பட்டவுடன் தொட்டது -- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்


 ஒரு எழுத்தாளன் என்பவன் சம்பவங்களை உற்று நோக்குபவனாக இருப்பதோடு அவற்றை சுவை பட தொகுத்து தரவேண்டும். அத்துடன் ஒரு புதுவிஷயமும், சமுதாயத்தின் மீதான தனது பார்வையை பதியும் படியும் செய்பவனாக இருக்க வேண்டும். அவனுடன் இருந்து அந்த சம்பவத்தை பார்த்தவனே இவனது எழுத்துக்கள் மூலமாக அதே சம்பவத்தை புதிதாக காணும் படி செய்பவனே எனக்கு பிடித்த எழுத்தாளன். சமீப காலங்களில் அந்த மாதிரியான எழுத்துக்களை தருபவர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் முதன்மை ஆனவர். அவருடையை எல்லா புத்தகங்களையும் படித்தேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் படித்த எல்லாமே எனக்கு பிடித்தவை. இவர் லிங்குசாமியின் "சண்டகோழி" படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். தற்பொழுது நடிகர் ஆர்யா தயாரிப்பில், இளையராஜா இசையில் வெளிவரவிருக்கும் "படித்துறை" என்ற படத்தில் பாடல் எழுதுவதோடு, வசனமும் கையாளுகிறார். சமீபத்தில் இவர் எழுத்தில் படித்த ஒரு ஜெர்மன் நாட்டு திரை படத்தை பற்றிய பார்வையை படித்தவுடன் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இது "ஆனந்த விகடனி" ல் வந்தது. இது  உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு.

'A boy in the Stripped pyjama' என்ற ஜெர்மானியப் படம் பார்த்தேன். யூதர்களைக் கொல்வதற்கான நாஜி முகாம் ஒன்றுக்கு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று வருகிறது. ராணுவ அதிகாரிக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். ராணுவக் குடியிருப்பு என்பதால் வெளியே போய் விளையாட யாரும் இல்லை. தனியே வீட்டில் இருப்பது எரிச்சலூட்டுகிறது.

ஒருநாள் தன் வீட்டின் பின் வாசலைத் திறந்து ஓடுகிறான். தொலைவில் ஒரு முகாம் இருப்பதைக் காண்கிறான். அதில் முள்வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. வேலியின் உள்ளே அவன் வயதில் ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து அடிபட்டு வீங்கிய முகத்துடன் இருப்பதைக் காண்கிறான். ஜெர்மானியப் பையனுக்கு அது அகதி முகாம் என்று புரியவே இல்லை. அவன் யூத சிறுவனிடம், 'எதற்காக இந்த முகாமைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது, மிருகங்கள் வராமல் தடுக்கவா?' என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன், 'இல்லை, மனிதர்கள் வராமல் தடுக்க' என்று பதில் சொல்கிறான்.
ஜெர்மானியச் சிறுவனுக்கு அது புரியவில்லை. 'இந்த முகாமில் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்கிறான். யூதச் சிறுவன் பதில் சொல்லாமல் போய்விடுகிறான். மறுநாள் ஜெர்மானியச் சிறுவன் வீட்டில் நடக்கும் விருந்துக்கு ஒயின் கிளாஸைச் சுத்தம் செய்ய முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான். அங்கே ஜெர்மானியச் சிறுவன் தந்த கேக்கை யூதச் சிறுவன் தின்னும்போது பிடிபடுகிறான். உடனே, ஜெர்மானியச் சிறுவன் அவனைத் தனக்குத் தெரியாது என்று சொல்லி மாட்டிவிடவே, கேக்கை திருடிச் சாப்பிடுகிறாயா என்று ராணுவ அதிகாரி அடிஅடியென அடிக்கிறார்.
மறுநாள் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனைத் தேடி வருகிறான் ஜெர்மானியச் சிறுவன். யூதச் சிறுவன் கோபம்கொள்ளவில்லை. மாறாக, பிடிபட்டு அகதியாக உள்ளவன் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான் என்று மன்னிக்கிறான். இரண்டு சிறுவர்களுக்குள்ளும் நட்பு உருவாகிறது.
அதன் பிறகு, தன் வீட்டில் இருந்து ரகசியமாக ரொட்டி, கேக் எனத் திருடி வந்து, யூதச் சிறுவனுக்குத் தருகிறான். ஒரே வயது, ஒரே விருப்பம், விளையாட்டுத்தனம்கொண்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் அகதியாகவும் மற்றவன் அதிகார வாரிசாகவும் இருப்பதும் எவ்வளவு முரண்பாடு. அகதிச் சிறுவன் அவமானத்தில் குறுகிப்போய் ஒடுங்கி மெலிந்திருப்பது அதிர்ச்சிகொள்ளவைக்கிறது.
இதற்கிடையில், யூத முகாமில் இருப்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்படுவதும், இறந்த உடலை மொத்தமாக எரிப்பதுமாக அழித் தொழிப்பு வேகமாக நடைபெறுகிறது. இந்த உண்மை அறிந்த ஜெர்மானிய அதிகாரியின் மனைவி அதிர்ச்சியடைகிறாள். கணவனோடு சண்டையிடுகிறாள். கணவன், 'ஹிட்லரின் கட்டளையை நாங்கள் மீற முடியாது. இது ஒரு தேசச் சேவை' என்கிறான். மனைவி, 'இந்தக் கொடுமையைக் காண என்னால் முடியாது' என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்ப முடிவு செய்கிறாள்.
ஊருக்குப் புறப்படும் முதல் நாளில் யூதச் சிறுவன் தன் அப்பாவை முகாமில் காணவில்லை என்று சொல்லிக் கவலைப்படுகிறான். அவரைத் தேட தானும் அந்த முகாமில் வருவதாகச் சொல்கிறான் ஜெர்மானியச் சிறுவன். அதன்படி அவனுக்காக அகதி உடை ஒன்றைத் திருடி வந்து தருகிறான் யூதச் சிறுவன்.
இரண்டு சிறுவர்களும் முகாமுக்குள் போகிறார் கள். மனித அவலங்களைக் காண்கிறார்கள். ஹிட்லரின் அவசர ஆணைப்படி முகாமில் இருப்பவர்கள் மொத்தமாகக் கொல்ல அழைத்துப் போகப்படுகிறார்கள். அதில் இரண்டு சிறுவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இதனிடையில் தன் மகனைக் காணாமல் தேடி அலைகிறாள் ஜெர்மானியத் தாய். அவனைத் தேடி முகாமுக்கே வருகிறான் தந்தை. ஆனால், யூதர்களை விஷ வாயு செலுத்திக் கொல்வதற்காக அடைத்துவைக்கப்பட்ட சேம்பரில் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பிள்ளையைக் காப்பாற்ற குடும்பமே போராடுகிறது. ஆனால், விஷ வாயு தாக்கி இரண்டு சிறுவர்களும் செத்துப் போகிறார்கள். இருவரது கைகளும் நட்போடு ஒன்றாகக் கோக்கப் பட்ட நிலையில் இருக்கின்றன. ஜெர்மானிய அதிகாரியின் மனைவி கதறி அழுகிறாள்.
சொந்த உதிரம் பலியாகப் போகும்போது ஏற்படும் தவிப்புப் போராட்டம். ஏன், ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை என்ற ஜெர்மானிய மனச்சாட்சியின் கேள்வியை அந்தப் படம் எழுப்புகிறது. மனித அவலத்தின் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மைப்படுத்தி சொல்லிய அற்புதமான படம்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP