நான் கடவுள் -- முதல் பார்வை
வெள்ளிக்கிழமை மாலையில் தான் நமக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு அதுக்கும் நேரம் ஒதுக்கணும்னு தோனுது. ஆனால் இந்த வெள்ளிக்கிழமை, அதாவது பிப்.6 நிகழ்வு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது . அதாவது நான் கடவுள் படம் ஆரம்பித்த பொழுதே .
மிகவும் எதிர்பார்ப்புடன் போய் அமர்ந்தேன். படம் ஆரம்பித்த சில கணங்களிலேயே அந்த எதிர்பார்ப்பும் பரவசமும் நியாயமானதே என்றே தோன்றியது. நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து போகும் சில நபர்களை பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. அந்த மனிதர்களின் அன்றாட வாழ்க்கை அவர்களின் சந்தோஷங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் அப்படியே கண் முன் நிப்பாட்டுகிறது ஆர்தர் வில்சனின் (ஒளி) பதிவு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் படத்தின் முக்கிய விவாதங்களில் ஒன்று. கடவுள் இருக்கிறார் என்றால் அவரால் ஏன் பேதங்கள் இல்லா உலகை உருவாக்க முடியவில்லை ..? அப்படி கடவுள் இல்லை என்றால் இந்த பேதங்களை யார் கடவுளாக இருந்து போக்குவது...? என்ற கேள்விதான் படத்தின் சாராம்சமே. கதை பற்றி இதை விட விரிவாக பேசினால் படம் பார்க்க இருக்கிறவங்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து விடும்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிதாக மட்டுமின்றி உளவியல் ரீதியாக நம்முள் ஒரு வித மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. எந்த சூழலிலும் நம் மனதை நாம் மகிழ்ச்சியாகவும் ஒரு வித நகைச்சுவை உணர்வுடனும் வைத்துக்கொள்வதோடு மற்றவர்களையும் மகிழ்வுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தையும் சொல்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திற்கான தேர்வும் நம்மை அசர வைக்கிறது. ஒரு இயக்குனரின் எந்த ஒரு வெற்றியும் இதில் தான் இருக்கிறது, அதை பாலா தெளிவாகவே செய்துள்ளார்.
ராஜாவின் இசை படத்தின் உயிரோட்டத்திற்கு ஜீவனாதமாகவே அமைந்து விட்டது பாலாவின் பெரும் பலம். ஆனால் மாதா உன் கோயிலில் பாடல் படத்தில் இல்லாமல் போனது ஒரு ஏமாற்றமே.
ஆர்யாவும் பூஜாவும் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களுக்கு கூட அடுத்தடுத்து வாய்ப்புகள் வரிசை கட்டப் போவது நிச்சயம்.
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியை தருகிறது. இல்லை சன் டி.வி பாணியில் சொல்வதென்றால் "நான் கடவுள் -- ருத்ர தாண்டவமும் அம்ச வள்ளியின் அம்சமும்".
0 comments:
Post a Comment