இசை பிதாமகன் இளையராஜா

தேவர் மகன் படத்தில் ஒரு வசனம் வரும் "எது நடக்க கூடாதுன்னு நினைச்சோனோஅதுதான் இங்கே நடக்குது ..." அப்படின்னு தன்னால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தைப் பற்றி சொல்வார். அது போல் இளையராஜாவிற்கு எது நடக்க கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்தே விட்டது. வருத்தத்திற்கு உரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.
இந்த வாரம் குமுதம் இதழில் ஒ பக்கங்கள் என்ற தலைப்பில் எழுதி வரும் ஞானி சொல்லிய விஷயங்கள் விவரம் புரிந்த அனைவருக்கும் புரிந்திருக்கும். அவர் சொன்னது இதுதான் "ரஹ்மானின் புகழும் சாதனை களும் வளர வளர, அவருடைய தன்னடக்கம் மேலும் மேலும் அதிகமாகின. `நான்' என்ற அகந்தை அவரை ஆட்கொள்ளவே இல்லை. ஆழமான இறைப் பற்றும் ஆன்மிகப்பிடிப்பும் இருந்தபோதும், ரஹ்மான் சாமியார் வேடம் போடவில்லை. தன் பக்தியையே தன் வியாபார பிம்பமாக ஆக்கி தத்துவ உளறல்களைப் பரப்பிக் கொண்டிருக்கவில்லை. என்னை விட்டால் வேறு யார் இங்கே உண்டு, நானே மன்னன், மன்னனுக்கு மன்னன், நானே கடவுள் என்றெல்லாம் பாடலாசிரியர்களுக்கு தன்னைப் பற்றிய பல்லவியைக் கொடுத்து பாட்டு போட்டுக் கொள்ளவில்லை.வளர வளர, ரஹ்மானிடம் இருந்த ஈகோ, சுய அகங்காரம் தேய்ந்துகொண்டே போய் தாமரை இலைத் தண்ணீர் போன்ற மனப் பக்குவத்தை அவரிடம் ஏற்படுத்தியிருப்பதுதான் பிரமிப்புக்குரியதாக இருக்கிறது. ரஹ்மானை விட திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள்;இருக்கிறார்கள்; இன்னும் வருங்காலங்களில் வருவார்கள். திறமையோடு, ஆன்றவிந்தடங்கிய மனமும் இருப்பவர்கள்தான் அபூர்வம்.அப்படிப்பட்ட மனம் ரஹ்மானுக்கு இருப்பதால்தான் ரஹ்மானுக்கு இதர இசைக் கலைஞர்கள் பற்றிய எந்த காழ்ப்புணர்ச்சியும் கசப்புணர்ச்சியும் இல்லை. தன் முதல் படத்தின் ஆல்பத்திலேயே, தனக்காக வாசித்த புல்லாங்குழல், டிரம்ஸ், கிடார் கலைஞர்கள் பெயர்களையும் அச்சிடச் செய்த முதல் இசையமைப் பாளர் அவர்தான். இப்படி சக கலைஞர்களுக்குரிய அங்கீகாரத்தை அவருக்கு முன் யாரும் தரவில்லை. அவர் தொடங்கியபின், மற்றவர்களும் செய்தாகவேண்டிய அவசியம் வந்தது." ஞானி இளையராஜாவை பேர் குறிப்பிடாமல் தாக்குவது அனைவரும் அறிந்ததே,
ஞானிக்கு சில கேள்விகள் அவருக்கு மட்டுமல்ல அவருடைய கருத்துக்களை மனதளவில் அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் சேர்த்துத்தான் ...
கேள்வி-1: ரஹ்மான் தன்னுடைய பக்தியை வியாபரமாக்கவில்லை என்று நீங்கள் சொல்வது குறித்து.. ஆமாம் இளையராஜா எந்த கோவிலில் அமர்ந்து குறி சொன்னார்..? இல்லை அவரை பார்க்க மக்கள் இருமுடி கட்டிக்கொண்டு போனார்களா..? சரி அப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் மாதிரி rahmaan தன்னை காட்டிக்கொள்ளவில்லையா..? ரஹ்மான் இதே குமுதம் இதழுக்கு ஒரு முறை அளித்த நேர்காணலில் தான் எந்த மசூதி சென்று தொழுகை நடத்துவார் என்றும் அங்கு உள்ள ஒரு சாமியார் பற்றியும் குறிப்பிட்டுருந்தார் அது விளம்பரம் இல்லையா..? அது சரி என்றால் ராஜா தான் திருவாண்ணாமலை செல்வதையும் இல்லை வேறு சில கோவில்களுக்கும் செல்வது போல் காட்டியது எப்படி விளம்பரமும் வியாபாரமும் ஆகும் ..? அது மட்டுமல்ல ரஹ்மான் மெக்கா சென்று வந்ததை எல்லா வார பத்திரிக்கைகளுமே அவரது புகை படம் உட்பட அவரது நேர்காணலுடன் வெளியிட்டது விளம்பரம் இல்லையா ..?
கேள்வி - 2: ரஹ்மான் தன்னை என்றும் வியாபர முன்னிலை படுத்திக் கொண்டதில்லை என்று எதை வைத்து சொல்கிறார் ஞானி அவர்கள்..? ரஹ்மானுக்கு கட்-அவுட் வைத்ததை பார்த்ததில்லையா..? சில நாட்களுக்கு முன் வெளிவந்த சக்கரக்கட்டி என்ற படத்திற்கு ரஹ்மான் கட்-அவுட் வைத்தார்களே .. அந்த படத்தின் எல்லா பத்திரிகை விளம்பரத்தில் கூட ரஹ்மான் படம் மட்டுமே இடம் பெற்றிருந்ததை பார்க்கவில்லையா ..? ஒரு பிரபலமான பத்திரிகையில் எழுதுபவர் இதை கூடவா கவனிக்காமல் எழுதுவார் அதையும் இந்த பத்திரிகை எப்படி அனுமதித்தது..?
கேள்வி-3: வாதியக்காரார்களின் பெயரை யாரும் போட்டதில்லை ரஹ்மான் தான் போட்டதாக சொல்கிறார். தயவு செய்து புன்னகை மன்னன் ஒலிப்பேழையை பாருங்கள் அதில் யார் வாசித்தார்கள் என்று போடப்பட்டிருக்கும். புன்னகை மன்னன் படம் ரஹ்மான் தனி இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்பே வந்த படம் மேலும் அந்த படத்தில் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்ததையும் நண்பர் ஞானி அவர்களுக்கு விளக்க விழைகிறோம்.
கேள்வி-4: தன்னடக்கம் பற்றி நீங்கள் பேசலாமா ஞானி அவர்களே. உங்களுடைய ஒவ்வொரு வார ஒ பக்கங்களின் முடிவில் நீங்கள் ஏன் "இந்த வார குட்டு" என்ற பகுதியை வைத்துள்ளீர்கள்..? அன்பாக சொல்ல வேண்டியது தானே அடக்கத்தை அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்கும் நீங்கள் ஏன் அதை முதலில் கற்றுக்கொள்ள கூடாது ...?
கேள்வி-5: ஒருவரின் அடக்கத்திற்கு தான் "சிறந்த இசை அமைப்பாளர் " விருது கொடுக்குறாங்களா ..? நன்றி ஞானி அவர்களே நான் கூட சிறந்த இசை வழங்குபவர்களுக்குத்தான் கொடுக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.

இந்திய இசையின் பிதாமகன் இளையராஜா அதற்காக அவரை (வார்த்தை) அம்பு படுக்கையில் படுக்க வைப்பது துளி கூட நியாயம் இல்லை.


Read more...

தலைக்கனமா ..? தன்னம்பிக்கையா ...?

ஒரு வழியா இந்த வாரம் ரஹ்மான் பாராட்டு விழா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பற்றி நான் பேசி கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார் இளையராஜா எல்லா விஷயத்திலும் சரிதான் ஆனால் அவர் கொஞ்சம் தலைகனம் பிடித்தவர் போல் தெரிகிறார் என்றார். பாலச்சந்தர் படத்தில் வருவது போல் ஒரு காட்சி என் கண் முன் தோன்றி மறைந்தது "ஆமாம் அவர் அப்படி இருப்பதனால் உனக்கென்ன அவர் நல்ல இசை தருகிறாரா இல்லையா என்று தான் நாம் பார்க்க வேண்டும் ." என்று கூறுவது போல். இதை பலமுறை சம்மந்த பட்டவரிடம் கூறி விட்டதால் பொறுமையுடன் சரி இந்த பாராட்டு விழாவின் மேடையில் அமர்ந்திருக்கும் மிகப்பெரிய இசை ஜாம்பவான் என்று அனைவராலும் பாராட்டப்படும் பாலமுரளிகிருஷ்ணா என்ன பண்ணினார் தெரியுமா பல வருடங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு கச்சேரியில் சரியான முறையில் தன்னுடையை பாடல்கள் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை என்ற காரணத்தால் இனிமேல் இந்த ஆந்திராவில் கச்சேரியே பண்ண மாட்டேன் என்று சபதம் செய்து அதை ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்தான் முடித்தார். அதே போல் எனக்கு ஒரு நேரடி அனுபவம் இருந்தது ஜேசுதாஸ் அவர்கள் 1998 வருடம் சென்னை ஐயப்பன் கோவிலில் (அண்ணா நகரில் உள்ள) ஒரு கச்சேரி அதில் அவர் முழு கர்நாடக ஆலாபனைகளை பாடி வந்ததால் ஒரே சல சலப்பு அவர் சொன்னார் இப்ப நீங்க கத்துறதை நிறுத்தாவிடில் கச்சேரியை நிறுத்தி விட்டு நான் போய்கிட்டே இருப்பேன் . மக்கள் சற்றே உணர்ச்சி வசப்பட்டவர்களாய் எங்களுக்கு அந்த ஐயப்பன் பாடலை பாடுங்கள் என்று கேட்டனர் அவர் சொன்னார் முடியாது இந்த ஆலாபனைகள் இன்னும் சில பாடி விட்டுதான் மற்ற பக்தி பாடல்களை பாடுவேன் என்று.

மேற்சொன்ன இரு சம்பவங்களும் சம்மந்த பட்டவர்களின் தலைகனமாகவோ அல்லது கலை கர்வமாகவோ பார்க்கப்படுவதில்லை. அதே மாதிரி என்னுடன் பேசிக் கொண்டிருந்த நபரும் அதையே வழி மொழிந்தார். ஆனால் அதே மாதிரி இளையராஜா பேசியதை கர்வம் என்று வாதிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு தெரிஞ்சு பாலமுரளிகிருஷ்னாவோ ஜேசுதாஸ் அவர்களோ அப்படி பண்ணியதாக நான் அடிக்கடி பத்திரிக்கைகளிலோ மற்ற ஊடகங்களிலோ பார்த்ததில்லை அதனால் அப்படி தோன்றவில்லை என்று. இதில் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நான் தெளிவு பெறவும் அது உதவும்.

அப்புறம் வலைதளத்தில் கண்ட ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன் இதை பற்றி நாம் அப்புறம் பேசலாம் ..

See these inspirations of ARR and Ilayaraja:http://www.youtube.com/watch?v=1qRnMOe2F4s&feature=relatedhttp://www.youtube.com/watch?v=531WthsZaBY&feature=relatedhttp://www.youtube.com/watch?v=sYXtNqgL4xE&feature=relatedhttp://www.youtube.com/watch?v=1nHyuwKK01I&feature=relatedhttp://www.youtube.com/watch?v=CDjdJ3T0qJM&feature=related


Read more...

இரட்டை குடியுரிமை இந்தியாவில் பெறுவது எப்படி..?

இந்தியா டூயல் சிட்டிசன்ஷிப் வழங்குகிறது. இதற்கும் பி.ஐ.ஓ.வுக்கும் என்ன வித்தியாசம்?
ஃபெமா சட்டம் 1999ன் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு விதிகள், பி.ஐ.ஓ.க்களை (persons of indian origin) வெவ்வேறு விதமாக விளக்கியுள்ளது. ரூபாயில் கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்குதல் தொடர்பான 2000ம் ஆண்டு விதிகள் (ஃபெமா சட்டம்), வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல் தொடர்பான 2000ம் ஆண்டு விதிகள் ஆகியவை பி.ஐ.ஓ.க்களுக்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றன.
1. வங்கதேசம், பாகிஸ்தான் தவிர வேறுநாட்டைச் சேர்ந்தவராக இருந்து அவர் இந்திய பாஸ்போர்ட்டை கடந்த காலத்தில் வைத்திருந்தவர் என்றாலும், அவர் அல்லது அவரது பெற்றோர் அல்லது பெற்றோரது பெற்றோர் 1955ம் வருட குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற்றிருந்தாலோ, அல்லது மேற்கூறிய ஒருவரது மனைவி அல்லது கணவர் இந்தியக்குடியுரிமை பெற்றிருந்தாலோ அவர் ஒரு பி.ஐ.ஓ ஆவார்.
2. இந்திய Firm அல்லது Proprietorship நிறுவனத்தில் முதலீடு செய்தல் தொடர்பான 2000ம் ஆண்டு (ஃபெம் சட்டம்) விதிகளின்படி பாகிஸ்தான், வங்கதேசம் தவிர இலங்கையும் விலக்கப்பட்டுள்ளது.
3. அசையாச் சொத்துக்கள் வாங்கும் விதிமுறைகளின்படி (2000ஆண்டு) பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை தவிர ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் வாழ்பவர்களையும் பி.ஐ.ஓ.களாக ஏற்க முடியாது.
பி.ஐ.ஓ.களின் உரிமைகள்:
அவர்கள் வேறுஒரு நாட்டின் பிரஜைகளாக இருப்பவர்கள் என்பதால் அவர்கள் சாதாரணமாக வெளிநாடுகளில் வாழ்பவர்கள். எனினும் அவர்கள் இந்தியாவில் வந்து தங்கும்போது அவர்கள் உள்நாட்டு இந்தியர்களாகவே கருதப்படுகிறார்கள்.
- இந்தியாவில் அவர்கள் வேலை செய்யலாம்.- இந்தியாவில் அவர்கள் வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபடலாம்.- முதலீடுகள் செய்யலாம்.- அசையாச் சொத்துகள் வாங்கலாம்.- எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்தியாவில் தங்கலாம்.
ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா (இரட்டைக் குடியுரிமை):
ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல், சைப்ரஸ், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 16நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கீழ்க்காணும் உரிமைகள் உள்ளன.
1. இந்தியாவுக்கு ஆயுள்முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வருவதற்கு ஒரு நிரந்தர விசா வழங்கப்படுகிறது.
2. இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம். இதற்காக உள்ளூர் காவல்நிலையத்தில் பதிவுசெய்து கொள்ளத் தேவையில்லை.
3. பொருளாதாரம், நிதி மற்றும் கல்வி ஆகிய விஷயங்களில் என்.ஆர்.ஐ.களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் ஓ.சி.ஐ.களுக்கும் உண்டு.
ஆனால் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவோ, வாக்காளராக பதிவு செய்து கொள்ளவோ உரிமை இல்லை.

குமுதம் இதழில் வந்த விஷயம் நமக்கும் உபயோகரமாக இருக்கும் என்பதால் இங்கே தரப்பட்டுள்ளது.


Read more...

ரஹ்மான் ரசிகர்களின் கவனத்திற்கு...

ரோஜா படமும், தேவர் மகன் படமும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருது கமிட்டிக்கு வந்தது. எந்த இசையமைப்பாளரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம். விருது குழுவின் தலைவர் பாலுமகேந்திராவேதான். என்ன செய்தார்? ஒரு சினிமா போல சுவாரஸ்யமாக விளக்கினார் பாலுமகேந்திரா.
'நான் ஓட்டுப் போடாமல் ஒதுங்கிக் கொண்டு உறுப்பினர்களை போட சொன்னேன். ஆனால், இருவருக்கும் ஏழு ஏழு ஓட்டுகள் சரி சமமாக கிடைக்க, மறுபடியும் சிக்கல். வேறு வழியில்லாமல் நான் ஓட்டு போட வேண்டிய நிர்பந்தம். ஒரு பக்கம் நண்பர் இளையராஜா. மறுபக்கம் இருபது வயதே நிரம்பிய இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான். என்ன செய்வது? ஆனாலும், இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கு போட்டு ஜெயிக்க வைத்தேன்' என்றார் பலத்த கரவொலிக்கிடையில்!

இது ஏன் இங்கு குறிப்பிடப்படுகிறது என்றால், ரஹ்மான் ரசிகர்கள் அடிக்கடி சொல்லும் சில விஷயங்களில் முக்கியமானது, ரஹ்மான் முதல் படத்திலேயே விருது வென்றவர் . இன்னொன்று ரஹ்மான் அளவுக்கு தேசிய விருது வென்றவர் எவரும் இங்கே இல்லை என்பது. மேற்சொன்ன விஷயத்திலிருந்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.


Read more...

ஆஹா ஆஸ்கார்...வந்துடுச்சு

அதோ இதோ என்று கடைசியாக இந்தியாவிற்கு நம்ம தமிழகத்திற்கு ஆஸ்கார் வந்திடுச்சு. ரஹ்மான் இரண்டு விருதுகளை வாங்கிய நிமிடம் அடைந்த மகிழ்ச்சி அவர் தமிழில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே .." என்று சொன்னவுடன் பன்மடங்கானது. அவருக்கு விருது பெற்றுத்தந்த அந்த பாடலை மேடையில் அவர் இசை அமைத்து பாடிய பொழுது ஒண்ணுதான் புரிந்தது ... அதற்கு இந்த வார மதன் கேள்வி-பதிலில் வந்த பதிலையே பதிலாக தந்தால் பொருத்தமாக இருக்கும்.
விதியை மதியால் வெல்வது சாத்தியமா?
தெரியாது! ஆனால், வென்றால் மதி; தோற்றால், விதி!


Read more...

உங்களோட ஒரே சிரிப்புதான் போங்க...

சிரிப்பு-1: ஜெயலலிதா சொன்னது, "காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள். உங்களது எதிர்காலம் எங்களுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே நலமாக இருக்கும். தி.மு.க கூட்டணியில் இருக்கும் வரை உங்களுக்கு எதிர்காலமே கிடையாது

சிரிப்பு-2: கலைஞர் சொன்னது "இந்த ஆட்சி நல்ல முறையில் நடைபெறாமல் போவதற்கு பல பேர் கடுமையாக உழைத்துக்கொண்டுள்ளனர், அந்த விதத்தில் இப்பொழுது நடை பெற்று வரும் வக்கீல்கள் மற்றும் போலீசாருக்கு இடையிலான மோதலை சிலர் தூண்டி விடுவதாக அறிகிறேன். இந்த மோதல் உடனே நிறுத்தப்பட வேண்டும் இல்லையெனில் நான் உடனடியாக உண்ணாவிரதத்தில் இறங்க வேண்டி இருக்கும். அந்த நாளை கூடிய விரைவில் அறிவிப்பேன்."

சிரிப்பு-3: இயக்குனர் விக்ரமன் சொன்னது "வானத்தை போல படத்திற்கே விஜயகாந்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் சில காரணங்களினால் அது நடக்கவில்லை. ஆனால் இந்த முறை மரியாதை படத்திற்கு நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும்."


Read more...

இது உண்மையா -- கலைஞரும் கருப்பு சட்டையும்

சமீபத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு மருத்துவ மனையில் இருந்து வந்து கலந்து கொண்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவர் பேசியதில் ஒரு முக்கியமான விஷயம் .. "நாங்கள் கழட்டி விட்ட கருப்பு சட்டையை தான் இன்று பகுத்தறிவு பேசும் மற்றவர்கள் போட்டுக் கொண்டுள்ளார்கள்.." அதாவது ராமதாஸ் போன்றவர்கள் பேசும் பகுத்தறிவு விஷயங்களை பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறியுள்ளார். நம்ம கேள்வி என்னான்னா . கலைஞர் கருப்பு சட்டையை கழட்டி விட்டதாக ஒத்துக் கொள்கிறாரா?
அது சரி பகுத்தறிவை என்னமோ இவுங்கதான் கண்டு புடிச்சவுங்க மாதிரி சொந்தம் கொண்டாடுவதை கலைஞர் எப்பத்தான் நிப்பாட்டப் போறாரோ..?


Read more...

நான் கடவுள் -- ஒரு அலசல்

ஏகப்பட்ட எதிர் பார்ப்புகளுடன் வந்த பெரும்பான்மையான திரை படங்கள் தோல்வியை தழுவி உள்ள போதும் சில படங்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுடன் அதை விட ஒரு படி மேலே போய் சமுதயாத்துக்கான சில நல்ல விஷயங்களை சொல்லி செல்வதுண்டு. நான் கடவுள் திரை படம் அந்த மாதிரியான வகையை சேர்ந்தது.
சோதிடர்களின் பேச்சால் தனது மகன் ருத்ரனின் சிறிய வயதிலேயே காசியில் இருக்கும் ஒரு மடத்தில் விட்டுவிடுகிறார் ருத்ரனின் தந்தை. சில வருடங்களுக்கு பிறகு அவனை தேடி காசிக்கு வருகிறார், இந்த இடைப் பட்ட காலத்தில் ருத்ரன் சாதுக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததில் அவரும் ஒரு சாது ஆகிறார். அதாவது காசியில் வாழும் சாதுக்கள் தங்களை கடவுளின் அவதாரங்களாகவே கருதுவார்களாம் அப்படி மாறிப் போகிறார். அவரை அவரது தந்தை அடையாளம் கண்டு திரும்பவும் தன்னுடன் மலைகோவில் என்ற ஊருக்கு கூட்டி செல்ல முடிவு பண்ணி ருத்ரனின் குருவை சந்தித்து அனுமதி கேட்கிறார். அந்த குருவும் ருத்ரனை அனுப்ப அனுமதிப்பதோடு ஒரு உறுதிமொழியையும் வாங்கி கொள்கிறார் அதாவது சாதுக்களாகிய நமக்கு குடும்ப உறவுகள் இருக்கக் கூடாது அதை எல்லாம் அறுத்தெறிந்து விட்டு என்னை வந்து அடையும் நேரம் வந்ததும் வந்து அடைவீயாக என்று. மலைகோவிலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு அகழிகை போன்ற மண்டபத்தில் உடல் ஊனமுற்றவர்களை அடைத்துவைத்து, அவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைக்கிறார் தாண்டவன் என்பவர். வேறொரு கும்பலில் பிச்சை எடுத்து வந்த அம்சவல்லி என்ற பார்வையற்ற பெண் வந்து சேர்கிறார் இல்லை வலுகட்டயாமாக சேர்க்கப் படுகிறார். இந்த சூழலில் குடும்ப பாசத்தை வெறுத்து மலைக்கோவிலில் இருக்கும் மற்ற (போலி) சாமியார்களுடன் வந்து சேர்கிறார் ருத்ரன். அதாவது அவர்கள் வாழும் அந்த மலையில் தனக்கென ஒரு இடம் ஒதுக்கி விடுகிறார். அங்கு இருக்கும் மாங்காட்டு சாமியார் யாருடனும் பேசாமலும் யாரையும் கண் திறந்து பார்க்காமலும் இருக்கிறார். அவரே ருத்ரனின் பேச்சை கேட்டவுடன் கண் திறந்து ருத்ரனை பார்க்கிறார். அந்த அளவுக்கு ருத்ரன் அங்கிருப்பவர்களை பாதிக்கிறார் இந்நிலையில் தாண்டவன் மாதிரியே பக்கத்து மாநிலமான கேரளாவில் தொழில் செய்யும் இன்னொரு நபரும் தாண்டவனை சந்தித்து உருப்படிகளை, அந்த ஊனமுற்றவர்களை அப்படித்தான் அழைக்கிறார்கள், மாற்றுவது குறித்து பேச வருகிறார். அவரால் கோரமுகம் கொண்ட ஒரு பணக்காரருக்கு அம்சவல்லியை தாரை வார்க்க தயாராகிறார் தாண்டவன். அம்சவல்லி தப்பிப்பதற்காக மலை மேல் இருக்கும் ருத்ரனிடம் தஞ்சம் அடைகிறார். அங்கு ருத்ரன் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே முடிவு.

இந்த கதையில் பிச்சை எடுப்பவர்களின் அன்றாட வாழ்க்கை காண்பிக்கப் படும் விதம் என்னைப் போல் வெளிநாட்டில் வந்து வேலைப் பார்க்கும் குறிப்பாக மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. எனவே பொது மக்களே தயவு செய்து மென்பொருள் துறையை இனிமேலாவது சபிக்காதீர்கள். அந்த நிழல் உலகத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே நம்மை உலுக்கி எடுக்கிறது. ருத்ரனாக வரும் ஆர்யாவின் நடிப்பு அவருடைய நடிப்புலக பயணத்தில் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பத்தையே காட்டுகிறது . அவர் மட்டுமல்ல அம்சவல்லியாக வரும் பூஜாவும் அப்படித்தான் தெரிகிறார். இதில் பூஜா படி மேலே சென்று நிஜமாகவே பிச்சை எடுத்தாராம் (45 நிமிடத்தில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய் வசூல் பண்ணியாதாக சொன்னார்). அவர் கண் தெரியாதவராக இருப்பதற்காக அவர் அணிந்திருந்த லென்ஸ் அவரை நிஜமாகவே இருட்டு உலகத்தில் தான் வைத்திருக்குமாம். இப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறார்கள் அனைவரும். ஆர்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த படத்துக்காக அனைத்து வாய்ப்புகளையும் இழந்து தன்னுடைய பங்களிப்பை பலப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்ல சிறு சிறு கதா பாத்திரங்களில் வருபவர்கள் கூட அட்டகாசமாக நடித்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். பல பேர் புது முகங்கள் என்பது ஆச்சர்யம்.
சமீபத்தில் ஒரு தொலைகாட்சியில் பாலா சொன்னது மாதிரி படத்தின் முதல் நாயகன் இளையராஜா தான். ராஜா ரமண மாலையில் கொடுத்த பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் இந்த முறை மதுபாலகிருஷ்ணன் குரலில் தேனாய் வந்திறங்குகிறது நம் காதுகளில். துவக்கப்பாடல் கதாநாயகர்களின் துவக்கப்பாடல்களின் வரிசையில் ஒரு புது அத்தியாயம். அந்த உடுக்கை சத்தம் மிரட்டுகிறது. சில இடங்களில் வசனமின்றியே பல விஷயங்களை இசையால் உணர்த்தி இருக்கிறார் ராஜா. இந்த பின்னணி இசைக்கு எந்த விருது கொடுத்தாலும் அது சாதரணமானதுதான்.
ஒளிப்பதிவு காட்சிகளை உறுத்தாமல் படம் பிடித்திருப்பதே ஆர்தர் வில்சனின் பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். படக் கோர்வையும் அப்படியே உள்ளது. வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்து ஒரு புது வீச்சை தந்திருக்கிறது. விரக்கதியின் விளிம்பில் கடவுளை திட்டுமிடமும், இறுதிக் காட்சியில் அம்சவல்லி பேசும் வசனங்களும் படம் எதை பத்தி சொல்ல வருகிறது என்பதை தெளிவாக கோடிட்டு காண்பித்திருக்கிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிற படம். அந்த திருப்தியும் நீண்ட நாட்களுக்கு நம் நினைவில் இருக்கும்.


Read more...

சொல்லிட்டாங்கப்பா -- கவர்ச்சி

"ரசிகர்கள் எந்த அளவுக்கு கவர்ச்சி விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு காண்பிக்க நான் தயார். அதில் தப்பில்லை, ஆனால் உடலை காண்பிப்பதுதான் தவறு..." -- சார்மி என்ற நடிகை சொன்னதாக வந்தது.
உங்களுக்கு இதில் ஏதாவது புரிந்தால் சொல்லுங்க


Read more...

காதலர் தினம் தேவையா..?

காதலர் தினம் என்ற பெயரில் நம்மவர்கள் அடிக்கும் கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை சொன்னால் நம்மை முதியவர்கள் (பெருசுங்க) என்றோ, பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்றோ முத்திரை குத்திவிடுவார்கள். சரி அதானாலென்ன, சொல்ல வேண்டியது நம் கடமை என்றே இந்த விஷயம் சொல்லப் படுகிறது . இந்தியாவை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இந்த அளவுக்கு காதலர் தினம் கொண்டாடப் படுவாதாக ஒரு நினைவு. அதாவது தொழில் நுட்ப துறை இந்த அளவுக்கு வளர்ந்த பின் தான் இந்த கூத்தும் கொண்டாட்டமும். மேலை நாட்டினரால் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப் படும் இந்த காதலர் தின கொண்டாட்டங்கள் நம்ம ஊரில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கொண்டாடப் படுவதிலெயே தெரிகிறது இதன் முக்கியத்துவம். நம்ம ஊரில் ஒரு விநோதப் பழக்கம் உண்டு மேலை நாட்டினர் எதை செய்தாலும் அதன் உள்நோக்கம் அறியாமலேயே அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பதுண்டு. எல்லாரும் அல்ல தன்னை ஒரு நவநாகரீக ஆளாக காட்டிக்கொள்ள முனைபவர்களே. இவர்களுக்கு ஒரு கேள்வி உங்கள் காதலை வெளிப்படுத்த காதலர் தினம் தான் சரியென்று எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் ..? தயவு செய்து உணருங்கள்.
இதில் இன்னொரு நகைச்சுவை என்னவென்றால் ஒரு வார இதழில் வந்த பேட்டியில் ஒரு நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி "நீங்கள் காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவீர்கள் ?" என்ற கேள்விக்கு அந்த நடிகை "நான் எங்க அம்மா அப்பாவுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடுவேன் " என்று . இதுக்கும் கவுண்டமணியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது "அட்ரா சக்கை அட்ரா சக்கை ...அது எப்படி டா கொஞ்சம் கூட வெட்கப்படாம பேசுறீங்க ..." இந்த நாள் அன்பு பரிமாறப் படுவதற்கான நாள் என்றால் இதை "அன்பு தினம் " என்றே கூறலாமே..?

பின் குறிப்பு: இப்படி சொல்வதால் காதலை நாம் எதிர்ப்பதாக என்ன வேண்டும்


Read more...

நான் கடவுள் -- முதல் பார்வை

வெள்ளிக்கிழமை மாலையில் தான் நமக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு அதுக்கும் நேரம் ஒதுக்கணும்னு தோனுது. ஆனால் இந்த வெள்ளிக்கிழமை, அதாவது பிப்.6 நிகழ்வு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது . அதாவது நான் கடவுள் படம் ஆரம்பித்த பொழுதே .
மிகவும் எதிர்பார்ப்புடன் போய் அமர்ந்தேன். படம் ஆரம்பித்த சில கணங்களிலேயே அந்த எதிர்பார்ப்பும் பரவசமும் நியாயமானதே என்றே தோன்றியது. நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து போகும் சில நபர்களை பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. அந்த மனிதர்களின் அன்றாட வாழ்க்கை அவர்களின் சந்தோஷங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் அப்படியே கண் முன் நிப்பாட்டுகிறது ஆர்தர் வில்சனின் (ஒளி) பதிவு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் படத்தின் முக்கிய விவாதங்களில் ஒன்று. கடவுள் இருக்கிறார் என்றால் அவரால் ஏன் பேதங்கள் இல்லா உலகை உருவாக்க முடியவில்லை ..? அப்படி கடவுள் இல்லை என்றால் இந்த பேதங்களை யார் கடவுளாக இருந்து போக்குவது...? என்ற கேள்விதான் படத்தின் சாராம்சமே. கதை பற்றி இதை விட விரிவாக பேசினால் படம் பார்க்க இருக்கிறவங்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து விடும்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிதாக மட்டுமின்றி உளவியல் ரீதியாக நம்முள் ஒரு வித மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. எந்த சூழலிலும் நம் மனதை நாம் மகிழ்ச்சியாகவும் ஒரு வித நகைச்சுவை உணர்வுடனும் வைத்துக்கொள்வதோடு மற்றவர்களையும் மகிழ்வுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தையும் சொல்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திற்கான தேர்வும் நம்மை அசர வைக்கிறது. ஒரு இயக்குனரின் எந்த ஒரு வெற்றியும் இதில் தான் இருக்கிறது, அதை பாலா தெளிவாகவே செய்துள்ளார்.
ராஜாவின் இசை படத்தின் உயிரோட்டத்திற்கு ஜீவனாதமாகவே அமைந்து விட்டது பாலாவின் பெரும் பலம். ஆனால் மாதா உன் கோயிலில் பாடல் படத்தில் இல்லாமல் போனது ஒரு ஏமாற்றமே.
ஆர்யாவும் பூஜாவும் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களுக்கு கூட அடுத்தடுத்து வாய்ப்புகள் வரிசை கட்டப் போவது நிச்சயம்.
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியை தருகிறது. இல்லை சன் டி.வி பாணியில் சொல்வதென்றால் "நான் கடவுள் -- ருத்ர தாண்டவமும் அம்ச வள்ளியின் அம்சமும்".


Read more...

பாட்டு பார்வை -- கடலோரம் .. மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி

சில பாடல்கள் கேட்டவுடன் நெஞ்சை கட்டிப் போட்டுவிடுவதுண்டு சில ஒட்ட மறுப்பவை. அப்படி சமீபத்தில் வந்த பாடல்கள் இரண்டு ரொம்பவே எனது மனசை கட்டிப் போட்டுவிட்டது.

1. குங்கும பூவும் கொஞ்சு புறாவும் -- என்ற படத்தில் வரும் "கடலோரம் ..." என்ற பாடல். இந்த பாடலை எஸ்.பி.சரண் பாடி இருக்கிறார், இந்த படத்தின் இசை அமைப்பாளரான யுவனும் பாடி இருக்கிறார்கள். இரண்டுமே தனி தனி பாடல்களாக வந்துள்ளது. எஸ்.பி.சரண் பாடிய பாடல் குரலில் அப்படியே அவுங்க அப்பா சாயல். யுவனும் அனுபவித்து பாடியுள்ளார். அந்த மெட்டில் ஒரு வித மயக்கம் இருக்கிறது. மிகவும் அருமையான பாடல். வாய்ப்பு கிடைத்தால் கேட்கலாம் என்று இருக்காமல் தேடி கேட்க வேண்டிய பாடல்.

2. சிவா மனசுல சக்தி -- படத்தில் வரும் "ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்..." என்ற பாடல். இந்த பாடலை இசை அமைப்பாளர் யுவனும், ஆண்டான் சாமி என்ற பாடகரும் பாடி உள்ளனர். இருவர் பாடியதும் தனித்தனியே வந்துள்ளது. இந்த பாடலை எழுதிய நா.முத்துக்குமார் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. இந்த பாடலில் எல்லா வரிகளுமே பிடித்திருந்தாலும் குறிப்பாக "ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் ..." என்ற வரியும், "உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை .." என்ற வரியும் அருமை. அதாவது காதலை மிகவும் சிக்கலான விஷயம் என்பதை தெளிவு படுத்த எழுதப்பட்ட பாடலாக இது இருக்க வேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில் இதை விட சிறந்த வார்த்தைகள் கிடைப்பது அரிது. இந்த பாடலின் மெட்டும் மனசுக்குள் வட்டமடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த இரண்டு பாடல்களுமே நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெரும் என்று நம்புகிறேன். நம்ம தமிழ் திரை பாடல்களுக்கு ஒரு வித சாபம் உண்டு அதாவது அந்த பாடல் எவ்வளவுதான் நல்ல பாடலாக இருந்தாலும் அது சார்ந்து இருக்கும் படத்தின் வெற்றியை பொறுத்தே அதன் வெற்றியும் தீர்மானிக்கப் படுகிறது. இந்த பாடல்கள் அப்படியெல்லாம் கவனிக்கப் பாடாமல் மிகச்சிறந்த பாடல்களாகவே காலம் கடந்து நிற்கும் என்பது எண்ணங்களின் திண்ணம்.

குறிப்பு: நான் கடவுள்,நந்தலாலா பாடல்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. இரண்டு படத்தின் எல்லா பாடல்களுமே நிச்சயம் காலம் கடந்தவையாக நிற்கப் போவது அந்த படங்களின் சமந்தப் பட்ட கலைஞர்களின் தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை பேட்டியிலிருந்தே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP