அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 2

அடுத்த தலைமுறைக்கான அரசியலில் தமிழ் நாட்டில் நடக்கும் விஷயங்களை விவாதித்த இந்த வேளையிலேயே அமெரிக்காவில் நடந்த சமீபத்திய தேர்தலில் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்த வெற்றி எண்ணங்களின் பயணத் திசை சரி என்றே உணர்த்துகிறது. நாம் வசிக்கும் இந்த 2008 மாவது ஆண்டில் நிறவெறி என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக யாரவது கருதுவீர்களேயானால் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் அதுதான் உண்மை. FOX NEWS என்னும் செய்தி தொலைக்காட்சியில் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான மாலை பொழுதில் ஒளிபரப்பான அனைத்து விவாத நிகழ்ச்சிகளிலும் பட்டவர்த்தனமாக தெரிந்ததை பார்த்தவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். ஒபாமாவிற்கு வெற்றி என்ற செய்தி கிடைக்க கிடைக்க FOX NEWS தன்னுடைய விவாதங்களை இப்படியாக முன் வைத்தது, அதாவது O Rellly Factor என்னும் நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் O'Rellly "நான் பார்த்த ஒரு தொலைக்காட்சியில் ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்த நிருபர் ஒபாமா வெற்றியை கண்ணீருடன் விவரித்ததை பார்த்து அதிர்ந்து போனேன் என்ன கொடுமை அது, ஒரு நிருபர் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் ? இது அவர் இந்த தொழிலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இதையெல்லாம் சொன்னால் ஏதோ வயசானவன் புலம்புகிறான் என்று சொல்வார்கள் மேலும் இதை எல்லாம் பார்ப்பதற்கு பேசாமல் செத்து விடலாம்னு தோன்றுகிறது " . குறித்து கொள்ளுங்கள் இதை சொன்ன அவர் ஒரு வெள்ளைக்காரர். அதே FOX NEWS தொலைக்காட்சியில் அடுத்ததாய் வந்த மற்றுமொரு நிகழ்ச்சியான Hannity's America யில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் சொல்கிறார் "நான் குடியரசு கட்சிக்குத்தான் வாக்களித்தேன், அதனால் நான் இப்பொழுது வருத்தப்படவும் இல்லை." இப்படி சொன்னவரும் ஒரு வெள்ளைக்காரர் தான். ஓபாமா வெற்றி பெற்றதற்காக அழுத ஓர் கறுப்பின நிருபருக்காக "செத்து விடலாம்னு" நினைத்த O'Rellly இந்த நிகழ்வு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை..? சரி அவர் மறுநாள் நிகழ்ச்சியிலாவது சொல்லுவார் என்று எதிர் பார்த்து ஏமாந்துதான் மிச்சம். சரி இந்த நிகழ்வை உங்களால் ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணத் தோன்றுகிறதா..? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அந்த நியதி ஏன் பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாகவே வளர்க்கப்பட்டு இன்று தேசத்தின் ஏன் இந்த உலகத்தின் உயர்ந்த பதவியை அடைந்த தன் இனத்தை சேர்ந்தவருக்காக கண்ணீர் விட்டதை ஏன் "செத்து விடலாம்னு" தோணுகிற அளவிற்கு எடுத்துக்கொண்ட நண்பர் O'Rellly-க்கு சொல்ல கூடாது ? அமெரிக்காவில் இன்றும் கறுப்பின மக்கள் பல விதங்களிலும் ஒதுக்கபடுகிறார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சி. சரி விஷயத்திற்கு வருவோம், ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை பல விதங்களிலும் முன்னேற்றுவதே ஒரு நல்ல அரசியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டிற்கு அழகு. இலங்கை தமிழருக்கான உண்ணா நோன்பில் பேசிய நடிகர் கமல் சொன்னதை போல "உரிமைகள் மறுக்க படும் வேளையில் தீவிரவாதம் பிறக்கும்". அது மனித இனத்திற்கு நல்லதல்ல.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 1

