை திரும்ப அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு பதிலாக அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (C.E.O) தங்களது சம்பளத்தை உயர்த்தி கொள்வது, ஊழியர்களுக்கு அதிகபடியான போனஸ் கொடுப்பது என்று தங்களை வளர்த்து கொண்டுள்ளது.
சரி இதற்கும் முதலில் சொன்ன விசுவாமித்திரன் கதைக்கும் என்ன சம்மந்தம், அந்த கதையை பார்த்தீர்களேயானால் தனது நாட்டு மக்கள் பசியால் தவிப்பதை பொறுக்க முடியாமல் தனது பதவியையே துறந்து, துறவறம் பூண்ட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. விசுவாமித்திரன் காலத்திலேயே தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் சிந்தனை எல்லாம் வந்தாச்சு. ஆனால் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கால மன்னர்களோ பணக்காரர்களின் கல்லா நிரம்பவும், தங்களையும் அவர்களில் ஒன்றாக இணைத்துக்கொள்ளும் முயற்சியையுமே சிரமேற்கொண்டு செய்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் நலிந்த நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை நிதிஉதவியாக கொடுத்தது எல்லாம். அமெரிக்கா மட்டுமல்ல முதலாளித்துவ சிந்தனைகள் கொண்ட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் அடித்தட்டு மக்களையும் நடுத்தர மக்களையும் காப்பாற்றுவதற்கு வழி பார்க்க வேண்டும். இது கம்யூனிச சிந்தனையோ இல்லையோ தெரியாது ஆனால் எக்காரணம் கொண்டும் சமுதாயத்தின் ஒரு தட்டு மக்களின் வளர்ச்சிக்கு மட்டும் துணை போவது என்பது மற்ற மக்களின் ஒட்டு மொத்த கோபமும் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் மேல் திரும்புவதற்கு வழி வகுக்கும்.
0 comments:
Post a Comment