அட ஆமாம் இல்லை


"அட இதுதான் இதுல மேட்டரா..?" "அட இது எப்படி நமக்கு தோணாமல் போயிற்று..?" "அட இதுல இப்படி ஒரு ஆச்சர்யம் இருக்கா..?"  இப்படி நம்மை கேட்க வைத்த
 சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கலாம். நம்மில் ஏற்படும் பெரிய பெரிய மாற்றங்களுக்கு, நல்ல சிந்தனைகளுக்கு  அன்றாடம் நாம் சந்திக்கும் சாதரண  மனிதர்களின் ஒரு சொல் கூட காரணமாக இருக்கலாம்.      சில விடயங்கள் நாம்  எதிர்பார்க்காத அல்லது மிகவும் பரிச்சயமில்லாத  ஒருவர் மூலமாக நம்மை வந்தடையும் ஆனால் அதைத்தான் நாம் வாழ்கை முழுமைக்கும் பயன்படுத்துவோம். சில பேர் சொல்வதை போல "சத்தியசோதனை" படித்தேன் சத்தியம் தவறாமல் நடக்க கற்றுக்கொண்டேன் அப்படின்னு என்னால சொல்ல முடியல. ஏன் நீங்க கூட அப்படித்தான்னு நான் நினைக்கிறேன். ஒரு சில விடயங்களை ஒரு சிலர் சொல்வதால் மட்டுமே அது நமக்கு பிடித்துபோகிறது. ஆனால் பெரும்பாலான விடயங்கள் நமக்கு பிடித்து போவதற்கு அதை சொல்லும் நபரை விட சொல்லப்படும் காலமும் நேரமும் முக்கியம் அப்படின்னு நான் நினைக்கிறேன்.அது வரலாற்று  உண்மையாக இருந்தாலும் கூட.
ஒரு நண்பரை, நண்பரின் உறவினர் என்று கூட சொல்லலாம், அவர் பெயர் கோபி. அவருடன் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது காரில் ஒரு தத்துவ பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அவர் கேட்டார் "பெரும்பாலனவர்களுக்கு ஏன் தத்துவ பாட்டு பிடிக்குது தெரியுமா..?" அப்படின்னு "தெரியலையே" அவர் சொன்னார் "நம்மில் பெரும்பாலனவர்கள் நிச்சயம் தத்துவ பாடலில் அடிக்கடி வரும் தோல்வி,துரோகம்,ஏமாற்றம் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம் அதனால்தான் அது பிடிக்கிறது". என்றார். நான் அப்படியே ஒரு கணம் உறைந்தே போனேன். அட ஆமாம் இல்லை  என்று தோன்றியது. இதுல மிகப்பெரிய உண்மை இருக்குது. எந்த ஒரு சிறு நிகழ்வும் நம்மை பாதிக்கிறது என்றால் அது நம்மை கடந்து போனதாக இருக்கும் இல்லை நம்மை கடக்க கூடாது என நம் மனம் எண்ணியதாக இருக்கும். அதில் ஒளிந்திருப்பது ஒரு சுயபட்சாதாபமோ அல்லது சுயநலமோ தான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பாட்டு கேட்டு வருகிறேன், இது நமக்கு தோணலையே. அப்படின்னு அவர் சொன்னதும் தோணியது. என்னை விட வயதில் பத்து வயது சின்னவர்தான் என்றாலும் அவர் சொன்னதை நான் பல சந்தர்பங்களில் நினைப்பதுண்டு. அவரையும் தான்.
அமெரிக்க கனவில் மிதந்து கொண்டே அலுவலகம் போன நாட்களில் அங்கு கூட வேலை பார்க்கும் நண்பர் சேதுசரவணன் என்பவர் கேட்டார். "நாம எல்லாம் ஏன் அமெரிக்கா போயி அங்க வெள்ளைகாரனுக்கு உழைச்சு கொட்டுறதை பெருமையா நினைக்கிறோம்னா, அதுக்கு காரணம் நம்ம உடம்புல ஓடுற அடிமை ரத்தம்தான்" அப்படின்னு சொன்னார். இதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது அது இப்படி நீ அப்படி சொல்லலாம்னு சொன்னேன் சண்டை போட்டேன். ஆனா அமெரிக்கா வந்த பிறகும், அமெரிக்காவிலிருந்து இந்தியா போய் வரும்போதும், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அவர் சொன்னது உண்மைதான் என உணரவைத்தன. இங்கு நான் பார்க்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஒரு அமெரிக்கன் நண்பர் இருக்கிறார் என்று சொல்வதையே பெருமையாக கருதுகின்றனர்.  (இங்கு நான் அமெரிக்கன் என்று குறிப்பிடுவது அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்களை. ஆமாம் வெள்ளையர்கள் ஒன்றும் இந்த அமெரிக்க நிலத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல இங்கிருந்து செவ்விந்தியர்களை வெள்ளைக்காரன் பாணில சொல்றதுன்னா நேடிவ்  அமெரிக்கன்ஸ், அவுங்களை எல்லாம் துரத்திட்டு ஆக்கிரமிச்ச பகுதிதான் இது).  அதாவது வெள்ளைக்காரர்கள் மன ரீதியாக நம்மை மாற்றியமைத்ததுதான் இதற்கான காரணம். நம்ம பாட்டன், முப்பாட்டன் மட்டுமல்ல நமக்கும் அதே உணர்வு இருக்குன்னா அதன் வீரியம் புரிகிறது.  அட ஆமாம் இல்லை ன்னு நானும் அதை சந்திக்க நேர்ந்த பொழுதுதான் தோன்றியது.  "அப்ப நாம காலா காலத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து இந்த மண்ணுக்கு உரமாக வேண்டியது தானா..?" அப்படிங்குற ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை அவருக்கிட்ட கேட்டப்ப அவரு சொன்னது "நாம வெள்ளைகார வுங்கலால மட்டுமல்ல பல வேற்று தேசத்து நாட்டவர்களால் படையெடுக்கப்பட்டு ஆளப் பட்டிருக்கிறோம். எனவே அது அவ்வளவு சீக்கிரமா நம்ம உடம்புல(மனசுல) இருந்து போகாது, ஆனா நாம கொடுக்கிற நல்ல சூழலால நம்ம குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இந்த மாதிரியான அடிமை புத்தியிலிருந்து விடுபட நிறைய வாய்ப்பிருக்குது. இது எனக்கு எங்க சிதம்பரம் காலேஜ் பேராசிரியர் ஒருவர் சொன்னார்". இவ்வாறாக நண்பர் சொன்னதை நான் பலமுறை உணர்ந்ததோடு மட்டுமல்ல வெள்ளைக் காரர்களுக்கென்று கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும், அதாவது எதிரிலிருப்பவன் வெள்ளைக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம், குறைத்துக்கொண்டுள்ளேன். அப்ப நீ சுத்தமா அதை போக்கலையா அப்படின்னு கேட்டா நண்பர் சொன்னதுதான் "அவ்வளவு சீக்கிரம் இந்த அடிமை புத்தி போகுமா..?"
இது மட்டுமில்ல இன்னும் பல விடயங்கள்  நம்மை சும்மா அப்படி கடந்து போகிறவர் கூட சொல்லிவிட்டு போயிருக்கிறார், அவற்றை அப்பப்ப உங்ககிட்ட சொல்றேன்.


1 comments:

Anonymous,  November 1, 2009 at 9:14 AM  

nalla irukkudhu...

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP