இலங்கைத் தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்த ரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த பேச்சை பேசியவர் வேறு யாருமல்ல பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள்தான். ராமதாஸ் என்னதான் கூட்டணி மாறி அவ்வப்பொழுது காமெடி செய்தாலும் , அவருடைய எல்லா பேச்சுகளையும் காமெடி என்று எடுத்துக்கொள்ளமுடியுமா..? அவர் சரியா சொல்றப்ப ஏத்துக்கத்தானே வேணும். "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கை குலுக்குவானா..?" ரொம்பவும் யோசிக்க வேண்டிய விடயம். நான் நியூயார்க்கில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது
ஒரு சக ஊழியருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்தது. அவர் யூத இனத்தை சேர்ந்த ஒரு பெண். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நாங்கள் பயணம் செய்த அந்த கார் லெக்சஸ் (LEXUS) ரக கார் என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்து நான் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "இந்த ரக கார்கள் ஜெர்மனில் தானே தயாரிக்கப்படுகிறது.." என்று கேட்டேன். சட்டென்று முகம் மாறிய அவர் "இல்லை இல்லை இது ஜப்பானில் தயாரிக்கப்படும் கார். இது ஜெர்மனியில் தயாரித்தால் இந்த காரை நான் பயன்படுத்தவே மாட்டேன்" என்றார். இது நடந்தது 2005 ல், இதை தவறென்றும் சொல்ல முடியாது. ஏன்னா அதன் வலியும் வேதனையும் அவர்களுக்கு தானே தெரியும். அந்தவிதத்தில் ராமதாஸ் சொன்ன உதாரணம் ரொம்பவும் சரியாக சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (அப்பாடா "ராமதாசு ஒரு காமெடி பீசு" எழுதினப்ப ஒருத்தரு ஆட்டோ வர வாழுத்துக்கள்-ன்னு சொல்லி இருந்தாரு அதை இப்ப சரி கட்டியாச்சுன்னு நினைக்கிறேன்..ஹும் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.).
0 comments:
Post a Comment