அதிகார கரங்கள் ஒரு ஆபத்து
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக யாரேனும் புகார் தெரிவித்திருக்கலாம். அதன்பேரில்தான், தொலை தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. அதற்காக என் மீது குற்றம் சொல்ல முடியாது. சி.பி.ஐ.,சோதனை என்பது வழக்கமான ஒன்றுதான். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தொடர்பான அனைத்து முடிவுகளும் டிராய் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையிலும், பிரதமருடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட்டன.
மேற்கண்ட செய்தி மத்திய அமைச்சர் ஆ.ராசா குறித்து சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மிகப் பெரியதாக ஆக்கப்பட்டு, தேர்தல் சூட்டில் ஆறியும் போனது. கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய் ஊழல் இதில் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. (இந்த ஒரு துறையிலேயே 65,000 கோடி ஊழல் செய்ய முடியும்னா..? ஹுஸ் அப்பா கண்ண கட்டுதே). இது குறித்த தி.மு.கவின் செயல்பாடுகளோ நம்மை வியக்க வைக்கிறது. ஒருத்தனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய பிறகும் அவன் தன்னை அந்த வீட்டின் விருந்தாளியாகவே பாவித்துக்கொள்வது என்ன நாகரீகம் என்று தெரியவில்லை. காங்கிரஸ் இந்த காரணத்திற்காகவே ஆ.ராசாவிற்கு மத்திய மந்திரி பதவி தர இந்த முறை தயங்கியதாகவும் ஆனால் தி.மு.க வின் நெருக்குதலாலேயே இந்த பதவியை அதுவும் முன்பு வகித்த அதே துறையை கேட்டு பெற்றது தி.மு.க. இவ்வளவு நடந்த பிறகும் ஆ.ராசா தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். இவை எல்லாம் தி.மு.க வின் தலைமை அறியாமல் வரப்போவதில்லை. இவ்வளவு நடந்த பிறகும் இவரை யார் மந்திரி பதவியை தொடர செய்வது..? எவ்வளவோ பதவிகளை பெற்ற, இழந்த தி.மு.க போன்ற கட்சிகளே பதவி சுகத்தை இழக்க தயாரில்லாததை கண்டு அதிர்ச்சியே ஏற்படுகிறது. இப்பொழுது நடக்கும் இந்த சம்பவத்திற்கெல்லாம், வாய் மூடி மௌனியாக தி.மு.க இருப்பது அந்த கட்சிக்கே ஆபத்தாய் முடியும். இதை பழுத்த அரசியல் அனுபவம் உள்ள கருணாநிதியும் உணர்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதையும் மீறி இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது எதனால்..? சில பத்திரிகைகள் சொல்வதைப்போல தி.மு.க வின் அதிகார மையம் கைகள் மாறி இருக்கலாமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அது என்ன "கைகள்"..? ஆம் அது ஒரு கைக்கு போக வில்லை, குறைந்த பட்சம் மூன்று கைகளிலாவாது அது இருக்க வேண்டும். அவைகள் எவை என்று உங்களுக்கே தெரியும். அதிகாரம் ஒரு கையில் இருப்பதுதான் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிலேயே ஜனநாயகமாக செயல் படும் ஒரே கட்சி என தன்னை கூறிக்கொள்ளும் தி.மு.க விற்கும் நல்லது.
0 comments:
Post a Comment