பிடித்தவர்கள் -- இளையராஜா-1


இளையராஜா என்றவுடன் எனக்கு தெரிவதெல்லாம் அவரது மயக்கும் இசையை விட நம்பிக்கையான முயற்சிகளே . சிலருக்கு இது தலை கனமாவும் தெரிவதுண்டு.
நம்பிக்கைக்கும் தலை கனத்துக்கும் நூலிழை தான் இடைவெளி என்றெல்லாம் சொல்வதுண்டு எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவரவர் பார்வையை பொறுத்து அமைவது என்பது எனது பார்வை.
நம்பிக்கை என்று சொல்ல காரணம், இளையராஜா தான் முதலில் நமது பாரம்பரிய இசையையும் மேற்க்கத்திய இசையையும் இணைத்து ஒரு புது வித இசையை ஒலிக்க செய்தார். என்னைப் போன்ற எத்தனையோ இசை வாசனை அறியாதவர்களை, இசை ஒரு வித ஆடம்பர, பணக்காரத்தனமான விஷயம் என்று எண்ணி இசையை ஒதுக்கிய பலரையும் இசை அனைவரும் ரசிப்பதற்கே என்று உணர்த்தியது ராஜாவின் இசையே. மேலும் பல உள்ளங்களை இணைப்பதற்கான ஒரு மொழியாகவே பார்க்கப்பட்டது ராஜாவின் அந்த கலவையான இசை தான். ஆனால் அந்த கலவையை உருவாக்கும் போது ராஜா நிச்சயம் இது இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கவில்லை இதை அவரே பல முறை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். எனவே அந்த கலவையின் உருவாக்கத்தின் போது அது ராஜாவின் நம்பிக்கையாய் மட்டுமே இருந்திருக்க முடியும், அந்த நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜா சொல்வதைப் போல் அது இறைவன் ராஜாவின் இசையை ரசிக்க ரசிகர்களுக்கு இட்ட கட்டளையாய் கூட இருக்கலாம்.
அவர் வாழ்க்கை, அவரது முதல் வாய்ப்பு இவையெல்லாம் பல முறை பல பிரபலங்களால் அலசப்பட்டு விட்டது , எனவே இந்த கட்டுரையில் அவ்வாறு பார்க்காமல் ராஜா எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியதன் பின்னணியை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ராஜாவின் இசை என்ன என்ன காரணங்களுக்காக எப்படி ஒலிக்கிறது என்பதை எடுத்து சொல்ல எண்பதுகளில் இருந்த ஒரே ஊடகம் வானொலி, அதிலும் குறிப்பாக இலங்கை வானொலியின் "தமிழ் ஒலிபரப்பு கூட்டுக் சேவைஅதில் அப்பொழுது பாரத வங்கி வழங்கிய இந்த வாரத்தின் சிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் பெரும்பாலும் ராஜாவின் பாடல்களே முன்னிலை வகிக்கும். உண்மையை சொல்கிறேன் அவை முன்னிலைவகித்ததால் மட்டுமே என்னைக் கவரவில்லை, அதையும் மீறி அதில் தெரிந்த ஜீவன், இசைக்கும் எனது மனத்துக்குமான இடைவெளி குறைக்கும் மாயம் எல்லாமே எனக்கு ஒரு விதமான புது உணர்ச்சியை தந்தது. மேலும் அந்த காலத்தில் வந்த விமர்சனங்களில் கூட இப்பொழுது இளையராஜாவின் இசையை குறிப்பிடுவதைப் போல குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. இளையராஜாவின் தாக்கத்தை எனக்குள் முதலில் ஏற்படுத்திய பாடல் எனக்கு தெரிந்து "கண்ணன் ஒரு கைக் குழந்தை .." எனத் தொடங்கும் பத்ரகாளி படப் பாடல். அந்த பாடலில் மெட்டு வளையும் இடங்களில் எல்லாம் வார்த்தைகள் இட்டு நிரப்பப் பட்டிருக்கும். அதுவே அந்த பாடலின் தரத்தை அப்பொழுது வந்த பாடல்களில் இருந்து தனித்து காட்டியது. உண்மையை சொன்னால் அந்த படத்தை அப்போது நான் பார்த்திருக்க வில்லை , மேலும் அந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி எங்களுக்கெல்லாம் ரொம்ப தொலைதூரம் தான் ஆகையால் அந்த பாடலை மட்டும் பார்க்க கூட வாய்ப்பில்லை. செவி வழி இன்பம் அனுபவிக்கவே அப்பொழுது இருந்த வசதி வாய்ப்புகள் அனுமதித்தது. அதுவும் நல்லதற்கே என்று நான் பின்னாளில் அந்த பாடலைப் பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டேன். இப்பொழுது கூட மனசு சந்தோஷத்தை தேடும் பொழுது முதலில் நாடுவது இந்தப் பாடலைத்தான்.

ராஜாவைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் முடிக்க எனக்கு தெரியாது எனவே தொடருகிறேன் அடுத்த பதிப்பில்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP