யார் போராளி..?
மரணம் எல்லாரையும் மறித்து விடுவதில்லை இதில் பிரபாகரனது மரணமும் அடங்குமா..? இல்லையா என்பது சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வருவது. அதற்கு முன் சில விஷயங்களை நாம் பார்ப்போம். பிரபாகரனது மறைவு சில தினங்களுக்கு முன்னால்தான் உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே அதை பற்றி பேசுவதற்கு சற்றே யோசனையாகவே இருந்தது. ஆனால் அதை புலிகளின் தரப்பிலேயே ஒத்துக்கொண்ட பிறகு பேசலாம் என்ற தைரியம் வந்தது. காந்தீய கொள்கைகளை மறக்கவும் அதை ஏடுகளின் எல்லைக்குள்ளேயே அடக்கி விட்ட நம் தலைமுறைக்கு அதை பற்றி பேசினாலேயே நகைப்புக்குரியதாக தோன்றும். இன்றும் நாளையும் என்றும் அடிக்கு அடி கண்ணுக்கு கண் என்பதெல்லாம் மனித சமுதயாத்துக்கு ஒத்து வரப்போவதில்லை இதை நாம் என்று தான் உணரப்போகிறோமோ? சரி விடுதலைப் புலிகளின் இந்த தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாமா ..? இதே வன்முறை வழியை பின்பற்றி தானே புலிகள் சில காலத்திற்கு முன்பு இலங்கையின் ஒரு பகுதியை பிடித்து ஆட்சி செய்து வந்தார்கள்..? அப்புறம் எப்படி அவர்கள் காந்தீய வழியை பற்றி எல்லாம் யோசிப்பார்கள்..? என்றெல்லாம் கேட்கலாம். இங்கே ஒரு விஷயத்தை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அதாவது எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் ஆரம்பிக்க பட்ட பொழுது இருந்த தங்களது இலக்கை அதை அடைந்த பிறகும் நீடித்து கொண்டே போவது தான் அந்த இயக்கத்தின் தோல்வியாகிறது. உதாரணமாக அல்கொய்தா இயக்கம் இஸ்லாம் சட்டம் நடை முறை உள்ள நாட்டில் மற்ற விஷயங்கள் தேவை இல்லை என்று சொல்வது வரை அதற்கிருந்த ஆதரவு, கொஞ்சம் கொஞ்சமாக உலகின் எல்லா நாடுகளும் அதே விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அதன் அழிவிற்கு வழி வகுத்து விட்டது. இதே போல் விடுதலைப் புலிகளின் இலக்கும் மாறி விட்டது என்றே வரலாறு நமக்கு சொல்லும் பாடம். அதாவது தனக்கென இலங்கையின் ஒரு பகுதியை பிடித்தவுடனாவது அது தனது தீவிரவாத போக்கை கைவிடுத்து உலக நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது தாங்கள் பிடித்த அந்த பகுதிக்கு உலகநாடுகளின் அங்கீகாரம் பெற முறை முயன்றிருக்க வேண்டும். ஒருவேளை அதற்கான கதவுகள் திறந்த போதிலும் தன்னால் முடியாது என்று விடுதலை புலிகள் மறுத்து விட்டார்களா ..? என்பது குறித்து எனககு தெரியவில்லை, ஆனால் அப்படி வைக்கப்பட்டிருந்தால் அதை அவர்களது அடிப்படை "வன்முறை " கொள்கைகளே தடுத்திருக்கும். "வன்முறை" கொள்கைகள் என்பது ராஜீவ் கொலை,அமிர்தலிங்கம் கொலை உட்பட எல்லாம் சேர்த்து தான்.
தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கண்டு சிங்கள அரசை எதிர்த்து உருவாக்கப்பட்ட பல இயக்கங்களும் கால ஓட்டத்தில் காணாமல் போனாலும், விடுதலை புலிகள் தங்களது இயக்கத்தை வளர்க்க அப்பொழுதைய தமிழக அரசின் மூலமாக இந்திய நாட்டின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றது பேருதவியாக இருந்தது. இதெல்லாம் நாமறிந்த ஒன்றே. ஆனால் அதே முறையை ஏன் தங்களுக்கென ஒரு பகுதியை பிடித்த பிறகும் காண்பிக்க வில்லை என்பதே என்னைப் போன்றோரின் கேள்வி. சீமான் போன்றவர்கள் போரின் கடைசி கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்க கோரி போராடினார்கள். அதை ஏன் இடைப்பட்ட காலத்தில் செய்ய முயலவில்லை..?
பிரபாகரன் போராட ஆரம்பித்த பொழுது வன்முறையை கையில் எடுத்தது தவறு, சரி அப்பொழுது எடுக்கத்தவறிய அந்த நிலைபாட்டை பிறகாவது சரி செய்து இருக்கலாம். ஏற்கனவே சொன்ன மாதிரி. பிரபாகரன் ஒரு கொள்கை வாதி என்பதிலோ அல்லது அவரது ஆரம்ப கால போராட்டங்கள் ஒரு சமூகத்தின் குரலாக ஒலித்ததயோ மறுக்க வில்லை. ஒரு தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க நினைக்கும் ஒரு மாணவன் எல்லா கேள்விக்கான விடையையும் சொந்தமாக எழுதிவிட்டு ஒரு கேள்விக்கான விடையை பார்த்து எழுதியதை தவறு என்று சொல்லலாமா கூடாதா..? என்பதை போன்றுதான் பிரபாகரன் ராணுவத்தீர்வை விரும்பியதன் காரணமும். ஒரு நல்ல போராளி தடம் மாறிப் போகும் போதுதான் எத்தனை வலி வேதனைகள். பிரபாகரனின் மரணம் ஒரு பெரும் போருக்கனா விதையாக இல்லாமல் அந்த போரின் தீர்வை தமிழ் சந்ததிகளுக்கு நிரந்தரமாக பெற்று தருகிற ஒரு பாதையாக இருக்க வேண்டும் .
தீர்வுகளின் தூரம் அதிகமிருப்பதை கொள்கை வாதிகள் விரும்பாத பட்சத்தில் பிறப்பது தான் வன்முறை என்பது எனககு தெரிந்த உண்மை. அடக்குமுறைகளுக்கான காரணங்கள் எதுவாகினும் அதை அடக்கும் முறை அமைதி வழியாகத்தான் இருக்க வேண்டும். அது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை தரமுடியும் என்பதை வருங்கால போராளிகள் உணர வேண்டும். இங்கே போராளிகள் என்பவர்கள் அநீதியை எதிர்த்து போராடுபவர்கள் எல்லாரையும் குறிக்கிறது, ஆயுதம் ஏந்துபவர்களை மட்டும் குறிக்க வில்லை.
0 comments:
Post a Comment