நாமே நீதிபதியாகி அதிகாரத்திற்கு தண்டனை தரவேண்டும்

சொன்னால் மட்டுமல்ல நினைத்தாலே கோபம் வரும் விஷயங்களில் இன்றைய சூழலில் எனககு சொல்ல தோணுவது. சன் டி.வி.இன் வியாபர பேயாட்டம் தான். அவுங்க விக்கிற SUN DTH க்காக போடப்படும் விளம்பரப் படமும் சரி அவர்கள் விநியோகம் என்ற பெயரில் வெளியிடும் குப்பை படங்களுக்குமான விளம்பர படமும் சரி, நம்மை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. இதை ஏற்கனவே ஒருமுறை பேசிவிட்டோம், இருந்தாலும் இந்த முறை எனககு தோன்றியது காசு கொடுத்து பார்க்கும் எங்களைப் போன்ற வெளிநாட்டு தமிழர்களையும், இம்சிக்கும் இவர்களது தொல்லையை என்னவென்று சொல்வது. அனேகமாக இந்தியாவில் DTH தொழில் நுட்பத்தில் டி.வி. பார்ப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இதை நெறி முறை படுத்த ஒரு சட்ட திட்டம் போட மாட்டங்காளா..? என்று ஏங்கும் பல லட்சம் பேர்களில் நானும் ஒருவன். இதுல இவுங்க பட விநியோகம் செய்ய வாங்க சொல்லி திரை உலக தயாரிப்பாளர்கள் தவமிருப்பதாய் கூட சொல்கிறார்கள். படம் பூஜை போடும் போதே இவர்கள் உத்திரவாதம் கொடுத்துவிடுவதுடன், எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்களை போட வேண்டும், குறிப்பாக யாரை எல்லாம் போட கூடாது என்று இவர்கள் சொல்வதாக (கட்டளை) இந்த டி.வி.இன் நிர்வாகியான சரத் சக்சேனாவே ஒரு மேடை பேச்சில் சொல்லி இருக்கிறார். இவர்கள் எப்படி இந்த விநியோகத்துறைக்கு வந்தார்கள் தெரியுமா..? ஆட்சி கட்டிலில் இருப்பவர்களை பகைக்கும் பட்சத்தில் இவர்களுக்கு புது படங்களின் விநியோக உரிமை கிடைப்பதில் சிக்கலாகி விடுவதால், இவர்களே உள்ளே இறங்கி படத்தை வாங்கி விநியோகம் பண்ணுவதோடு தொலைக்காட்சிக்கானா உரிமையையும் வாங்கி விடுகிறார்கள் எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலை படாமல் நிம்மதியா இருக்கலாம்ல..? ஆனா நாமதான் அப்படி இருக்க முடியாது போல.

இதை பற்றி சன் டி.வி. தரப்பில் முதலில் சொல்லப்பட்டது தயாரிப்பு பிரச்சனைகளால் மாட்டிக்கொண்டு வர வழியில்லாமல் தவிக்கும் படங்களை தாங்கள் வாங்கி வெளியிட்டு அந்த தயாரிப்பளருக்கு உதவி செய்வதாக சொல்லிகொண்டது. ஆனால் அவர்கள் உண்மையிலேயே பண்ணுகிறார்கள் தெரியுமா, தங்களது தொலைக்காட்சிக்கு படம் தர மறுத்தவர்களின் படங்களை அவர்கள் எக்காரணத்தை கொண்டும் வாங்குவதில்லை. இன்னொன்று படம் என்பது வியாபர தந்திரங்களை கொண்டிருக்க வேண்டும் ஒரு குத்துப்பாட்டு, லாஜிக் இல்லாமால் வரும் சண்டை காட்சிகள், இதை எல்லாத்தையும் விட முக்கியமா சம்மந்த பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் சன் டி.வி.இன் நிகழ்ச்சிகளில் எந்த மறுப்பின்றி கலந்து கொள்ள வேண்டும். இது ஒரு விதமானா "ராவடி" தனம்தான். இதை யார் தடுத்து நிறுத்துவது..? நாம் தான் வேற யார்..? ஊழலையே அறிவியல் ரீதியான முறையில் செய்தால் அதாவது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட "ராவடி" தனம் செய்தால் அது "திறமை" என்ற போர்வை போர்த்தப்பட்டு வியாபார தந்திரம் என்று மகுடமும் சூட்டப்படும். எனவே எந்த ஆட்சியாளர் வந்தாலும் அவர்கள் அதை செய்ய தயங்க மாட்டார்கள். எனவே ரசிகர்களாகிய நாம்தான் அதை செய்ய வேண்டும்.


Read more...

பத்மஸ்ரீ தகுதி என்ன..?

இசைஞானி இளையராஜாவுக்கு இன்னும் பத்மஷ்ரீ விருது எதுவும் வழங்கப்படவில்லை. அது குறித்து தமிழக அரசு ஏதாவது செய்யுமா?
`பரிந்துரைதான் செய்ய முடியும் -அவருக்கு `இசைஞானி' பட்டம் கொடுத்ததே நான்தான்.''

இந்த வார குமுதத்தில் வந்த கலைஞரின் பேட்டியில் வந்தது தான் இந்த கேள்வி பதில். அது சரி ராஜா தினமும் காலையில் எழுந்தவுடன் கலைஞருக்கு போன் பண்ணுவாரா..? இல்லை வேண்டாம் குளிச்சு முடிச்சவுடனாவது போய் பார்ப்பாரா..? இல்லை கூட்டணி குழப்பம் வரும் போது சம்மந்தப்பட்ட கூட்டணி தலைவர்களுடனாவது பேச்சு வார்த்தையில் தன்னை ஈடு படுத்திக்கொண்டாரா..? இப்படி எந்த தகுதியும் (!?) இல்லாதவருக்கு எப்படிங்க பத்மஸ்ரீ கொடுக்க சொல்லி "வலியுறுத்த"முடியும்? வெறும் "பரிந்துரை" தான் செய்ய முடியும்.

இதை சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு. அப்படி என்ன ராஜா கம்மியா சாதிச்சுட்டார்..? இல்லை அப்படி என்ன குறையை அவரது திறமையில் கண்டுவிட்டார்கள் இந்த "பரிந்துரை" குழு..? இதுவரை தமிழ் திரை உலகில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் திறனுக்கு ராஜாவின் திறமை கொஞ்சமும் சளைத்ததல்ல. இருந்தாலும் ....? சரிங்க இந்த பத்மஸ்ரீ விருதுக்கு தகுதிதான் என்ன ..? அதையாவது சொல்லுங்க.


Read more...

யார் சிவாஜி..?

நடிகர் விக்ரம் இயக்குநர் ஷ்ரீதர் படத்தில் கதாநாயகனாவதற்கும் முன்னரே டி.வி.தொடரிலும், சிகரெட்டுக்கெதிரான முழு நீளத் தமிழ்ப் படத்திலும் கதாநாயகனாக நடித்தபோதிலிருந்தே அவரது நடிப்பைக் கூர்மையாக கவனித்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் தன்னை சிவாஜியின் வாரிசாக வார்த்துக் கொள்ள எப்போதும் கமல்ஹாசன் முயற்சித்து வந்துள்ள போதிலும், அவரை விட அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அதிக தகுதிகள் உடையவர் விக்ரம்தான்.
ஞானி என்ற ஞானசூன்யம் தான் இப்படி சொல்லி உள்ளது. விக்ரம் தான் சிவாஜி இடத்தை பிடிப்பார் என்றால் அதுவும் சரி தான் ஏன்னா கமல் அடைந்திருக்கும் உயரத்தை இப்பொழுதுள்ள யாரும் எட்டி பிடிக்க முடியாது. ஏறகனவே சொன்ன மாதிரி கமல் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் சிறந்த இயக்குனர், இதை எல்லாம் சிவாஜியை நோக்கி சொல்ல முடியாது. எனவேதான் சொல்றோம் சிவாஜியை கடந்து தனக்கென ஒரு தனி இருக்கை போட்டுக்கொண்டவர் கமல் என்று. இதை நீங்கள் எப்படி மறுத்தாலும் இதுதான் உண்மை.
இதை எழுதி முடித்தவுடன் நண்பர் கோபி என்னிடம் ஞானி நடிப்பை பற்றிதானே சொல்லியுள்ளார் நீ ஏன் கதை திரைகதை பற்றி சொல்கிறாய் என்றார். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருந்தது எனவே அதற்காக கீழ் காணும் விளக்கம்.
அபூர்வ சகோதரர்கள் பட வெற்றி விழாவில் அதே சிவாஜி "எங்களை எல்லாம் விட சிறந்த நடிகர் கமல் என்று இந்த படத்தில் நிரூபித்து விட்டார் .." என்று சொன்னாரே (சிவாஜி பாணியிலேயே படியுங்கள்) அதை எப்படி எடுத்துக் கொள்வது. அபூர்வ சகோதரர்கள் ஒன்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப உதவியால் எடுக்க வில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்காக அவர் எவ்வாறெல்லாம் கஷ்ட்டப்பட்டார் என்பதை அப்படத்திலேயே கமலுடன் நடித்த மூத்த நடிகை மனோரமா சொல்ல கேட்டிருக்கிறோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தை சொல்லி அவர் தொழில்நுட்பம் வளராத அந்த காலத்திலேயே அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று வாதிடும் கூட்டத்திற்குத்தான் . கமல் தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொள்ள நாயகன் ஒன்றே போது மானது. மகாநதி,ஹேராம்,அன்பேசிவம், இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இவை அனைத்திலுமே கமல் எந்த வித கம்ப்யூட்டர் வித்தைகளை காட்டாமலேயே நடிப்பில் அசத்தி இருப்பார். நாயகனில் நடிக்கும் பொழுது கமலுக்கு 35 வயதுதானாம், அதில் அவர் நடித்திருக்கும் அளவிற்கு நண்பர் விக்ரம் நடித்த ஒரு படத்தை கூற முடியுமா, நண்பர் ஞானியால்..? மூன்றாம் பிறையில் நடிக்கும் பொழுது கமலுக்கு வயது நிச்சயம் இருபதுகளின் இறுதியில் இருந்திருக்கலாம் ஆனால் அந்த அளவிற்கு நடித்த விக்ரமின் படத்தை கூற முடியுமா..? நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், இப்பொழுது நடித்த படத்தை பற்றி பேசினால் கமலுக்கு இப்போ என்ன வயசு அவர் வயசுக்கு விக்ரம் வர்றப்ப நிச்சயம் அவர் அப்படி நடிப்பார்னு ஒரு (நொண்டி) சாக்கு சொல்லிட கூடாது பாருங்க. இதுக்கு கூட வேற ஒரு காரணம் சொல்வார்கள். ஒரு படத்துல விவேக் நேர்முகத் தேர்வில் ஒரு மேனேஜர் கேள்வி கேட்பார் "திடீர்னு இந்த பில்டிங் தீ பிடித்தால் என்ன பண்ணுவீங்கன்னு..?" விவேக் சொல்வர் "போன் பண்ணி தீ அணைப்பு துறையை கூப்பிடுவேன்", "இல்லை போன் வொர்க் ஆகலை இப்ப என்ன பண்ணுவீங்க?" விவேக் "வாசல்ல இருக்குற கூர்காவை கூப்பிடுவேன் " "கூர்காவிற்கு காது கேட்காது இப்ப என்ன பண்ணுவீங்க?" விவேக் "அதோ அந்த வாளியில் உள்ள மண்ணை அள்ளி போடுவேன் " மேனேஜர் "அதுல மண் இல்லை இப்ப என்ன பண்ணுவீங்க..?" இப்படி போய்க்கிட்டே இருக்கும் கடைசில பேசாம நீயே எரிஞ்சு போ அப்படின்னுட்டு விவேக் கொளுத்திட்டு போய்டுவார். அந்த மேனேஜர் மாதிரி எப்படி பேசினாலும் கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாங்க இந்த ஞானி மாதிரியான ஆட்கள். இங்கே ஒரு பழக்கம் இருக்கிறது எனககு அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை என்றால் அவனை பற்றி நான் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதே மாதிரிதான் இதுவும். இத்தனைக்கும் ஞானி எல்லாம் இப்பொழுது பேசுவதை என்றோ கமல் செய்ய ஆரம்பித்து விட்டார். இதை எல்லாம் விட ஒரு கொடுமை அடிக்கடி கமலை அடுத்த சிவாஜி என்று கூறுவதுதான், திருப்பியும் சொல்கிறேன் கமல் சிவாஜி செய்ததை எல்லாம் என்றோ கடந்து விட்டார். அவர் அதற்கும் மேலே, குனாவில் கமல் சொல்வதை போல் அதையும் தாண்டி உயர்ந்தது அவர் இன்று அடைந்திருக்கும் இடம்.
கமலின் நடிப்பை விக்ரம் நடிப்போடு ஒப்பிட்டு பேசியது தவறு என்றால் அவரை விட ஒரு படி மேலே என்று பேசியது அநியாயத்திலும் அநியாயம். சுதந்திர இந்தியாவில் இப்படி எழுத கூட ஒருவனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கலாம், உண்மையை மறைத்து எழுதுவது என்பது சுதந்திரமா என்பதை நீங்களே சுதந்திரமா சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.


Read more...

நீங்க நல்லவரா கெட்டவரா..?


''ஜெயலலிதா... கும்பகர்ணத் தூக்கத் திலேயே இருக்கிறாரா?''


''அவர் தமிழ்நாட்டு அரசியல்தானே செய்கிறார்... அவர் தமிழ்நாட்டில் எங்கே இருந்தால் என்ன? இந்த மாநிலத்தின் எல்லாப் பிரச்னைகளைப் பற்றியும் அவர் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். தன் கட்சிக்காரர்களை விட்டுப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர் சென்னையில் இருந்திருந்தால் இப்போது செய்யாத வேறு எந்த விஷயத்தை செய்திருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' -

ஜெயலலிதா குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர் சோ சொன்ன பதில்தான் மேற்கண்டது. ஜெயலலிதா பார்வையில் இவர் நல்லவரா கெட்டவரா..? நமக்கு இந்த குழப்பம் வெகுநாட்களாகவே உண்டு, ஆனால் அவர் மாஞ்சு மாஞ்சு ஆதரிக்கிற ஜெயலலிதாவிற்கும் இந்த குழப்பம் இதுவரை இல்லை என்றால் இந்த பதிலை பார்த்தபிறகாவது வந்திருக்கும் என்று நம்புவோமாக.


Read more...

மறுபதிப்பும் ஒரு மறுதலிப்பும்

சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த மின்அஞ்சலில் தமிழ் திரைப்படங்கள் சிலவை ஆங்கில திரைபடங்களில் இருந்து அப்படியே சுட்டவை என்றும் அதற்காக வருத்தப்பட்டிருந்தும் எழுதியிருந்தார். அதில் பெரும்பாலானவை கமல்ஹாசனின் படங்கள். அது கமலின் திறமையை கேள்வி குரியாதாக்கியதை போல நான் உணர்ந்தேன் அதன் காரணமாக வந்த மறுதலிப்பு தான் இது. கமல் பாணியில் சொல்வதென்றால் அவருடைய உண்மையான தொழில் பக்தியை கேலி செய்தது போலிருந்தது அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான்..
சினிமா ஒரு கற்பனைக்கான களம் என்பதில் மாறுபட்ட கருத்தே கிடையாது. ஒரு கற்பனை என்பதே நிஜத்தின் நிழலாக இருப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். INSPIRATION என்பது எந்த ஒரு கற்பனைக்கும் ஆதாரமாக இருப்பதை நாம் அறிவோம். INSPIRATION இல்லாத ஒரு படைப்பை நாம் கூற முடியுமா..? தாக்கத்திற்கும், அதை அப்படியே எடுப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நாகரிகம் முதற்கொண்டு நாம் பேசும் மொழி,உடை என அனைத்துமே பாதிப்பில் நம்முள் பதிந்து போனவையே. இங்கே எதுவும் சுயம்பு கிடையாது. அப்படி இயற்கையின் படைப்புகளே இருக்கும் போது கலைக்கு எப்படி இல்லாமல் போகும். அதை எப்படி செய்திருக்கிறார்கள் என்றே நாம் பார்க்க வேண்டும்.

அந்த பட்டியலில் கமலின் "தெனாலி" படமும் இருந்தது. சமீபத்தில் அப்துல் ஹமீது அவர்களின் பேட்டி ஒன்றில் கமல் தெனாலி படம் பண்ணுவதற்கு சில தினங்கள் முன்பு அழைத்து இலங்கை தமிழை எப்படி பேசுவது என்பது குறித்த விஷயங்களை கேட்டறிந்ததாகவும், அது குறித்த ஒரு ஒலி பேழையை முதல் நாள் மாலை வாங்கி கேட்டுவிட்டு அதை அப்படியே அடுத்தநாள் படப்பிடிப்பில் பேசியதாக சொன்னார். ஒரு சாதரண கலைஞனால் அப்படியே பேச முடியுமா..?
அவர் காப்பி அடிப்பது என்று முடிவு செய்த பிறகு எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும், அதை அப்படியே தமிழாக்கம் பண்ணிவிட்டு போயி இருக்கலாமே. இன்னொரு விஷயத்தையும் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார், அந்த படத்தில் இலங்கையில் நடைபெறும் விஷயங்களையும் இடம் பெறுமாறு பார்த்து கொண்டாராம் ஏனெனில் இது காமெடி படம் எனவே எல்லா தரப்பினரும் பார்ப்பார்கள், எனவே அனைவரையும்k இந்த விஷயம் சென்றடையும் என்றும் சொன்னாராம். அதே மாதிரி "அவ்வை சண்முகி" என்ற படத்திற்கு ஒப்பனை செய்து கொள்ள மட்டுமே கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஆகுமாம் அப்பொழுதெல்லாம் அவரால் திரவ உணவை மட்டும் உட்கொள்ளமுடியுமாம், அது மட்டுமின்றி அந்த வேடமிட்டு சென்னையின் மிகவும் பரபரப்பான பாண்டி பஜாரில் ஒரு நண்பகல் வேளையில் நடந்து சென்று தன்னை யாரும் கண்டு பிடிக்கவில்லை என்றவுடன்தான் அந்த ஒப்பனையை தேர்வு செய்தாரம். ஒரு காப்பி அடிப்பவன் செய்யும் வேலையா இது ..? கமலின் எல்லா படங்களும் இப்படித்தான் எடுக்க படுவதை போல ஒரு பரவலான பேச்சும்உண்டு. இவ்வளவு சொல்பவர்கள் எல்லாரும் சொல்லத் துணியாத கருத்தை வலியுறுத்தி "ஹே ராம்" என்ற அற்புதமான படத்தை எடுத்தாரே அப்பொழுது எங்கு போனார்கள். இந்த படம் நல்ல படம்தான் ஆனால் ஓடாது அப்படின்னு சொல்லிட்டு பக்கத்து திரை அரங்கத்தில் ஓடும் "நல்ல"படம் பார்க்க போயிருந்த அவர்களுக்காக சில உதாரணங்களை சொல்ல வேண்டியிருக்கிறது .

நான் முதல் முறையாக இளையராஜாவின் இசையில் வந்த "கனவு காணும் வாழ்க்கை யாவும்..." என்ற நீங்கள் கேட்டவை திரைப்பட பாடல், பழைய ஹிந்தி பட பாடலின் மெட்டு என்பதை கேட்டு அதிர்ந்து போனேன். அந்த பாடலையும் கேட்டேன். ஆனால் அது பாலு மகேந்திராவின் கட்டாயத்தில் போடப்பட்டதுஎன்பதை பாலு மகேந்திராவின் வாயாலேயே கேட்க நேர்ந்தது, ஆனாலும் இளையராஜாவை காப்பி அடிப்பவர் பட்டியலில் நாம் சேர்ப்பதில்லை. கவுண்டமணியின் காமெடியில் நாமெல்லாம் மிகவும் ரசிக்கும் சின்னத்தம்பி காமெடி காட்சிகள் அப்படியே ஒரு பழைய படத்தில் சுருளிராஜன் பண்ணியது ஆனால் அது கவுண்டமணி சொல்லும் "டேய் அப்பா உன்னால ஒன்னு மிச்சம்டா, கரண்ட் பில்லே நான் கட்டினது இல்லைடா ..." அப்படின்னு சொல்றதை போல வருமான்னு தான் தோணும். தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் அந்த காலத்தில் வெளிவந்த ஆங்கில நாவல்களை தழுவியாதாகவும், திரைப்படங்களை தழுவியதாகவும் இருந்ததை கமல் மேல் குற்றம் சொல்பவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் . இதை பாலச்சந்டருடன் பணிபுரிந்த ஒருவரே என்னிடம் நேரடியாக சொன்னார், அவர் அந்த ஆங்கில படங்களின்,நாவல்களின் பெயர்களையும் சொன்னார்.

கமல் சொன்னமாதிரி கம்பராமாயனமே ஒரு தழுவல் தான்.

இன்னொரு விஷயம் இங்கு ஆங்கில படத்தை பார்த்து எடுப்பவர்கள் அனைவரின் சார்பாகவும் நான் சொல்லவில்லை, உண்மையான கலைஞனை அந்த கும்பலோடு சேர்க்கும் "நாகரீகம்" தான் கண்டிக்கத்தக்கது. அதற்கான மறுப்புதான் இது.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP