பிடித்த கேள்விகள் - பிடித்த பதில்கள்

 எந்த பத்திரிகை ஆனாலும் அதில் வரும் கேள்வி- பதில் பகுதியை படிக்க தவறுவதில்லை அப்படி படித்த கேள்வி-பதில்களில் என்னை கவர்ந்த வற்றை இங்கே தந்துள்ளேன். இவை உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு..

லஞ்சம், மாமூல்... என்னங்க வித்தியாசம்?
சம்பளம் மாதிரி, குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து ஒழுக்கமாக(!) லஞ்சம் கொடுத்து வந்தால் - அதுதான் மாமூல்!

கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?

அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!
(மதன் கேள்வி - பதில்)

கேள்வி : தமிழக அரசு, கலைஞர் சிறந்த கதை வசனகர்த்தா என விருது தருகிறது. அண்ணா விருதை தி.மு.க. கலைஞருக்கு அளிக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
பதில் : இவற்றை மறுக்கும் பெருந்தன்மை கலைஞருக்கு வேண்டும் என்று தெரிகிறது!
(கல்கண்டு கேள்வி-பதில்)

ஊழல் எதிர்ப்பாளரான சோ, ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?


சோவின் பிரச்சனை ஊழல் அல்ல, உள்ளத்தில் ஊறியிருக்கும் உணர்வு..

சமீபத்தில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் நடிகர் விவேக் பத்திரிகை யாளர்களை ஆபாசமாய்த் திட்டிப் பேசினாராமே..?


விவேக் பாவம். சினிமாவில் சீன் காட்டி பார்த்தார், வடிவேலு வின் அமர்க்களத்துக்கு முன் காணாமல் போய்விட்டார். இப் போது மேடையில் சீன் காட்டுகிறார் பரிதாபப் படுவோம்.
(அரசு கேள்வி-பதில்)


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2

கால்வாசி கிறுக்கனா மாறினாலும் அந்த தலைவர் (ரஜினி) வெறி மனதை தாண்ட மறுத்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடத்தில் சின்ன வயதில் எந்த சாயமும், அதாவது எந்த ஒரு தமிழ் நடிகரின் ஆதரவாளனாக இல்லாமல் வளருவது என்பது கொஞ்சம் கஷ்டமும் கூட. வளர்ந்து நமக்கு விவரம் தெரிந்த பிறகு வண்ணமில்லாமல் தோன்றலாம் ஆனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறு வயதில் ஒரு வண்ணம் அவசியம் முன்னமே சொன்னது போல மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதற்காகவாது அது தேவை பட்டது.
கழுகு என்று ஒரு படம், ஏற்கனவே கூட படிக்கிற பசங்க எல்லாம் பாத்துட்டு "பயமா இருக்குதுன்னு" சொல்லி இருந்தாலும் தலைவருக்காக பார்க்க கிளம்பினேன். படத்தை முழுசா பர்ர்த்ததை விட, கை விரல்களுக்கு நடுவில் பார்த்தது தான் அதிகம். அவ்வளவு பயமா இருந்தது அதுக்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசை என்பதை காலம் தான் சொல்லியது. சங்கிலி முருகன் ஒரு மந்திரவாதியாக நடித்திருப்பார் அவர் முகம் கண்களை விட அந்த காங்கோ வாத்திய கருவியின் பீட்டு நிறைய அதிர்வை தந்தது. கிட்டத்தட்ட
 அதே கால கட்டத்தில் வந்த "குரு" கமல் நடித்த அந்த படம் இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த "ஆடுங்கள் பாடுங்கள்" பாடலை போட்டு கலக்கி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தலைவர் விதி அந்த படத்திற்கு போக அனுமதிக்க வில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்களால்  அந்த படத்திற்கும் வலு  கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டேன். அந்த படத்தில் கமல் குருவாய் தோன்றும் பொழுதெல்லாம் எழுப்பப்படும் இசை அப்படியே நாமளும் குதிரையில் போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. அட என்னடா இப்படி ஒரு இசையை கமல் படத்தில் போட்டுட்டாரே இந்த ஆளு. அப்படின்னு நினைக்கும் பொழுது "தனிக்காட்டு ராஜா" வந்தது எல்லா பாட்டும் சும்மா அப்படி இருந்தது. அப்ப கூட எனக்கு இதெல்லாம் இளையராஜாவிற்கு சாதாரணம் என்பதை  நம்ப மறுத்தேன்.

அப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாட்டுக்கள் ஹிட் என்பது எழுதப்படாத ஒரு விதி. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னதைபோல "அதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை விதியாக " மாறிப் போயிருந்தது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" , "ப்ரியா"  என படங்கள் வரிசை யாக ஹிட் அடித்த நேரம். கொஞ்சம் கொஞ்ச மாக மனசு இளையராஜாவை நோக்கி நகர்ந்தது. சரி தலைவரையும் விட வேணாம் ராஜாவையும் விட வேணாம் ஏன்னா தலைவர் படங்கள் எல்லாவற்றிற்குமே ராஜாதானே இசை. அதனால் ரஜினி பாதி ராஜா பாதின்னு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியது மனசு. அப்பவெல்லாம் தலைவர் படத்திலேயே பிடிக்காத படம் "ராணுவ வீரன்" ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியலை அல்லது தெரியலை. ஆனா அந்த படத்தில் ஒரு குறை தென் பட்டது. அது ராஜாவின் இசை என்பதை வளர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன். இந்த காலகட்டத்துக்கு அப்புறம் எனக்கு நினைவில் இருப்பது  "புன்னகை மன்னன்" படத்தின் பாடல்கள் வெளியான புதிதில் அந்த படத்தின் கேசட்டை  நண்பர் ஒருவரிடமிருந்து அவ்வப்பொழுது இரவல் வாங்கி கேட்பது வழக்கம். அதில் போட்டிருக்கும் இளையராஜா படத்துடன் பேசி இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த இசை இவருக்கு சாத்தியமானது. ஒரு பக்கம் "சலங்கை ஒலி" மாதிரியான சாஸ்திரிய இசை,  "முதல் மரியாதை", "மண்வாசனை" போன்ற கிராமத்து பாடல்கள், இன்னொரு பக்கம் "புன்னகை மன்னன்" மாதிரியான மேற்கத்திய இசை. அப்புறம் இசையில் வேற என்னதான் இருக்குது...? எல்லாமே என் வசம் இப்பவாது என்னை முழுமையா நம்புறியா இல்லையா என்றது "புன்னகை மன்னன்" கேசட்டின் மேலிருந்த இளையராஜா. விடுவோமோ..? ஹும் நாங்க எல்லாம் கொள்கை குலவிளக்கு. எங்க கிட்டயேவா. இந்த படங்களில் சம்மந்த பட்டிருந்தவர்களும் என்னுடைய விருப்ப லிஸ்ட்-ல் பிடித்த இயக்குனர்களாக பாரதிராஜாவும்,வைரமுத்துவும்,மணிவண்ணனும் இருந்தார்கள். திடீரென்று ஒரு குமுதம் இதழில் வைரமுத்து இனிமே இளையராஜா கூட பணிபுரிய மாட்டார் என்ற செய்தி படித்து. அட இது என்னடா என்று நினைத்து, வைரமுத்துவை என்னுடைய விருப்ப லிஸ்ட்-இலிருந்து தூக்கி விட்டேன். அப்புறம் பார்த்தா பாரதிராஜாவும் போறார்னு போட்டிருந்துச்சு. ஆனால் அவரை அவ்வளவு சீக்கிரம் தூக்க முடியவில்ல அத்துடன் அப்பொழுதுதான் "வேதம் புதிது" பார்த்தேன். ஆனா இவ்வளவு திறமையான படத்தில் இளையராஜாவிற்கு இடமில்லையே அப்படி என்றால் ....? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்துச்சு "மௌன ராகம்" இளையராஜா அனேகமாக பாரதிராஜாவின் மேலிருந்த கோபத்திலேயே இந்த மாதிரியான படங்களுக்கு ட்யூன் போட்டிருக்க வேண்டும், இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், இளையராஜா திரை துறையின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்துவங்கிய பொழுதில் வந்தது "ஒரு தலை ராகம்" எல்லா பாடல்களும் ஹிட், ராஜாவிற்கு மாற்றா டி.ராஜேந்தர் என்ற விமர்சனம் வந்ததாம், அப்பொழுது தான் அவர் "பயணங்கள் முடிவதில்லை" கொடுத்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். எப்படியோ "மௌன ராகம்", "இதயகோவில்", என வரிசையா ஹிட்.  சரி பாரதிராஜா போனால் என்ன அதான் மணிரத்னம் இருக்காரே, அவரது புதுமையும் மிகவும் பிடித்திருந்தது. வந்தது "நாயகன்" என் மனதில் ரஜினி பாதி ராஜா பாதி என்ற நிலைமை மாறி ராஜா முக்கால், ரஜினி கால் என்ற நிலைமை உருவானது. ரஜினியும் ராஜாவை விட்டுவிட்டு "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா" போன்ற படங்களை பண்ணினார். ஆனால் அப்பொழுதெல்லாம் ரஜினியை சுத்தமா வெறுக்க முடியவில்லை. "அக்னி நட்சத்திரம்" வந்தது யாரவது அந்த படத்தை பத்தி பேசினாலே அவுங்கதான் எனக்கு நண்பர்கள். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.." பாடலின் படமாக்கல் மணிரத்தினம் மீதான மரியாதையை  கூட்டி  போயிருந்தது. "பணக்காரன்","மன்னன்" என ரஜினி மீண்டும் இளையராஜாவிற்கு மாறி இருந்ததால் ரஜினியையும் மெய்ண்டைன் பண்ணுவது சுலபமாக இருந்தது. இந்த கட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று நான் அன்று அறியவில்லை.

மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் "தளபதி" என்னை அதை பற்றி மட்டுமே சிந்திக்க வைத்தது. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் "தளபதி" தான். அந்த தீபாவளிக்கு "தளபதி" யுடன் கமலின் "குணா" மற்றும் பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்"  போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. வழக்கம் போல் "தளபதி" பார்த்தாச்சு ஆனால் ரொம்ப புடிச்ச இயக்குனர் இயக்கி இருந்தும், ரொம்ப புடிச்ச நடிகர் நடித்திருந்தும், அந்த படம் பெரிய அளவு தாக்கத்தை என் மனதில் உண்டு பண்ணவில்லை மாறாக பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ராஜாவின் இசை மட்டும் திருப்தியை இருந்தது. திருப்தின்னா என்ன எதிர்பார்ப்பை பூர்த்தியாவது, "தளபதி" படத்தில் என்னை போன்ற ரசிகர்களுக்கு எல்லா துறையிலும் இருந்தது ஆனால் இசையை தவிர வேறு எதுவும் மனசை ஆக்கிரமிக்கவில்லை. மனசு மீண்டும் சொல்லியது ராஜா யாருடன் இணைந்தாலும் அங்குதான் வெற்றி இருக்கும்னு. ஒருவரை ரசிக்க வெற்றியும் தேவைன்னு நினைத்திருந்த காலகட்டம் அது. ஏன்னா கல்லூரி காலம் அல்லவா..? நிச்சயம் முழு பைத்தியம் (ரசிகன்) ஆன கதை அடுத்த பகுதியில் சொல்லப்படும்.


Read more...

நல்லது நடந்தா சரி


கமல் 50 நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்திய விதத்தைப் பார்த்து சன் டி.வி. நிர்வாகி களை அழைத்து லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம் கலாநிதி மாறன். தினசரி பேப்பர்கூடப் படிப்பதில்லையா... இப்படி ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி மிஸ் பண்ணினீங்கனு அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதிலே இல்லையாம். கமல் 50, பாபா குகை விசிட் போன்ற சில நிகழ்ச்சிகள் விஜய் டி.வி-யின் டி.ஆர்.பி-யை எகிற வைத்திருப்பதுதான் கலாநிதி மாறனின் டென்ஷனுக்குக் காரணமாம்.
இது ஒரு இணையதளத்தில் கண்ட செய்தி. இனியாவது சன் டி.வி. தனது "ஆரோக்கியமான" போட்டியை தொடரும் என்று நம்புகிறோம்.

  


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்


"டேய் நாளைக்கு நம்ம ஊரு எக்ஸ்ல் தியட்டர்ல முரட்டுகாளை படம்டா" -- நண்பன் சொல்லியவுடன் தூக்கமே வரவில்லை. படத்தின் போஸ்டர் வைத்தே பல கதைகளை மனதில் நினைத்தவாறே தூங்கி போனேன். மறு நாள் காலைல போயி பார்த்தால், ரஜினி மன்னிக்கணும் தலைவர் கம்பீரமா நிக்கும் போஸ்டரும் அதை சுற்றி கலர் கலர் பேப்பர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு முன் வேறு எந்த படம் வரும் போதும் அப்படி ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பவெல்லாம் ரிக்கார்ட் பிளேயர் தான் பாட்டு போடுவதற்கு சவுண்ட் சர்வீஸ் அதைத்தான் பயன் படுத்தும். பென்ச் டிக்கெட் 50 காசுகள், உட்கார குஷன் வைத்த சீட் 1.50 , சாய்வதற்கும் உட்காருவதற்கும் குஷன் வைத்தது 2.00 ரூபாய். மிடில் கிளாஸ்-ல அதை நிரூபிக்கும் விதமாக 1.50 க்கு தான் நாங்கள் எல்லாம் அழைத்து செல்ல படுவோம். ஆனால் எனக்கோ 50 காசு பெஞ்சில் அமர்ந்து கொண்டு விசிலடிக்கும் நண்பர்களை நோக்கியே மனசு  இருந்தது, அவர்கள் எல்லாம் தனியாக வந்து படம் பார்ப்பார்கள். எங்கள் வீட்டில் அதெல்லாம் பற்றி கனவு கூட காண முடியாது. படம் ஆரம்பிக்கிறது, "எவண்டா இந்த காளையை அடக்குவான்.." அப்படின்னு சொன்னதுமே, கேமரா வானம் பார்க்கிறது, இப்ப மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சால் ஏன் கேமரா மேனின் அங்கிள் மாறி போச்சுன்னு யோசித்திருப்பேன், அப்ப அதெல்லாம் முக்கியமாய் தெரியலை சீக்கிரம் தலைவரை காட்டுங்கப்பா அப்படின்னு மனசு துடிக்க ஆரம்பித்தது, தலைவர் சும்மா அப்படி துள்ளி வர்றார் எனக்கு அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா இதெல்லாம் மனசுக்குள்ள தான் வெளில இதெல்லாம் காட்ட முடியாது காட்டுனா அவ்வளவுதான் "இனிமே சினிமாவே கிடையாதுன்னு" ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். அதுனால எல்லாத்தையும் மனசுக்குள்ள அடக்கிகிட்டு படம் பார்த்தேன், அதுல வந்த பாட்டுக்கள் மட்டும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஆனா அவை எல்லாம் தலைவருக்காகதான்னு மனசு நினச்சுசு. அதுக்கு பின்னாடி இளையராஜாங்குற பெரிய இசை சிங்கம் இருக்குன்னு தெரியலை. ஒரு நாள் அந்த படத்தை பத்தி  பேசுறப்ப ஒரு நண்பன் சொன்னான் (ரெண்டு வயசு பெரியவன்னு நினைக்கிறேன்) "இந்த படத்துக்கு மட்டும் M.S.V மியூசிக் போட்டிருந்தா படம் எங்கேயோ போயி இருக்கும், இந்த இளையராஜா சாவு மேளம் அடிச்சு படத்தையே கெடுத்து வச்சிருக்கார்." அப்படின்னு. அப்ப அந்த நபர் இளையராஜாவை சாதி சார்ந்து பேசுறார்ன்னு தெரியாம போச்சு பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அதை தெரிந்து கொண்டேன். ஆனா அப்ப அந்த நண்பன் சொன்னதை ஆமோதிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தனாய் மண்டை ஆட்டினேன். ஏன்னா அப்படி செயலைன்னா நாளைக்கு பின்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டங்களே, ஆனா மனசு மட்டும் சொன்னுச்சு நல்லாத்தானே இருந்துச்சு பாட்டெல்லாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதே எக்சல் தியட்டர்ல "சகல கலா வல்லவன்" அப்படிங்குற படம் கமல் நடிச்சது வந்தது, எனக்கென்னவோ படத்துக்கு போகவே பிடிக்கல, பின்ன ஒரு ரஜினி ரசிகன் எப்படி கமல் படம் பார்க்குறது..? ஆனா அந்த படத்துல வர்ற "இளமை இதோ இதோ .." பாடல் மட்டும் மனசுல பதிஞ்சு போச்சு. அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்னு தீர்மானிச்சேன், மத்தபடி நிச்சயம் கமலுக்காக இல்லைன்னு தீர்மானமா என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். அப்பவும் அந்த நண்பன் "இதுல வர்ற முக்கியமான டிரம்ஸ் இசை எல்லாம் M.S.V ஐடியாவின் படியே போட்டது.." அப்படின்னு சொன்னார். அதுக்கும் தலையசைப்பு தான் வேற வழி. ஒரு சமயம் விளையாடுறப்ப அந்த நண்பனை எதிர்த்து பேசும் படி ஆகி விட்டது, ஆனால் அதுக்கு நான் எதிர்பார்த்தமாதிரி பெரிய ரீ ஆக்ஷன் எல்லாம் இல்லை மற்றவர்கள் மத்தியில். கொஞ்சம் தைரியம் வந்துச்சுன்னே சொல்லலாம். அப்புறம் அது மாதிரியான நிறைய படங்களுக்கு அவரும் அவரை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசையை குறை சொல்லாமல் அவை M.S.V ஐடியாவை வைத்தே ராஜா இசை அமைப்பதாக சொல்லி வந்தார்கள். அந்த நண்பர் அப்படி பேச பேச மனசுக்குள் ராஜாவின் இசையை இன்னும் நெருங்கி பார்க்கவே தோன்றியது. ஆனால் அதை எல்லாம் விட பெரிய ஆளாக இருந்தது ரஜினி தானே அதனால் அவற்றை புறம் தள்ளி வைத்து விட்டேன். காலங்கள் சென்றன, "பயணங்கள் முடிவதில்லை" அப்படின்னு ஒரு படம், அப்பவெல்லாம் "சண்டை பயிற்சி" அப்படின்னு டைட்டில் கார்டு வரலைன்னலே அந்த படம் ஒரு அறுவை (அதாவது இப்ப குப்பைன்னு சொல்றோமே அது மாதிரி) அப்படின்னு சொல்லி முத்திரை குத்தி அந்த படத்தை தலைவிதியேன்னு பார்க்குறது. "பயணங்கள் முடிவதில்லை" படம் ஆரம்பித்து அதில் வரும் "இளையநிலா பொழிகிறது" அப்படின்னு பாடல் ஓடுது, மனசு என்னையும் அறியாமல் ஒரு வேளை இளையராஜா நிஜமாவே பெரிய ஆளோன்னு தோனுச்சு. "சண்டை பயிற்சி" டைட்டில் கார்டில் வராமலேயே ஒரு நல்ல படம் (!?) பார்த்தேன் என்றால் அது "பயணங்கள் முடிவதில்லை" மட்டும்தான். அதுக்கு காரணம் அந்த படத்தில் வரும் பாட்டுகளே என்பது அப்போதைய என் எண்ணம். அது வரையில் அந்த நண்பருக்காக இளையராஜா பெரிய ஆளுன்னு நினைக்கிற கோணம் மாறி நிஜமாவே பெரிய ஆளுதானோ அப்படின்னு நினைக்க தோன்றியது. ஆனாலும் மனசு அவ்வளவு சீக்கிரம் ரஜினியை கீழே தள்ளுவதை ஏற்கவில்லை, ஒரு வேளை அப்பொழுதெல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த மரியாதை ஒரு தொழில்நுட்ப கலைஞனுக்கு கிடைப்பதில்லை அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் ஒன்றை சொல்லும் போது அந்த வயதில் அதை உறுதிபட நம்பத்தான் தோன்றும். அதை ஆராய தோன்றாது. அப்புறம் "நான் பாடும் பாடல்" என்று ஒரு படம் முதன் முதலாக ஒரு இசை அமைப்பாளரின் பெயரை பெரிதாக  போட்டு ஒட்டிய போஸ்டர்ஸ் கண்டு சற்று அதிர்ந்தே போனேன். "இளையராஜாவின் இசையில்" என்று போட்டிருந்தார்கள், அந்த படத்தின் பாடலான "பாடவா உன் பாடலை.." பாடல் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஊர்களில் நடக்கும் கல்யாணா வீடுகளில் எல்லாம் "விநாயகனே வினை தீர்ப்பவனே .." பாடலுக்கு பிறகு "பாடவா உன் பாடலை .." தான்.  இப்போ மனசுக்குள் ஒரு போராட்டமே வந்துவிட்டது என்னடா இது ஒரு இசை அமைப்பாளரை போயி ஒரு நடிகருடன் ஒப்பிடுவதா. அப்படின்னு.  அதனாலேயே இளையராஜாவை அவ்வளவு சீக்கிரம் மனம் அங்கீகரிக்க வில்லை.  "உதய கீதம்" ன்னு ஒரு படம் "சங்கீத மேகம்.." என்றொரு பாடல், ஊரில் அப்பொழுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசை பதிவகங்கள் (மியுசிக்கல்ஸ்) ஆரம்பித்த தருணம். எங்கு போனாலும் இந்த பாட்டு தான் பதிந்து கொண்டிருப்பார்கள். அப்பவெல்லாம் செருப்பு போடாமல் தான் பள்ளிக்கூடம் செல்வது, அப்பத்தானே வெளையாடும் போது வேகமா ஓட முடியும், செருப்பை எங்கே கழற்றி வைக்கிரதுங்குற கவலை இல்லாமல் இருக்கலாமே அதுக்காகத்தான். அப்படி போகும் போது நிழல் எங்காவது கிடைத்தால் சற்றே ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் வெயிலில் நடப்பது. அப்படி ஒதுங்குகிற இடமும் இசை பதிவகங்களா இருந்தா கூட சில மணித்துளிகள் ஒதுங்கி இருந்துவிட்டு போவது வழக்கம். அப்படி ஒதுங்கும் போதெல்லாம் கேட்ட பாடல் இளையராஜவினுடயது என்பது அப்பொழுது அறியாவிட்டாலும் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன், ஆனால் அந்த பாடல்கள் மனசை அப்பவே ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன. அவ்வாறு கேட்ட சில பாடல்கள்
"கேட்டேளா இங்கே அதை பார்த்தேளா இங்கே .." -- பத்ரகாளி
"கண்ணன் ஒரு கை குழந்தை.."  -- பத்ரகாளி
"கீதா சங்கீதா..." -- அன்பே சங்கீதா
"சிறு பறவைகள் மலை முழுவதும்..."  -- நிறம் மாறாத  பூக்கள்
    "கோவில் மணி ஓசை தனை .." -- கிழக்கே போகும் ரயில்
"சிந்து நதிக்கரை ஓரம்..." --- நல்லதொரு குடும்பம்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் எல்லாம் நான் கால்வாசி கிறுக்கனாய் (ரசிகன்) போயிருந்தேன் என்றுதான் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அடுத்த பகுதியில் எப்பொழுது எப்படி அரை கிறுக்கனாய் ஆகியிருந்தேன் என்று சொல்கிறேன்.


Read more...

எனக்கு பிடித்த இயற்கை



முகத்தில் கரி பூசி முழு நிலவு போட்டு வைத்த இரவு...
பூமியை முத்தமிட்டு அந்த ஈரத்திலேயே முகம் பார்க்கும் மாலை சூரியன்...
வான வில்லுக்கு சாயம் பூசிய வண்ணமில்லா மழைத்துளிகள்...
உருவமில்லாத,வண்ணமில்லாத ஆனால் அழகான தென்றல்...
நகம் கடிக்காத, நாணப்பட தெரியாத ஆனால் மென்மையான பூக்கள்...
மாமிசம் தின்று தாவரம் செரிக்கும் இந்த மண்...
தலை எழுத்தில்லாத மலைகள்..
நிலவு கண்டு மகிழ்ச்சியிலும், அதை காணமல் கோபத்திலும் ஆர்பரிக்கும் அலைகள்...
செயற்கை சாதியில் பிறந்து இயற்கை சாதியில் மணம் முடித்த மழலை சிரிப்பு...
இயற்கை இவை தீண்டா மனித மனங்கள் இல்லை...


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP