அன்பின் நீளமே வாழ்வின் நீளம்...

அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம் .... அன்பே சிவம் படத்திற்காக வைரமுத்து எழுதிய வரிகள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். ஆனால் நான் இதை உணர கிட்டத்தட்ட 35 வருடங்கள் தேவைப் பட்டது. எனக்கென சில கோட்பாடுகள் இது தான் சரி மற்றவை அனைத்தும் தவறு என்ற கண்ணோட்டத்தோடு வாழ்ந்தவன். பல பேரை அதில் காயப்படுத்தி இருக்கிறேன், அதை தான் வெற்றி என்று நினைத்து கொக்கரித்தும் இருக்கிறேன். மனசு பக்குவ பட வயசுதான் காரணாமா..? இல்லை அனுபவம் தான் காரணமா..? எனக்கு தெரிந்த வரையில் அனுபவங்களின் தேடல், அதற்கு வயதும் பக்குவமும் தேவை. ரொம்ப கொழப்பமா இருக்கா..? நாம் சில சமயங்களில் ஒரு பொருளை அடிக்கடி பார்ப்போம் ஆனால் அதன் தேவை இல்லாததால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். திடீரென்று அதன் தேவை வரும் பொழுது சட்டென்று நம் நினைவிற்கு அது வந்து தொலைக்காது பல சிரமத்திற்குப் பிறகு அதை கண்டு கொள்வோம். அதைப் போலவே சில அனுபவங்கள் நம்மை ஏற்கனவே கடந்திருந்தாலும் நமது மனதுக்கு அது பரிட்சயம் இல்லாததாகவே தோன்றும், ஆனால் அதுவே துன்பமோ,பிரிவோ நம்மை வாட்டும் பொது நமக்கு பக்கத்தில் வந்து விடும். எவ்வளவு துன்பத்தை தாண்டி வருகிறோமோ அவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறோம் எனக் கொள்க. இந்த உலகில் எதுவும் தீர்மானமான ஒன்றல்ல இதை புரிந்து கொண்டாலே.. அன்பின் நீளமே வாழ்வின் நீளம் என்பதை நாம் அறிந்து கொள்ள ஏதுவானதாக இருக்கும்.


Read more...

பிடித்தவர்கள் -- இளையராஜா -- 2

இளையராஜாவைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு அது அத்தனையும் எழுத இன்னுமொரு பிறப்பு வேண்டும். இது அதிகப்படியான போற்றுதலாக உங்களுக்கு தோன்றினால் நீங்கள் ராஜாவை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் அர்த்தம்.

ஒரு தீபாவளிக்கு சென்னைத் தொலைக்காட்சியில் இளையராஜாவின் பேட்டி ஒளிபரப்பானது. எனக்கு தெரிந்து இளையராஜாவின் பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது அதுதான் முதல் முறை. அதில் சில ரசிகர்கள் இளையராஜாவைப் பற்றி தங்களது கருத்துக்களை இவ்வாறு சொன்னார்கள் "ராஜா இசை தான் எனக்கு எல்லாம்..." "தலைவா.. " "அவர் இசை போதும் எனக்கு..." இப்படி பல என்னுடன் அமர்ந்து அந்த பேட்டியை பார்த்த என் தாய், தங்கை அனைவரும் "உன்ன மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.." என்று சொன்ன பொழுது எனக்குள் ஒரு வித பரவசமே ஏற்பட்டது. இதை அவர்கள் எந்த கண்ணோட்டத்தில் இருந்து சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது எனக்கு அது பரவசாமகவே இருந்தது. இன்றைய வரைக்கும் எனக்கு அந்த உணர்வு உண்டு. தனிமையில் ராஜாவின் பாடல்கள் மட்டுமின்றி அவரைப் பற்றிய அனைத்து புகழாரங்களும் எனக்கு கண்ணீரை வரவழைப்பதாகவே இருக்கும். சத்தியமாக எனக்கும் அவருக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் கிடையாது. வாத்தியங்களில் அவர் வடித்தெடுத்த அந்த சந்தங்கள் என்னை அந்த பரவசம் கொள்ளவும் கண்ணீர் விடவும் வைத்து விட்டது என்றால் அது மிகையல்ல. மற்றவர்களுக்கு வாழ்க்கை அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள் என்று தொடர்ந்தால் என்னைப் போன்றவர்களுக்கு அப்பா,அம்மா,மனைவி,குழந்தைகள்,ராஜாவின் இசை என்று தொடரும். மீண்டும் சொல்கிறேன் இதை ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நடிகை ரேவதி ஒரு முறை தொலைக்காட்சியில் ராஜாவைப் பற்றி சொன்னார்கள் "ராம் கோபால் வர்மா முதலில் இயக்கிய உதயம் (தெலுங்கில் சிவா) படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணியில் ஒரு வாக்கு வாதம் அதாவது, படத்தில் நாயகன் முதல் முறையாக அடிதடியில் ஈடு படும் பொழுது வயலின் கருவியையும் சேர்த்து வாசித்ததால் அதில் சற்றே சோகமும் இழையோடியாதாக இயக்குனர் கருதி சொன்ன பொழுது இளையராஜா சொன்னாராம் அந்த நாயகன் நன்றாக படிக்கக் கூடியவன் அப்படிப் பட்டவன் அடிதடியில் இறங்குவது சந்தோஷ பட வேண்டிய விஷயம் அல்ல அதே சமயம் அவன் எவ்வளவு ஆக்ரோஷமானவன் என்பதையும் சொல்லும் விதமாகவே இசையில் அந்த வயலின் இசையையும் இணைத்துள்ளதாக. "

-தொடர்வோம்


Read more...

மனித உயிர்கள்தான் முக்கியம்...

இதுதான் தருணம் என்ற தலைப்பில் சொல்லியிருந்த போரை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுரைக்கு முற்றிலும் எதிர்பதமான ஒரு கருத்தை வலியுறுத்தி தினமணி-ல் ஒரு தலையங்கம் எழுதப் பட்டிருந்தது. போரை ஆதரிப்போர் சொல்லும் அனைத்து காரணங்களும் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. எனினும் அதை செய்வதற்கு முன் ஏற்படப் போகும் உயிர் சேதங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அப்பாவி உயிர்களின் விலை இன்னும் பல அப்பாவிகளின் உயிர் தான் என்றால் அந்த ரோஷமே நமக்கு தேவையில்லை, அது எந்த விதத்திலும் இழந்த அந்த உயிர்களுக்கு செய்யும் நன்றி கடனாகவும் கருதப்பட போவதில்லை.


Read more...

இதுதான் தருணம்...

மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வை ரொம்பவே மாறித்தான் போய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவை இந்த முறை ரொம்பவே ஆதரிப்பதையும் பாக். கை கண்டிப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தியா தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இதை விட பெரிய பெரிய சேதங்களை எல்லாம் பார்த்துள்ளது. அப்பொழுதெல்லாம் பெரிய அக்கறை காட்டாத அமெரிக்கா, இந்த முறை காட்டும் அக்கறை நம்மை வியக்க வைக்கிறது. அது மட்டுமல்ல பாகிஸ்தானை கண்டிக்கவும் அமெரிக்கா முயன்றதில்லை. ஆனால் இந்த முறை அமெரிக்கா இந்தியாவை ஆதரிப்பதோடு , தன்னை காத்துக்கொள்ள பாகிஸ்தானை தாக்கவும் இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளதாக குரல் கொடுத்துள்ளது பலரின் புருவங்களையும் உயர வைத்துள்ளது.
இதற்கு பின்னால் அமெரிக்காவின் சுயநலம் மட்டுமல்ல அதன் முதலாளித்துவ பார்வையும் உள்ளதாகவே தோன்றுகிறது. இன்றைய பொருளாதார பின்னடைவை சரி செய்து கொள்ள அமெரிக்காவின் "குல" தொழிலான ஆயுத வியாபரத்தை நடத்த இதுவே தக்க தருணமாவும் அமெரிக்கா கருத நிறையவே வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் இந்த "பாச" உணர்வு நம்மை சந்தேக பட வைக்கிறது. தயவு செய்து இந்தியா இதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானை நாம் கண்டிக்கவும் பாடம் புகட்டவும் போர் சரியான முறை அல்ல. அதற்கான தருணமும் இதுவல்ல. இரண்டுமே அணு ஆயுத நாடாக இருப்பது தான் இதன் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இதை இரு நாடுகளும் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க தயாராக வேண்டும். அதற்கான தருணமும் இதுதான்.


Read more...

பட்டவுடன் தொட்டது ...

வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன் காரர்களாக இருப்பதற்கும் காரணம் நம்முடைய பலவீனத்தின் காரணமான பேராசையும் அவசரமுமே காரணம்.இது பெரியார் சொன்னதாக ஒரு வார இதழில் படித்தது. ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள உண்மை விளங்கும். வாழ்கையை சந்தோஷமாகவும் சிக்கலில்லாமல் நகர்த்தவும் இந்த பொன்மொழியை பின் பற்றினாலே போதுமே.


Read more...

ஏன் இந்த வலைப்பதிவு..?

இந்த கேள்வி தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு நண்பருக்கு இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் கேட்டார் எதுக்காக இந்த வலைப் பதிவை ஆரம்பித்தீர்கள்..? என்று கேட்டார். (நல்ல வேளையாக ஏன் இதை படிக்க வேண்டும் என்று கேட்க வில்லை). அதற்கப்புறம் தான் எனக்கு தோன்றியது ஆஹா இதை ஏன் முன்னமே யோசிக்கவில்லை என்று. சரி இப்பொழுதாவது தோன்றியதே.
வாழ்க்கை காலையில் தூங்கி எழுந்து அலுவலகம் சென்று இரவு வீடு திரும்பி மீண்டும் காலையை நோக்கி நேரத்தை விரட்டும் சாதரண வாழ்கையை அனுபவித்து வந்தாலும் என்னுடைய மனசாட்சிக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமிருக்கிறது. அந்த இடைவெளியில் தோன்றியதுதான் இந்த வலைப்பதிவு "எண்ணங்கள்". சில பேர் நாட்குறிப்பு (டைரி) எழுதும் பழக்கத்தை விவரம் அறிந்த நாள் முதல் கடைசி வரை கொண்டிருப்பார்கள், அவர்கள் நிச்சயம் மனசாட்சிக்கு பதில் சொல்பவர்களாவே இருப்பார்கள். நாட்குறிப்பை வைத்தே பல பேர் வழக்கில் மாட்டிக்கொண்ட விஷயங்கள் நாம் அறிந்ததே. இதில் தன்னை எந்த விதத்திலும் வெளியில் காட்டிக் கொள்ளாத சில தீவிரவாதிகளும் அடக்கம்.
இதுவும் ஒரு விதமான மன இறுக்கத்தினை விரட்டும் வழி தான். மேலும் இந்த வலைப்பதிவு மற்ற வலைப்பதிவுகளிலிருந்து எப்படி வித்தியாசப் பட்டிருக்கிறது ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். நீங்கள் இந்த வலைப் பதிவில் செலவிடும் நேரங்கள் உபயோகரமாக இருக்க வேண்டும் அதே சமயம் ரசிக்கும் படியாகவும் இருக்க வேண்டும் என்பதே எண்ணங்களின் முக்கியமான நோக்கம்.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 2

அடுத்த தலைமுறைக்கான அரசியலில் தமிழ் நாட்டில் நடக்கும் விஷயங்களை விவாதித்த இந்த வேளையிலேயே அமெரிக்காவில் நடந்த சமீபத்திய தேர்தலில் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்த வெற்றி எண்ணங்களின் பயணத் திசை சரி என்றே உணர்த்துகிறது. நாம் வசிக்கும் இந்த 2008 மாவது ஆண்டில் நிறவெறி என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக யாரவது கருதுவீர்களேயானால் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் அதுதான் உண்மை. FOX NEWS என்னும் செய்தி தொலைக்காட்சியில் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான மாலை பொழுதில் ஒளிபரப்பான அனைத்து விவாத நிகழ்ச்சிகளிலும் பட்டவர்த்தனமாக தெரிந்ததை பார்த்தவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். ஒபாமாவிற்கு வெற்றி என்ற செய்தி கிடைக்க கிடைக்க FOX NEWS தன்னுடைய விவாதங்களை இப்படியாக முன் வைத்தது, அதாவது O Rellly Factor என்னும் நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் O'Rellly "நான் பார்த்த ஒரு தொலைக்காட்சியில் ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்த நிருபர் ஒபாமா வெற்றியை கண்ணீருடன் விவரித்ததை பார்த்து அதிர்ந்து போனேன் என்ன கொடுமை அது, ஒரு நிருபர் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் ? இது அவர் இந்த தொழிலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இதையெல்லாம் சொன்னால் ஏதோ வயசானவன் புலம்புகிறான் என்று சொல்வார்கள் மேலும் இதை எல்லாம் பார்ப்பதற்கு பேசாமல் செத்து விடலாம்னு தோன்றுகிறது " . குறித்து கொள்ளுங்கள் இதை சொன்ன அவர் ஒரு வெள்ளைக்காரர். அதே FOX NEWS தொலைக்காட்சியில் அடுத்ததாய் வந்த மற்றுமொரு நிகழ்ச்சியான Hannity's America யில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் சொல்கிறார் "நான் குடியரசு கட்சிக்குத்தான் வாக்களித்தேன், அதனால் நான் இப்பொழுது வருத்தப்படவும் இல்லை." இப்படி சொன்னவரும் ஒரு வெள்ளைக்காரர் தான். ஓபாமா வெற்றி பெற்றதற்காக அழுத ஓர் கறுப்பின நிருபருக்காக "செத்து விடலாம்னு" நினைத்த O'Rellly இந்த நிகழ்வு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை..? சரி அவர் மறுநாள் நிகழ்ச்சியிலாவது சொல்லுவார் என்று எதிர் பார்த்து ஏமாந்துதான் மிச்சம். சரி இந்த நிகழ்வை உங்களால் ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணத் தோன்றுகிறதா..? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அந்த நியதி ஏன் பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாகவே வளர்க்கப்பட்டு இன்று தேசத்தின் ஏன் இந்த உலகத்தின் உயர்ந்த பதவியை அடைந்த தன் இனத்தை சேர்ந்தவருக்காக கண்ணீர் விட்டதை ஏன் "செத்து விடலாம்னு" தோணுகிற அளவிற்கு எடுத்துக்கொண்ட நண்பர் O'Rellly-க்கு சொல்ல கூடாது ? அமெரிக்காவில் இன்றும் கறுப்பின மக்கள் பல விதங்களிலும் ஒதுக்கபடுகிறார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சி. சரி விஷயத்திற்கு வருவோம், ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை பல விதங்களிலும் முன்னேற்றுவதே ஒரு நல்ல அரசியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டிற்கு அழகு. இலங்கை தமிழருக்கான உண்ணா நோன்பில் பேசிய நடிகர் கமல் சொன்னதை போல "உரிமைகள் மறுக்க படும் வேளையில் தீவிரவாதம் பிறக்கும்". அது மனித இனத்திற்கு நல்லதல்ல.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 1

இந்த கட்சி ஊழல் கட்சி அதனால் அந்த கட்சிக்கு ஒட்டு போடலாம், அப்புறம் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு அந்த கட்சியே மேல் என்ற எண்ணம் தோன்றி அந்த கட்சிக்கே மீண்டும் வாக்களிப்பது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் வாக்காளர் எண்ண ஓட்டம் இப்படியாகத்தான் இருக்கிறது.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளை முன்னிறுத்தியே தேர்தலில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற வேண்டும். ஆனால் இப்பொழுது அதுவா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..? சரி அப்படியே கொள்கைகளை மட்டுமே வைத்து ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியுமா..? அவ்வளவு ஏன் கொள்கைகளை மட்டுமே மூலதனமாக கொண்ட கட்சிகள் மக்கள் மத்தியில் எப்படி செல்வாக்கு பெற்றிருக்கிறது ..? பத்தோடு பதினொன்றாக தானே இருக்க முடிகிறது. சரி அப்படி பத்தோடு பதினொன்றாக இருந்தால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ..? அவர்கள் பொழைப்பு ஓட்ட வேண்டாமா..? இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டின் தற்பொழுதைய அரசியல் நிலவரத்தோடு ஒப்பிட்டு சொன்னால் நமக்கு தெளிவுற விளங்கும்.
திராவிடர் கழகம் என்றொரு கட்சி அது ஆரம்பித்த பொழுது இந்த கட்சி தேர்தலில் நின்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாது என்று சொல்லியது, அந்த கட்சி கொண்ட கொள்கைக்காக இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாமல் தனியாகத்தான் நிற்கிறது ஆனால் ஒரு துணையுடன், அதாவது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் காலைப் பற்றி பொழப்பு நடத்தும் அவலம் தான் இருக்கும்.
இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சி ஆரம்பித்து, தாய் கட்சியின் கொள்கைக்கு எதிராக அதாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே முழு முயற்சியாக கொண்டு அந்த இலக்கை அடைந்தது. ஆனால் அது பிரபலமாவதற்கு காரணமான காங்கிரஸ் எதிர்ப்பு, தனி தமிழ் நாடு கோஷம் போன்றவை என்ன ஆனது ...? கொள்கைகளை காற்றில் விட்டால்தான் ஆட்சி அதிகாரத்தை கை பற்ற முடியும் என்பதற்கு இந்த கட்சியே மிகச்சிறந்த சான்று.
சரி இந்த கழக அரசியல் தான் இப்படி என்றால் தேசிய கட்சி காங்கிரஸ் என்ன கொள்கையோடவா வாழ்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க இதை ஒரு சூத்திரக் (formula) கணக்காகவே கொண்டுள்ளது . இங்கேயும் ஒரு கொள்கை கொலை தான் நடக்கிறது.
பா.ஜ.க கேட்கவே வேண்டாம் சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டே கொல்லைப் புறம் அமெரிக்காவிற்கு நேச கரம் நீட்டும் சாதுர்யம். என்று இங்கேயும் ஒரு வித கொள்கை கொலை தான் நடக்கிறது .
ம.தி.மு.க மற்றும் பா.ம.க பற்றி கேட்கவே வேண்டாம். ம.தி.மு.க இந்த பாரளுமன்ற தேர்தலில் எங்களுக்கு பதவி வேண்டாம் என்று சொல்லி விட்டு அதே மாதிரி பதவியேற்கவில்லை அப்பாடா ஒரு கொள்கை சிங்கம் கிடைச்கிட்டாருடா அப்படின்னு நினைத்த தமிழக மக்களுக்கு கொடுத்தார்கள் இப்படி, விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்துக் கொண்டு அதை அதி தீவிரமாக எதிர்க்கிற அ.தி. மு. க -வுடன் கூட்டணி வைத்து கொண்டது கொள்கை சிங்கம், எதற்காக ..? கொண்ட கொள்கைக்காகவா ..?
பா.ம.க இது ஒரு குறிப்பிட்ட சாதிக்காக ஆரம்பித்த கட்சியாக இருந்தாலும் சற்றே கொள்கை சிகரமாக தன்னை காட்டிக்கொண்டது இந்த கட்சி. தீவிர மது ஒழிப்பு பிரச்சாரம், தனது தொலைக்காட்சியில் திரை படங்கள் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளை ஒழித்து அதனால் வருமானம் இல்லையென்ற போதும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத கட்சி போல் காண்பித்தாலும், சறுக்கியது தன் மகனுக்கு மத்திய அமைச்சரவை பதவியை கொல்லைப் புற வழியாக வாங்கியது மட்டுமல்ல எந்த காலத்திலும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் கட்சியில் எந்த பதவிக்கும் வர மாட்டார்கள் என்று மக்கள் மத்தியில் அறிவித்து அதையும் கொல்லைப் புறத்திலே விட்டு வந்த கொள்கை குன்று , ஆமாம் சிகரம் தேய்ந்து குன்று ஆகியுள்ளது ...


Read more...

சிரிக்கத் தெரிந்த மனமே...

"தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளதால் வருகிற சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் அவரவர் வீட்டில் விளக்கேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் .." - சொன்னவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா
இப்படியே பேசிக்கிட்டே இருங்க நேத்து கட்சி ஆரம்பித்த சரத்குமார், விஜயகாந்த் எல்லாம் கருணாநிதியை சமாளிக்க அவுங்களா நிறைய தயார் பண்ணி பேசிக்கிட்டு இருக்காங்க நீங்க ஜோசியரைப் பார்த்து உங்க "குடும்பத்து"க்கு எது நல்லதோ அதை செய்யச் சொல்லி தொண்டர்களை கேட்டுக்குங்க. கட்சி விளங்கிடும். போங்க போய் வேற ஏதாவது நல்லதா எழுதி கொடுக்க சொல்லி அதை வெளியிடுங்க, எங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்குது....


Read more...

பிடித்தவர்கள் -- இளையராஜா-1


இளையராஜா என்றவுடன் எனக்கு தெரிவதெல்லாம் அவரது மயக்கும் இசையை விட நம்பிக்கையான முயற்சிகளே . சிலருக்கு இது தலை கனமாவும் தெரிவதுண்டு.
நம்பிக்கைக்கும் தலை கனத்துக்கும் நூலிழை தான் இடைவெளி என்றெல்லாம் சொல்வதுண்டு எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவரவர் பார்வையை பொறுத்து அமைவது என்பது எனது பார்வை.
நம்பிக்கை என்று சொல்ல காரணம், இளையராஜா தான் முதலில் நமது பாரம்பரிய இசையையும் மேற்க்கத்திய இசையையும் இணைத்து ஒரு புது வித இசையை ஒலிக்க செய்தார். என்னைப் போன்ற எத்தனையோ இசை வாசனை அறியாதவர்களை, இசை ஒரு வித ஆடம்பர, பணக்காரத்தனமான விஷயம் என்று எண்ணி இசையை ஒதுக்கிய பலரையும் இசை அனைவரும் ரசிப்பதற்கே என்று உணர்த்தியது ராஜாவின் இசையே. மேலும் பல உள்ளங்களை இணைப்பதற்கான ஒரு மொழியாகவே பார்க்கப்பட்டது ராஜாவின் அந்த கலவையான இசை தான். ஆனால் அந்த கலவையை உருவாக்கும் போது ராஜா நிச்சயம் இது இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கவில்லை இதை அவரே பல முறை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். எனவே அந்த கலவையின் உருவாக்கத்தின் போது அது ராஜாவின் நம்பிக்கையாய் மட்டுமே இருந்திருக்க முடியும், அந்த நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜா சொல்வதைப் போல் அது இறைவன் ராஜாவின் இசையை ரசிக்க ரசிகர்களுக்கு இட்ட கட்டளையாய் கூட இருக்கலாம்.
அவர் வாழ்க்கை, அவரது முதல் வாய்ப்பு இவையெல்லாம் பல முறை பல பிரபலங்களால் அலசப்பட்டு விட்டது , எனவே இந்த கட்டுரையில் அவ்வாறு பார்க்காமல் ராஜா எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியதன் பின்னணியை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ராஜாவின் இசை என்ன என்ன காரணங்களுக்காக எப்படி ஒலிக்கிறது என்பதை எடுத்து சொல்ல எண்பதுகளில் இருந்த ஒரே ஊடகம் வானொலி, அதிலும் குறிப்பாக இலங்கை வானொலியின் "தமிழ் ஒலிபரப்பு கூட்டுக் சேவைஅதில் அப்பொழுது பாரத வங்கி வழங்கிய இந்த வாரத்தின் சிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் பெரும்பாலும் ராஜாவின் பாடல்களே முன்னிலை வகிக்கும். உண்மையை சொல்கிறேன் அவை முன்னிலைவகித்ததால் மட்டுமே என்னைக் கவரவில்லை, அதையும் மீறி அதில் தெரிந்த ஜீவன், இசைக்கும் எனது மனத்துக்குமான இடைவெளி குறைக்கும் மாயம் எல்லாமே எனக்கு ஒரு விதமான புது உணர்ச்சியை தந்தது. மேலும் அந்த காலத்தில் வந்த விமர்சனங்களில் கூட இப்பொழுது இளையராஜாவின் இசையை குறிப்பிடுவதைப் போல குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. இளையராஜாவின் தாக்கத்தை எனக்குள் முதலில் ஏற்படுத்திய பாடல் எனக்கு தெரிந்து "கண்ணன் ஒரு கைக் குழந்தை .." எனத் தொடங்கும் பத்ரகாளி படப் பாடல். அந்த பாடலில் மெட்டு வளையும் இடங்களில் எல்லாம் வார்த்தைகள் இட்டு நிரப்பப் பட்டிருக்கும். அதுவே அந்த பாடலின் தரத்தை அப்பொழுது வந்த பாடல்களில் இருந்து தனித்து காட்டியது. உண்மையை சொன்னால் அந்த படத்தை அப்போது நான் பார்த்திருக்க வில்லை , மேலும் அந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி எங்களுக்கெல்லாம் ரொம்ப தொலைதூரம் தான் ஆகையால் அந்த பாடலை மட்டும் பார்க்க கூட வாய்ப்பில்லை. செவி வழி இன்பம் அனுபவிக்கவே அப்பொழுது இருந்த வசதி வாய்ப்புகள் அனுமதித்தது. அதுவும் நல்லதற்கே என்று நான் பின்னாளில் அந்த பாடலைப் பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டேன். இப்பொழுது கூட மனசு சந்தோஷத்தை தேடும் பொழுது முதலில் நாடுவது இந்தப் பாடலைத்தான்.

ராஜாவைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் முடிக்க எனக்கு தெரியாது எனவே தொடருகிறேன் அடுத்த பதிப்பில்.


Read more...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....


தமிழ் திரையுலகின் உண்ணாவிரதம் பற்றி கருத்து சொல்ற சிலர் சத்யராஜின் பேச்சிற்கும் கலைஞருக்கும் தொடர்பு என்பது போல் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சத்யராஜ் பல முறை ரஜினியின் வெற்றியினை நிராகரித்திருக்கிறார் நேரடியாக இப்பொழுதுதான் சொல்லியிருக்கிறார் அதனால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது. அதே போல் ரஜினியின் பேச்சுக்கும் கலைஞருக்கும் முடிச்சு போடுவதும் தேவையில்லாத ஒன்று. ரஜினியோ கலைஞரோ அப்படி ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் இதுவும் தேவையற்றது. கலைஞர் சொல்லி ரஜினி பேசியிருப்பாரா என்பது ரஜினியின் பேச்சைக் கேட்டாலே தெரிகிறது. கலைஞர் திட்டத்தை ஒத்தி வைத்தது சரி என்று வைத்துக்கொண்டாலும் ஆனால் அதை அறிவித்த முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கலைஞர் எத்தனையோ முறை அறிவாலயத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்திடுக்கிறார் குறிப்பாக விடுமுறை தினமானஞாயிற்று கிழமைகளில்.. அதே மாதிரி ஒரு அனைத்துக் கட்சியின் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டி இந்த முடிவை எடுத்து பிறகு அறிவித்திருக்கலாம். நடிகர் ராஜேஷ் தான் முதலில் சொன்னார் ஒக்கனேக்கல் என்பது கன்னடப் பெயர் குடகுகல் என்பதுதான் அந்த இடத்தின் பழமையான பெயரும் தமிழாக்கமும் ஆகும் என்று. அவர் என்ன சூப்பர் ஸ்டாரா அவர் பேச்சையெல்லாம் யாருங்க கணக்குல எடுத்துக்குவாங்க. குறைந்த பட்சம் அவர் சூப்பர் ஸ்டாரையாவது தாக்கி பேசினாரா..? அப்படி பேசினாதானே இங்க மதிப்பு. அதே மாதிரி மிகவும் விஷயபூர்வமாக பேசிய வைரமுத்துவின் பேச்சைப்பற்றி யாருமே குறிப்பிடவில்லை. பத்திரிகைகளில் கூட இடம் பெறவில்லை. தயவு செய்து யார் பேசுறாங்க என்பதை விட என்ன பேசுறாங்க அதன் பயன் என்ன என்று அறிந்து குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை தான் வள்ளுவர் சொன்னார் "எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" .


Read more...

ஏன் இறை நம்பிக்கை ..?

அன்பே சிவம் படத்தில் ஒரு காட்சி வரும் கதை படி நல்ல சிவத்திற்கு(கமல்) மனைவி, குழந்தைகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் அவர் மனைவி,குழந்தைகள் இருப்பதாக அன்பரசு(மாதவன்)-விடம் சொல்லி இருப்பார், அன்பரசு நல்லசிவத்தின் இருப்பிடத்திற்கே வந்து அதை கண்டு பிடித்த பிறகு கேட்பார் "ஏன் இப்படி பொய் சொன்னீர்கள் என்று..?" கமல் அதற்கு விளக்கம் கொடுப்பார் அதாவது "எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது அந்த குறையை மறைப்பதற்காகவே பொய் சொன்னேன், என்னுடைய ஒரு கால் மற்றொரு காலுடன் சற்று குறைவான உயரம் கொண்டது அதனால் நொண்டி நொண்டி தான் நடக்க முடியும் அதற்கு எப்படி இந்த ஸ்டிக் (கைத்தடி) உள்ளதோ அப்படி மனசில் உள்ள குறையால் மனசு நொண்டி அடிக்காமல் இருக்கனுமே அதற்காகத்தான் பொய் சொன்னேன்." என்பார் . அதை போல நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை, துன்பங்களை, துரோகங்களை இறக்கி வைப்பதற்கு ஒரு உற்ற நண்பன் தேவை அதை நான் கடவுளாக பார்க்கிறேன் அவருக்கு என்னுடைய துன்பங்களையும், துயரங்களையும் அழிக்க வல்ல சக்தி உண்டு என நம்புகிறேன். கடவுளை நம்பாதவர்களே உங்கள் இலக்கணப்படி கடவுள் கற்பனை பாத்திரமாக இருந்தாலும் அது மக்களின் மனது நொண்டி அடிக்காமல் இருக்க உதவுமானால் அதை வணங்குவதில் தவறில்லை என்று நினைத்து அதை தீண்டாமல் இருந்து விடலாமே ?


Read more...

அம்மாவசையும் பாபாவும்

எது எப்படியோ உண்ணாவிரதத்தில் நடிகர்கள் சிலர் தங்களுக்கான அடையாளங்களை தெளிவாக காட்டிவிட்டு போனார்கள் என்றே சொல்ல வேண்டும். அதில் குறிப்பாக சத்யராஜ் அவர்களின் பேச்சை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். சத்யராஜ் தனக்கு முன் பேசிய சிலர் தெளிவாக ரஜினியை குறிப்பிட்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும், வருவார் என்ற ரீதியாக பேச சத்யராஜ் சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக ஒலி வாங்கியை பிடித்தார், "யார் பெயரைச் சொன்னால் கை தட்டுவீர்கள் என்று எனக்கு தெரியும் அப்படி கைதட்டு வாங்குவதற்கு பதில் நாக்கை புடுங்கிகிட்டு சாவேன். நாம இங்க கர்நாடகம் தண்ணீர் தருவதை பற்றி பேச வந்துள்ளோம் அதை பத்தி மட்டும் தான் பேசுவேன். " என்றும் ... மேலும் "தமிழ் நாட்டில் உள்ளவர்கள் முருகனையும் சுடலைமாட சாமியையும் கும்பிடுங்கள் ஏன் ஐயப்பனையும், ராகவேந்திரரையும், ராமரையும் கும்புடுகிறீர்கள் ..?" என்று கேட்டுவிட்டு போனார். அவர் ரஜினியை தான் சாடினார் என்று ஒரு சாரரும் இல்லை சரியாகத்தான் பேசினார் யாரையும் சாடவில்லை, பதிலாக போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தினார் என்றும் கூறப்பட்டது. சரி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே ஏன் இவ்வளவு வேகமாக பேசினார் ..? அவர் யாரையோ தாக்குவதாக நினைத்துக் கொண்டு பேசினாலும் அது ரஜினியையே குறிக்கும் விதமாகத்தான் இருந்தது என்பது கண்கூடான உண்மை. ரஜினியை மற்றவர்கள் குறிப்பிட்டு பேசியது தவறு என்று தெரிந்தால் சத்யராஜ் என்ன சொல்லியிருக்க வேண்டும் "தயவு செய்து யாரும் தனிப்பட்ட நபரை குறிப்பிட்டு பேசாதீர்கள்" என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் அதல்லவா உண்மையான (பகுத்தறிவு ) பண்பாடு. பண்பாடு மிக்கவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா யாரை அவர்கள் விரும்பவில்லையோ அவர் குறித்த விஷயங்களை தவிர்த்து விடுவார்கள், அதை ஏன் இவர் செய்ய தவறினார்..? மேலும் இவருக்கு ரஜினி மேல் எதாவது தனிப்பட்ட விரோதம் இருந்தால் அதை காட்டும் மேடை இதுவல்லவே?

அடுத்தது முருகனைப் பற்றி பேசியது , பகுத்தறிவாளிகள் கடவுளைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை, ஏன் சாமி மன்னிக்கவும் ஏன் அய்யா அவுங்க எந்த சாமியை கும்பிட்டால் நமக்கென்னன்னு இருக்கவேண்டியது தானே ? நீ அந்த சாமியை கும்பிடாதே இந்த சாமியை கும்பிடு என்றெல்லாம் சொன்னால் அவுங்க திருப்பி அப்போ தமிழ் சாமியயை நீங்க நம்பு குறிர்களானு கேட்குறாங்க என்ன பதில் சொல்லப் போறீங்க ..? சரி விடுங்க பேசாம "நாக்கு பிறழ் ந்துடுச்சுனு" சொல்லிடுங்க.

எப்படியோ அம்மாவாசை மன்னிக்கவும் அம்மாவசை பாபாவை பதம் பார்த்திருக்கிறது, ஆனால் அது அவருக்கே பிரச்சனையாய் முடிந்திருப்பது புரட்சி தமிழனுக்கு புதிராய்தான் இருந்திருக்கும்.


Read more...

ரஜினிக்கு கருணாநிதி கொடுக்கும் மரியாதையின் ரகசியம்

உண்ணாவிரதத்தில் பலரும் பிரச்சனையை புரிந்து கொள்ளாமலே பேசியது செம காமெடி. அதை விடுங்கள் கலைஞர் ரஜினியிடம் மட்டும் அன்பைக் கொட்டுவதன் காரணம் என்ன..எல்லாம் நாமதான் காரணம்.. அதாங்க மக்கள் சக்தி. ஏற்கனவே சொன்ன மாதிரி.. கலைஞரின் வெற்றியே அவருக்கு ஒரு திறமையான எதிராளி அமையாததுதான். அதே மாதிரி கலைஞரும் திறமையானவர்களை எதிராளி ஆக விடுவதில்லை.. அதாவது முட்டையிலிருந்து கோழி வந்ததா..கோழியிலிருந்து முட்டை வந்ததாங்குற மாதிரி தான்...


Read more...

கேள்வியும் நானே பதிலும் நானே

உபதேசம் செய்பவர்களில் பலர், தாங்கள் உபதேசிப்பது போல் இருந்து காட்டுவதில்லை. என்ன காரணம்?
- ஜி. ஜெயராமன், கூந்தலூர்
இருக்க முடிவதில்லை. அவ்வளவுதான் காரணம்! அதுசரி, இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டதால் உங்களுக்கு என்ன நன்மை? பதில் சொல்வதால் எனக்கு என்ன நன்மை? படிப்பவர்களுக்குத்தான் என்ன நன்மை? இப்படி ஒரு பயனற்ற கேள்வி அவசியமா?
-------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள கேள்வி பதில் "சுட்டி விகடனில்" வந்தது. பதில் அளித்தவர் சுகி சிவம் அவர்கள், ஆமாம் சன் தொலைக் காட்சியில் வரும் அதே நபர் தான். இந்த பதிலில் அவரை சுடும் விதமாக கேள்வி அமைந்ததாலையே அவர் இவ்வாறு பதில் சொல்லி இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதாவது இந்த கேள்வியினால் என்ன பயன் என்று கேட்டு (கோபமாக?!) அதன் மூலம் தான் பாதிக்க பட்டத்தையும் சுட்டிக் காட்டுகிறாரா..? கேள்வியும் நானே பதிலும் நானே ...
.


Read more...

உண்மையா..?

தாமஸ் ஆல்வா எடிசன், தனது கண்டுபிடிப்பான கிராமபோன் ரெகார்டில், முதன் முதலாக ஒலிப்பதிவு செய்தது எதை தெரியுமா?ரிக் வேதத்தில் உள்ள முதல் சூத்திர பாக்களையே பதிவு செய்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத அறிஞர் மாக்ஸ்முல்லர்.

--நண்பர் ஆர்.கோபிநாதன் மேற்கண்ட இந்த நிகழ்வு ஒரு சரித்திரப் பதிவு தான் என்று ஒரு வலை தளத்தின் செய்தியினை மேற்கோள் காட்டி உறுதி செய்கிறார். நன்றி கோபிநாதன்.


Read more...

எண்ணத்தை துளைத்தவை -- 1

'வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலி மனிதர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை..!'
வெற்றி என்பதற்கு எது அளவுகோல்?
பத்து ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் ஈட்டிவிட்டால், அது அவனைப் பொறுத்தவரை வெற்றி. ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டு இருப்பவன் கண்ணோட்டத்தில் அது தோல்வி!
சமூக அளவுகோல்களால் அளந்து பார்க்கப்படும் வெற்றிக்கும் மனிதனின் அடிப்படையான புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வாழ்க்கையை அமைதியாகவும் ஆனந்தமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருப்பதே உண்மையான வெற்றி. உங்களுடைய உள் சூழ்நிலையையும் வெளிச் சூழ்நிலையையும் நீங்கள் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அடிப்படைப் புத்திசாலித்தனம் நிச்சயம் தேவை.
புத்திசாலித்தனம் என்று இங்கே நான் குறிப்பிடுவது, இன்றைய கல்வி மூலம் பெறப்படும் அறிவாற்றலை அல்ல; பல தரப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் விஷய ஞானத்தையும் அல்ல!
புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையைத் தோலுரித்து, அதன் அடிப்படை உண்மையை அறிந்துகொள்ளும் திறன். பக்குவத்துடனும் தெளிவுடனும் வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த புத்திசாலித்தனம் மிக மிக அவசியம்! -- விகடனில் வரும் "கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்" என்னும் தொடரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொன்னது.


Read more...

கர்நாடகா தலைமை செயலாளரின் பொறுப்பற்ற பேச்சு

"இதற்கிடையில், பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ்,ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை புதிய திட்டமாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். கடந்த 1998ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும், மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக மாநில அரசு புதிய நிலையை மேற்கொண்டுள்ளது என்றார்.கடந்த 1998ம் ஆண்டில், ஓகேனக்கல் திட்டத்துக்கு கர்நாடக அரசு தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறுவது பற்றி கேட்டபோது,10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையடுத்து இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மத்திய அரசும் ஓகேனக்கல் திட்டத்தை புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் .." -- ஒரு கேள்வி கர்நாடக மாநில செயலாளர் அவர்களே . ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் போது அந்தத் திட்டம் பத்து வருடத்திற்கு அப்பால் என்ன மாதிரியான விளைவுகளை உண்டுபண்ணும் என்று கூட தெரியாமலா ஒப்புதல் வழங்குவீர்கள். ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி பேசுவது போலவா பேசுகுறீர்கள் . இதிலிருந்தே தெரிகிறது கர்நாடக அரசு எந்த சூழ்நிலையில் உள்ளது என்று.


Read more...

தேசியம் தண்ணீர் தருமா..?

மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள என்னைப் போன்றோரை சற்றே சிந்திக்க வைத்தது சமீபத்தில் தமிழ் நாட்டிலும் அதன் அண்டை மாநிலமான கர்நாடகவிலும் நடந்து வரும் வன்முறைகளும் போராட்டங்களும். அதாவது உலகின் மிகப் பெரிய மக்களாட்சியை கொண்டுள்ள ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு தண்ணீர் தர சுற்றியுள்ள (கிட்டத்தட்ட) அனைத்து மாநிலங்களும் ஒவ்வொரு காரணத்தை சுட்டிக்காட்டி அதனதன் உள்ளூர் அரசியலில் கவனம் கொண்டு நியாய தர்மத்தை மீறி செயல்படுவது தேசியத்தின் மீதான நமது நம்பிக்கையை கேள்வி குறியாக மட்டுமல்ல கேலிக்குரியதாகவும் மாற்றக்கூடியதாகும். மத்திய அரசும் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை யோசித்தே எதையும் தீர முடிவு செய்யாமல் இழுத்தடிப்பது அதை விட கொடுமை. சரி ஒரு தமிழனாக இருப்பதால் மட்டுமே நாம் தமிழகத்தை ஆதரிக்கிறமோ என்றால் இல்லை, இந்த மக்களாட்சி நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்றதும் பலம்வாய்ந்ததுமான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டே சொல்கிறோம். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினை நடைமுறை படுத்தாத கேரள அரசும், கர்நாடக அரசும் எந்த விதமான ஆபத்தின்றியே நடந்து வருவது இந்த கட்டுரையின் முதல் வரியில் சொன்னதைப் போல மக்களாட்சியில் நம்மைப் போன்றோருக்கு இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் விதமாகத்தான் படுகிறது. தண்ணீர் வாங்கி தமிழகம் என்ன செய்யப் போகிறது விவசாயம் தானே பண்ணப்போகிறது அதன் மூலம் இந்த நாட்டில் உள்ள அனைவரும் தானே பயன் பெறுவோம், அதை ஏன் மற்ற மாநிலங்கள் உணர மறுக்கிறது ..? கர்நாடகவிலிருந்து தண்ணீர் வாங்கி விவசாயம் பார்த்தால் அதன் மூலம் வரும் நெல் உற்பத்தியில் ஒருகுறிப்பிட்ட பகுதியை சமந்தப்பட்ட மாநிலத்திற்கு குறைந்த விலைக்கு கொடுப்பதன் மூலம் அந்த மாநிலத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் சகாய விலையில் உணவு பொருளை பெற்றிட வழி வகுக்கலாமே ..? ஆனால் அதற்கு தேசியம் தண்ணீர் தர வேண்டுமே ...? யோசிப்பார்களா சம்மந்தப் பட்டவர்கள் ..?


Read more...

தண்ணீர் பிரச்சனையில் தமிழ் திரை உலகம்

தன்னோட பிரச்சனைக்காக மட்டுமே கோட்டை வாசல் கண்ட கோடம்பாக்க கனவான்கள் இந்த முறை தமிழக தண்ணீர் பிரச்சனைக்காக தமிழக முதல்வரை சந்திப்பதோடு மக்களையும் சந்திக்க துணிந்திருப்பது வரவேற்க தக்கதே. ஆனால் அதில் மனதை வருடும் ஒரு விஷயமும் தென் பட்டது அதாவது இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நடிகர் சங்கம் எதிர் காலத்தில் எந்தவித ஒத்துழைப்பும் தராது என்று பயமுறுத்தி (?!) அவர்களை அழைத்திருப்பது வருந்த தக்க ஒன்று. தமிழனை வழி நடத்தி செல்லும் ஒரு ஊடகத்துறை தமிழனின் (தண்ணீர்) பிரச்சனைக்காக குரல் கொடுக்க தானாக முன் வராமல் மிரட்டலுக்காக பின் வருவது வருந்ததக்கதே.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP