சன்னில் கறை...
சன் தொலைகாட்சி திரை துறை பிரவேசம் திரை துறையினருக்கு இப்போது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் இது நீண்ட கால அடிப்படையில் ஒரு பிரச்சனையாய் இருக்கும் என்பது என்னவோ உறுதி. திரை துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கால கட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் சன்னின் வரவு எல்லாராலும் வரவேற்கப் படலாம், ஆனால் அது மக்களுக்கு கொடுக்கும் இம்சை அடடா தாங்கவே முடியலை. இவர்கள் எடுத்திருக்கும் படங்களை விளம்பரம் செய்வதற்கு நேரம் காலமே கிடையாது, ஒரு வரை முறையின்றி செய்யப்படுவதை பார்க்கும் பொழுது ஒருவித வெறுப்பே ஏற்படுகிறது. அதுவும் மாதா மாதம் ஒரு படம் வெளியிடுவதாக அது வெளியிட்டுள்ள அறிக்கை நம்மைப் போன்றோருக்கு ஒரு வித கிலியை ஏற்படுத்துகிறது. சன் குழுமம் வெளியிடும் படங்களே பாடல்கள் வரிசையில் முதலிடம், படங்களின் வரிசையில் முதலிடம் அது மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் இரண்டு நிமிடம் ஓடக்கூடிய அந்த படம் சம்மந்தப்பட்ட முன்னோட்டம், சனி ஞாயிறு கிழமைகளில் கிடைக்கும் நேரத்தில் அந்த பட சம்மந்த பட்டவர்களின் பேட்டி இப்படியாக அந்த படத்தை சன் தொலைகாட்சியை பார்க்கும் நம்மை போன்றோரின் மனதினுள் செலுத்தும் இந்த முயற்சியை என்னவென்று சொல்வது. சன் தொலைக்காட்சியை அதன் ஆரம்ப காலம் தொட்டே பார்த்து வருகிறேன் அதன் வளர்ச்சியை கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அது தற்பொழுது செய்து வரும் இந்த போக்கு நிச்சயம் சன்னிற்கு ஏற்பட்ட ஒரு கறையாகத்தான் கருத வேண்டியுள்ளது. அமீர், சேரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களே இதை ஆதரித்து பேசும் பொழுது ஒரு வித வருத்தம்தான் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கலாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேற தொலைகாட்சி பார்க்க வேண்டியதுதானேன்னு... நாங்க இங்க (அமெரிக்காவில் ) பார்க்கும் எல்லா அலைவரிசைக்கும் தனித்தனியாக மாதா மாதம் கட்டணம் செலுத்த வேண்டும். இப்பொழுது சன் தொலைக்காட்சிக்கு கிட்டத்தட்ட $25 செலுத்தி வருகிறோம். (ஆமாங்க இதுவே அதிகம் தான் ). இந்த நிலையில் இன்னொரு தொலைகாட்சி அலைவரிசை என்பது எங்களை போன்றவர்களுக்கு சுமையானதுதான். இப்படியே போனால் ஒரு நாள் சன் தொலைக்காட்சியை மறந்து விட வேண்டியது தான்.
0 comments:
Post a Comment