அன்பின் நீளமே வாழ்வின் நீளம்...

அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம் .... அன்பே சிவம் படத்திற்காக வைரமுத்து எழுதிய வரிகள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். ஆனால் நான் இதை உணர கிட்டத்தட்ட 35 வருடங்கள் தேவைப் பட்டது. எனக்கென சில கோட்பாடுகள் இது தான் சரி மற்றவை அனைத்தும் தவறு என்ற கண்ணோட்டத்தோடு வாழ்ந்தவன். பல பேரை அதில் காயப்படுத்தி இருக்கிறேன், அதை தான் வெற்றி என்று நினைத்து கொக்கரித்தும் இருக்கிறேன். மனசு பக்குவ பட வயசுதான் காரணாமா..? இல்லை அனுபவம் தான் காரணமா..? எனக்கு தெரிந்த வரையில் அனுபவங்களின் தேடல், அதற்கு வயதும் பக்குவமும் தேவை. ரொம்ப கொழப்பமா இருக்கா..? நாம் சில சமயங்களில் ஒரு பொருளை அடிக்கடி பார்ப்போம் ஆனால் அதன் தேவை இல்லாததால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். திடீரென்று அதன் தேவை வரும் பொழுது சட்டென்று நம் நினைவிற்கு அது வந்து தொலைக்காது பல சிரமத்திற்குப் பிறகு அதை கண்டு கொள்வோம். அதைப் போலவே சில அனுபவங்கள் நம்மை ஏற்கனவே கடந்திருந்தாலும் நமது மனதுக்கு அது பரிட்சயம் இல்லாததாகவே தோன்றும், ஆனால் அதுவே துன்பமோ,பிரிவோ நம்மை வாட்டும் பொது நமக்கு பக்கத்தில் வந்து விடும். எவ்வளவு துன்பத்தை தாண்டி வருகிறோமோ அவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறோம் எனக் கொள்க. இந்த உலகில் எதுவும் தீர்மானமான ஒன்றல்ல இதை புரிந்து கொண்டாலே.. அன்பின் நீளமே வாழ்வின் நீளம் என்பதை நாம் அறிந்து கொள்ள ஏதுவானதாக இருக்கும்.


பிடித்தவர்கள் -- இளையராஜா -- 2

இளையராஜாவைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு அது அத்தனையும் எழுத இன்னுமொரு பிறப்பு வேண்டும். இது அதிகப்படியான போற்றுதலாக உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ராஜாவை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் அர்த்தம்.

ஒரு தீபாவளிக்கு சென்னைத் தொலைக்காட்சியில் இளையராஜாவின் பேட்டி ஒளிபரப்பானது. எனக்கு தெரிந்து இளையராஜாவின் பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது அதுதான் முதல் முறை. அதில் சில ரசிகர்கள் இளையராஜாவைப் பற்றி தங்களது கருத்துக்களை இவ்வாறு சொன்னார்கள் "ராஜா இசை தான் எனக்கு எல்லாம்..." "தலைவா.. " "அவர் இசை போதும் எனக்கு..." இப்படி பல என்னுடன் அமர்ந்து அந்த பேட்டியை பார்த்த என் தாய், தங்கை அனைவரும் "உன்ன மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.." என்று சொன்ன பொழுது எனக்குள் ஒரு வித பரவசமே ஏற்பட்டது. இதை அவர்கள் எந்த கண்ணோட்டத்தில் இருந்து சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது எனக்கு அது பரவசாமகவே இருந்தது. இன்றைய வரைக்கும் எனக்கு அந்த உணர்வு உண்டு. தனிமையில் ராஜாவின் பாடல்கள் மட்டுமின்றி அவரைப் பற்றிய அனைத்து புகழாரங்களும் எனக்கு கண்ணீரை வரவழைப்பதாகவே இருக்கும். சத்தியமாக எனக்கும் அவருக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் கிடையாது. வாத்தியங்களில் அவர் வடித்தெடுத்த அந்த சந்தங்கள் என்னை அந்த பரவசம் கொள்ளவும் கண்ணீர் விடவும் வைத்து விட்டது என்றால் அது மிகையல்ல. மற்றவர்களுக்கு வாழ்க்கை அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள் என்று தொடர்ந்தால் என்னைப் போன்றவர்களுக்கு அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள்,ராஜாவின் இசை என்று தொடரும். மீண்டும் சொல்கிறேன் இதை ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நடிகை ரேவதி ஒரு முறை தொலைக்காட்சியில் ராஜாவைப் பற்றி சொன்னார்கள் "ராம் கோபால் வர்மா முதலில் இயக்கிய உதயம் (தெலுங்கில் சிவா) படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணியில் ஒரு வாக்கு வாதம் அதாவது, படத்தில் நாயகன் முதல் முறையாக அடிதடியில் ஈடு படும் பொழுது வயலின் கருவியையும் சேர்த்து வாசித்ததால் அதில் சற்றே சோகமும் இழையோடியாதாக இயக்குனர் கருதி சொன்ன பொழுது இளையராஜா சொன்னாராம் அந்த நாயகன் நன்றாக படிக்கக் கூடியவன் அப்படிப் பட்டவன் அடிதடியில் இறங்குவது சந்தோஷ பட வேண்டிய விஷயம் அல்ல அதே சமயம் அவன் எவ்வளவு ஆக்ரோஷமானவன் என்பதையும் சொல்லும் விதமாகவே இசையில் அந்த வயலின் இசையையும் இணைத்துள்ளதாக. "

-தொடர்வோம்


மனித உயிர்கள்தான் முக்கியம்...

இதுதான் தருணம் என்ற தலைப்பில் சொல்லியிருந்த போரை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுரைக்கு முற்றிலும் எதிர்பதமான ஒரு கருத்தை வலியுறுத்தி தினமணி-ல் ஒரு தலையங்கம் எழுதப் பட்டிருந்தது. போரை ஆதரிப்போர் சொல்லும் அனைத்து காரணங்களும் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. எனினும் அதை செய்வதற்கு முன் ஏற்படப் போகும் உயிர் சேதங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அப்பாவி உயிர்களின் விலை இன்னும் பல அப்பாவிகளின் உயிர் தான் என்றால் அந்த ரோஷமே நமக்கு தேவையில்லை, அது எந்த விதத்திலும் இழந்த அந்த உயிர்களுக்கு செய்யும் நன்றி கடனாகவும் கருதப்பட போவதில்லை.


இதுதான் தருணம்...

மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வை ரொம்பவே மாறித்தான் போய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவை இந்த முறை ரொம்பவே ஆதரிப்பதையும் பாக். கை கண்டிப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தியா தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இதை விட பெரிய பெரிய சேதங்களை எல்லாம் பார்த்துள்ளது. அப்பொழுதெல்லாம் பெரிய அக்கறை காட்டாத அமெரிக்கா, இந்த முறை காட்டும் அக்கறை நம்மை வியக்க வைக்கிறது. அது மட்டுமல்ல பாகிஸ்தானை கண்டிக்கவும் அமெரிக்கா முயன்றதில்லை. ஆனால் இந்த முறை அமெரிக்கா இந்தியாவை ஆதரிப்பதோடு , தன்னை காத்துக்கொள்ள பாகிஸ்தானை தாக்கவும் இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளதாக குரல் கொடுத்துள்ளது பலரின் புருவங்களையும் உயர வைத்துள்ளது.
இதற்கு பின்னால் அமெரிக்காவின் சுயநலம் மட்டுமல்ல அதன் முதலாளித்துவ பார்வையும் உள்ளதாகவே தோன்றுகிறது. இன்றைய பொருளாதார பின்னடைவை சரி செய்து கொள்ள அமெரிக்காவின் "குல" தொழிலான ஆயுத வியாபரத்தை நடத்த இதுவே தக்க தருணமாவும் அமெரிக்கா கருத நிறையவே வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் இந்த "பாச" உணர்வு நம்மை சந்தேக பட வைக்கிறது. தயவு செய்து இந்தியா இதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானை நாம் கண்டிக்கவும் பாடம் புகட்டவும் போர் சரியான முறை அல்ல. அதற்கான தருணமும் இதுவல்ல. இரண்டுமே அணு ஆயுத நாடாக இருப்பது தான் இதன் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இதை இரு நாடுகளும் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க தயாராக வேண்டும். அதற்கான தருணமும் இதுதான்.


பட்டவுடன் தொட்டது ...

வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன் காரர்களாக இருப்பதற்கும் காரணம் நம்முடைய பலவீனத்தின் காரணமான பேராசையும் அவசரமுமே காரணம்.



இது பெரியார் சொன்னதாக ஒரு வார இதழில் படித்தது. ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள உண்மை விளங்கும். வாழ்கையை சந்தோஷமாகவும் சிக்கலில்லாமல் நகர்த்தவும் இந்த பொன்மொழியை பின் பற்றினாலே போதுமே.


ஏன் இந்த வலைப்பதிவு..?

இந்த கேள்வி தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு நண்பருக்கு இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் கேட்டார் எதுக்காக இந்த வலைப் பதிவை ஆரம்பித்தீர்கள்..? என்று கேட்டார். (நல்ல வேளையாக ஏன் இதை படிக்க வேண்டும் என்று கேட்க வில்லை). அதற்கப்புறம் தான் எனக்கு தோன்றியது ஆஹா இதை ஏன் முன்னமே யோசிக்கவில்லை என்று. சரி இப்பொழுதாவது தோன்றியதே.
வாழ்க்கை காலையில் தூங்கி எழுந்து அலுவலகம் சென்று இரவு வீடு திரும்பி மீண்டும் காலையை நோக்கி நேரத்தை விரட்டும் சாதரண வாழ்கையை அனுபவித்து வந்தாலும் என்னுடைய மனசாட்சிக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமிருக்கிறது. அந்த இடைவெளியில் தோன்றியதுதான் இந்த வலைப்பதிவு "எண்ணங்கள்". சில பேர் நாட்குறிப்பு (டைரி) எழுதும் பழக்கத்தை விவரம் அறிந்த நாள் முதல் கடைசி வரை கொண்டிருப்பார்கள், அவர்கள் நிச்சயம் மனசாட்சிக்கு பதில் சொல்பவர்களாவே இருப்பார்கள். நாட்குறிப்பை வைத்தே பல பேர் வழக்கில் மாட்டிக்கொண்ட விஷயங்கள் நாம் அறிந்ததே. இதில் தன்னை எந்த விதத்திலும் வெளியில் காட்டிக் கொள்ளாத சில தீவிரவாதிகளும் அடக்கம்.
இதுவும் ஒரு விதமான மன இறுக்கத்தினை விரட்டும் வழி தான். மேலும் இந்த வலைப்பதிவு மற்ற வலைப்பதிவுகளிலிருந்து எப்படி வித்தியாசப் பட்டிருக்கிறது ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். நீங்கள் இந்த வலைப் பதிவில் செலவிடும் நேரங்கள் உபயோகரமாக இருக்க வேண்டும் அதே சமயம் ரசிக்கும் படியாகவும் இருக்க வேண்டும் என்பதே எண்ணங்களின் முக்கியமான நோக்கம்.


தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP