சமரச நாயகன் -- திருநாவுக்கரசர்



 நாம எப்படியாவது பணம் சம்பாரிச்சு பெரிய ஆளா ஆயிட மாட்டமா...? என்று வான் பார்க்கும் நம்மை போன்ற சராசரி ஆட்கள் நமது அன்றாட வாழ்க்கையில் செய்து கொள்ளும் சமரசங்களை எப்பவாது எண்ணிப்பார்ப்பதுண்டா..? சரி அதுக்கும் திருநாவுக்கரசுக்கும் என்ன சம்மந்தம்..? அப்படின்னு நீங்க கேட்கலாம். சமரசங்களுக்கும் திருநாவுக்கரசருக்கும் நிறையவே தொடர்புண்டு.
அவர் ஏன் சமரசம் செய்து கொண்டார் குறித்து இரு வேறு கருத்துக்கள் உண்டு. பதவிக்காக...?  ஒன்று, மற்றொன்று தொழிலை நடத்தனுமே அப்படின்னு. ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா வேற வழி இல்லையோன்னு.
எனக்கு பிடித்த அரசியல் வாதிகளில் திருநாவுக்கரசரும் ஒருவர். இல்லை முதன் முதலா ஒரு அரசியல்வாதியா நான் ரசித்தவரும் ஆதரித்தவரும் திருநாவுக்கரசர் தான். அப்போவெல்லாம் எங்க ஊரு பேரு பத்திரிக்கையில வந்துச்சுன்னா அது திருநாவுக்கரசர் சம்மந்தப் பட்ட செய்தியாகத்தான் இருக்கும். விவரம் அவ்வளவாக தெரியாத காலத்திலும் திருநாவுக்கரசர் எனக்கு ஹீரோவாக தெரிந்தார் ஓரளவு விவரம் தெரிந்த இந்த காலத்திலும் அவர்  ஹீரோவாகவே தெரிகிறார். காரணம் இன்றைய தேதி வரை அவர் ஒரு ஸ்திரமான  அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் அவரை ஒரு "கட்சி மாறி" என்றே பாலாராலும் பார்க்கும் படி செய்யும். ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் எடுத்த எவ்வளவு பெரிய முடிவுகளை, நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம் அது மாதிரி ஒரு அரசியல்வாதியாக நிறையவே சமரசங்களை பலரும் செய்வது இயற்கை தான். மற்றவர்களில் இருந்து திருநாவுக்கரசர் எப்படி வேறுபடுகிறார் என்றால் தனது தொகுதியான அறந்தாங்கியில் அவர் தான் இன்றும் வெற்றி பெறுகிறார், இல்லை அவர் சார்பாக நிற்பவர் வெற்றி பெறுகிறார். அது அந்த தொகுதி மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அபிமானத்தை தெளிவாக காண்பிக்கிறது. ஒரு நல்ல அரசியலவாதி அதைத்தானே மக்களிடமிருந்து பெற  வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த சின்னத்தில் நின்றாலும், எந்த கட்சியின் சார்பில் நின்றாலும் அவர் தானே வெற்றி பெறுகிறார். அதானால் தான் ஒரு சாதாரண மனிதனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செய்துகொள்ளும் சமரசங்களை திருநாவுக்கரசரின் அரசியல் சமரசங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
70-களில் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆரின் ஆட்சி முழுமைக்குமே தொடர்ந்து பதவி வகித்து வந்திருக்கிறார்.
 முதல் வெற்றியை அடைந்த உடனேயே துணை சபாநாயகராக ஆக்கப்பட்டவர். தொடர்ந்து வந்த தேர்தல் வெற்றிகளிலும் அவர் பல துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவு திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்வின் வளமான பகுதியின் மறைவாகவே பார்க்கப்படுகிறது இல்லை கடந்த கால வரலாறு சொல்கிறது. அதற்கு பிறகுதான் அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக பார்க்கும் அளவிற்கு மாற்றியது என்று எனக்கு தோன்றுகிறது. எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்த போதிலும் சரியான அரசியல் அனுபவமோ முன்னேற்பாடுகளோ இல்லாத ஜானகியை ஆதரிக்க ஒரு அ.தி.மு.க வெறியரான  திருநாவுக்கரசரால் முடியவில்லை. மேலும் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு அறிமுகப்படுத்திய ஜெயலலிதாவை ஆதரிக்கிறார். இன்று கூட, அதாவது திருநாவுக்கரசர் பேரை கேட்டாலே ஜெயலலிதா அலறும் இன்றைய சூழலில் கூட சொல்கிறார், "ஜெயலலிதாவிற்கு கூட்டம் சேர்க்கும் வலு இருக்கிறது. அது இப்பொழுது மட்டுமல்ல அவர் அரசியலுக்கு வந்த போதே இருந்தது." என்று பகிரங்கமாக ஒப்பு கொள்கிறார். இந்த மாதிரி எனக்கு தெரிந்த எந்த அரசியல் வாதியும் தனக்கு எதிர் களத்தில் உள்ளவர்களின் பிளஸ் விஷயங்களை ஒத்துக்கொள்வதில்லை. இதை திருநாவுக்கரசர் கலைஞருக்கு எதிரான களத்தில் இருந்த போது கூட பழுத்த அனுபவமும் பல பெரிய அரசியல் தலைவர்களுடன் அரசியல் நடத்திய அனுபவம் கொண்ட கலைஞர் எப்படி இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க ஒத்துக்கொண்டார் என்று கேட்டிருக்கிறார். அவர் பேட்டியில் சொன்னமாதிரி அந்த காலகட்டத்தில் ஒரு அதிமுக காரன் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கலந்து கொண்டார் என்றால் அது திருநாவுக்கரசர் கல்யாணமாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு எதிர் வரிசையில் இருப்பவர் கூடவும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்துக்கொள்வதுடன் அவர்களை தகுந்த இடத்தில் பாராட்ட தயங்குவதும் இல்லை. இதெல்லாம் அவரை சாதாரண அரசியல்வாதியாக பார்க்க அனுமதிக்க மறுக்கின்ற காரணங்கள்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் வந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுகிறது, அதிமுக இரண்டாக நின்ற போதிலும் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 26 இடங்கள் கிடைக்கிறது. இந்த வெற்றியில் பிரச்சாரத்தில் பெரும்பங்கு வகித்தது திருநாவுக்கரசர்தான்.  ஆனால் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் நடந்த ஒரு விரும்பத்தாகத  (!?) ஒரு செயலுக்கு பிறகு யாரை அதிமுகவின் சட்டசபை தலைவராக யாரை போடுவது என்ற சூழலில் திருநாவுக்கரசருக்குத்தான் வாய்ப்பு என அனைவரும் நினைத்திருக்கும் போது அதை வலுகட்டாயமாக மறுத்து அவரை விட அரசியல் அனுபவம் குறைந்த ஒருவருக்கு பதவி கொடுக்கப் படுகிறது. இது வெளிப்படையாக ஜெயலலிதா திருநாவுக்கரசர் மேல் வைத்திருந்த சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதிமுகவிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்கிறார். அதுவும் ஜெயலலிதாவிற்கு கட்சியின் சின்னத்தையும் கொடியையும் வாங்கி கொடுத்து விட்டு.
அடுத்த தேர்தலில் (1990 என்று நினைக்கிறேன்) தன் கட்சியை தி.மு.கவுடன் கூட்டணி வைக்க செய்து போட்டியிடுகிறார், ராஜீவ் காந்தி கொலையானதால் தி.மு.க ஒரே ஒரு இடம் அதுவும் அந்த கட்சியில் தலைவர் கருணாநிதி மட்டும் வெற்றி பெறுகிறார். ஆனால் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று திருநாவுக்கரசரும்,கே.கே.எஸ்.ஆரும். ஆனான பட்ட திமுகவிற்கு ஒரு இடம் ஆனால் அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட , அதுவம் புது சின்னத்தில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவிற்கு இரண்டு இடம். திருநாவுக்கரசரின் அடுத்தகட்ட அரசியல் வாழ்கையை துவக்க விடாமல் செய்ய எண்ணிய ஜெயலலிதா, கே.கே.எஸ் ஆரை அ.தி.மு.க வில் இணைத்து திருநாவுக்கரசரை தனியாளாக்குகிறார். அடுத்த தேர்தல் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம், ஆட்சியில் குளறுபடி என தடுமாறிய போது, திருநாவுக்கரசருக்கு அழைப்பு போகிறது. இந்த முறையாவது வெற்றி கூட்டணியில் சேர்ந்து விடலாம் என்று பயணிக்க ஆரம்பித்த திருநாவுக்கரசருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், ஜெயலலிதாவே தோற்ற போதும், கட்சி மாறி என்று பார்க்கப்பட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெறுகிறார். இந்த முறை வேறு வழியே இல்லை திருநாவுக்கரசர் அதிமுக சட்டசபை தலைவராகிறார். ஆனால் இந்த முறை கருணாநிதி கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவை எதிரணியில் இருந்து தாக்கி பேசிய திருநாவுக்கரசரின் வார்த்தைகளை பிரயோகித்து அவரை கட்சியில் இருந்து துரத்த கோடு போடுகிறார். அதை ரோடாக்குகிறார் ஜெயலலிதா. மீண்டும் தனி கட்சி ஆரம்பிக்கிறார். இந்த முறை நடந்த துரத்தலை திருநாவுக்கரசர் இப்பொழுது இப்படி நினைவு கூறுகிறார் ..."நானே பல முறை ஜெயலலிதாவிடம் கூறி இருக்கிறேன். நீங்கள் தான் முதலில் உங்களுக்கு அடுத்து யார் வருவார்கள் என்பதில் வேண்டுமானால் சிறு சிறு உரசல்கள் இருக்காலாமே தவிர. உங்களை தலைவி பொறுப்பிலிருந்து தள்ளி விட்டுவிட்டு நான் அந்த அடத்தை அடைய முயற்சி செய்யவே இல்லை. அது போக ஒரு தலைவி என்பவருக்கு தன்னை பற்றிய ஒரு நம்பிக்கை மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் இதெல்லாம் அவசியம் தேவை ஆனால் ஜெயலலிதாவிற்கு அது இன்றைய தேதி வரை இல்லாமல் இருப்பது தொண்டர்களின்  துரதிஷ்ட்டம் தான்.இருந்தும் அவர் தலைவியாகவே நீடிப்பது அவரது அதிர்ஷ்டம்."  இந்த
 கால கட்டத்தில் கருணாநிதி பகிரங்கமாக திருநாவுக்கரசருக்கு தி.மு.கவில் சேர அழைப்பு விடுக்கிறார் சட்ட சபையிலேயே, ஆனால் திருநாவுக்கரசர் அதை ஏற்கவில்லை. மற்ற கட்சிமாறிகள் மாதிரி இருந்திருந்தால் நிச்சயம் அதை ஏற்று அப்பவே போய் இருப்பார். அடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு (இப்போ புதுக்கோட்டை ஒரு மக்களவை தொகுதி அல்ல) மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வந்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு போது வேட்பாளரை நிப்பாட்டலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நினைத்து திருநாவுக்கரசர் பெயரை முன்மொழிகின்றன கருணாநிதிக்கோ, மாறனுக்கோ அதில் துளியும் விருப்பம் இல்லை காரணம் திருநாவுக்கரசர் கட்சிக்கு கூப்பிட்டும் வரலையே அப்புறம் விடுவாங்களா..? இது சம்மந்தமாக அப்பொழுது நடைபெற்ற ஒரு நிகழ்வை திருநாவுக்கரசர் இப்படி நினைவு கூறுகிறார், முரசொலி மாறன் இது பற்றி குறிப்பிடும் போது "நாங்கள் இரண்டாவது இடம் வந்தாலும் பராவாயில்லை. உங்களை ஆதரிக்க முடியாது." அப்படின்னு சொல்லியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் திருநாவுக்கரசர் நின்ற பொழுது தி.மு.க தனது பங்குக்கு அவரது ஓட்டுக்களை பிரித்து, அதாவது முரசொலி மாறன் சொன்ன மாதிரி, அதிமுக வெற்றி பெற வழிவகுத்து கொடுத்தார்கள். திமுக, பாஜக இவற்றுடன் எம்.ஜி.ஆர் அண்ணா திமுகவும் கூட்டணி வைத்து போட்டியிட்ட மக்களவை தேர்தலில் வென்று டெல்லி சென்ற பொழுது திருநாவுக்கரசருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்றே பத்திரிக்கைகள் எழுதின கருணாநிதி-மாறன் இந்த முறையும் சாதுர்யமாக விளையாடி அனைத்து மந்திரி பதவிகளையும் தங்களது கட்சிக்கே பெற்றுக்கொண்டதுடன், திருநாவுக்கரசர் மாதிரியே ஒரு ஆளாக ஜெயித்து சென்ற வாழப்பாடி ராமமூர்த்திக்கு வாங்கி கொடுத்து திருநாவுக்கரசரை இந்த முறையும் கை கழுவி னார்கள். இது சம்மந்தமாக வாஜ்பாயுடன் பேசிய பொழுதுதான் அவர் பேசாமல் நீங்கள் எங்க கட்சிக்கே வந்துடுங்க அப்படின்னு சொல்லிருக்கிறார். அதை நம்பி அந்த கட்சிக்கு போனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக வுடன் கூட்டணி கண்டது பாஜக. இப்போ ஜெயலலிதா முறை "யாருக்கு வேணுமினாலும் சீட் கொடுங்க ஆனா திருநாவுக்கரசருக்கு மட்டும் கொடுக்காதீங்க" அப்படின்னு சொல்லி தேர்தலை சந்தித்து ஒரு சீட் கூட வாங்காமல் தோற்று ஒரு புதிய சரித்திரத்தை எழுதியது அதிமுக - பாஜக கூட்டணி.
இப்படி அங்க போனால் அவன் உதைப்பான் இங்க வந்தால் இவன் ஒதைப்பான் அப்படின்னு தான் திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்க்கை கருணாநிதி - ஜெயலலிதா கூட்டணியால் பந்தாடப்பட்டது.   வேறு வேறு சின்னங்களில் போட்டி, தான் நிற்கவைத்த ஆளை கூட மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சியின் செயல்பாடுகளால் இவரின் வெற்றியை பாதிப்பு தடுக்க முடியவில்லை, இப்படியாக ஒரு தொகுதியை தன் கைவசம் கொள்ள தெரிந்தவரை ஒரு நல்ல தலைவராக வளரவிடாமல் செய்த பெருமை திமுக அதிமுக பாஜக என அனைவருக்குமே சேரும். இந்த முறை காங்கிரஸ் என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்.  திருநாவுக்கரசரின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது,  கமல் குணாவில் ஒரு வசனம் சொல்வார் "எங்க அப்பா மட்டும் எங்க அம்மாவை விட்டுட்டு ஓடாமல் இருந்திருந்தால் எங்க அம்மா இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டாங்க.." அப்படின்னு. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
(குமுதம்.காம் இணையதளத்தில் வந்துள்ள திருநாவுக்கரசரின்  பேட்டியை பாருங்கள்)


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP