ஏர் இந்தியா ஒரு பயண அனுபவம்.

சொல்ல கடினமாத்தான் இருக்கு ஆனா இது எனக்கு நேர்ந்த அனுபவம். இந்த முறை சில பல காரணங்களால் ஏர் இந்தியாவில் பயணம் செய்யும் படி ஆகியது, உள்ளுக்குள்ளே ஒரு உதறுலுடன் தான் பயணித்தேன். பொதுவாக நாம் நியூயோர்க்கிலிருந்து சென்னை செல்கிறோம் என்றால் சென்னை வரை நமக்கு போர்டிங் பாஸ் நியூயார்க் கிலேயே கொடுத்து விடுவார்கள். இங்கே அது நடக்கவில்லை, கேட்டவுடன் கவுண்டரிலிருந்தவர் சற்றே பதற்றத்துடன் பக்கத்து கவுண்டரில் இருந்தவரிடம் விசாரித்தார், அவர் நமது தேசிய மொழியில் ஏதோ சொன்னார் (நாம எல்லாம் சுத்த தமிழருங்க அதனால தமிழை விட்டால் வேறு இந்திய மொழிகள் தெரியாது, சுருக்கமா சொல்லனும்னா நம்ம தமிழக முதல்வர் கலைஞர் மாதிரின்னு வச்சுக்குங்க) நமக்கு சுத்தமா புரியலை ஆனால் அவர் தலை அசைப்பிலிருந்து, சென்னை வரை கொடுக்க மாட்டர்கள் என்பது மட்டும் உறுதியானது. அதுவும் ஒரு விதத்தில் சரி தான் ஏனெனில் டெல்லி சென்றடைந்தவுடன் நமது லக்கேஜ் எல்லாம் அங்கே தான் எடுக்க வேண்டும் ஏனெனில் அதுதான் இந்தியாவில் நுழையும் இடம் எனவே அங்கு தான் சுங்க சோதனை (Customs) . அங்கு இறங்கி சென்னைக்கு போர்டிங் பாஸ் வாங்கி கொள்ளலாம் என்று நம்பி போனேன். அங்கு போனவுடன் எதிர் பார்த்தபடி ஆரம்பிச்சுட்டாங்க, அதாவது ஒரே முன்பதிவு என்னில் பயணம் செய்த என் மனைவிக்கும் மகளுக்குமான டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருந்தது ஆனால் எனக்கு உறுதி செய்யப் படவில்லை . எனக்கோ பயங்கர ஆச்சர்யம் அது எப்படின்னு கேட்டால் யாரும் பதில் சொல்ல வில்லை மாறாக செய்கை மூலமாகவே அடுத்து செல்லவேண்டிய கவுண்டரை பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கும் கிட்டத்தட்ட இதே பதிலை சொல்லி கடைசியாக ஒரு கவுண்டரில் நிப்பாட்டி என் பெயர் மற்றும் இதர விவரங்களை போனில் சொல்லி என் பயணசீட்டில் ஏற்கனவே பதிவாகியிருந்த அதே நம்பரை வாங்கி கொடுத்து இந்த நம்பரை சொல்லுங்க உங்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியை சொல்லி உடனே 200 ரூபாய் கேட்டார், அப்பொழுதுதான் புரிந்தது ஏன் அந்த அளவுக்கு அலைய விட்டார்கள் என்று.
இதை விட கொடுமை திரும்ப வரும் பொழுது தான், டெல்லியிலிருந்து நியூயார்க் வரை செல்வதற்கான பயணசீட்டை உறுதி படுத்தவில்லை, பிளைட் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே, இருக்கிற பட்சத்தில் அவர்கள் சொன்னதுதான் காமெடி நீங்கள் டெல்லி ஏர்போர்ட் வரி கட்ட வேண்டும் அதை அங்கே உள்ள கவுண்டரில் கட்டி விடுங்கள், அதுவும் எவ்வளவு தெரியுமா மூவாயிரம் ரூபாய். என்ன கொடுமை இது ஒவ்வொரு ஏர்போர்ட் வரியையும் பயணம் செய்பவர்களே செலுத்துவதாக இருந்தால் அது எப்படி. நான் இதற்கு முன் கிட்டத்தட்ட ஆறேழு முறை பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட இந்த மாதிரியான அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை, இந்த முறை ஏன் நிகழ்ந்தது தெரியும் இந்த முறை தான் ஏர் இந்தியாவில் முதல் முறையாக பயணம் செய்தேன் அது தான்.
உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வது ஏர் இந்தியாவில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக அல்ல, பயணம் செய்கிற பட்சத்தில் இதை எல்லாம் எதிர் கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு வர வேண்டும் என்பதற்காகவே


Read more...

ஊர் வலம்

"எம்மதமும் சம்மதம் ரஜினியே எம்மதம்" இந்த ஆட்டோ வாசகத்தை பார்த்தவுடன்தான் அப்பாடா ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்தோம்கிற திருப்தி வந்தது. சென்னையில் ஆங்காங்கே பாலங்கள் இருந்தும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. உங்கள் மேல் யாராவது இடிக்காமல் போனால் நீங்கள் தாராளமாக அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு தேங்காய் உடைக்கலாம். நிறைய கார்கள் அணிவகுத்தாலும் மின்னல் வேகத்தில் சாலை கடக்கும் அந்த மனிதர்கள் நம்மை மிரட்டிக்கொண்டே இருந்தனர். ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்ற பிறகுதான் பணத்தின் மதிப்பே புரிந்தது. அதாவது மண்டையில் ஒரு தட்டு தட்டி சார் நீங்க இப்போ இருப்பது தமிழ்நாட்டில் 2009 வருடத்தில் என்று சொன்னது போல் இருந்தது. ஒண்ணுமில்லை நாலு சாதா தோசை, இரண்டு செட் பூரி 150 ரூபாய் பில் வந்தது அப்படியே ஒரு கணம் உறைந்து நின்றேன், நெசமாவே இப்படிதானா இல்லை எனக்கு மட்டும் இப்படியான்னு அசந்து போயிட்டேன் . மக்கள் யாருமே நூறு ரூபாய் நோட்டெல்லாம் மாற்றுவதில்லை ஒன்லி ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டை மட்டும்தான் மாற்றுகிறார்கள் . இதற்கு மேலும் கருணாநிதி ஆட்சியை யாரவது குறை சொன்னால் அவரும் முதல்வனில் ரகுவரன் பேசுவது போல ... " மக்களை பாருங்க பாஸ்ட் புட் சாப்பிடுறாங்க, நகை கடைல கூட்டமா நிக்கிறாங்க, ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் கழக ஆட்சிக்கு பிறகு அதிகமாகியிருக்கு..." அப்படின்னு சொல்லுவாரு. பணத்தின் மதிப்பு குறைவது நாட்டுக்கு நல்லதா இல்லையா என்பதை நாம் தான் முடிவு பண்ணிக்கணும்.
இதெல்லாத்தையும் விட பெரிய கொடுமை வெயில் சும்மா வெளுத்து வாங்கிடுச்சு சென்னைல எங்க போனாலும் குளியலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் செல்வது என வழக்கமாக்கி கொண்டேன் ஓரளவு தப்பித்தேன்.

இது தவிர வழக்கம் போல் இடித்தால் ஒரு சாரி கூட சொல்லாமால் போவது, போக்குவரத்து நெரிசலில் கூட தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல், அதாவது பின்னால் வருபவனை முந்தவிடமால் செல்லும் ஓட்டுனர்கள், ஒரு வரிசை என்று ஒன்றிருந்தால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நான் இந்த மண்ணில் உங்களைப் போல் பிறக்கவில்லை என்று சொல்லும்விதமாக பட படவென முன்னேறி (!?) செல்லும் "முதல்வர்கள்", கோயிலுக்கு சாமி கும்பிட போன இடத்தில் கூட (உலகின் இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் திருப்பதியில்) நம் சட்டை பையில் உள்ள பணத்திற்கு தகுந்தவாறு சாமி தரிசனம் செய்ய வைக்கும் கடமை வாதிகளும், வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன் கூச்சப்படாமல் பத்து டாலர் கேட்கும் விமான நிலைய சிப்பந்திகளும், பார்கிங் டோக்கனில் எவ்வளவு ரூபாய் என்று கூட போடாமல் கண்ணியமாய் வசூல் பண்ணும் குத்தகைதாரர்களும், தட்டில் காசு போடாமல் சாமி கும்பிட்டால் சூடத்தை விட எரியும் பார்வை கொண்ட பூசாரியும், ஆங்காங்கே டிஜிட்டல் பேனர் வைத்து எல்லாரையும் இம்சிக்கும் குட்டி குட்டி அரசியல் தலைவர்களும், கடமை முடிக்க செல்லும் வீரன் தனது குறிக்கோள் ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்வான், மற்றவற்றை கண்டு கொள்ள மாட்டான் அது போலவே செல்லும் எதிர்புற வாகன ஓட்டிகளும் என அனைவரும் ஆஜர்.

நான் இதற்கு முன் நான்கு முறை இந்தியா சென்று வந்துள்ளேன் அப்பொழுதெல்லாம் தெரியாது மாற்றம் இந்த முறை தெரிந்தது விலை வாசியிலிருந்து, ஆங்காங்கே தென்பட்ட பாலங்கள் வரை. முன்பெல்லாம் வருடத்திற்கொருமுறை செல்வதால் அப்படி தெரியவில்லையா இல்லை இப்பொழுது இரண்டரை வருட இடை வெளியில் சென்றதால் அப்படி தெரிந்ததா தெரியவில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் மலர்ச்சிகானதாக இருந்தால் மகிழ்ச்சிதான்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP