பதிவுலகம் பற்றிய ஒரு பதிவு
சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களின் விமர்சனத்தை அன்றைய தினமே
படித்து தெரிந்து கொள்ள முடிகிறது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூகுள் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது, மனசு சோர்வாக இருக்கும் போது படித்து தெளிந்து கொள்ள என்னை மாதிரியே தவறு செய்து திருத்திக்கொண்ட ஒரு சக நண்பனை பார்க்க முடிகிறது, இவற்றை எல்லாம் எம் தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளமுடிகிறது. காரணம் தமிழ் வலைபூக்கள் அல்லது வலைப்பதிவுகள். ஒரு தமிழனா பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தாலும், அந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் உணர ஆரம்பித்துள்ளேன். எனக்கு தெரிந்து வேறு எந்த இந்திய மொழிகளுக்கும் இவ்வளவு வலைப்பூக்கள் அந்தந்த மொழிகளிலே இருக்கிறதா
என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. அனேகமாக இதற்கான விடையையும் நான் ஒரு தமிழ் வலைப்பூவிலேயே காண்பேன் என்று நம்புகிறேன். குடும்ப சண்டை,
சொந்த அனுபவங்கள்,தகவல் தொழில் நுட்பம்,இனப்பிரச்சினை,
சர்வதேசபிரச்சனை,ஜாதகம்,ஆன்மிகம்,பகுத்தறிவு,
இன்னும் எவ்வளவோ, விஷயங்களை அலசும் ஒரு பண்பு அல்லது திறமை நம்ம
தமிழ் மக்களுக்கே உரித்தானதாக நான் உணர்கிறேன். தொலை தொடர்பு துறை வளர்ந்த பிறகு நம் மக்களின் வாழ்க்கை முறையிலேயே ஒரு மாற்றம் தெரிகிறது, தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், அதன் பாதிப்பை தனது சக மனிதர்களுக்கு உணர்த்தவும் மக்கள் பழகி கொண்டது என்னை பொறுத்தவரை வரவேற்கத்தக்கதே. சிலர் இதை வியாபரமாக்கலாம், சிலர் தங்கள் மீதான கவனத்தை ஒட்டுமொத்த இந்த சமூகமும் திருப்பவேண்டும் என்ற நோக்கிலும் சொல்லலாம் ஆனால் அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவு.
பதிவுலகம் நிறைய கதவுகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் திறந்துவிட்டுள்ளது. எல்லா விஷயத்திலும் விதிவிலக்குகள் உண்டு, அது மாதிரி ஒன்றிரண்டு தவறான வலைப்பதிவுகள் இருக்கலாம். ஆனால் பல தமிழ் பதிவுகள் சரியான திசையை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த மாதிரியான ஒரு கும்பலில் நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன்.
0 comments:
Post a Comment