பாராளுமன்ற தேர்தலும்..ஈழ தமிழர் ஆதரவும்..
காங்கிரஸ் கட்சி தமது ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்த ஏற்பாகவே இதை முன் வைக்கும். அதே திசையில் இன்னும் வேகமாகச் செல்வதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டதாகக் கருதிச் செயல்படும்.காங்கிரசை வீழ்த்துவது என்றொரு ஒற்றை நிகழ்ச்சி நிரலை இங்கே சிலர் முன் வைத்தனர். மாநில அளவிலான பிரச்சினைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி, தொலை நோக்கில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிற தேசியப் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளுகிற போக்கிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. காங்கிரசை வீழ்த்தினால் அந்த இடத்திற்கு யார் வருவார்கள்? பா.ஜ.க. போன்ற ஒரு வகுப்புவாதக் கட்சி அந்த இடத்தைப் பிடிப்பதில் அவர்களுக்குக் கவலை கிடையாது. ``தனி ஈழத்தை காந்தியே எதிர்த்தாலும் அவரை எதிர்ப்போம். கோட்ஸே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம்'' என்று இங்கே ஒரு திரைப்பட இயக்குனர் தம் கருத்தைப் பதிவு செய்யவில்லையா?காங்கிரஸ் இந்த அளவு வெற்றி பெறாமல், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக வேறு யாரையேனும் பிரதமராக அறிவித்தால்தான் ஆதரவளிப்போம் என்கிற நிபந்தனையை விதிக்கும் பிற கட்சிகளின் ஆதரவை நம்பி அது ஆட்சி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாமற் போனது ஏமாற்றமே. மாநில அளவுக் கட்சிகள் எல்லாம் தோற்றுவிட்டன எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடவும் இயலாது. தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் (பீஹார்), பிஜு ஜனதா தளம் (ஒரிசா) முதலிய கட்சிகள் வெற்றி பெறத்தான் செய்துள்ளன. ஒரு வகையில் பார்த்தால் மண்டல் கட்சிகள், இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான கட்சிகள் (எ.டு: பா.ம.க, ராஷ்ட்ரீய ஜனதாதளம், லோக் ஜன சக்தி, பகுஜன் சமாஜ் கட்சி) எல்லாம் அடிவாங்கியுள்ளன. இன்னொரு பக்கம் வகுப்புவாதத்தை முன்னிலைப்படுத்திய பா.ஜ.க.வையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். ஆக சாதி, மதம் முதலான அடையாளங்களின் அடிப்படையிலான அரசியல் பின்னுக்குப் போய், ``வளர்ச்சி'' (development)என்கிற கருத்தாக்கம் மேலுக்கு வந்துள்ளது எனலாமா? நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், ராமன்சிங், ஓரளவு நரேந்திரமோடி ஆகியோர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொண்டதை இப்படிப் பார்க்கலாமா? இந்நிலை வரவேற்கத் தக்கது என நான் கூற வருவதாகக் கருத வேண்டாம். இவர்களின் `வளர்ச்சி' குறித்த வரையறையில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் உண்டு. இவர்கள் சொல்லும் வளர்ச்சிக் குறியெண்களில் முன்னுக்கு நிற்கும் பல வட மாநிலங்கள், மனித வளர்ச்சிக் குறியெண்ணில் (HDI) தென் மாநிலங்களைக் காட்டிலும் பின்னுக்கு நிற்பதை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். தென் மாநிலங்கள் மனித வளர்ச்சியில் முன் நிற்பதற்கு இங்கே நீண்ட நாட்களாக இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவது ஒரு முக்கிய காரணம்.உலக மயச் சூழல், மத்திய தர வர்க்கக் கருத்து நிலை ஆளுமை பெறுதல் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே `வளர்ச்சி' குறித்த நிலைப்பாட்டிற்குக் கிடைத்துள்ள ஆதரவை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.உயர் சாதியினரைத் `தாஜா' செய்யும் மாயாவதியின் `சமூகப் பொறியியல்' (Social Engineering) அணுகல் முறை படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தக் கொள்கையின் அபத்தத்தையும், இது இப்படித்தான் முடியும் என்பதையும் இரண்டாண்டுகட்கு முன்பு இதே பத்தியில் நான் எழுதியிருந்தேன். உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு முதலானவற்றை அளித்து அவர்களை இணைத்துக் கொள்ளும் மாயாவதியின் `சர்வஜன்' கொள்கை இன்று இரு தரப்பாலுமே நிராகரிக்கப்பட்டுள்ளது? பெரிய அளவில் இம்முறை தலித் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கே வரவில்லை. தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட 17 தொகுதிகளில் 10ஐ முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியுள்ளது. உயர் சாதியினர் அதிகமாக உள்ள கன்னோஜ், கான்பூர், உன்னா, ஃபரூக்காபாத் முதலான தொகுதிகளில் பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். உயர் சாதியினரும் இவர்களை நம்பவில்லை. உயர்சாதியினரை ஈர்க்கப்போய் பாரம்பரியமாக ஆதரவளித்து வந்த முஸ்லிம்கள் மற்றும் தலித்களின் ஆதரவையும் இன்று அவர் இழந்து நிற்கிறார். `இரும்பு மங்கை' என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள், நிதி திரட்டு முயற்சிகள் ஆகியவற்றையும் மக்கள் ஏற்கவில்லை.உ.பியில் மாயாவதி கடைப்பிடித்த இந்த அணுகல் முறையை முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியல் பாரம்பரியமுள்ள தமிழகத்தில் கடைப்பிடித்த பகுஜன் சமாஜ்கட்சி இன்று அத்தனை தொகுதிகளிலும் `டிபாசிட்' தொகையை இழந்து நிற்கிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் `சாதி'க்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பது தவிர்க்க இயலாததே. எனினும் மனிதர்களை வெறும் சாதித் தொகுதிகளாக மட்டுமே பார்த்துவிட இயலாது. அவர்களுக்கு வேறு பல அடையாளங்களும் உண்டு. இந்தப் பிற அடையாளங்களை `சர்வஜன்' கொள்கை கணக்கில் கொள்ளாதது அதன் பெரும் பலவீனம்.இடதுசாரிகளின் தோல்வி வருந்தற்குரியதுதான். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக அதிகரிப்பது, ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 50 சதத்திற்கும் குறைவாக்குவது, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, தொழிலாளர் சட்டம், தொழிற் தகராறுச் சட்டம் முதலியவற்றைத் திருத்துவது, சுரங்கத் தொழிலில் தனியார் துறையின் பங்கை அதிகரிப்பது முதலான மன்மோகன் சிங்கின் தாராளவாதக் கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட இடதுசாரிகள் இன்று அந்தத் தகுதியை இழந்து நிற்பது இந்திய மக்களின் துரதிர்ஷ்டமே. தொழில்வளர்ச்சி குறித்த மாற்றுக் கொள்கையின்மை, 32 ஆண்டுகால அதிகார போதை கட்சியில் உருவாக்கிய குண்டாயிசம், தவறான அணுகல் முறைகளின் விளைவாக முஸ்லிம்களையும், விவசாயிகளையும் அந்நியப்படுத்திக் கொண்ட அபத்தம் ஆகியவற்றின் விளைவை இன்று இடதுசாரிகள் சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்பட்டமான சந்தர்ப்பவாதியாயினும் சோமனாத் சட்டர்ஜி சொன்னதுபோல, பா.ஜ.க. எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற எதிர்மறை அணுகல் முறையைத்தான் தேர்தல் களத்தில் இடதுசாரிகள் வைத்தார்களே ஒழிய, மாற்றுக்கொள்கைகளை அவர்களால் வைக்க இயலவில்லை. மன்மோகன் சிங் அரசின் அணுகல் முறைக்கு எந்த அம்சங்களிலெல்லாம் அவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தார்களோ, அவற்றை மக்கள் மத்தியில் பிரச்சினை ஆக்குவதிலும் அவர்கள் தவறினார்கள். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் இந்த முடிவுகள் நான் எதிர்பாராததல்ல. ஈழப் பிரச்சினையை மட்டுமே முன்னிலைப்படுத்தி, நமது மக்களின் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க-காங் கூட்டணியை வீழ்த்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் மிதந்து திரிந்தவர்கள் இன்று தலை கவிழ்ந்து நிற்கின்றனர். ஈழப் போராட்ட ஆதரவாளர்கள், சரியாகச் சொல்லாததனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தமது பாரம்பரியப் பகையை மறந்து ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்ததையும், அந்த அம்மையார் திடீரென நெடுமாறன், வைகோ `ரேஞ்சில்' தனி ஈழ வசனங்களை உதிர்க்கத் தொடங்கியதையும் நம்புகிற அளவுக்குத் தமிழக மக்கள் அப்பாவிகளாக இல்லை. ஈழம் ஒரு வகையில் நகர் சார்ந்த, தமிழ்த் தேச உணர்வாளர்கள் சார்ந்த ஒரு பிரச்சினையாகவே இருந்தது. இந்தப் பிரச்சினையை முன்னெடுத்த புலி முகவர்கள் புலி ஆதரவு, சோனியா- கருணாநிதி - காங்கிரஸ்- தி.மு.க. எதிர்ப்பு வசனங்களைத்தான் உமிழ்ந்தார்களே ஒழிய, ஈழ மக்களின் துயரத்தைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்கள் உடனடியாகப் பிடித்துச் செல்லப்பட்டு ராஜபக்சே அரசின் கொடுங்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டதன் விளைவாக இம்முறை தமிழக மண்ணிற்கு அகதிகள் வரத்தும் அதிகமில்லாமற் போயிற்று.சாதாரண மக்களைப் பொறுத்த மட்டில் காங்கிரஸ்-கருணாநிதி முன் வைத்த `அந்நிய நாட்டுப் பிரச்சினையில் இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்?' என்கிற `லாஜிக்' எடுபட்டது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு காட்டும் மெத்தனத்திற்குப் பின்புலமாக உள்ள அதன் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பற்றி உணர்ச்சிப் பேச்சாளர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றால், இதைப் பேச வேண்டிய கம்யூனிஸ்டுகளும் அதைப் பேசவில்லை.தி.மு.க. பெரிய அளவில் கடந்த நான்காண்டுகளில் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளவில்லை. தனது `பாப்புலிச' தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை அது நிறைவேற்றியிருந்தது. தவிரவும் அரசு ஊழியர், சிறுபான்மையோர் முதலான சில வலுவான சமூகப் பிரிவினர் தி.மு.க. பக்கம் உறுதியாக நின்றனர். அரசு ஊழியர் ஜெயலலிதா அரசு தம் மீது மேற்கொண்ட தாக்குதலையும், சிறுபான்மையோர் அவர் நரேந்திரமோடிக்கு விருந்தளித்ததையும் மறக்கவும் மன்னிக்கவும் தயாராக இல்லை.இவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு புலி ஆதரவாளர்கள் ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததேன்? உணர்ச்சிப் பேச்சாளர்கள் (சசிகலா) நடராஜனின் நிர்வாகத்தில் பிரச்சாரங்கள் மேற்கொண்டதெப்படி? மத்தியில் பா.ஜ.கவும், மாநிலத்தில் ஜெயலலிதாவும் வந்தால் தமக்கு நல்லது என புலிகள் தப்புக் கணக்குப் போட்டார்கள். தமது ஆதரவாளர்களை அந்தத் திசை நோக்கி நகர்த்தினார்கள். `லண்டன் டைம்ஸ்'லும், `தி வீக்' இதழிலும் வெளிவந்த நடேசனின் பேட்டி அந்தத் தொனியில் அமைந்தது. சங்கராச்சாரியையும், அத்வானியையும் சந்தித்துக் கொண்டிருந்த சிவாஜிலிங்கம் வெளிப்படையாக இல.கணேசனை ஆதரித்துக் களம் இறங்கினார். ஜெயலலிதாவை ஆதரிப்பதில் தாம் ஒன்றும் வீரமணிக்குச் சளைத்தவரல்ல என நிறுவினார் கொளத்தூர் மணி. ஈழப் பிரச்சினையைக் கொண்டு தனது கூட்டணி மாறி அரசியலை நியாயப்படுத்தி விடலாம் என நம்பினார் மருத்துவர் இராமதாஸ்.அநேகமாக விடுதலைப் புலிகள் செய்த கடைசிப் பெரும் தவறாக இதைத்தான் சொல்ல முடியும். தமிழக மக்களின் ஆதரவு புலிகளுக்கு மிகவும் ஆதாரமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். இங்குள்ள அரசியல் முரண்பாடுகளை நுனித்து ஆராய்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்வது என்கிற அளவில் அவர்கள் நின்றிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். மாறாக இங்குள்ள அரசியலில் தலையிடுவது என்கிற நிலையை அவர்கள் எடுத்தனர். தேர்தல் நேரத்தில் பிரபாகரனின் குரலில் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படும் என்று கூட வதந்திகள் உலவின.இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது புலிகள் ஒரு சில சதுர கி.மீ. பரப்புக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். புலிகள் இன்று அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் சந்தித்துள்ள தோல்விகளுக்குப் பல காரணங்கள் உண்டு. மாறியுள்ள உலகச் சூழலைக் கணக்கிலெடுக்காமல் 30 ஆண்டுகளாக ஒரே போராட்ட இலக்கணத்தைக் கடைப்பிடித்தது. பிற இயக்கங்களை மட்டுமின்றித் தமிழ்ச் சமூகத்தின் பிற பிரிவுகளையும் அந்நியப்படுத்தியது. தம்மை முழுமையான மரபு வழி இராணுவமாகவே கருதிக் கொண்டு தமது பலத்தை மிகைப்படுத்தியும், எதிரியின் பலத்தைக் குறைத்தும் மதிப்பிட்டது என்கிற பல காரணங்களோடு கூடுதலாக தமிழ்நாட்டிலுள்ள அவர்களது முகவர்களின் அணுகுமுறை ஒரு முக்கிய காரணமாக இருந்தது? புலிகளின் அத்தனை நடவடிக்கைகளையும், அவை இந்தியா - தமிழகம் தொடர்புடையதாக இருக்கும் பட்சத்திலும்கூட அவர்கள் எந்த விமர்சனமுமின்றி ஆதரித்தனர். அவர்கள் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டனர்.எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைப் புலிகள் செய்தபோதும் இவர்கள் எச்சரித்ததில்லை. மாறாக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினார்கள். காங்கிரஸ் போய் பா.ஜ.க. ஆட்சி அமைந்தாலுங்கூட இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை, முக்கியமாக இலங்கைக் கொள்கை மாறப்போவதில்லை, மாற இயலாது என்பதை இவர்களும் உணர்ந்தார்களில்லை. அவர்களுக்கும் உணர்த்தினார்களில்லை. `இலங்கையின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காக்கும் கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு' என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இலங்கை, இந்தியப் பிரதமர்கள் கூட்டறிக்கை விட்டதை இருவரும் மறந்தனர்.தமிழக மக்களின் உணர்வு மட்டத்தை மதிப்பிடுவதிலும் நமது புலி ஆதரவாளர்கள் தவறிழைத்தனர். உடனடியாகப் போர் நிறுத்தம், ...... காப்பாற்றப்படுதல், ராஜபக்சே அரசுக்கு இந்திய அரசு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என்கிற குறைந்தபட்ச (Minimalist) மனிதாபிமானக் கோரிக்கைகள் தான் தமிழ் மக்களின் பொதுக் கருத்தாக இருந்தது. தனி ஈழத்தை அங்கீகரித்தல், புலிகளின் மீதான தடையை நீக்குதல் முதலான உயர்ந்த பட்ச ..... கோரிக்கைகளை இவர்கள்தான் சுமந்து திரிந்தார்களே ஒழிய மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இவர்களால் கவனிக்க இயலவில்லை.விளைவு?தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை இன்று செரிக்க இயலாமல் நிற்கின்றனர். தமது நிலைப்பாடுகளை மேலும் குற்ற உணர்ச்சியின்றி உறுதியுடன் முன் வைக்கும் உள நிலையை மன்மோகன்சிங்கிற்கும் சோனியாவுக்கும் பரிசளித்துவிட்டுப் பரிதாபமாக நிற்கின்றனர்.Tail Piece.1. Primordial Sentiment அது இது என்றெல்லாம் தத்து பித்து விளக்கங்கள் சொல்லி தமிழர்கள் அனைவரும் தீக்குளிக்கத் தயாராக நிற்பதாக வியாக்கியானம் அளித்த நமது தமிழ் அறிவு ஜீவிகள் எங்கே போனார்கள்?2.மாவோயிஸ்டுகள், உல்ஃபா, ஹுரியத் முதலான அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. குறிப்பாக மாவோயிஸ்டுகளின் அறிவிப்பு எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் வலுவாக உள்ள சட்டீஸ்கர் பகுதிகளில் பா.ஜ.க. வெற்றிகளைக் குவித்துள்ளது. வாக்களிக்க வருபவர்களைத் தடுக்க மாட்டோம் என இம்முறை மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்த போதிலும் வேறு வகைகளில், தேர்தல் பணிக்கு வந்த 5 அரசு ஊழியர்களைக் கொன்றது வரை வாக்களிப்பதைத் தடுக்க முயற்சித்தும் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. தேர்தல் குறித்த மக்களின் அணுகுமுறை பற்றிய ஒரு விரிவான பரிசீலனைக்கு அவர்கள் தயாராக வேண்டும்.
தேர்தல் பற்றி குமுதம் தீராநதி பத்திரிகையில் மார்க்ஸ்.A என்பவர் எழுதிய கட்டுரையில் இருந்து.
0 comments:
Post a Comment