இசை பிதாமகன் இளையராஜா
தேவர் மகன் படத்தில் ஒரு வசனம் வரும் "எது நடக்க கூடாதுன்னு நினைச்சோனோஅதுதான் இங்கே நடக்குது ..." அப்படின்னு தன்னால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தைப் பற்றி சொல்வார். அது போல் இளையராஜாவிற்கு எது நடக்க கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்தே விட்டது. வருத்தத்திற்கு உரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.
இந்த வாரம் குமுதம் இதழில் ஒ பக்கங்கள் என்ற தலைப்பில் எழுதி வரும் ஞானி சொல்லிய விஷயங்கள் விவரம் புரிந்த அனைவருக்கும் புரிந்திருக்கும். அவர் சொன்னது இதுதான் "ரஹ்மானின் புகழும் சாதனை களும் வளர வளர, அவருடைய தன்னடக்கம் மேலும் மேலும் அதிகமாகின. `நான்' என்ற அகந்தை அவரை ஆட்கொள்ளவே இல்லை. ஆழமான இறைப் பற்றும் ஆன்மிகப்பிடிப்பும் இருந்தபோதும், ரஹ்மான் சாமியார் வேடம் போடவில்லை. தன் பக்தியையே தன் வியாபார பிம்பமாக ஆக்கி தத்துவ உளறல்களைப் பரப்பிக் கொண்டிருக்கவில்லை. என்னை விட்டால் வேறு யார் இங்கே உண்டு, நானே மன்னன், மன்னனுக்கு மன்னன், நானே கடவுள் என்றெல்லாம் பாடலாசிரியர்களுக்கு தன்னைப் பற்றிய பல்லவியைக் கொடுத்து பாட்டு போட்டுக் கொள்ளவில்லை.வளர வளர, ரஹ்மானிடம் இருந்த ஈகோ, சுய அகங்காரம் தேய்ந்துகொண்டே போய் தாமரை இலைத் தண்ணீர் போன்ற மனப் பக்குவத்தை அவரிடம் ஏற்படுத்தியிருப்பதுதான் பிரமிப்புக்குரியதாக இருக்கிறது. ரஹ்மானை விட திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள்;இருக்கிறார்கள்; இன்னும் வருங்காலங்களில் வருவார்கள். திறமையோடு, ஆன்றவிந்தடங்கிய மனமும் இருப்பவர்கள்தான் அபூர்வம்.அப்படிப்பட்ட மனம் ரஹ்மானுக்கு இருப்பதால்தான் ரஹ்மானுக்கு இதர இசைக் கலைஞர்கள் பற்றிய எந்த காழ்ப்புணர்ச்சியும் கசப்புணர்ச்சியும் இல்லை. தன் முதல் படத்தின் ஆல்பத்திலேயே, தனக்காக வாசித்த புல்லாங்குழல், டிரம்ஸ், கிடார் கலைஞர்கள் பெயர்களையும் அச்சிடச் செய்த முதல் இசையமைப் பாளர் அவர்தான். இப்படி சக கலைஞர்களுக்குரிய அங்கீகாரத்தை அவருக்கு முன் யாரும் தரவில்லை. அவர் தொடங்கியபின், மற்றவர்களும் செய்தாகவேண்டிய அவசியம் வந்தது." ஞானி இளையராஜாவை பேர் குறிப்பிடாமல் தாக்குவது அனைவரும் அறிந்ததே,
ஞானிக்கு சில கேள்விகள் அவருக்கு மட்டுமல்ல அவருடைய கருத்துக்களை மனதளவில் அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் சேர்த்துத்தான் ...
கேள்வி-1: ரஹ்மான் தன்னுடைய பக்தியை வியாபரமாக்கவில்லை என்று நீங்கள் சொல்வது குறித்து.. ஆமாம் இளையராஜா எந்த கோவிலில் அமர்ந்து குறி சொன்னார்..? இல்லை அவரை பார்க்க மக்கள் இருமுடி கட்டிக்கொண்டு போனார்களா..? சரி அப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் மாதிரி rahmaan தன்னை காட்டிக்கொள்ளவில்லையா..? ரஹ்மான் இதே குமுதம் இதழுக்கு ஒரு முறை அளித்த நேர்காணலில் தான் எந்த மசூதி சென்று தொழுகை நடத்துவார் என்றும் அங்கு உள்ள ஒரு சாமியார் பற்றியும் குறிப்பிட்டுருந்தார் அது விளம்பரம் இல்லையா..? அது சரி என்றால் ராஜா தான் திருவாண்ணாமலை செல்வதையும் இல்லை வேறு சில கோவில்களுக்கும் செல்வது போல் காட்டியது எப்படி விளம்பரமும் வியாபாரமும் ஆகும் ..? அது மட்டுமல்ல ரஹ்மான் மெக்கா சென்று வந்ததை எல்லா வார பத்திரிக்கைகளுமே அவரது புகை படம் உட்பட அவரது நேர்காணலுடன் வெளியிட்டது விளம்பரம் இல்லையா ..?
கேள்வி - 2: ரஹ்மான் தன்னை என்றும் வியாபர முன்னிலை படுத்திக் கொண்டதில்லை என்று எதை வைத்து சொல்கிறார் ஞானி அவர்கள்..? ரஹ்மானுக்கு கட்-அவுட் வைத்ததை பார்த்ததில்லையா..? சில நாட்களுக்கு முன் வெளிவந்த சக்கரக்கட்டி என்ற படத்திற்கு ரஹ்மான் கட்-அவுட் வைத்தார்களே .. அந்த படத்தின் எல்லா பத்திரிகை விளம்பரத்தில் கூட ரஹ்மான் படம் மட்டுமே இடம் பெற்றிருந்ததை பார்க்கவில்லையா ..? ஒரு பிரபலமான பத்திரிகையில் எழுதுபவர் இதை கூடவா கவனிக்காமல் எழுதுவார் அதையும் இந்த பத்திரிகை எப்படி அனுமதித்தது..?
கேள்வி-3: வாதியக்காரார்களின் பெயரை யாரும் போட்டதில்லை ரஹ்மான் தான் போட்டதாக சொல்கிறார். தயவு செய்து புன்னகை மன்னன் ஒலிப்பேழையை பாருங்கள் அதில் யார் வாசித்தார்கள் என்று போடப்பட்டிருக்கும். புன்னகை மன்னன் படம் ரஹ்மான் தனி இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்பே வந்த படம் மேலும் அந்த படத்தில் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்ததையும் நண்பர் ஞானி அவர்களுக்கு விளக்க விழைகிறோம்.
கேள்வி-4: தன்னடக்கம் பற்றி நீங்கள் பேசலாமா ஞானி அவர்களே. உங்களுடைய ஒவ்வொரு வார ஒ பக்கங்களின் முடிவில் நீங்கள் ஏன் "இந்த வார குட்டு" என்ற பகுதியை வைத்துள்ளீர்கள்..? அன்பாக சொல்ல வேண்டியது தானே அடக்கத்தை அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்கும் நீங்கள் ஏன் அதை முதலில் கற்றுக்கொள்ள கூடாது ...?
கேள்வி-5: ஒருவரின் அடக்கத்திற்கு தான் "சிறந்த இசை அமைப்பாளர் " விருது கொடுக்குறாங்களா ..? நன்றி ஞானி அவர்களே நான் கூட சிறந்த இசை வழங்குபவர்களுக்குத்தான் கொடுக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.
இந்திய இசையின் பிதாமகன் இளையராஜா அதற்காக அவரை (வார்த்தை) அம்பு படுக்கையில் படுக்க வைப்பது துளி கூட நியாயம் இல்லை.
0 comments:
Post a Comment