புத்தகங்களில் புதையல் -- நிலமெல்லாம் ரத்தம்

நண்பர் புகழ் ஒளி சமீபத்தில் அளித்த அன்பளிப்பு "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகம். நானும் படிப்பதில் சோம்பேறி தான் ஆனால் உலகில் தற்போது உள்ள சில பிரச்சினைகளின் வேர் தேடலில் ஒரு வித சுகம் இருக்கிறது. அமெரிக்கா வந்த பிறகு அப்படி அறிந்து கொள்ள விரும்பிய பல விஷயங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை முக்கியமானது. இங்கு நியுயார்க்கில் ஏகப்பட்ட யூதர்களின் வழிபாட்டு தளங்களை காணமுடியும். அந்த அளவுக்கு யூதர்கள் நியுயார்க்கில் பரவி உள்ளனர். அதாவது இங்குதான் உலகின் பலம் வாய்ந்த பல தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் உள்ளன அவற்றின் முக்கியமானவற்றின் தலைமை மற்றும் துறை சார்ந்த பொறுப்புகளில் யூதர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பு நிலை பாட்டினை எடுத்துள்ளதாகவும் கேள்வி பட்டுள்ளேன். எனவே அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேட ஆரம்பித்ததுதான் இந்த தேடல். ஏற்கனவே இது சம்மந்தமாக "யூதர்கள்" என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், அதற்கிடையில் இந்த புத்தகம் கிடைத்ததால் இதை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயம் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த முதல் அத்தியாயம் முழுவதுமே அவரின் அருமை பெருமைகளை சொல்வதாகவே உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைவு பற்றி "எண்ணங்களில்" குறிப்பிடுகையில், அவரது நிலைப்பாடு ஒரு கட்டத்துக்கு பிறகாவது மற்ற நாடுகளுடன் நல்லுறவை பேணும் படி அமைந்திருந்தால் இந்த மாதிரியான ஒரு இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டினை எடுத்ததன் மூலமாகத்தான் யாசர் அராபத் என்ற போராளி இயற்கை மரணத்தை இந்த நூற்றாண்டிலும் எய்த முடிந்துள்ளது என்றே நம்ப தோன்றுகிறது.
பாலஸ்தீனை இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரித்து அந்த நாட்டுக்கான தூதுவர்களை எல்லாம் நியமித்துள்ளது. அராபத்தும் இந்தியாவுடன் நல்லுறவு பேணி வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே அதே மாதிரி காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவை ஆதரித்த ஒரே முஸ்லீம் நாடு பாலஸ்தீன்தான். காரணம் கிட்டத்தட்ட அதே தலைவலியை அவர்களும் இஸ்ரேல் என்ற ரூபத்தில் அனுபவித்து வருவதால். சில நாடுகள் இன்னும் பாலஸ்தீன் என்பதை ஒரு நாடாகவே அங்கீகரிக்காமல் உள்ள நாடுகளும் இருக்கின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

இஸ்ரேல் எவ்வாறு தனது கரத்தை அடுத்த நாட்டிற்குள் நுழைத்து நர்த்தனம் ஆடுகின்றது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளிக்காட்சி இந்த கட்டுரையுடன் தொடர்புடையதே தயவுசெய்து ஒலியுடன் ரசிக்கவும்..



Read more...

தரம் தாழ்ந்தவர் யார்..?

தரம் தாழ்ந்து போக போட்டி போடும் நம் தமிழக அரசியல் வாதிகளை நினைத்தால்.. ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு கருணாநிதி அளித்த பதில் அறிக்கை. இதில் மிகவும் தரம் தாழ்ந்தவர் யார் என்பது உங்களுடனே இருக்கட்டும் ஏன்னா அதை சொல்லி நம்மை நாம் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்பது என் நிலைப்பாடு.

என்னைப் பற்றி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறும்போது, "திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்'' என்று எழுதியிருக்கிறார். இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி வருவதால், இவர் எதை "மூலதனமாக'' வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்? என்று கேட்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.


Read more...

கலைஞனை மதிக்காத சமூகமே...!

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.


Read more...

நிஜ சகலகலா வல்லவன்

கமல் தமிழ் திரை உலகின் மிகப் பெரிய சொத்து, கமல் இந்திய திரை உலகின் பெருமை. கமல் நடிப்பில் மட்டுமல்ல திரைக்கதை,வசனம்,இயக்கம் எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர். இதை வெறும் வாசகமாக சொல்லவில்லை, அனுபவ பூர்வமாக சொல்கிறேன். இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு நிறைய விஷயங்களை சொல்ல முடியும் இருப்பினும் சிலவை மட்டும் இங்கே. ஹேராம் கமல் இயக்கிய முதல் படம் (அதாவது இயக்குனர் என்ற பொறுப்பில் அவர் பெயர் வந்தது என்ற அளவில்). இந்த படத்தில் ஒரு காட்சி இந்து முஸ்லீம் கலவரத்தை ஒட்டி வரும் காட்சியில் இயற்கையாக மதம் பிடிக்கும் தன்மை கொண்ட யானை ஒரு சங்கிலியால் கட்டப்பட்டு அமைதியாக இருக்கும் ஆனால் செயற்கையாக "மதம்" கொண்ட மனிதர்களால் யானையின் காலடியில் கோரமாக கொல்லப்பட்டு கிடக்கும் காட்சியில் யானை அமைதியாக வாலாட்டிய படி நிற்பது. மனிதனுக்கு மதவெறி தேவை இல்லை என்பதை பத்துபக்க வசனங்களில் நீட்டி முழக்காமல், காட்சியிலேயே காண்பித்திருப்பது. அதே படத்தில் மற்றுமொரு காட்சி முதல் முறையாக மத துவேஷம் கொண்டவர்களின் கூட்டணியில் சேரும் போது சகதியில் கால் வைத்து நடந்து செல்வது மற்றும் முதல் முறையாக போதை உண்டா மயக்கத்தில் நடந்து செல்வது . என்று குறிப்பாலேயே பல செய்திகளை அனாசயமாக சொல்லி செல்கிற இவரை மிக சிறந்த இயக்குனர் என்று பார்க்காமல் எப்படி பார்ப்பது ..?
வசனம் கேட்கவே வேண்டாம் தேவர்மகனில் வரும் ... "நேத்து வரை வேல் கம்பையும் ஈட்டியையும் தூக்கிகிட்டு இருந்தவனை விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான் அவன் பையத்தான் வருவான்." என்று கிராமத்து படிப்பறிவற்ற மக்களை பற்றி சிவாஜி சொல்லும் போது "..எவ்வளவு பைய அய்யா அதுக்குள்ளே நான் செத்துருவேன்.." என்று கமல் சொன்னவுடன் " செத்து போ எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தான் ஆனால் அதுக்குள்ளே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இன்னைக்கு விதை போட்டவுடன் நாளைக்கே பழம் சாப்பிடனும்னு நினைச்சா எப்படி..? இன்னைக்கு நான் விதை போடுறேன் உன் பையன் காயை பார்ப்பான் அவன் பையன் பழம் சாப்பிடலாம் ஆனால் அதை எல்லாம் இருந்து பார்க்க நான் இருக்க மாட்டேன் இதெல்லாம் பெருமையா..கடமை". என்ன ஒரு வசனம், எனககு கோபம் வரும் போதெல்லாம் இந்த வசனத்தைதான் நினைத்துக் கொள்வேன். அதாவது ஒரு நாளில் பல முறை. அதே மாதிரி குருதிப்புனலில் வரும் "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு அது இயற்கையின் நியதி..". இப்படி பல.
திரைக்கதை கேட்கவே வேண்டாம் "விருமாண்டி" திரைக்கதை ஒன்று போதும்.
சரி இப்படி பட்ட கமல் இன்னும் பல படி உயர்ந்திருக்கிறார் இப்படியாக விஜய் TV சமீபத்தில் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் கமலுக்கு சிறந்த திரைக்கதையசிரியருக்கான விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது,சிறந்த வில்லனுக்கான விருது, பெரும்பான்மையான மக்களை கவர்ந்தவர் என்கிற விருது என்று மொத்தம் நான்கு விருதுகளை அள்ளியிருக்கிறார். எனககு தெரிந்து இதுவரை யாருமே இவ்வளவு விருதுகளை ஒரே ஆளாக வாங்கியிருக்கிரார்களா ..? என்றால் எனககு தெரிஞ்சு இல்லை. (உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க).
தளபதி அடைமொழி இல்லாமால் இப்பவெல்லாம் யாரும் தமிழ் திரை உலகில் நுழைவதில்லை. அப்படி பட்ட இந்த தமிழ் திரையுலகில் சகலகலா வல்லவன் என புகழ பட்டாலும் அந்த புகழுக்குரியவராக தன்னை மாற்றி காண்பித்தவர் கமல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளி காட்சியை பாருங்கள் சிறந்த நடிகர் பட்டம் வென்ற சூர்யா கமலுக்கு செய்யும் மரியாதையை. நிச்சயம் கமல் இதுக்குரியவர் தான் .



Read more...

யார் போராளி..?

மரணம் எல்லாரையும் மறித்து விடுவதில்லை இதில் பிரபாகரனது மரணமும் அடங்குமா..? இல்லையா என்பது சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வருவது. அதற்கு முன் சில விஷயங்களை நாம் பார்ப்போம். பிரபாகரனது மறைவு சில தினங்களுக்கு முன்னால்தான் உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே அதை பற்றி பேசுவதற்கு சற்றே யோசனையாகவே இருந்தது. ஆனால் அதை புலிகளின் தரப்பிலேயே ஒத்துக்கொண்ட பிறகு பேசலாம் என்ற தைரியம் வந்தது. காந்தீய கொள்கைகளை மறக்கவும் அதை ஏடுகளின் எல்லைக்குள்ளேயே அடக்கி விட்ட நம் தலைமுறைக்கு அதை பற்றி பேசினாலேயே நகைப்புக்குரியதாக தோன்றும். இன்றும் நாளையும் என்றும் அடிக்கு அடி கண்ணுக்கு கண் என்பதெல்லாம் மனித சமுதயாத்துக்கு ஒத்து வரப்போவதில்லை இதை நாம் என்று தான் உணரப்போகிறோமோ? சரி விடுதலைப் புலிகளின் இந்த தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாமா ..? இதே வன்முறை வழியை பின்பற்றி தானே புலிகள் சில காலத்திற்கு முன்பு இலங்கையின் ஒரு பகுதியை பிடித்து ஆட்சி செய்து வந்தார்கள்..? அப்புறம் எப்படி அவர்கள் காந்தீய வழியை பற்றி எல்லாம் யோசிப்பார்கள்..? என்றெல்லாம் கேட்கலாம். இங்கே ஒரு விஷயத்தை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அதாவது எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் ஆரம்பிக்க பட்ட பொழுது இருந்த தங்களது இலக்கை அதை அடைந்த பிறகும் நீடித்து கொண்டே போவது தான் அந்த இயக்கத்தின் தோல்வியாகிறது. உதாரணமாக அல்கொய்தா இயக்கம் இஸ்லாம் சட்டம் நடை முறை உள்ள நாட்டில் மற்ற விஷயங்கள் தேவை இல்லை என்று சொல்வது வரை அதற்கிருந்த ஆதரவு, கொஞ்சம் கொஞ்சமாக உலகின் எல்லா நாடுகளும் அதே விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அதன் அழிவிற்கு வழி வகுத்து விட்டது. இதே போல் விடுதலைப் புலிகளின் இலக்கும் மாறி விட்டது என்றே வரலாறு நமக்கு சொல்லும் பாடம். அதாவது தனக்கென இலங்கையின் ஒரு பகுதியை பிடித்தவுடனாவது அது தனது தீவிரவாத போக்கை கைவிடுத்து உலக நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது தாங்கள் பிடித்த அந்த பகுதிக்கு உலகநாடுகளின் அங்கீகாரம் பெற முறை முயன்றிருக்க வேண்டும். ஒருவேளை அதற்கான கதவுகள் திறந்த போதிலும் தன்னால் முடியாது என்று விடுதலை புலிகள் மறுத்து விட்டார்களா ..? என்பது குறித்து எனககு தெரியவில்லை, ஆனால் அப்படி வைக்கப்பட்டிருந்தால் அதை அவர்களது அடிப்படை "வன்முறை " கொள்கைகளே தடுத்திருக்கும். "வன்முறை" கொள்கைகள் என்பது ராஜீவ் கொலை,அமிர்தலிங்கம் கொலை உட்பட எல்லாம் சேர்த்து தான்.

தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கண்டு சிங்கள அரசை எதிர்த்து உருவாக்கப்பட்ட பல இயக்கங்களும் கால ஓட்டத்தில் காணாமல் போனாலும், விடுதலை புலிகள் தங்களது இயக்கத்தை வளர்க்க அப்பொழுதைய தமிழக அரசின் மூலமாக இந்திய நாட்டின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றது பேருதவியாக இருந்தது. இதெல்லாம் நாமறிந்த ஒன்றே. ஆனால் அதே முறையை ஏன் தங்களுக்கென ஒரு பகுதியை பிடித்த பிறகும் காண்பிக்க வில்லை என்பதே என்னைப் போன்றோரின் கேள்வி. சீமான் போன்றவர்கள் போரின் கடைசி கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்க கோரி போராடினார்கள். அதை ஏன் இடைப்பட்ட காலத்தில் செய்ய முயலவில்லை..?

பிரபாகரன் போராட ஆரம்பித்த பொழுது வன்முறையை கையில் எடுத்தது தவறு, சரி அப்பொழுது எடுக்கத்தவறிய அந்த நிலைபாட்டை பிறகாவது சரி செய்து இருக்கலாம். ஏற்கனவே சொன்ன மாதிரி. பிரபாகரன் ஒரு கொள்கை வாதி என்பதிலோ அல்லது அவரது ஆரம்ப கால போராட்டங்கள் ஒரு சமூகத்தின் குரலாக ஒலித்ததயோ மறுக்க வில்லை. ஒரு தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க நினைக்கும் ஒரு மாணவன் எல்லா கேள்விக்கான விடையையும் சொந்தமாக எழுதிவிட்டு ஒரு கேள்விக்கான விடையை பார்த்து எழுதியதை தவறு என்று சொல்லலாமா கூடாதா..? என்பதை போன்றுதான் பிரபாகரன் ராணுவத்தீர்வை விரும்பியதன் காரணமும். ஒரு நல்ல போராளி தடம் மாறிப் போகும் போதுதான் எத்தனை வலி வேதனைகள். பிரபாகரனின் மரணம் ஒரு பெரும் போருக்கனா விதையாக இல்லாமல் அந்த போரின் தீர்வை தமிழ் சந்ததிகளுக்கு நிரந்தரமாக பெற்று தருகிற ஒரு பாதையாக இருக்க வேண்டும் .

தீர்வுகளின் தூரம் அதிகமிருப்பதை கொள்கை வாதிகள் விரும்பாத பட்சத்தில் பிறப்பது தான் வன்முறை என்பது எனககு தெரிந்த உண்மை. அடக்குமுறைகளுக்கான காரணங்கள் எதுவாகினும் அதை அடக்கும் முறை அமைதி வழியாகத்தான் இருக்க வேண்டும். அது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை தரமுடியும் என்பதை வருங்கால போராளிகள் உணர வேண்டும். இங்கே போராளிகள் என்பவர்கள் அநீதியை எதிர்த்து போராடுபவர்கள் எல்லாரையும் குறிக்கிறது, ஆயுதம் ஏந்துபவர்களை மட்டும் குறிக்க வில்லை.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP