ஏர் இந்தியா ஒரு பயண அனுபவம்.
சொல்ல கடினமாத்தான் இருக்கு ஆனா இது எனக்கு நேர்ந்த அனுபவம். இந்த முறை சில பல காரணங்களால் ஏர் இந்தியாவில் பயணம் செய்யும் படி ஆகியது, உள்ளுக்குள்ளே ஒரு உதறுலுடன் தான் பயணித்தேன். பொதுவாக நாம் நியூயோர்க்கிலிருந்து சென்னை செல்கிறோம் என்றால் சென்னை வரை நமக்கு போர்டிங் பாஸ் நியூயார்க் கிலேயே கொடுத்து விடுவார்கள். இங்கே அது நடக்கவில்லை, கேட்டவுடன் கவுண்டரிலிருந்தவர் சற்றே பதற்றத்துடன் பக்கத்து கவுண்டரில் இருந்தவரிடம் விசாரித்தார், அவர் நமது தேசிய மொழியில் ஏதோ சொன்னார் (நாம எல்லாம் சுத்த தமிழருங்க அதனால தமிழை விட்டால் வேறு இந்திய மொழிகள் தெரியாது, சுருக்கமா சொல்லனும்னா நம்ம தமிழக முதல்வர் கலைஞர் மாதிரின்னு வச்சுக்குங்க) நமக்கு சுத்தமா புரியலை ஆனால் அவர் தலை அசைப்பிலிருந்து, சென்னை வரை கொடுக்க மாட்டர்கள் என்பது மட்டும் உறுதியானது. அதுவும் ஒரு விதத்தில் சரி தான் ஏனெனில் டெல்லி சென்றடைந்தவுடன் நமது லக்கேஜ் எல்லாம் அங்கே தான் எடுக்க வேண்டும் ஏனெனில் அதுதான் இந்தியாவில் நுழையும் இடம் எனவே அங்கு தான் சுங்க சோதனை (Customs) . அங்கு இறங்கி சென்னைக்கு போர்டிங் பாஸ் வாங்கி கொள்ளலாம் என்று நம்பி போனேன். அங்கு போனவுடன் எதிர் பார்த்தபடி ஆரம்பிச்சுட்டாங்க, அதாவது ஒரே முன்பதிவு என்னில் பயணம் செய்த என் மனைவிக்கும் மகளுக்குமான டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருந்தது ஆனால் எனக்கு உறுதி செய்யப் படவில்லை . எனக்கோ பயங்கர ஆச்சர்யம் அது எப்படின்னு கேட்டால் யாரும் பதில் சொல்ல வில்லை மாறாக செய்கை மூலமாகவே அடுத்து செல்லவேண்டிய கவுண்டரை பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கும் கிட்டத்தட்ட இதே பதிலை சொல்லி கடைசியாக ஒரு கவுண்டரில் நிப்பாட்டி என் பெயர் மற்றும் இதர விவரங்களை போனில் சொல்லி என் பயணசீட்டில் ஏற்கனவே பதிவாகியிருந்த அதே நம்பரை வாங்கி கொடுத்து இந்த நம்பரை சொல்லுங்க உங்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியை சொல்லி உடனே 200 ரூபாய் கேட்டார், அப்பொழுதுதான் புரிந்தது ஏன் அந்த அளவுக்கு அலைய விட்டார்கள் என்று.
இதை விட கொடுமை திரும்ப வரும் பொழுது தான், டெல்லியிலிருந்து நியூயார்க் வரை செல்வதற்கான பயணசீட்டை உறுதி படுத்தவில்லை, பிளைட் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே, இருக்கிற பட்சத்தில் அவர்கள் சொன்னதுதான் காமெடி நீங்கள் டெல்லி ஏர்போர்ட் வரி கட்ட வேண்டும் அதை அங்கே உள்ள கவுண்டரில் கட்டி விடுங்கள், அதுவும் எவ்வளவு தெரியுமா மூவாயிரம் ரூபாய். என்ன கொடுமை இது ஒவ்வொரு ஏர்போர்ட் வரியையும் பயணம் செய்பவர்களே செலுத்துவதாக இருந்தால் அது எப்படி. நான் இதற்கு முன் கிட்டத்தட்ட ஆறேழு முறை பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட இந்த மாதிரியான அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை, இந்த முறை ஏன் நிகழ்ந்தது தெரியும் இந்த முறை தான் ஏர் இந்தியாவில் முதல் முறையாக பயணம் செய்தேன் அது தான்.
உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வது ஏர் இந்தியாவில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக அல்ல, பயணம் செய்கிற பட்சத்தில் இதை எல்லாம் எதிர் கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு வர வேண்டும் என்பதற்காகவே
0 comments:
Post a Comment