இந்த கட்சி ஊழல் கட்சி அதனால் அந்த கட்சிக்கு ஒட்டு போடலாம், அப்புறம் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு அந்த கட்சியே மேல் என்ற எண்ணம் தோன்றி அந்த கட்சிக்கே மீண்டும் வாக்களிப்பது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் வாக்காளர் எண்ண ஓட்டம் இப்படியாகத்தான் இருக்கிறது.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளை முன்னிறுத்தியே தேர்தலில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற வேண்டும். ஆனால் இப்பொழுது அதுவா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..? சரி அப்படியே கொள்கைகளை மட்டுமே வைத்து ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியுமா..? அவ்வளவு ஏன் கொள்கைகளை மட்டுமே மூலதனமாக கொண்ட கட்சிகள் மக்கள் மத்தியில் எப்படி செல்வாக்கு பெற்றிருக்கிறது ..? பத்தோடு பதினொன்றாக தானே இருக்க முடிகிறது. சரி அப்படி பத்தோடு பதினொன்றாக இருந்தால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ..? அவர்கள் பொழைப்பு ஓட்ட வேண்டாமா..? இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டின் தற்பொழுதைய அரசியல் நிலவரத்தோடு ஒப்பிட்டு சொன்னால் நமக்கு தெளிவுற விளங்கும்.
திராவிடர் கழகம் என்றொரு கட்சி அது ஆரம்பித்த பொழுது இந்த கட்சி தேர்தலில் நின்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாது என்று சொல்லியது, அந்த கட்சி கொண்ட கொள்கைக்காக இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாமல் தனியாகத்தான் நிற்கிறது ஆனால் ஒரு துணையுடன், அதாவது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் காலைப் பற்றி பொழப்பு நடத்தும் அவலம் தான் இருக்கும்.
இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சி ஆரம்பித்து, தாய் கட்சியின் கொள்கைக்கு எதிராக அதாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே முழு முயற்சியாக கொண்டு அந்த இலக்கை அடைந்தது. ஆனால் அது பிரபலமாவதற்கு காரணமான காங்கிரஸ் எதிர்ப்பு, தனி தமிழ் நாடு கோஷம் போன்றவை என்ன ஆனது ...? கொள்கைகளை காற்றில் விட்டால்தான் ஆட்சி அதிகாரத்தை கை பற்ற முடியும் என்பதற்கு இந்த கட்சியே மிகச்சிறந்த சான்று.
சரி இந்த கழக அரசியல் தான் இப்படி என்றால் தேசிய கட்சி காங்கிரஸ் என்ன கொள்கையோடவா வாழ்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க இதை ஒரு சூத்திரக் (formula) கணக்காகவே கொண்டுள்ளது . இங்கேயும் ஒரு கொள்கை கொலை தான் நடக்கிறது.
பா.ஜ.க கேட்கவே வேண்டாம் சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டே கொல்லைப் புறம் அமெரிக்காவிற்கு நேச கரம் நீட்டும் சாதுர்யம். என்று இங்கேயும் ஒரு வித கொள்கை கொலை தான் நடக்கிறது .
ம.தி.மு.க மற்றும் பா.ம.க பற்றி கேட்கவே வேண்டாம். ம.தி.மு.க இந்த பாரளுமன்ற தேர்தலில் எங்களுக்கு பதவி வேண்டாம் என்று சொல்லி விட்டு அதே மாதிரி பதவியேற்கவில்லை அப்பாடா ஒரு கொள்கை சிங்கம் கிடைச்கிட்டாருடா அப்படின்னு நினைத்த தமிழக மக்களுக்கு கொடுத்தார்கள் இப்படி, விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்துக் கொண்டு அதை அதி தீவிரமாக எதிர்க்கிற அ.தி. மு. க -வுடன் கூட்டணி வைத்து கொண்டது கொள்கை சிங்கம், எதற்காக ..? கொண்ட கொள்கைக்காகவா ..?
பா.ம.க இது ஒரு குறிப்பிட்ட சாதிக்காக ஆரம்பித்த கட்சியாக இருந்தாலும் சற்றே கொள்கை சிகரமாக தன்னை காட்டிக்கொண்டது இந்த கட்சி. தீவிர மது ஒழிப்பு பிரச்சாரம், தனது தொலைக்காட்சியில் திரை படங்கள் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளை ஒழித்து அதனால் வருமானம் இல்லையென்ற போதும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத கட்சி போல் காண்பித்தாலும், சறுக்கியது தன் மகனுக்கு மத்திய அமைச்சரவை பதவியை கொல்லைப் புற வழியாக வாங்கியது மட்டுமல்ல எந்த காலத்திலும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் கட்சியில் எந்த பதவிக்கும் வர மாட்டார்கள் என்று மக்கள் மத்தியில் அறிவித்து அதையும் கொல்லைப் புறத்திலே விட்டு வந்த கொள்கை குன்று , ஆமாம் சிகரம் தேய்ந்து குன்று ஆகியுள்ளது ...


Read more...

சிரிக்கத் தெரிந்த மனமே...

"தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளதால் வருகிற சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் அவரவர் வீட்டில் விளக்கேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் .." - சொன்னவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா
இப்படியே பேசிக்கிட்டே இருங்க நேத்து கட்சி ஆரம்பித்த சரத்குமார், விஜயகாந்த் எல்லாம் கருணாநிதியை சமாளிக்க அவுங்களா நிறைய தயார் பண்ணி பேசிக்கிட்டு இருக்காங்க நீங்க ஜோசியரைப் பார்த்து உங்க "குடும்பத்து"க்கு எது நல்லதோ அதை செய்யச் சொல்லி தொண்டர்களை கேட்டுக்குங்க. கட்சி விளங்கிடும். போங்க போய் வேற ஏதாவது நல்லதா எழுதி கொடுக்க சொல்லி அதை வெளியிடுங்க, எங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்குது....


Read more...

பிடித்தவர்கள் -- இளையராஜா-1


இளையராஜா என்றவுடன் எனக்கு தெரிவதெல்லாம் அவரது மயக்கும் இசையை விட நம்பிக்கையான முயற்சிகளே . சிலருக்கு இது தலை கனமாவும் தெரிவதுண்டு.
நம்பிக்கைக்கும் தலை கனத்துக்கும் நூலிழை தான் இடைவெளி என்றெல்லாம் சொல்வதுண்டு எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவரவர் பார்வையை பொறுத்து அமைவது என்பது எனது பார்வை.
நம்பிக்கை என்று சொல்ல காரணம், இளையராஜா தான் முதலில் நமது பாரம்பரிய இசையையும் மேற்க்கத்திய இசையையும் இணைத்து ஒரு புது வித இசையை ஒலிக்க செய்தார். என்னைப் போன்ற எத்தனையோ இசை வாசனை அறியாதவர்களை, இசை ஒரு வித ஆடம்பர, பணக்காரத்தனமான விஷயம் என்று எண்ணி இசையை ஒதுக்கிய பலரையும் இசை அனைவரும் ரசிப்பதற்கே என்று உணர்த்தியது ராஜாவின் இசையே. மேலும் பல உள்ளங்களை இணைப்பதற்கான ஒரு மொழியாகவே பார்க்கப்பட்டது ராஜாவின் அந்த கலவையான இசை தான். ஆனால் அந்த கலவையை உருவாக்கும் போது ராஜா நிச்சயம் இது இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கவில்லை இதை அவரே பல முறை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். எனவே அந்த கலவையின் உருவாக்கத்தின் போது அது ராஜாவின் நம்பிக்கையாய் மட்டுமே இருந்திருக்க முடியும், அந்த நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜா சொல்வதைப் போல் அது இறைவன் ராஜாவின் இசையை ரசிக்க ரசிகர்களுக்கு இட்ட கட்டளையாய் கூட இருக்கலாம்.
அவர் வாழ்க்கை, அவரது முதல் வாய்ப்பு இவையெல்லாம் பல முறை பல பிரபலங்களால் அலசப்பட்டு விட்டது , எனவே இந்த கட்டுரையில் அவ்வாறு பார்க்காமல் ராஜா எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியதன் பின்னணியை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ராஜாவின் இசை என்ன என்ன காரணங்களுக்காக எப்படி ஒலிக்கிறது என்பதை எடுத்து சொல்ல எண்பதுகளில் இருந்த ஒரே ஊடகம் வானொலி, அதிலும் குறிப்பாக இலங்கை வானொலியின் "தமிழ் ஒலிபரப்பு கூட்டுக் சேவைஅதில் அப்பொழுது பாரத வங்கி வழங்கிய இந்த வாரத்தின் சிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் பெரும்பாலும் ராஜாவின் பாடல்களே முன்னிலை வகிக்கும். உண்மையை சொல்கிறேன் அவை முன்னிலைவகித்ததால் மட்டுமே என்னைக் கவரவில்லை, அதையும் மீறி அதில் தெரிந்த ஜீவன், இசைக்கும் எனது மனத்துக்குமான இடைவெளி குறைக்கும் மாயம் எல்லாமே எனக்கு ஒரு விதமான புது உணர்ச்சியை தந்தது. மேலும் அந்த காலத்தில் வந்த விமர்சனங்களில் கூட இப்பொழுது இளையராஜாவின் இசையை குறிப்பிடுவதைப் போல குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. இளையராஜாவின் தாக்கத்தை எனக்குள் முதலில் ஏற்படுத்திய பாடல் எனக்கு தெரிந்து "கண்ணன் ஒரு கைக் குழந்தை .." எனத் தொடங்கும் பத்ரகாளி படப் பாடல். அந்த பாடலில் மெட்டு வளையும் இடங்களில் எல்லாம் வார்த்தைகள் இட்டு நிரப்பப் பட்டிருக்கும். அதுவே அந்த பாடலின் தரத்தை அப்பொழுது வந்த பாடல்களில் இருந்து தனித்து காட்டியது. உண்மையை சொன்னால் அந்த படத்தை அப்போது நான் பார்த்திருக்க வில்லை , மேலும் அந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி எங்களுக்கெல்லாம் ரொம்ப தொலைதூரம் தான் ஆகையால் அந்த பாடலை மட்டும் பார்க்க கூட வாய்ப்பில்லை. செவி வழி இன்பம் அனுபவிக்கவே அப்பொழுது இருந்த வசதி வாய்ப்புகள் அனுமதித்தது. அதுவும் நல்லதற்கே என்று நான் பின்னாளில் அந்த பாடலைப் பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டேன். இப்பொழுது கூட மனசு சந்தோஷத்தை தேடும் பொழுது முதலில் நாடுவது இந்தப் பாடலைத்தான்.

ராஜாவைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் முடிக்க எனக்கு தெரியாது எனவே தொடருகிறேன் அடுத்த பதிப்பில்.


Read more...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....






தமிழ் திரையுலகின் உண்ணாவிரதம் பற்றி கருத்து சொல்ற சிலர் சத்யராஜின் பேச்சிற்கும் கலைஞருக்கும் தொடர்பு என்பது போல் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சத்யராஜ் பல முறை ரஜினியின் வெற்றியினை நிராகரித்திருக்கிறார் நேரடியாக இப்பொழுதுதான் சொல்லியிருக்கிறார் அதனால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது. அதே போல் ரஜினியின் பேச்சுக்கும் கலைஞருக்கும் முடிச்சு போடுவதும் தேவையில்லாத ஒன்று. ரஜினியோ கலைஞரோ அப்படி ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் இதுவும் தேவையற்றது. கலைஞர் சொல்லி ரஜினி பேசியிருப்பாரா என்பது ரஜினியின் பேச்சைக் கேட்டாலே தெரிகிறது. கலைஞர் திட்டத்தை ஒத்தி வைத்தது சரி என்று வைத்துக்கொண்டாலும் ஆனால் அதை அறிவித்த முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கலைஞர் எத்தனையோ முறை அறிவாலயத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்திடுக்கிறார் குறிப்பாக விடுமுறை தினமானஞாயிற்று கிழமைகளில்.. அதே மாதிரி ஒரு அனைத்துக் கட்சியின் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டி இந்த முடிவை எடுத்து பிறகு அறிவித்திருக்கலாம். நடிகர் ராஜேஷ் தான் முதலில் சொன்னார் ஒக்கனேக்கல் என்பது கன்னடப் பெயர் குடகுகல் என்பதுதான் அந்த இடத்தின் பழமையான பெயரும் தமிழாக்கமும் ஆகும் என்று. அவர் என்ன சூப்பர் ஸ்டாரா அவர் பேச்சையெல்லாம் யாருங்க கணக்குல எடுத்துக்குவாங்க. குறைந்த பட்சம் அவர் சூப்பர் ஸ்டாரையாவது தாக்கி பேசினாரா..? அப்படி பேசினாதானே இங்க மதிப்பு. அதே மாதிரி மிகவும் விஷயபூர்வமாக பேசிய வைரமுத்துவின் பேச்சைப்பற்றி யாருமே குறிப்பிடவில்லை. பத்திரிகைகளில் கூட இடம் பெறவில்லை. தயவு செய்து யார் பேசுறாங்க என்பதை விட என்ன பேசுறாங்க அதன் பயன் என்ன என்று அறிந்து குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை தான் வள்ளுவர் சொன்னார் "எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" .


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP