சமரச நாயகன் -- திருநாவுக்கரசர் நாம எப்படியாவது பணம் சம்பாரிச்சு பெரிய ஆளா ஆயிட மாட்டமா...? என்று வான் பார்க்கும் நம்மை போன்ற சராசரி ஆட்கள் நமது அன்றாட வாழ்க்கையில் செய்து கொள்ளும் சமரசங்களை எப்பவாது எண்ணிப்பார்ப்பதுண்டா..? சரி அதுக்கும் திருநாவுக்கரசுக்கும் என்ன சம்மந்தம்..? அப்படின்னு நீங்க கேட்கலாம். சமரசங்களுக்கும் திருநாவுக்கரசருக்கும் நிறையவே தொடர்புண்டு.
அவர் ஏன் சமரசம் செய்து கொண்டார் குறித்து இரு வேறு கருத்துக்கள் உண்டு. பதவிக்காக...?  ஒன்று, மற்றொன்று தொழிலை நடத்தனுமே அப்படின்னு. ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா வேற வழி இல்லையோன்னு.
எனக்கு பிடித்த அரசியல் வாதிகளில் திருநாவுக்கரசரும் ஒருவர். இல்லை முதன் முதலா ஒரு அரசியல்வாதியா நான் ரசித்தவரும் ஆதரித்தவரும் திருநாவுக்கரசர் தான். அப்போவெல்லாம் எங்க ஊரு பேரு பத்திரிக்கையில வந்துச்சுன்னா அது திருநாவுக்கரசர் சம்மந்தப் பட்ட செய்தியாகத்தான் இருக்கும். விவரம் அவ்வளவாக தெரியாத காலத்திலும் திருநாவுக்கரசர் எனக்கு ஹீரோவாக தெரிந்தார் ஓரளவு விவரம் தெரிந்த இந்த காலத்திலும் அவர்  ஹீரோவாகவே தெரிகிறார். காரணம் இன்றைய தேதி வரை அவர் ஒரு ஸ்திரமான  அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் அவரை ஒரு "கட்சி மாறி" என்றே பாலாராலும் பார்க்கும் படி செய்யும். ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் எடுத்த எவ்வளவு பெரிய முடிவுகளை, நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம் அது மாதிரி ஒரு அரசியல்வாதியாக நிறையவே சமரசங்களை பலரும் செய்வது இயற்கை தான். மற்றவர்களில் இருந்து திருநாவுக்கரசர் எப்படி வேறுபடுகிறார் என்றால் தனது தொகுதியான அறந்தாங்கியில் அவர் தான் இன்றும் வெற்றி பெறுகிறார், இல்லை அவர் சார்பாக நிற்பவர் வெற்றி பெறுகிறார். அது அந்த தொகுதி மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அபிமானத்தை தெளிவாக காண்பிக்கிறது. ஒரு நல்ல அரசியலவாதி அதைத்தானே மக்களிடமிருந்து பெற  வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த சின்னத்தில் நின்றாலும், எந்த கட்சியின் சார்பில் நின்றாலும் அவர் தானே வெற்றி பெறுகிறார். அதானால் தான் ஒரு சாதாரண மனிதனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செய்துகொள்ளும் சமரசங்களை திருநாவுக்கரசரின் அரசியல் சமரசங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
70-களில் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆரின் ஆட்சி முழுமைக்குமே தொடர்ந்து பதவி வகித்து வந்திருக்கிறார்.
 முதல் வெற்றியை அடைந்த உடனேயே துணை சபாநாயகராக ஆக்கப்பட்டவர். தொடர்ந்து வந்த தேர்தல் வெற்றிகளிலும் அவர் பல துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவு திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்வின் வளமான பகுதியின் மறைவாகவே பார்க்கப்படுகிறது இல்லை கடந்த கால வரலாறு சொல்கிறது. அதற்கு பிறகுதான் அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக பார்க்கும் அளவிற்கு மாற்றியது என்று எனக்கு தோன்றுகிறது. எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்த போதிலும் சரியான அரசியல் அனுபவமோ முன்னேற்பாடுகளோ இல்லாத ஜானகியை ஆதரிக்க ஒரு அ.தி.மு.க வெறியரான  திருநாவுக்கரசரால் முடியவில்லை. மேலும் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு அறிமுகப்படுத்திய ஜெயலலிதாவை ஆதரிக்கிறார். இன்று கூட, அதாவது திருநாவுக்கரசர் பேரை கேட்டாலே ஜெயலலிதா அலறும் இன்றைய சூழலில் கூட சொல்கிறார், "ஜெயலலிதாவிற்கு கூட்டம் சேர்க்கும் வலு இருக்கிறது. அது இப்பொழுது மட்டுமல்ல அவர் அரசியலுக்கு வந்த போதே இருந்தது." என்று பகிரங்கமாக ஒப்பு கொள்கிறார். இந்த மாதிரி எனக்கு தெரிந்த எந்த அரசியல் வாதியும் தனக்கு எதிர் களத்தில் உள்ளவர்களின் பிளஸ் விஷயங்களை ஒத்துக்கொள்வதில்லை. இதை திருநாவுக்கரசர் கலைஞருக்கு எதிரான களத்தில் இருந்த போது கூட பழுத்த அனுபவமும் பல பெரிய அரசியல் தலைவர்களுடன் அரசியல் நடத்திய அனுபவம் கொண்ட கலைஞர் எப்படி இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க ஒத்துக்கொண்டார் என்று கேட்டிருக்கிறார். அவர் பேட்டியில் சொன்னமாதிரி அந்த காலகட்டத்தில் ஒரு அதிமுக காரன் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கலந்து கொண்டார் என்றால் அது திருநாவுக்கரசர் கல்யாணமாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு எதிர் வரிசையில் இருப்பவர் கூடவும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்துக்கொள்வதுடன் அவர்களை தகுந்த இடத்தில் பாராட்ட தயங்குவதும் இல்லை. இதெல்லாம் அவரை சாதாரண அரசியல்வாதியாக பார்க்க அனுமதிக்க மறுக்கின்ற காரணங்கள்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் வந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுகிறது, அதிமுக இரண்டாக நின்ற போதிலும் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 26 இடங்கள் கிடைக்கிறது. இந்த வெற்றியில் பிரச்சாரத்தில் பெரும்பங்கு வகித்தது திருநாவுக்கரசர்தான்.  ஆனால் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் நடந்த ஒரு விரும்பத்தாகத  (!?) ஒரு செயலுக்கு பிறகு யாரை அதிமுகவின் சட்டசபை தலைவராக யாரை போடுவது என்ற சூழலில் திருநாவுக்கரசருக்குத்தான் வாய்ப்பு என அனைவரும் நினைத்திருக்கும் போது அதை வலுகட்டாயமாக மறுத்து அவரை விட அரசியல் அனுபவம் குறைந்த ஒருவருக்கு பதவி கொடுக்கப் படுகிறது. இது வெளிப்படையாக ஜெயலலிதா திருநாவுக்கரசர் மேல் வைத்திருந்த சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதிமுகவிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்கிறார். அதுவும் ஜெயலலிதாவிற்கு கட்சியின் சின்னத்தையும் கொடியையும் வாங்கி கொடுத்து விட்டு.
அடுத்த தேர்தலில் (1990 என்று நினைக்கிறேன்) தன் கட்சியை தி.மு.கவுடன் கூட்டணி வைக்க செய்து போட்டியிடுகிறார், ராஜீவ் காந்தி கொலையானதால் தி.மு.க ஒரே ஒரு இடம் அதுவும் அந்த கட்சியில் தலைவர் கருணாநிதி மட்டும் வெற்றி பெறுகிறார். ஆனால் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று திருநாவுக்கரசரும்,கே.கே.எஸ்.ஆரும். ஆனான பட்ட திமுகவிற்கு ஒரு இடம் ஆனால் அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட , அதுவம் புது சின்னத்தில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவிற்கு இரண்டு இடம். திருநாவுக்கரசரின் அடுத்தகட்ட அரசியல் வாழ்கையை துவக்க விடாமல் செய்ய எண்ணிய ஜெயலலிதா, கே.கே.எஸ் ஆரை அ.தி.மு.க வில் இணைத்து திருநாவுக்கரசரை தனியாளாக்குகிறார். அடுத்த தேர்தல் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம், ஆட்சியில் குளறுபடி என தடுமாறிய போது, திருநாவுக்கரசருக்கு அழைப்பு போகிறது. இந்த முறையாவது வெற்றி கூட்டணியில் சேர்ந்து விடலாம் என்று பயணிக்க ஆரம்பித்த திருநாவுக்கரசருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், ஜெயலலிதாவே தோற்ற போதும், கட்சி மாறி என்று பார்க்கப்பட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெறுகிறார். இந்த முறை வேறு வழியே இல்லை திருநாவுக்கரசர் அதிமுக சட்டசபை தலைவராகிறார். ஆனால் இந்த முறை கருணாநிதி கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவை எதிரணியில் இருந்து தாக்கி பேசிய திருநாவுக்கரசரின் வார்த்தைகளை பிரயோகித்து அவரை கட்சியில் இருந்து துரத்த கோடு போடுகிறார். அதை ரோடாக்குகிறார் ஜெயலலிதா. மீண்டும் தனி கட்சி ஆரம்பிக்கிறார். இந்த முறை நடந்த துரத்தலை திருநாவுக்கரசர் இப்பொழுது இப்படி நினைவு கூறுகிறார் ..."நானே பல முறை ஜெயலலிதாவிடம் கூறி இருக்கிறேன். நீங்கள் தான் முதலில் உங்களுக்கு அடுத்து யார் வருவார்கள் என்பதில் வேண்டுமானால் சிறு சிறு உரசல்கள் இருக்காலாமே தவிர. உங்களை தலைவி பொறுப்பிலிருந்து தள்ளி விட்டுவிட்டு நான் அந்த அடத்தை அடைய முயற்சி செய்யவே இல்லை. அது போக ஒரு தலைவி என்பவருக்கு தன்னை பற்றிய ஒரு நம்பிக்கை மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் இதெல்லாம் அவசியம் தேவை ஆனால் ஜெயலலிதாவிற்கு அது இன்றைய தேதி வரை இல்லாமல் இருப்பது தொண்டர்களின்  துரதிஷ்ட்டம் தான்.இருந்தும் அவர் தலைவியாகவே நீடிப்பது அவரது அதிர்ஷ்டம்."  இந்த
 கால கட்டத்தில் கருணாநிதி பகிரங்கமாக திருநாவுக்கரசருக்கு தி.மு.கவில் சேர அழைப்பு விடுக்கிறார் சட்ட சபையிலேயே, ஆனால் திருநாவுக்கரசர் அதை ஏற்கவில்லை. மற்ற கட்சிமாறிகள் மாதிரி இருந்திருந்தால் நிச்சயம் அதை ஏற்று அப்பவே போய் இருப்பார். அடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு (இப்போ புதுக்கோட்டை ஒரு மக்களவை தொகுதி அல்ல) மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வந்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு போது வேட்பாளரை நிப்பாட்டலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நினைத்து திருநாவுக்கரசர் பெயரை முன்மொழிகின்றன கருணாநிதிக்கோ, மாறனுக்கோ அதில் துளியும் விருப்பம் இல்லை காரணம் திருநாவுக்கரசர் கட்சிக்கு கூப்பிட்டும் வரலையே அப்புறம் விடுவாங்களா..? இது சம்மந்தமாக அப்பொழுது நடைபெற்ற ஒரு நிகழ்வை திருநாவுக்கரசர் இப்படி நினைவு கூறுகிறார், முரசொலி மாறன் இது பற்றி குறிப்பிடும் போது "நாங்கள் இரண்டாவது இடம் வந்தாலும் பராவாயில்லை. உங்களை ஆதரிக்க முடியாது." அப்படின்னு சொல்லியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் திருநாவுக்கரசர் நின்ற பொழுது தி.மு.க தனது பங்குக்கு அவரது ஓட்டுக்களை பிரித்து, அதாவது முரசொலி மாறன் சொன்ன மாதிரி, அதிமுக வெற்றி பெற வழிவகுத்து கொடுத்தார்கள். திமுக, பாஜக இவற்றுடன் எம்.ஜி.ஆர் அண்ணா திமுகவும் கூட்டணி வைத்து போட்டியிட்ட மக்களவை தேர்தலில் வென்று டெல்லி சென்ற பொழுது திருநாவுக்கரசருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்றே பத்திரிக்கைகள் எழுதின கருணாநிதி-மாறன் இந்த முறையும் சாதுர்யமாக விளையாடி அனைத்து மந்திரி பதவிகளையும் தங்களது கட்சிக்கே பெற்றுக்கொண்டதுடன், திருநாவுக்கரசர் மாதிரியே ஒரு ஆளாக ஜெயித்து சென்ற வாழப்பாடி ராமமூர்த்திக்கு வாங்கி கொடுத்து திருநாவுக்கரசரை இந்த முறையும் கை கழுவி னார்கள். இது சம்மந்தமாக வாஜ்பாயுடன் பேசிய பொழுதுதான் அவர் பேசாமல் நீங்கள் எங்க கட்சிக்கே வந்துடுங்க அப்படின்னு சொல்லிருக்கிறார். அதை நம்பி அந்த கட்சிக்கு போனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக வுடன் கூட்டணி கண்டது பாஜக. இப்போ ஜெயலலிதா முறை "யாருக்கு வேணுமினாலும் சீட் கொடுங்க ஆனா திருநாவுக்கரசருக்கு மட்டும் கொடுக்காதீங்க" அப்படின்னு சொல்லி தேர்தலை சந்தித்து ஒரு சீட் கூட வாங்காமல் தோற்று ஒரு புதிய சரித்திரத்தை எழுதியது அதிமுக - பாஜக கூட்டணி.
இப்படி அங்க போனால் அவன் உதைப்பான் இங்க வந்தால் இவன் ஒதைப்பான் அப்படின்னு தான் திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்க்கை கருணாநிதி - ஜெயலலிதா கூட்டணியால் பந்தாடப்பட்டது.   வேறு வேறு சின்னங்களில் போட்டி, தான் நிற்கவைத்த ஆளை கூட மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சியின் செயல்பாடுகளால் இவரின் வெற்றியை பாதிப்பு தடுக்க முடியவில்லை, இப்படியாக ஒரு தொகுதியை தன் கைவசம் கொள்ள தெரிந்தவரை ஒரு நல்ல தலைவராக வளரவிடாமல் செய்த பெருமை திமுக அதிமுக பாஜக என அனைவருக்குமே சேரும். இந்த முறை காங்கிரஸ் என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்.  திருநாவுக்கரசரின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது,  கமல் குணாவில் ஒரு வசனம் சொல்வார் "எங்க அப்பா மட்டும் எங்க அம்மாவை விட்டுட்டு ஓடாமல் இருந்திருந்தால் எங்க அம்மா இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டாங்க.." அப்படின்னு. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
(குமுதம்.காம் இணையதளத்தில் வந்துள்ள திருநாவுக்கரசரின்  பேட்டியை பாருங்கள்)


Read more...

சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தனை


இந்த தலைமுறையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவரும் எனக்கு பிடித்தவருமான இயக்குனர் ஜனநாதன் அவர்களின் பேட்டியை இணையதளம் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. இதில் அவர் சொன்னார் "என்னை சினிமாவை நோக்கி நகர் செய்தது மார்க்சிய சிந்தனைகளே". சந்தேகமே இல்லாமல் என்னை கவர்ந்த படங்களில் "அன்பே சிவம்" முதலிடத்தில் இருக்கும். இப்படி என் எண்ணங்களில் சிவப்பு சாயம் பூசப்பட்டது நான் வேலைக்கு வந்த பிறகு தான். அதற்கு முன்பு அம்மாவும்,அப்பாவும் ஒருசராசரி அரசாங்க ஊழியர்கள் எனவே
அவ்வப்பொழுது என்னால் தொழிலாளர் உரிமை,கோரிக்கை என சிலவற்றை காதால் கேட்டிருக்கிறேன். அவற்றை உணர எனக்கு பல ஆண்டுகள் ஆனது. என்ன இருந்தாலும் நாமலே முன்னின்று குத்தை வாங்கும் போதுதானே அதன் வலி தெரிகிறது. சமீபத்தில் தான் 2007 ல் வெளிவந்த "கற்றது தமிழ்" படத்தின் மதன்ஸ் திரை பார்வை என்ற நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. அதில் அந்த படத்தின் இயக்குனர் ராம்  சொல்வார்,"மென் பொருள் துறையில் உள்ளவர்களை பார்த்தால்
பாவமாகத்தான் இருக்கிறது. ஏன்னா அவர்களின்  வாழ்கை முறை, பத்து பேர்களை கணக்கில் காண்பித்துவிட்டு மூன்று பேர்களை மட்டுமே வைத்து தொழில் நடத்துவார்கள், நிறுவனத்தின் முதலாளி என்னவோ பத்து பேரின் சம்பளத்தையும் பெற்று கொள்வார் ஆனால் மூன்று பேர்கள் பத்து பேர்களின் வேலையை செய்ய நேரிடுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பணி சுமை. இது மட்டுமின்றி இவர்களுக்கு வேலையில் நிலவும் ஒரு நிலையாமை இதனால் ஏற்படும் ஒரு வித மன இறுக்கம். இது போக இவர்கள் நிறுவனத்தில்  யாரையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டால் இவர்கள் வேறு எங்கு வேலைக்கு போனாலும் அங்கு முன்பு வேலை செய்த நிறுவனத்திலிருந்து சரியானபடி இவர்களை பற்றி அறிக்கை தர மாட்டார்கள்.மற்றபடி எனக்கு மென் பொருள்  துறையில் வேலை செய்பவர்கள் எந்த வித காழ்புணர்ச்சியும் கிடையாது. " என்றெல்லாம் சொன்னார்.
நானும் இந்த துறையில் கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாக வேலை செய்பவன் என்ற முறையில் ஒன்றை சொல்ல முடியும். இயக்குனர் ராம் சொன்னதில் 80% உண்மை இருக்கிறது. இந்த துறை உலக மயமாக்கலின் முகமாவே பார்க்கப்படுகிறது. ஆனால் நான் இதை முதலாளித்துவ சித்தாந்தங்களின் முகமாவே பார்க்கிறேன். இன்னும் இந்த துறையில் தொழிற் சங்கங்கள் நுழைய முடியாமல் இருப்பதே இதற்கான சான்று. காரணம் என்னன்னு பார்த்தால் வேறு ஒண்ணுமில்லை இந்த துறையில் பெரும்பாலான வேலைகளை தருவது அமெரிக்கா அது பின்பற்றுவது  முதலாளித்துவம். இங்கே இருந்தாலும்  என்னால் முதலாளித்துவ சித்தாந்தங்களை ஏற்றுகொள்ள முடிவதில்லை. சரி அப்ப உனக்கு கம்யூனிசம் தான் பிடிக்கும், அப்படின்னு முடிவு பண்ணிடாதிங்க. மக்களாட்சியை விட சிறந்த ஆட்சி முறை இந்த உலகில் இல்லைன்னு மிக தீவிரமாக நம்பும் சராசரி ஆளு தான்.
பள்ளி கூடம் படிக்கிற காலத்துல எப்படா இந்த பரீட்சை எல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கிறதுன்னு தோணும். வேலைக்கு போயிட்டா நிம்மதியா இருக்கலாம் அப்படின்னு நினைக்க தோணும். ஆனா வேலைக்கு வந்த பிறகு தான் தெரிந்தது பேசாம சின்ன பையனா பள்ளிக்கு போற காலத்திலேயே இருந்திருக்கலாமோன்னு. அது மாதிரி முதலாளித்துவத்தை ஆதாரமாக கொண்டு செயல்படும் அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்த பிறகு "சிவப்பு சிந்தனை" அதிகமாகியது. ஏன் எனது முதலாளிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அதற்காக அவரை அலட்சியமோ அவமானமோ செய்யனும்னு சொல்ல வரலை. அவரும் ஒரு மனிதர் தான். ஆனா இங்கே நடப்பது என்ன தெரியுமா..? முதலாளிகள் கூட இவ்வளவு மரியாதையை எதிர்பார்க்க மாட்டார். ஆனால் ஒரு குழு தலைவன் (TEAM LEADER) எதிர் பார்க்கும் மரியாதையை யாராலும் கொடுக்க முடியாது. அதாவது அவனை பார்த்து பயப்படனும் ஆனா அதை அவன் நேரடியா உணரக்கூடாது. என்ன அவன் ஒரு வேலை இவன் நம்மளை காக்கா புடிக்கிரான்னு நினைச்சுற கூடாது.  நாம நினைக்கிற விஷயங்களை அவனிடம் சுதந்திரமா சொல்ல கூட முடியாது. அவன் சொல்றதை கேட்டு அதை வரி மாறாமல் செயல் படுத்தனும், சுருக்கமா சொல்லனும்னா ஒரு ராணுவ வீரனை போல.  வேலைபளு அல்லது மனஅழுத்தம் ஏன் இந்த துறையில் இருப்பவர்களுக்கு  வருதுன்னா இந்த மாதிரியான மேல் அதிகாரிகளின் மிரட்டலினால்தான். அவனை கேட்டால் அவனுக்கு மேல் உள்ள அதிகாரியை சொல்லுவான் அவன் அவனுக்கு மேல் உள்ளவன் இப்படியே போயி அது அந்த நிறுவனத்தின் முதலாளியில் முடியும். அர்ஜுன் "முதல்வன்" படத்துல சொல்ற மாதிரி "Hey everybody man"   என்பது போலதான் சொல்ல தோணும். இங்கே என்ன கடைசியா ஒரு முதலாளி அல்லது முதலாளிகள் குழு சந்தோசாமா இருக்கணும்.  கீழே இருக்குறவன் எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை. இன்னொரு விஷயம் தெரியுமா எவ்வளவு வேலை செஞ்சாலும் திருப்தியடையாத மாதிரியே தன்னை காமிச்சுகிரவந்தான் நல்ல தலைவன் அப்படின்னு சில வெறி பிடிச்ச தலைவர்கள் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். இதை எதிர்த்து கேட்டால் என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன். சரி வேற தொழிலை பாருன்னா.. நான் அதுக்குதானே படிச்சிருக்கேன், அந்த வேலையைதானே பார்க்க முடியும்...? கீழே வேலை செய்யும் தொழிலாளியும் தன்னை போலவே ஒரு மனித பிறவிதானே அப்படின்னு எண்ணி பார்க்க சொல்லக்கூடாது இதை சொன்னா உனக்கு ஏன் இந்த சிவப்பு (கம்யூனிச) சிந்தனைன்னு என் சக ஊழியர்களே சொல்ல கேட்டிருக்கிறேன். அப்ப யோசிச்சதுதான் இந்த கட்டுரை பிறக்க காரணம். இது ஒரு வகைல தவறு என்பது போல தோன்றலாம். எனக்கு தெரியல. ஆனா இப்போதைக்கு, இந்தநொடிக்கு நான் "சிவப்பு சிந்தனை" கொண்டவனகா த்தான் சிலருக்கு தோன்றுகிறேன்.  அதுக்காக நம்ம ஊர்ல இருக்குற கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கிற ஆளு நானில்லை. "அன்பே சிவம்" படத்தில் கமல் சொல்வதைபோல கம்யூனிசமும் ஒரு வகை உணர்வுதான். அதை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.
எல்லாருக்கும்
 எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை விட எல்லாருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அவசியம். இதில் நிறமோ,இனமோ மொழியோ, ஏனைய பிரிவினைகளோ காரணமாக இருத்தல் கூடாது. இதை நிறைய வகைகளில் ஒத்து போவது சிவப்பு சிந்தனைகளே.


Read more...

பிடிச்ச பத்து பிடிக்காத பத்து (தொடர் இடுகை)

இத்தொடரை எழுத அழைத்த பிருந்தாவனம் கோபிக்கு நன்றிகள் பல !!

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.எனக்கு எல்லாத் துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைப் பிடிக்கும்/பிடிக்காது என்பதால் ஒன்றோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோரையும் குறிப்பிட்டுள்ளேன்.கவிஞர்
பிடித்தவர் – கலைஞர், நா.முத்துக்குமார், வைரமுத்து (கடவுள் பாதி)
 பிடிக்காதவர்- வைரமுத்து (மிருகம் பாதி)

மலர்கள்
 பிடித்தது - ரோஜா,மல்லிகை, தாமரை
பிடிக்காதது- தாழம்பூ

 இயக்குனர்
பிடித்தவர்- மகேந்திரன்,  அமீர்,பாலா, மணி (பிடிச்ச பாதி)
 பிடிக்காதவர்- ஷங்கர், பேரரசு, ரத்னம் (பிடிக்காத பாதி)

அரசியல்வாதி
பிடித்தவர்- கலைஞர் (வேற வழி இல்லை)
பிடிக்காதவர்- ஜெயலலிதா, ராமதாஸ்

விளையாட்டு
பிடித்தது - கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்தாட்டம்
பிடிக்காதது - அமெரிக்கன் புட்பால், பேஸ் பால்


நடிகை
பிடித்தவர் - வேண்டாம் வலிக்கும்
பிடிக்காதவர் -  அழுதுருவேன்

நடிகர்
பிடித்தவர்- கமல், ரஜினி
பிடிக்காதவர்- கமல், ரஜினியை தவிர மீதம் உள்ள முன்னணி(!?) நடிகர்கள் அனைவரும்.

பேச்சாளர்
பிடித்தவர்-  சாலமன் பாப்பையா
பிடிக்காதவர் - சு  .கி. சிவம்

எழுத்தாளர்
பிடித்தவர்- ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன்,சுஜாதா,
பிடிக்காதவர்- ஞாநி

இசையமைப்பாளர்
பிடித்தவர் -  இளையராஜா,யுவன்,ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்- ஹாரிஸ் ஜெயராஜ்

Nallor-vattam


Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- பா (ஹிந்தி)இந்த படத்தின் டிரைலேர் பார்த்தேன். ஆஹா அற்புதம் ஒரு ரசிகனாக இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்று இந்த படத்தின் அவுட்லைனை படித்தவுடனேயே  நினைத்தேன், அதாவது அபிஷேக்பச்சனின் மகனாக அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று கேள்வி பட்டவுடனேயே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதெல்லாம் போக, இளையராஜாவின் இசை இந்த டிரைலரை பாருங்க (ஆடியோ உடன்) சும்மா பின்னி இருக்கிறார் ராஜா. இந்த இசை நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான் (அது ஒரு கனா காலம் பாடல்) . ரொம்ப நாளா நம்ம மக்கள் ஒரு விஷயம் சொல்லுவாங்க (ராஜா இசையை புரிந்தவர்கள் அல்ல) தமிழர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் ராஜா அப்படின்னு, ராஜாவின் பாடலை ஹிந்தி பேசும் மக்களும் கேட்டு ரசிக்கலாம் என்ன சரியான முறையில் அது அங்கே கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால் இதை ஒரு கடமையாகவே எடுத்துக்கொண்டு செயல்படும் பால்கி (இவர் தான் இந்த படத்தின் இயக்குனர்), அவர்கள் "ராஜாவின் இசையை இந்தியாவின் ஒரு பகுதிதான் (தெற்கு பகுதி) கேட்டிருக்கிறது இன்னொரு பகுதியும் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஏற்கனவே போட்ட பல பாடல்களின் மெட்டுகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். இவருடையை முதல் படமான சீனிகம் (CHEENIKUM) பாடல்கள் மிகப் பெரிய ஹிட் என்பதை ஹிந்தி நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையும் அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இந்த படத்தில் ராஜாவின் "சங்கத்தில் பாடாத.." மெட்டு  ஹிந்தியில் பாட போகிறது. இந்த படத்தின் டிரைலேர் பாருங்க அப்புறம் சொல்லுங்க ...


Read more...

நட்பு
வாழ்க்கை நாணயத்தின் பூ பகுதி
சாதி, மதம்,பேதம்  மறுத்த ஒரு பிரிவு
வானவில் தொலைத்த வண்ணம்
இதழ்,முத்தம் இவற்றைவிட நெருக்கமானது
சோக மேகங்கள் சூழும் போது இன்ப மழை தூவும் இனிய தட்ப வெப்பம்
உறவுப் பூக்களில் உதிரம் உதிர்த்த உதிரா  பூ


Read more...

உன்னைப்போல் ஒருவன் --- ஒரு பார்வைஒரு வழியா அந்த DVD  கடைக்காரர்  உன்னைப்போல் ஒருவன் DVD ஐ இந்த வாரம்தான் கொடுத்தார்.பொதுவா கமல் படங்களை நான் திரை அரங்கில்தான் பார்ப்பது ஆனால் இந்த முறை அப்படி செய்ய முடியவில்லை. (காரணம் இன்னொரு தனி பதிவில்)  நான் "THEWEDNESDAY" படத்தை கமல் எடுக்கப்போகிறார் என்பதைஅறியும் முன்னரே பார்த்தது.
இந்த படத்தை பற்றி அடிச்சு துவைச்சு நார் நாரா கிழிச்சு வலைப்பதிவில் தொங்க விட்டாச்சு, இனிமே நான் இதுல புதுசா சொல்ல ஏதுமில்லை போல தான் தோன்றுகிறது. ஆனால் அந்த கிழிசலை எல்லாம் கொஞ்சம் சேர்த்துவைத்து தைக்கலாம்னு நினைக்கிறேன்.
ஆனா அதுக்கு முன்னாடி கை வலிக்க குலுக்கலும், வாய் வலிக்க பாராட்டுகளும் மோகன் லாலுக்கு. கமலை சர்வசாதாரணமாக ஓரம் கட்டியிருக்கிறார் இந்த நடிப்பு புலி.
கிழிசல் (குற்றச்சாட்டு) --1 : "THE WEDNESDAY" மாதிரி இந்த படம் இல்லை.
ஒட்டு (நம்ம பதில்) -- 1: ஆமாம் இல்லை தான் ஏன்னா அந்த படத்தில் நடிச்சவங்க இந்த படத்தில் நடிக்கலை(எப்படி). பொதுவா நம்ம ஊர்ல இந்த படத்தை நான் ENGLISH லையே பார்த்துட்டேன் அது மாதிரி இல்லன்னு நிறையப்பேர் நிறைய தடவை சொல்லி கேட்டிருக்கிறேன். பாதிப்பு இல்லாத படைப்பு எதுதாங்க..? எல்லாமே இந்த உலகத்துல அப்படி தோன்றியது தான். நாம உட்பட. இங்கே எப்படி செய்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். நம்ம ஊர்ல ஒரு பாலத்தை இங்க நியூயார்க்-ல உள்ள ஒரு பாலத்தோட ஒப்பீட்டு சொல்லலாமா..? இருந்தாலும் நம்ம ஊருக்கு அது தனியா நன்மை சேர்க்குதுதானே? கமல் சொல்ற மாதிரி சொல்லனும்னா "வால்மீகி - ராமாயணம், கம்பர்-ராமாயணம் எது சிறந்தது..?" ரெண்டுமே நல்லது  இல்லைன்னு சொன்னா அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா அவன் எடுத்தா நல்லா இருக்கும் நாம எடுத்தா இப்படித்தான், அப்படின்னு நம்மை நாமே குறை பட்டுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அதுவும் நல்லா இருந்துச்சு இதுவும் நல்லா இருந்துச்சு.
கிழிசல் -- 2:  கமல் ஒரு நாத்திகவாதி அதுனால தான் வேணுமின்னே ஒரு ஹிந்து தீவிரவாதிய காட்டியிருக்கிறார். ஒரிஜினல் அது மாதிரி காட்டவில்லை.
ஒட்டு -- 2: ஹிந்து தீவிரவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து வருவதை சுட்டி காட்டுவதாக ஏன் அதை எடுத்துக்கொள்ளகூடாது. இப்ப உள்ள கருத்து சுதந்திர உலகில் காந்தியை,பாரதியை எல்லாம்  கூட மதவாதியா பார்க்கும் கொடுமை நடக்கும் போது இந்த மாதிரி குற்றச்சாட்டை கமல் பெருசா எடுத்துக்க வேணாமின்னு நினைக்கிறேன். இது கருத்து சுதந்திரத்தின்(!?) ஒரு பகுதி.
கிழிசல் -- 3: கமல் ஒரு ஹிந்து வெறியர், அதாவது மனசளவில், அதனாலத்தான் முஸ்லீம்  மட்டும் தீவிரவாதம் செய்வது போல் காட்டியுள்ளார்.
ஒட்டு -- 3: அப்ப முன்னாடி சொன்ன கிழிசல் பொய்யா..? சரிங்க கமலை விடுங்க ஒரிஜினல் "THE WEDNESDAY" படத்துல அப்படித்தானே காண்பிச்சாங்க அதுல நஸ்ரூதின்ஷா என்ற ஒரு முஸ்லீம் தானே நடித்திருந்தார்...? ஏன் அந்த படத்தை குறை சொல்லல..? சரிங்க அவ்வளவு ஏன் ஒரு முஸ்லீம் போலீஸ் ஆபிசர் தானே தீவிரவாதிகளை மிக சரியாக கையாளுவதை போல காண்பிக்கிறார்..? விஜயகாந்த் படத்துல கூடத்தான் காண்பிச்சாங்க இது மாதிரி அப்பவெல்லாம் இந்த மாதிரியான விமர்சனம் வரலையே..? வடிவேலு சொல்ற மாதிரி  ஒரு பத்து பேரு மூத்தற சந்துக்குள்ள வைத்து அடி அடின்னு அடிச்சுட்டு இன்னொரு வண்டில ஏத்தி அங்க உள்ள முட்டு சந்துல வச்சு அடி அடின்னு அடிச்சுட்டு, இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் நல்லவன்டா பேசாம விட்டுருவோம் அப்படின்னு கமலை விட்டாதான் உண்டு போல. இதுக்கு மேல இதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
கிழிசல் -- 3: ஒரு பொண்ணு சிகரட் குடிக்கிற மாதிரி காண்பிக்கிறது எல்லாம் ஓவர்.
ஒட்டு -- 3: ஏன் சென்னைல சாப்ட்வேர் ல, மல்டி நேஷனல் பேங்க் ல வேலை செய்யுற இடத்துல உள்ள புகை பிடிக்கும் இடத்தை போயி பார்த்ததில்லையா..? யாரை காட்டி இருக்கிறார் ஒரு தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபர் பெண்ணை தானே அப்படி காண்பிக்கிறார். கிராமத்தில் உள்ள குப்பம்மாவும்,சுப்பம்மாவும் புகை பிடிக்கிற மாதிரியா காண்பித்துள்ளார்..? உங்களுக்கெல்லாம் ஒரு புள்ளிவிவரம் தெரியுமா உலகில் அதிகம் புகை பிடிக்கும் பெண்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இருப்பது மூன்றாமிடத்தில். இதுல எது ஓவர்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

நிறைகள்: குத்து பாட்டு இல்லாமை, ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லாமை, காட்சி அமைப்புகளில் நிதானம் தெரிந்தாலும், காட்சி ஓட்டத்தில் அது தெரியாமல் இருத்தல், முக்கியமா படத்துல காமெராவும்,இசையும் தேவையான அளவே தங்களின் பங்களிப்பை செய்திருப்பதே பெரிய பிளஸ்.

குறைகள்: வேக வேகமாக அதுவும் ஆங்கிலத்தில் பேசப்படும் வசனங்கள் நமக்கு ஒத்து வருமா..? "நம்ம பய மெதுவாத்தான் வருவான்.." அப்படின்னு வசனம் எழுதுனவர் படத்துலையே இப்படியான்னுதான் கேட்க தோணுது. "ஒன்ன மாதிரியான ஆளுகிட்ட எல்லாம் முதலமைச்சர் பேசுவாரா..?" அப்படின்னு மோகன்லால் கேட்டதும் "என்கிட்டே ஒட்டு கேட்டு வர்றப்ப அப்படி எதுவும் சொல்லலியேன்னு.." கமல் சொல்வதும், நல்லாத்தான் இருக்குது ஆனா எல்லா படங்களுக்கும் சென்சார் அனுமதிக்குமா..? இல்லை தற்போதைய அரசுதான் அனுமதிக்குமா..? கூந்தல் உள்ளவ முடிஞ்சுக்குறா அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.


Read more...

காட்சிகளில் கவிதை -- ஒரு பாடல் பார்வை

 பாலுமகேந்திரா "காமிரா கவிஞர்" என்று சொல்லப்படுபவர். இந்த காட்சியை பாருங்கள் அந்த பாராட்டுதலுக்கு அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்று தெரிந்துகொள்வீர்கள் . இந்த பாடலில் வைரமுத்துவின் சொல்லாட்சியும் அற்புதம். பொதுவாக இந்த மாதிரியான தத்துவ பாடலில் "எல்லாமே பொய்.. ஏன் வாழவேண்டும்" என்றெல்லாம் தொனிக்க பாடல் எழுதுவார்கள். ஆனால் இந்த பாடலில் இறுதியில் "பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.." என்று வாழ்வதற்கு அச்சாரமாயுள்ள உழைப்பை பேணும் படி சொல்வது மிகவும் அருமை. இந்த பாடலை காட்சி படுத்திய விதத்தை பாருங்கள் எந்தெந்த வரிகளுக்கு எந்த மாதிரியான காட்சியமைப்பு என்பதோடு அந்த லைட்டிங் அமைப்புகளும் மனதை இந்த பாடலோடு ஒன்றச்செய்து விடுகின்றன. இன்னொருமுறை பாருங்க வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.


Read more...

அட ஆமாம் இல்லை


"அட இதுதான் இதுல மேட்டரா..?" "அட இது எப்படி நமக்கு தோணாமல் போயிற்று..?" "அட இதுல இப்படி ஒரு ஆச்சர்யம் இருக்கா..?"  இப்படி நம்மை கேட்க வைத்த
 சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கலாம். நம்மில் ஏற்படும் பெரிய பெரிய மாற்றங்களுக்கு, நல்ல சிந்தனைகளுக்கு  அன்றாடம் நாம் சந்திக்கும் சாதரண  மனிதர்களின் ஒரு சொல் கூட காரணமாக இருக்கலாம்.      சில விடயங்கள் நாம்  எதிர்பார்க்காத அல்லது மிகவும் பரிச்சயமில்லாத  ஒருவர் மூலமாக நம்மை வந்தடையும் ஆனால் அதைத்தான் நாம் வாழ்கை முழுமைக்கும் பயன்படுத்துவோம். சில பேர் சொல்வதை போல "சத்தியசோதனை" படித்தேன் சத்தியம் தவறாமல் நடக்க கற்றுக்கொண்டேன் அப்படின்னு என்னால சொல்ல முடியல. ஏன் நீங்க கூட அப்படித்தான்னு நான் நினைக்கிறேன். ஒரு சில விடயங்களை ஒரு சிலர் சொல்வதால் மட்டுமே அது நமக்கு பிடித்துபோகிறது. ஆனால் பெரும்பாலான விடயங்கள் நமக்கு பிடித்து போவதற்கு அதை சொல்லும் நபரை விட சொல்லப்படும் காலமும் நேரமும் முக்கியம் அப்படின்னு நான் நினைக்கிறேன்.அது வரலாற்று  உண்மையாக இருந்தாலும் கூட.
ஒரு நண்பரை, நண்பரின் உறவினர் என்று கூட சொல்லலாம், அவர் பெயர் கோபி. அவருடன் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது காரில் ஒரு தத்துவ பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அவர் கேட்டார் "பெரும்பாலனவர்களுக்கு ஏன் தத்துவ பாட்டு பிடிக்குது தெரியுமா..?" அப்படின்னு "தெரியலையே" அவர் சொன்னார் "நம்மில் பெரும்பாலனவர்கள் நிச்சயம் தத்துவ பாடலில் அடிக்கடி வரும் தோல்வி,துரோகம்,ஏமாற்றம் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம் அதனால்தான் அது பிடிக்கிறது". என்றார். நான் அப்படியே ஒரு கணம் உறைந்தே போனேன். அட ஆமாம் இல்லை  என்று தோன்றியது. இதுல மிகப்பெரிய உண்மை இருக்குது. எந்த ஒரு சிறு நிகழ்வும் நம்மை பாதிக்கிறது என்றால் அது நம்மை கடந்து போனதாக இருக்கும் இல்லை நம்மை கடக்க கூடாது என நம் மனம் எண்ணியதாக இருக்கும். அதில் ஒளிந்திருப்பது ஒரு சுயபட்சாதாபமோ அல்லது சுயநலமோ தான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பாட்டு கேட்டு வருகிறேன், இது நமக்கு தோணலையே. அப்படின்னு அவர் சொன்னதும் தோணியது. என்னை விட வயதில் பத்து வயது சின்னவர்தான் என்றாலும் அவர் சொன்னதை நான் பல சந்தர்பங்களில் நினைப்பதுண்டு. அவரையும் தான்.
அமெரிக்க கனவில் மிதந்து கொண்டே அலுவலகம் போன நாட்களில் அங்கு கூட வேலை பார்க்கும் நண்பர் சேதுசரவணன் என்பவர் கேட்டார். "நாம எல்லாம் ஏன் அமெரிக்கா போயி அங்க வெள்ளைகாரனுக்கு உழைச்சு கொட்டுறதை பெருமையா நினைக்கிறோம்னா, அதுக்கு காரணம் நம்ம உடம்புல ஓடுற அடிமை ரத்தம்தான்" அப்படின்னு சொன்னார். இதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது அது இப்படி நீ அப்படி சொல்லலாம்னு சொன்னேன் சண்டை போட்டேன். ஆனா அமெரிக்கா வந்த பிறகும், அமெரிக்காவிலிருந்து இந்தியா போய் வரும்போதும், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அவர் சொன்னது உண்மைதான் என உணரவைத்தன. இங்கு நான் பார்க்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஒரு அமெரிக்கன் நண்பர் இருக்கிறார் என்று சொல்வதையே பெருமையாக கருதுகின்றனர்.  (இங்கு நான் அமெரிக்கன் என்று குறிப்பிடுவது அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்களை. ஆமாம் வெள்ளையர்கள் ஒன்றும் இந்த அமெரிக்க நிலத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல இங்கிருந்து செவ்விந்தியர்களை வெள்ளைக்காரன் பாணில சொல்றதுன்னா நேடிவ்  அமெரிக்கன்ஸ், அவுங்களை எல்லாம் துரத்திட்டு ஆக்கிரமிச்ச பகுதிதான் இது).  அதாவது வெள்ளைக்காரர்கள் மன ரீதியாக நம்மை மாற்றியமைத்ததுதான் இதற்கான காரணம். நம்ம பாட்டன், முப்பாட்டன் மட்டுமல்ல நமக்கும் அதே உணர்வு இருக்குன்னா அதன் வீரியம் புரிகிறது.  அட ஆமாம் இல்லை ன்னு நானும் அதை சந்திக்க நேர்ந்த பொழுதுதான் தோன்றியது.  "அப்ப நாம காலா காலத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து இந்த மண்ணுக்கு உரமாக வேண்டியது தானா..?" அப்படிங்குற ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை அவருக்கிட்ட கேட்டப்ப அவரு சொன்னது "நாம வெள்ளைகார வுங்கலால மட்டுமல்ல பல வேற்று தேசத்து நாட்டவர்களால் படையெடுக்கப்பட்டு ஆளப் பட்டிருக்கிறோம். எனவே அது அவ்வளவு சீக்கிரமா நம்ம உடம்புல(மனசுல) இருந்து போகாது, ஆனா நாம கொடுக்கிற நல்ல சூழலால நம்ம குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இந்த மாதிரியான அடிமை புத்தியிலிருந்து விடுபட நிறைய வாய்ப்பிருக்குது. இது எனக்கு எங்க சிதம்பரம் காலேஜ் பேராசிரியர் ஒருவர் சொன்னார்". இவ்வாறாக நண்பர் சொன்னதை நான் பலமுறை உணர்ந்ததோடு மட்டுமல்ல வெள்ளைக் காரர்களுக்கென்று கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும், அதாவது எதிரிலிருப்பவன் வெள்ளைக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம், குறைத்துக்கொண்டுள்ளேன். அப்ப நீ சுத்தமா அதை போக்கலையா அப்படின்னு கேட்டா நண்பர் சொன்னதுதான் "அவ்வளவு சீக்கிரம் இந்த அடிமை புத்தி போகுமா..?"
இது மட்டுமில்ல இன்னும் பல விடயங்கள்  நம்மை சும்மா அப்படி கடந்து போகிறவர் கூட சொல்லிவிட்டு போயிருக்கிறார், அவற்றை அப்பப்ப உங்ககிட்ட சொல்றேன்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP