புத்தகங்களில் புதையல் -- நிலமெல்லாம் ரத்தம்

நண்பர் புகழ் ஒளி சமீபத்தில் அளித்த அன்பளிப்பு "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகம். நானும் படிப்பதில் சோம்பேறி தான் ஆனால் உலகில் தற்போது உள்ள சில பிரச்சினைகளின் வேர் தேடலில் ஒரு வித சுகம் இருக்கிறது. அமெரிக்கா வந்த பிறகு அப்படி அறிந்து கொள்ள விரும்பிய பல விஷயங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை முக்கியமானது. இங்கு நியுயார்க்கில் ஏகப்பட்ட யூதர்களின் வழிபாட்டு தளங்களை காணமுடியும். அந்த அளவுக்கு யூதர்கள் நியுயார்க்கில் பரவி உள்ளனர். அதாவது இங்குதான் உலகின் பலம் வாய்ந்த பல தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் உள்ளன அவற்றின் முக்கியமானவற்றின் தலைமை மற்றும் துறை சார்ந்த பொறுப்புகளில் யூதர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பு நிலை பாட்டினை எடுத்துள்ளதாகவும் கேள்வி பட்டுள்ளேன். எனவே அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேட ஆரம்பித்ததுதான் இந்த தேடல். ஏற்கனவே இது சம்மந்தமாக "யூதர்கள்" என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், அதற்கிடையில் இந்த புத்தகம் கிடைத்ததால் இதை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயம் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த முதல் அத்தியாயம் முழுவதுமே அவரின் அருமை பெருமைகளை சொல்வதாகவே உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைவு பற்றி "எண்ணங்களில்" குறிப்பிடுகையில், அவரது நிலைப்பாடு ஒரு கட்டத்துக்கு பிறகாவது மற்ற நாடுகளுடன் நல்லுறவை பேணும் படி அமைந்திருந்தால் இந்த மாதிரியான ஒரு இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டினை எடுத்ததன் மூலமாகத்தான் யாசர் அராபத் என்ற போராளி இயற்கை மரணத்தை இந்த நூற்றாண்டிலும் எய்த முடிந்துள்ளது என்றே நம்ப தோன்றுகிறது.
பாலஸ்தீனை இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரித்து அந்த நாட்டுக்கான தூதுவர்களை எல்லாம் நியமித்துள்ளது. அராபத்தும் இந்தியாவுடன் நல்லுறவு பேணி வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே அதே மாதிரி காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவை ஆதரித்த ஒரே முஸ்லீம் நாடு பாலஸ்தீன்தான். காரணம் கிட்டத்தட்ட அதே தலைவலியை அவர்களும் இஸ்ரேல் என்ற ரூபத்தில் அனுபவித்து வருவதால். சில நாடுகள் இன்னும் பாலஸ்தீன் என்பதை ஒரு நாடாகவே அங்கீகரிக்காமல் உள்ள நாடுகளும் இருக்கின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

இஸ்ரேல் எவ்வாறு தனது கரத்தை அடுத்த நாட்டிற்குள் நுழைத்து நர்த்தனம் ஆடுகின்றது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளிக்காட்சி இந்த கட்டுரையுடன் தொடர்புடையதே தயவுசெய்து ஒலியுடன் ரசிக்கவும்..Read more...

தரம் தாழ்ந்தவர் யார்..?

தரம் தாழ்ந்து போக போட்டி போடும் நம் தமிழக அரசியல் வாதிகளை நினைத்தால்.. ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு கருணாநிதி அளித்த பதில் அறிக்கை. இதில் மிகவும் தரம் தாழ்ந்தவர் யார் என்பது உங்களுடனே இருக்கட்டும் ஏன்னா அதை சொல்லி நம்மை நாம் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்பது என் நிலைப்பாடு.

என்னைப் பற்றி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறும்போது, "திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்'' என்று எழுதியிருக்கிறார். இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி வருவதால், இவர் எதை "மூலதனமாக'' வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்? என்று கேட்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.


Read more...

கலைஞனை மதிக்காத சமூகமே...!

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.


Read more...

நிஜ சகலகலா வல்லவன்

கமல் தமிழ் திரை உலகின் மிகப் பெரிய சொத்து, கமல் இந்திய திரை உலகின் பெருமை. கமல் நடிப்பில் மட்டுமல்ல திரைக்கதை,வசனம்,இயக்கம் எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர். இதை வெறும் வாசகமாக சொல்லவில்லை, அனுபவ பூர்வமாக சொல்கிறேன். இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு நிறைய விஷயங்களை சொல்ல முடியும் இருப்பினும் சிலவை மட்டும் இங்கே. ஹேராம் கமல் இயக்கிய முதல் படம் (அதாவது இயக்குனர் என்ற பொறுப்பில் அவர் பெயர் வந்தது என்ற அளவில்). இந்த படத்தில் ஒரு காட்சி இந்து முஸ்லீம் கலவரத்தை ஒட்டி வரும் காட்சியில் இயற்கையாக மதம் பிடிக்கும் தன்மை கொண்ட யானை ஒரு சங்கிலியால் கட்டப்பட்டு அமைதியாக இருக்கும் ஆனால் செயற்கையாக "மதம்" கொண்ட மனிதர்களால் யானையின் காலடியில் கோரமாக கொல்லப்பட்டு கிடக்கும் காட்சியில் யானை அமைதியாக வாலாட்டிய படி நிற்பது. மனிதனுக்கு மதவெறி தேவை இல்லை என்பதை பத்துபக்க வசனங்களில் நீட்டி முழக்காமல், காட்சியிலேயே காண்பித்திருப்பது. அதே படத்தில் மற்றுமொரு காட்சி முதல் முறையாக மத துவேஷம் கொண்டவர்களின் கூட்டணியில் சேரும் போது சகதியில் கால் வைத்து நடந்து செல்வது மற்றும் முதல் முறையாக போதை உண்டா மயக்கத்தில் நடந்து செல்வது . என்று குறிப்பாலேயே பல செய்திகளை அனாசயமாக சொல்லி செல்கிற இவரை மிக சிறந்த இயக்குனர் என்று பார்க்காமல் எப்படி பார்ப்பது ..?
வசனம் கேட்கவே வேண்டாம் தேவர்மகனில் வரும் ... "நேத்து வரை வேல் கம்பையும் ஈட்டியையும் தூக்கிகிட்டு இருந்தவனை விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான் அவன் பையத்தான் வருவான்." என்று கிராமத்து படிப்பறிவற்ற மக்களை பற்றி சிவாஜி சொல்லும் போது "..எவ்வளவு பைய அய்யா அதுக்குள்ளே நான் செத்துருவேன்.." என்று கமல் சொன்னவுடன் " செத்து போ எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தான் ஆனால் அதுக்குள்ளே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இன்னைக்கு விதை போட்டவுடன் நாளைக்கே பழம் சாப்பிடனும்னு நினைச்சா எப்படி..? இன்னைக்கு நான் விதை போடுறேன் உன் பையன் காயை பார்ப்பான் அவன் பையன் பழம் சாப்பிடலாம் ஆனால் அதை எல்லாம் இருந்து பார்க்க நான் இருக்க மாட்டேன் இதெல்லாம் பெருமையா..கடமை". என்ன ஒரு வசனம், எனககு கோபம் வரும் போதெல்லாம் இந்த வசனத்தைதான் நினைத்துக் கொள்வேன். அதாவது ஒரு நாளில் பல முறை. அதே மாதிரி குருதிப்புனலில் வரும் "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு அது இயற்கையின் நியதி..". இப்படி பல.
திரைக்கதை கேட்கவே வேண்டாம் "விருமாண்டி" திரைக்கதை ஒன்று போதும்.
சரி இப்படி பட்ட கமல் இன்னும் பல படி உயர்ந்திருக்கிறார் இப்படியாக விஜய் TV சமீபத்தில் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் கமலுக்கு சிறந்த திரைக்கதையசிரியருக்கான விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது,சிறந்த வில்லனுக்கான விருது, பெரும்பான்மையான மக்களை கவர்ந்தவர் என்கிற விருது என்று மொத்தம் நான்கு விருதுகளை அள்ளியிருக்கிறார். எனககு தெரிந்து இதுவரை யாருமே இவ்வளவு விருதுகளை ஒரே ஆளாக வாங்கியிருக்கிரார்களா ..? என்றால் எனககு தெரிஞ்சு இல்லை. (உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க).
தளபதி அடைமொழி இல்லாமால் இப்பவெல்லாம் யாரும் தமிழ் திரை உலகில் நுழைவதில்லை. அப்படி பட்ட இந்த தமிழ் திரையுலகில் சகலகலா வல்லவன் என புகழ பட்டாலும் அந்த புகழுக்குரியவராக தன்னை மாற்றி காண்பித்தவர் கமல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளி காட்சியை பாருங்கள் சிறந்த நடிகர் பட்டம் வென்ற சூர்யா கமலுக்கு செய்யும் மரியாதையை. நிச்சயம் கமல் இதுக்குரியவர் தான் .Read more...

யார் போராளி..?

மரணம் எல்லாரையும் மறித்து விடுவதில்லை இதில் பிரபாகரனது மரணமும் அடங்குமா..? இல்லையா என்பது சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வருவது. அதற்கு முன் சில விஷயங்களை நாம் பார்ப்போம். பிரபாகரனது மறைவு சில தினங்களுக்கு முன்னால்தான் உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே அதை பற்றி பேசுவதற்கு சற்றே யோசனையாகவே இருந்தது. ஆனால் அதை புலிகளின் தரப்பிலேயே ஒத்துக்கொண்ட பிறகு பேசலாம் என்ற தைரியம் வந்தது. காந்தீய கொள்கைகளை மறக்கவும் அதை ஏடுகளின் எல்லைக்குள்ளேயே அடக்கி விட்ட நம் தலைமுறைக்கு அதை பற்றி பேசினாலேயே நகைப்புக்குரியதாக தோன்றும். இன்றும் நாளையும் என்றும் அடிக்கு அடி கண்ணுக்கு கண் என்பதெல்லாம் மனித சமுதயாத்துக்கு ஒத்து வரப்போவதில்லை இதை நாம் என்று தான் உணரப்போகிறோமோ? சரி விடுதலைப் புலிகளின் இந்த தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாமா ..? இதே வன்முறை வழியை பின்பற்றி தானே புலிகள் சில காலத்திற்கு முன்பு இலங்கையின் ஒரு பகுதியை பிடித்து ஆட்சி செய்து வந்தார்கள்..? அப்புறம் எப்படி அவர்கள் காந்தீய வழியை பற்றி எல்லாம் யோசிப்பார்கள்..? என்றெல்லாம் கேட்கலாம். இங்கே ஒரு விஷயத்தை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அதாவது எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் ஆரம்பிக்க பட்ட பொழுது இருந்த தங்களது இலக்கை அதை அடைந்த பிறகும் நீடித்து கொண்டே போவது தான் அந்த இயக்கத்தின் தோல்வியாகிறது. உதாரணமாக அல்கொய்தா இயக்கம் இஸ்லாம் சட்டம் நடை முறை உள்ள நாட்டில் மற்ற விஷயங்கள் தேவை இல்லை என்று சொல்வது வரை அதற்கிருந்த ஆதரவு, கொஞ்சம் கொஞ்சமாக உலகின் எல்லா நாடுகளும் அதே விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அதன் அழிவிற்கு வழி வகுத்து விட்டது. இதே போல் விடுதலைப் புலிகளின் இலக்கும் மாறி விட்டது என்றே வரலாறு நமக்கு சொல்லும் பாடம். அதாவது தனக்கென இலங்கையின் ஒரு பகுதியை பிடித்தவுடனாவது அது தனது தீவிரவாத போக்கை கைவிடுத்து உலக நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது தாங்கள் பிடித்த அந்த பகுதிக்கு உலகநாடுகளின் அங்கீகாரம் பெற முறை முயன்றிருக்க வேண்டும். ஒருவேளை அதற்கான கதவுகள் திறந்த போதிலும் தன்னால் முடியாது என்று விடுதலை புலிகள் மறுத்து விட்டார்களா ..? என்பது குறித்து எனககு தெரியவில்லை, ஆனால் அப்படி வைக்கப்பட்டிருந்தால் அதை அவர்களது அடிப்படை "வன்முறை " கொள்கைகளே தடுத்திருக்கும். "வன்முறை" கொள்கைகள் என்பது ராஜீவ் கொலை,அமிர்தலிங்கம் கொலை உட்பட எல்லாம் சேர்த்து தான்.

தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கண்டு சிங்கள அரசை எதிர்த்து உருவாக்கப்பட்ட பல இயக்கங்களும் கால ஓட்டத்தில் காணாமல் போனாலும், விடுதலை புலிகள் தங்களது இயக்கத்தை வளர்க்க அப்பொழுதைய தமிழக அரசின் மூலமாக இந்திய நாட்டின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றது பேருதவியாக இருந்தது. இதெல்லாம் நாமறிந்த ஒன்றே. ஆனால் அதே முறையை ஏன் தங்களுக்கென ஒரு பகுதியை பிடித்த பிறகும் காண்பிக்க வில்லை என்பதே என்னைப் போன்றோரின் கேள்வி. சீமான் போன்றவர்கள் போரின் கடைசி கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்க கோரி போராடினார்கள். அதை ஏன் இடைப்பட்ட காலத்தில் செய்ய முயலவில்லை..?

பிரபாகரன் போராட ஆரம்பித்த பொழுது வன்முறையை கையில் எடுத்தது தவறு, சரி அப்பொழுது எடுக்கத்தவறிய அந்த நிலைபாட்டை பிறகாவது சரி செய்து இருக்கலாம். ஏற்கனவே சொன்ன மாதிரி. பிரபாகரன் ஒரு கொள்கை வாதி என்பதிலோ அல்லது அவரது ஆரம்ப கால போராட்டங்கள் ஒரு சமூகத்தின் குரலாக ஒலித்ததயோ மறுக்க வில்லை. ஒரு தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க நினைக்கும் ஒரு மாணவன் எல்லா கேள்விக்கான விடையையும் சொந்தமாக எழுதிவிட்டு ஒரு கேள்விக்கான விடையை பார்த்து எழுதியதை தவறு என்று சொல்லலாமா கூடாதா..? என்பதை போன்றுதான் பிரபாகரன் ராணுவத்தீர்வை விரும்பியதன் காரணமும். ஒரு நல்ல போராளி தடம் மாறிப் போகும் போதுதான் எத்தனை வலி வேதனைகள். பிரபாகரனின் மரணம் ஒரு பெரும் போருக்கனா விதையாக இல்லாமல் அந்த போரின் தீர்வை தமிழ் சந்ததிகளுக்கு நிரந்தரமாக பெற்று தருகிற ஒரு பாதையாக இருக்க வேண்டும் .

தீர்வுகளின் தூரம் அதிகமிருப்பதை கொள்கை வாதிகள் விரும்பாத பட்சத்தில் பிறப்பது தான் வன்முறை என்பது எனககு தெரிந்த உண்மை. அடக்குமுறைகளுக்கான காரணங்கள் எதுவாகினும் அதை அடக்கும் முறை அமைதி வழியாகத்தான் இருக்க வேண்டும். அது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை தரமுடியும் என்பதை வருங்கால போராளிகள் உணர வேண்டும். இங்கே போராளிகள் என்பவர்கள் அநீதியை எதிர்த்து போராடுபவர்கள் எல்லாரையும் குறிக்கிறது, ஆயுதம் ஏந்துபவர்களை மட்டும் குறிக்க வில்லை.


Read more...

ரசிக்கும் சீமான் -- M.R.ராதா

ஒவ்வொரு மக்களுக்கும் ஒன்று பிடிக்கும், கவுண்டமணி அவர்களுக்கு அந்த நக்கல் தான் பலம் அது தான் அவரை நம்மில் பலரும் அவரை ரசிக்கும் படி செய்திருக்கிறது. மற்றவர்கள் அதை செய்தால் திமிர் தனமாக தெரியும். அந்த சாதியில் முன் தோன்றிய மூத்த குடி நடிகவேள் M.R.ராதா. அவரது குரலில் ஒரு கவர்ச்சி என்றால் அவர் உச்சரிக்கும் தமிழில் தான் எவ்வளவு சுத்தம், தெளிவு. எம்.ஜி.ஆர சுடப்பட்டதன் காரணத்தை அவர் சொல்லும் நடையே அவரை நாம் குற்றவாளியாய் பார்க்க விரும்பினாலும் விடாது. குறிப்பாக நடிகர்களை அவர் சுய விமர்சனம் செய்வதும் அதே போல் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சினிமாவை அதன் தூரம் எவ்வளவு என்பதை ஒரு நடிகரே சொல்வது ஆச்சர்யம். இது மூன்று தொடர்களை கொண்டது இங்கே முதல் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நீங்கள் மற்ற இரண்டு தொகுப்புகளையும் பெறலாம்.
இந்த பேச்சு உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு ...
பகுதி-1


Read more...

தமிழ் மொழி அழியுமா...?

உலகில் வேகமாக அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பது எதிர்காலத்தில் எந்த அளவு சாத்தியம்?

கடந்த 100 ஆண்டுகளில், சுமார் 7 ஆயிரம் மொழிகள் அழிந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், தமிழ் அழிவதற்கான வாய்ப்பு துளியும் கிடையாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, ரொம்பவும் உயிருள்ள, துடிப்பான, பரவலாக வேர்களைப் பரப்பியிருக்கும் மொழி - தமிழ். உலகெங்கும் தமிழர்கள் கையோடு (அல்லது வாயோடு?!) தமிழைக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.பண்டைக்காலத் தமிழ் இன்று வெகுவாக மாறி இருக்கிறது. எதிர்காலத்திலும் தமிழ் மாறும். ஆனால் அழியாது!

--மதன் கேள்வி-பதில் பகுதியில் வந்தது. கிட்டத்தட்ட இதே கருத்தை வைரமுத்து அவர்களும் தனது பாற்கடல் தொகுப்பில் ஒரு கேள்விக்கான விடையாக தந்திருக்கிறார்.


Read more...

ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளி காட்சியை பாருங்கள். இதற்கு மேலும் ராஜாவின் திறமை மீது சந்தேகம் கொள்வோர் உண்டோ...? குறிப்பாக 4.56 -லிருந்து பாருங்கள்.Read more...

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.. (ஆரியர்-திராவிடர்)

ஆரியர் முன்னேற்றக் கழகம், (AMK) அல்லது அனைத்து இந்திய ஆரியர் முன்னேற்றக் கழகம் (AIAMK) என்றும், மூவர்ண தேசியக் கொடியின் நடுவில் இந்திய வரைபடம், அதில் நேதாஜி, ராஜாஜி, வாஞ்சிநாதன் ஆகியோர் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது போல் கொடி தயாரித்து ஆகஸ்ட் 15-ல் கட்சி தொடங்க வேண்டும் என்றும் எனது கூட்டமைப்பினர் கூறியுள்ளனர். நான் கொடியை அறிமுகப்படுத்தி கட்சி தொடங்கினால் எனது பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் அதற்கான நேரம் வரவேண்டும். முதலில் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

--இது எஸ்.வி.சேகர் தான் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி பற்றி சொல்லியிருப்பது. இங்கே இது வரை திராவிடர்கள் நாங்கள் என்று குரல் கொடுத்த பொழுதெல்லாம் "அதெல்லாம் வெறும் மாயை ஆரியர் திராவிடர் என்ற பாகு பாடே கிடையாது இவர்களாகவே இது மாதிரியெல்லாம் பேசி மக்களிடையே பிரிவினை வாதத்தை தோற்று விக்க பார்க்கிறார்கள்.." என்று ஒரு வாதத்தை எஸ்.வி.சேகர் கட்சி ஆரம்பிக்க இப்பொழுது யோசனை சொல்பவர்கள் முன் வைப்பதுண்டு. ஆனால் அவர்கள் எப்படி இப்பொழுது ஆரியர்கள் என்ற பெயரிலேயே கட்சி ஆரம்பிக்க வழி சொல்லியிருக்கிறார்கள்..? நமக்கும் ஒரு வேளை வரட்டும் என்று காத்திருந்தார்களா...? இல்லை உண்மையிலேயே ஆரியர் திராவிடர் பாகு பாடு உண்டா..? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


Read more...

தன் பதில் தன்னை சுடும்..

துணை முதல்வர் ஸ்டாலின்...?`

`(சிரிக்கிறார்). நடக்க வேண்டியது நடந்திருக்கு. ஆனால் தி.மு.க.வில் இன்னும் ஒண்ணு பாக்கியிருக்கு. அதுதான்... அவரது பெண்ணுக்கும் ஏதாவது பதவி கொடுத்துவிட்டால் அனைத்தும் பிரச்னையின்றி முடிந்துவிடும்.''

பா.ம.க.வுக்கு அன்புமணியை தலைவராக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே?``கட்சியின் பொதுக்குழுவில் அந்த விஷயம் பேசப்பட்டிருக்கு. அதன்படி அன்புமணி சென்னையில் அமர்ந்து கட்சிப் பணிகளைக் கவனிப்பார். நான் கிராமங்களுக்குப் போய் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கப் போகிறேன்.''

இந்த கேள்வி பதில் குமுதம் பேட்டியில் ராமதாஸ் கூறியிருப்பது. முதல் கேள்விக்கான பதிலில் கருணாநிதியின் குடும்ப அரசியலை சாடியிருக்கும் ராமதாஸ் அடுத்த கேள்விக்கான பதிலில் எப்படி தனது குடும்ப அரசியலை எப்படி நிலை நாட்டியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ராமதசுக்கோ நமக்கோ இது புதிதில்லை தான் ஆனால் ஒரு பேட்டியிலேயே தனது சாகாசத்தை காண்பிக்கிற அளவுக்கு "உயர்ந்துவிட்டார்" ராமதாஸ்.


Read more...

பாராளுமன்ற தேர்தலும்..ஈழ தமிழர் ஆதரவும்..

காங்கிரஸ் கட்சி தமது ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்த ஏற்பாகவே இதை முன் வைக்கும். அதே திசையில் இன்னும் வேகமாகச் செல்வதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டதாகக் கருதிச் செயல்படும்.காங்கிரசை வீழ்த்துவது என்றொரு ஒற்றை நிகழ்ச்சி நிரலை இங்கே சிலர் முன் வைத்தனர். மாநில அளவிலான பிரச்சினைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி, தொலை நோக்கில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிற தேசியப் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளுகிற போக்கிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. காங்கிரசை வீழ்த்தினால் அந்த இடத்திற்கு யார் வருவார்கள்? பா.ஜ.க. போன்ற ஒரு வகுப்புவாதக் கட்சி அந்த இடத்தைப் பிடிப்பதில் அவர்களுக்குக் கவலை கிடையாது. ``தனி ஈழத்தை காந்தியே எதிர்த்தாலும் அவரை எதிர்ப்போம். கோட்ஸே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம்'' என்று இங்கே ஒரு திரைப்பட இயக்குனர் தம் கருத்தைப் பதிவு செய்யவில்லையா?காங்கிரஸ் இந்த அளவு வெற்றி பெறாமல், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக வேறு யாரையேனும் பிரதமராக அறிவித்தால்தான் ஆதரவளிப்போம் என்கிற நிபந்தனையை விதிக்கும் பிற கட்சிகளின் ஆதரவை நம்பி அது ஆட்சி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாமற் போனது ஏமாற்றமே. மாநில அளவுக் கட்சிகள் எல்லாம் தோற்றுவிட்டன எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடவும் இயலாது. தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் (பீஹார்), பிஜு ஜனதா தளம் (ஒரிசா) முதலிய கட்சிகள் வெற்றி பெறத்தான் செய்துள்ளன. ஒரு வகையில் பார்த்தால் மண்டல் கட்சிகள், இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான கட்சிகள் (எ.டு: பா.ம.க, ராஷ்ட்ரீய ஜனதாதளம், லோக் ஜன சக்தி, பகுஜன் சமாஜ் கட்சி) எல்லாம் அடிவாங்கியுள்ளன. இன்னொரு பக்கம் வகுப்புவாதத்தை முன்னிலைப்படுத்திய பா.ஜ.க.வையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். ஆக சாதி, மதம் முதலான அடையாளங்களின் அடிப்படையிலான அரசியல் பின்னுக்குப் போய், ``வளர்ச்சி'' (development)என்கிற கருத்தாக்கம் மேலுக்கு வந்துள்ளது எனலாமா? நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், ராமன்சிங், ஓரளவு நரேந்திரமோடி ஆகியோர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொண்டதை இப்படிப் பார்க்கலாமா? இந்நிலை வரவேற்கத் தக்கது என நான் கூற வருவதாகக் கருத வேண்டாம். இவர்களின் `வளர்ச்சி' குறித்த வரையறையில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் உண்டு. இவர்கள் சொல்லும் வளர்ச்சிக் குறியெண்களில் முன்னுக்கு நிற்கும் பல வட மாநிலங்கள், மனித வளர்ச்சிக் குறியெண்ணில் (HDI) தென் மாநிலங்களைக் காட்டிலும் பின்னுக்கு நிற்பதை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். தென் மாநிலங்கள் மனித வளர்ச்சியில் முன் நிற்பதற்கு இங்கே நீண்ட நாட்களாக இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவது ஒரு முக்கிய காரணம்.உலக மயச் சூழல், மத்திய தர வர்க்கக் கருத்து நிலை ஆளுமை பெறுதல் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே `வளர்ச்சி' குறித்த நிலைப்பாட்டிற்குக் கிடைத்துள்ள ஆதரவை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.உயர் சாதியினரைத் `தாஜா' செய்யும் மாயாவதியின் `சமூகப் பொறியியல்' (Social Engineering) அணுகல் முறை படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தக் கொள்கையின் அபத்தத்தையும், இது இப்படித்தான் முடியும் என்பதையும் இரண்டாண்டுகட்கு முன்பு இதே பத்தியில் நான் எழுதியிருந்தேன். உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு முதலானவற்றை அளித்து அவர்களை இணைத்துக் கொள்ளும் மாயாவதியின் `சர்வஜன்' கொள்கை இன்று இரு தரப்பாலுமே நிராகரிக்கப்பட்டுள்ளது? பெரிய அளவில் இம்முறை தலித் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கே வரவில்லை. தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட 17 தொகுதிகளில் 10ஐ முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியுள்ளது. உயர் சாதியினர் அதிகமாக உள்ள கன்னோஜ், கான்பூர், உன்னா, ஃபரூக்காபாத் முதலான தொகுதிகளில் பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். உயர் சாதியினரும் இவர்களை நம்பவில்லை. உயர்சாதியினரை ஈர்க்கப்போய் பாரம்பரியமாக ஆதரவளித்து வந்த முஸ்லிம்கள் மற்றும் தலித்களின் ஆதரவையும் இன்று அவர் இழந்து நிற்கிறார். `இரும்பு மங்கை' என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள், நிதி திரட்டு முயற்சிகள் ஆகியவற்றையும் மக்கள் ஏற்கவில்லை.உ.பியில் மாயாவதி கடைப்பிடித்த இந்த அணுகல் முறையை முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியல் பாரம்பரியமுள்ள தமிழகத்தில் கடைப்பிடித்த பகுஜன் சமாஜ்கட்சி இன்று அத்தனை தொகுதிகளிலும் `டிபாசிட்' தொகையை இழந்து நிற்கிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் `சாதி'க்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பது தவிர்க்க இயலாததே. எனினும் மனிதர்களை வெறும் சாதித் தொகுதிகளாக மட்டுமே பார்த்துவிட இயலாது. அவர்களுக்கு வேறு பல அடையாளங்களும் உண்டு. இந்தப் பிற அடையாளங்களை `சர்வஜன்' கொள்கை கணக்கில் கொள்ளாதது அதன் பெரும் பலவீனம்.இடதுசாரிகளின் தோல்வி வருந்தற்குரியதுதான். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக அதிகரிப்பது, ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 50 சதத்திற்கும் குறைவாக்குவது, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, தொழிலாளர் சட்டம், தொழிற் தகராறுச் சட்டம் முதலியவற்றைத் திருத்துவது, சுரங்கத் தொழிலில் தனியார் துறையின் பங்கை அதிகரிப்பது முதலான மன்மோகன் சிங்கின் தாராளவாதக் கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட இடதுசாரிகள் இன்று அந்தத் தகுதியை இழந்து நிற்பது இந்திய மக்களின் துரதிர்ஷ்டமே. தொழில்வளர்ச்சி குறித்த மாற்றுக் கொள்கையின்மை, 32 ஆண்டுகால அதிகார போதை கட்சியில் உருவாக்கிய குண்டாயிசம், தவறான அணுகல் முறைகளின் விளைவாக முஸ்லிம்களையும், விவசாயிகளையும் அந்நியப்படுத்திக் கொண்ட அபத்தம் ஆகியவற்றின் விளைவை இன்று இடதுசாரிகள் சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்பட்டமான சந்தர்ப்பவாதியாயினும் சோமனாத் சட்டர்ஜி சொன்னதுபோல, பா.ஜ.க. எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற எதிர்மறை அணுகல் முறையைத்தான் தேர்தல் களத்தில் இடதுசாரிகள் வைத்தார்களே ஒழிய, மாற்றுக்கொள்கைகளை அவர்களால் வைக்க இயலவில்லை. மன்மோகன் சிங் அரசின் அணுகல் முறைக்கு எந்த அம்சங்களிலெல்லாம் அவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தார்களோ, அவற்றை மக்கள் மத்தியில் பிரச்சினை ஆக்குவதிலும் அவர்கள் தவறினார்கள். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் இந்த முடிவுகள் நான் எதிர்பாராததல்ல. ஈழப் பிரச்சினையை மட்டுமே முன்னிலைப்படுத்தி, நமது மக்களின் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க-காங் கூட்டணியை வீழ்த்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் மிதந்து திரிந்தவர்கள் இன்று தலை கவிழ்ந்து நிற்கின்றனர். ஈழப் போராட்ட ஆதரவாளர்கள், சரியாகச் சொல்லாததனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தமது பாரம்பரியப் பகையை மறந்து ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்ததையும், அந்த அம்மையார் திடீரென நெடுமாறன், வைகோ `ரேஞ்சில்' தனி ஈழ வசனங்களை உதிர்க்கத் தொடங்கியதையும் நம்புகிற அளவுக்குத் தமிழக மக்கள் அப்பாவிகளாக இல்லை. ஈழம் ஒரு வகையில் நகர் சார்ந்த, தமிழ்த் தேச உணர்வாளர்கள் சார்ந்த ஒரு பிரச்சினையாகவே இருந்தது. இந்தப் பிரச்சினையை முன்னெடுத்த புலி முகவர்கள் புலி ஆதரவு, சோனியா- கருணாநிதி - காங்கிரஸ்- தி.மு.க. எதிர்ப்பு வசனங்களைத்தான் உமிழ்ந்தார்களே ஒழிய, ஈழ மக்களின் துயரத்தைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்கள் உடனடியாகப் பிடித்துச் செல்லப்பட்டு ராஜபக்சே அரசின் கொடுங்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டதன் விளைவாக இம்முறை தமிழக மண்ணிற்கு அகதிகள் வரத்தும் அதிகமில்லாமற் போயிற்று.சாதாரண மக்களைப் பொறுத்த மட்டில் காங்கிரஸ்-கருணாநிதி முன் வைத்த `அந்நிய நாட்டுப் பிரச்சினையில் இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்?' என்கிற `லாஜிக்' எடுபட்டது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு காட்டும் மெத்தனத்திற்குப் பின்புலமாக உள்ள அதன் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பற்றி உணர்ச்சிப் பேச்சாளர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றால், இதைப் பேச வேண்டிய கம்யூனிஸ்டுகளும் அதைப் பேசவில்லை.தி.மு.க. பெரிய அளவில் கடந்த நான்காண்டுகளில் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளவில்லை. தனது `பாப்புலிச' தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை அது நிறைவேற்றியிருந்தது. தவிரவும் அரசு ஊழியர், சிறுபான்மையோர் முதலான சில வலுவான சமூகப் பிரிவினர் தி.மு.க. பக்கம் உறுதியாக நின்றனர். அரசு ஊழியர் ஜெயலலிதா அரசு தம் மீது மேற்கொண்ட தாக்குதலையும், சிறுபான்மையோர் அவர் நரேந்திரமோடிக்கு விருந்தளித்ததையும் மறக்கவும் மன்னிக்கவும் தயாராக இல்லை.இவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு புலி ஆதரவாளர்கள் ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததேன்? உணர்ச்சிப் பேச்சாளர்கள் (சசிகலா) நடராஜனின் நிர்வாகத்தில் பிரச்சாரங்கள் மேற்கொண்டதெப்படி? மத்தியில் பா.ஜ.கவும், மாநிலத்தில் ஜெயலலிதாவும் வந்தால் தமக்கு நல்லது என புலிகள் தப்புக் கணக்குப் போட்டார்கள். தமது ஆதரவாளர்களை அந்தத் திசை நோக்கி நகர்த்தினார்கள். `லண்டன் டைம்ஸ்'லும், `தி வீக்' இதழிலும் வெளிவந்த நடேசனின் பேட்டி அந்தத் தொனியில் அமைந்தது. சங்கராச்சாரியையும், அத்வானியையும் சந்தித்துக் கொண்டிருந்த சிவாஜிலிங்கம் வெளிப்படையாக இல.கணேசனை ஆதரித்துக் களம் இறங்கினார். ஜெயலலிதாவை ஆதரிப்பதில் தாம் ஒன்றும் வீரமணிக்குச் சளைத்தவரல்ல என நிறுவினார் கொளத்தூர் மணி. ஈழப் பிரச்சினையைக் கொண்டு தனது கூட்டணி மாறி அரசியலை நியாயப்படுத்தி விடலாம் என நம்பினார் மருத்துவர் இராமதாஸ்.அநேகமாக விடுதலைப் புலிகள் செய்த கடைசிப் பெரும் தவறாக இதைத்தான் சொல்ல முடியும். தமிழக மக்களின் ஆதரவு புலிகளுக்கு மிகவும் ஆதாரமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். இங்குள்ள அரசியல் முரண்பாடுகளை நுனித்து ஆராய்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்வது என்கிற அளவில் அவர்கள் நின்றிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். மாறாக இங்குள்ள அரசியலில் தலையிடுவது என்கிற நிலையை அவர்கள் எடுத்தனர். தேர்தல் நேரத்தில் பிரபாகரனின் குரலில் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படும் என்று கூட வதந்திகள் உலவின.இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது புலிகள் ஒரு சில சதுர கி.மீ. பரப்புக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். புலிகள் இன்று அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் சந்தித்துள்ள தோல்விகளுக்குப் பல காரணங்கள் உண்டு. மாறியுள்ள உலகச் சூழலைக் கணக்கிலெடுக்காமல் 30 ஆண்டுகளாக ஒரே போராட்ட இலக்கணத்தைக் கடைப்பிடித்தது. பிற இயக்கங்களை மட்டுமின்றித் தமிழ்ச் சமூகத்தின் பிற பிரிவுகளையும் அந்நியப்படுத்தியது. தம்மை முழுமையான மரபு வழி இராணுவமாகவே கருதிக் கொண்டு தமது பலத்தை மிகைப்படுத்தியும், எதிரியின் பலத்தைக் குறைத்தும் மதிப்பிட்டது என்கிற பல காரணங்களோடு கூடுதலாக தமிழ்நாட்டிலுள்ள அவர்களது முகவர்களின் அணுகுமுறை ஒரு முக்கிய காரணமாக இருந்தது? புலிகளின் அத்தனை நடவடிக்கைகளையும், அவை இந்தியா - தமிழகம் தொடர்புடையதாக இருக்கும் பட்சத்திலும்கூட அவர்கள் எந்த விமர்சனமுமின்றி ஆதரித்தனர். அவர்கள் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டனர்.எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைப் புலிகள் செய்தபோதும் இவர்கள் எச்சரித்ததில்லை. மாறாக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினார்கள். காங்கிரஸ் போய் பா.ஜ.க. ஆட்சி அமைந்தாலுங்கூட இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை, முக்கியமாக இலங்கைக் கொள்கை மாறப்போவதில்லை, மாற இயலாது என்பதை இவர்களும் உணர்ந்தார்களில்லை. அவர்களுக்கும் உணர்த்தினார்களில்லை. `இலங்கையின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காக்கும் கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு' என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இலங்கை, இந்தியப் பிரதமர்கள் கூட்டறிக்கை விட்டதை இருவரும் மறந்தனர்.தமிழக மக்களின் உணர்வு மட்டத்தை மதிப்பிடுவதிலும் நமது புலி ஆதரவாளர்கள் தவறிழைத்தனர். உடனடியாகப் போர் நிறுத்தம், ...... காப்பாற்றப்படுதல், ராஜபக்சே அரசுக்கு இந்திய அரசு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என்கிற குறைந்தபட்ச (Minimalist) மனிதாபிமானக் கோரிக்கைகள் தான் தமிழ் மக்களின் பொதுக் கருத்தாக இருந்தது. தனி ஈழத்தை அங்கீகரித்தல், புலிகளின் மீதான தடையை நீக்குதல் முதலான உயர்ந்த பட்ச ..... கோரிக்கைகளை இவர்கள்தான் சுமந்து திரிந்தார்களே ஒழிய மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இவர்களால் கவனிக்க இயலவில்லை.விளைவு?தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை இன்று செரிக்க இயலாமல் நிற்கின்றனர். தமது நிலைப்பாடுகளை மேலும் குற்ற உணர்ச்சியின்றி உறுதியுடன் முன் வைக்கும் உள நிலையை மன்மோகன்சிங்கிற்கும் சோனியாவுக்கும் பரிசளித்துவிட்டுப் பரிதாபமாக நிற்கின்றனர்.Tail Piece.1. Primordial Sentiment அது இது என்றெல்லாம் தத்து பித்து விளக்கங்கள் சொல்லி தமிழர்கள் அனைவரும் தீக்குளிக்கத் தயாராக நிற்பதாக வியாக்கியானம் அளித்த நமது தமிழ் அறிவு ஜீவிகள் எங்கே போனார்கள்?2.மாவோயிஸ்டுகள், உல்ஃபா, ஹுரியத் முதலான அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. குறிப்பாக மாவோயிஸ்டுகளின் அறிவிப்பு எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் வலுவாக உள்ள சட்டீஸ்கர் பகுதிகளில் பா.ஜ.க. வெற்றிகளைக் குவித்துள்ளது. வாக்களிக்க வருபவர்களைத் தடுக்க மாட்டோம் என இம்முறை மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்த போதிலும் வேறு வகைகளில், தேர்தல் பணிக்கு வந்த 5 அரசு ஊழியர்களைக் கொன்றது வரை வாக்களிப்பதைத் தடுக்க முயற்சித்தும் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. தேர்தல் குறித்த மக்களின் அணுகுமுறை பற்றிய ஒரு விரிவான பரிசீலனைக்கு அவர்கள் தயாராக வேண்டும்.

தேர்தல் பற்றி குமுதம் தீராநதி பத்திரிகையில் மார்க்ஸ்.A என்பவர் எழுதிய கட்டுரையில் இருந்து.


Read more...

ஆங்கிலம் பேசினாலே நடு நிலையா...?

சமீபத்தில் குமுதத்தில் வந்த அரசு கேள்வி பதில் பகுதியில் வடமாநில ஊடகங்கள் எப்படி தமிழகத்தை பற்றிய தங்களது பார்வையை வைத்துள்ளன, போன்ற கேள்விக்கு அளித்த பதிலில் "...பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழக மக்கள் வரவேற்கின்றனர்..." என்ற பொருள் படும்படியாக ஒளிபரப்பியதை சுட்டிக்காட்டி "ஆங்கில அறிவை மட்டுமே வளர்த்துக்கொண்டுள்ள ஒரு ஊடகம்.." என்று சொன்னதை படித்தேன்.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் வட இந்திய ஊடகங்கள் எப்படி தங்களது தமிழக தேர்தல் முன்னோட்டத்தை இந்த நாட்டிற்கு தந்துள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒலி ஓளி காட்சி மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்த முன்னோட்டத்தை சம்மந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு தொகுத்து கொடுத்த யோகேந்திர யாதவ் என்பவர் தனது அம்மா பாசத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதை பார்க்கும் போது சமீபத்தில் கருணாநிதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பற்றி குறிப்பிடும் போது ".. சில பேர் வட இந்தியாவிற்கு சென்று அங்குள்ள ஊடகங்கள் அனைத்திலும் தி.மு.க கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்பது மாதிரியான செய்தி வரும் படி பார்த்துக்கொண்டனர், அவர்கள் யார் என்பதை நான் சொல்ல மாட்டேன் ஆனால் இதன் மூலம் ஆரிய திராவிட சண்டை இன்னும் நடப்பதாகவே எனககு தோன்றுகிறது..." என்று சொன்னது உண்மையோ என நினைக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது இந்த ஒளித்தொகுப்பு.
மேலும் நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் உண்டு அதாவது ஆங்கிலத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டாலே அது சரியாகத்தான் இருக்கும் என்ற தவறான கண்ணோட்டம். அதை நாமும் திருத்திக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.


Part-3


Read more...

தமிழில் பேசுவோம் தமிழை போற்றுவோம்

தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றார் பாரதிதாசனார். ஆனால் தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில் பேசுவதையே கேவலமாக கருதும் சூழல் தமிழ் நாட்டில்தான் உண்டு. இதில் பெரும் பங்கு வகிப்பது தொலைக்காட்சியே. ஓரிரு மாதங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியில் வந்த ஒரு கலந்துரையாடலின் ஒரு பகுதி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது இதை பார்த்த பிறகாவது நாம் தமிழில் பேச முயற்சி செய்யலாமே. தாய்மொழியில் பேசினால் கைத்தட்டும் கூட்டம் தமிழர்கள்தான் என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்


Read more...

ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து.

இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...ராஜாவை பற்றி தட்ஸ் தமிழில் வந்த ஒரு கட்டுரை....
தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார்.தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்!ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார்.இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko".எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள்.பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது!இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.
இத்துடன் ராஜாவின் ஒரு மிகச்சிறந்த பின்னணி இசை சேர்ப்பில் வந்த ஆண்பாவத்திலிருந்து ஒரு இசை கோர்வை


Read more...

செய்திகள் வாசிப்பது செந்தில் -- கேட்பவர் கவுண்டமணி

கவுண்டமணி - செந்தில் இணை நகைச்சுவை பெரும்பாலும் ரசிக்கத்தக்க வகையிலேயே இருக்கும் அதில் நக்கல் நையாண்டிகள் இருந்தாலும் நகைச்சுவை ருசி சற்றே தூக்கலாகவே இருக்கும். அதனால் நாம் சமீபத்தில் படித்த சில விஷயங்களை இந்த இணை மூலமாக சொல்லலாம் என்று நினைக்கிறோம். இது முதல் பகுதி இப்பகுதியில் எப்போதுமே செந்தில் செய்திகளை படிப்பவருமாக அதை பற்றிய தனது கண்ணோட்டத்தை பதிய வைப்பவராக கவுண்டமணி அவர்களும் இருப்பார்கள்.

செந்தில்: அண்ணே வணக்கம்னே எப்படி இருக்கீங்க என்ன காலையிலேயே டீக்கடை பக்கம் வந்துட்டீங்க, இந்தாங்கன்னே பேப்பர் படிக்கிறீங்களா..?

கவுண்டமணி: டீ சட்டி தலையா நான் என்ன உன்ன மாதிரின்னு நினைச்சியா எனககு நிறைய வேலை இருக்குடா.. (மனசுக்குள் உட்டா நமக்கு படிக்க தெரியாத விஷயத்தை நமக்கிட்டேயே போட்டு வாங்க நினைக்கிறான்.. நான் மாட்டுவேனா ..). நாங்க எல்லாம் நியூஸ் டிப்போ டா ... ஜெனரல் நாலேஜ் அதிகம் டா நீ வேணும்னா படி நான் அதை பத்தி அந்த செய்தியை பற்றி நான் நிறைய விஷயங்களை சொல்லுறேன்..

செந்தில்: சரிண்ணே.." எ‌ன்னை‌‌ 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌L. நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை." அப்படின்னு சீமான் சொல்லியதாக வந்திருக்குன்னே... என்னன்னே இப்படி பொத்தாம் பொதுவா சொல்லிப்புட்டார் ?

கவுண்டமணி: ஆமாம் இப்ப இவர் தான் நம்ம ஊர்ல நல்ல அப்பனுக்கு பொறந்தவங்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் கொடுக்கிறாரா ..? ஒ அதனாலத்தான் எல்லாரையும் என் சொந்தங்கலேன்னு சொல்றாரா ...?

செந்தில்: இருந்தாலும் உங்களுக்கு குரும்புன்னே...

கவுண்டமணி: டே நீ யார்ன்னு எனககு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் இங்கே வேண்டாம் மகனே அடுத்த செய்திய படி கருத்து சொல்லிட்டு நான் கிளம்பனும எனககு நிறைய வேலை இருக்கு.

செந்தில்: அண்ணே எனக்கும் வேலை இருக்கு அப்புறமா படிச்சு சொல்றேன்..(மனசுக்குள் என்னமோ இவரு தான் சூரியனையே எழுப்புறவர் மாதிரி பேசுவாரு...)

கவுண்டமணி: டே மெது வடை தலையா கொவிச்சுக்கிடதாட.. படி டா.

செந்தில்: கிவ் ரேச்பெட் அண்ட் டேக் ரேச்பெட்.


Read more...

என்னைக் கவர்ந்த காட்சி

சமீபத்தில் எப்படி YOUTUBE வீடியோவை "எண்ணங்களில்" சேர்ப்பது என்று "வலை" வீசிய போது www.bloggertricks.com என்ற இணைய தளத்தில் தெளிவான செயல் முறை விளக்கத்துடன் விளக்கி இருந்தார்கள், அதை முதலில் எப்படி வெளியிடுவது என்று யோசித்த பொழுது ஒரு காட்சியை சேர்த்து சொல்லலாம் என்று தோன்றியது நான் மிகவும் மிகவும் (இப்படி ஏகப்பட்ட மிகவும் சேர்த்து கொள்ளுங்கள் ) ரசித்த காட்சியை இங்கே இணைத்துள்ளேன். சமயம் வரும் பொழுது இந்த காட்சியை பற்றி நாம் விவரமாக பேசலாம்...


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP