நான் கடவுள் -- ஒரு அலசல்
ஏகப்பட்ட எதிர் பார்ப்புகளுடன் வந்த பெரும்பான்மையான திரை படங்கள் தோல்வியை தழுவி உள்ள போதும் சில படங்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுடன் அதை விட ஒரு படி மேலே போய் சமுதயாத்துக்கான சில நல்ல விஷயங்களை சொல்லி செல்வதுண்டு. நான் கடவுள் திரை படம் அந்த மாதிரியான வகையை சேர்ந்தது.
சோதிடர்களின் பேச்சால் தனது மகன் ருத்ரனின் சிறிய வயதிலேயே காசியில் இருக்கும் ஒரு மடத்தில் விட்டுவிடுகிறார் ருத்ரனின் தந்தை. சில வருடங்களுக்கு பிறகு அவனை தேடி காசிக்கு வருகிறார், இந்த இடைப் பட்ட காலத்தில் ருத்ரன் சாதுக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததில் அவரும் ஒரு சாது ஆகிறார். அதாவது காசியில் வாழும் சாதுக்கள் தங்களை கடவுளின் அவதாரங்களாகவே கருதுவார்களாம் அப்படி மாறிப் போகிறார். அவரை அவரது தந்தை அடையாளம் கண்டு திரும்பவும் தன்னுடன் மலைகோவில் என்ற ஊருக்கு கூட்டி செல்ல முடிவு பண்ணி ருத்ரனின் குருவை சந்தித்து அனுமதி கேட்கிறார். அந்த குருவும் ருத்ரனை அனுப்ப அனுமதிப்பதோடு ஒரு உறுதிமொழியையும் வாங்கி கொள்கிறார் அதாவது சாதுக்களாகிய நமக்கு குடும்ப உறவுகள் இருக்கக் கூடாது அதை எல்லாம் அறுத்தெறிந்து விட்டு என்னை வந்து அடையும் நேரம் வந்ததும் வந்து அடைவீயாக என்று. மலைகோவிலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு அகழிகை போன்ற மண்டபத்தில் உடல் ஊனமுற்றவர்களை அடைத்துவைத்து, அவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைக்கிறார் தாண்டவன் என்பவர். வேறொரு கும்பலில் பிச்சை எடுத்து வந்த அம்சவல்லி என்ற பார்வையற்ற பெண் வந்து சேர்கிறார் இல்லை வலுகட்டயாமாக சேர்க்கப் படுகிறார். இந்த சூழலில் குடும்ப பாசத்தை வெறுத்து மலைக்கோவிலில் இருக்கும் மற்ற (போலி) சாமியார்களுடன் வந்து சேர்கிறார் ருத்ரன். அதாவது அவர்கள் வாழும் அந்த மலையில் தனக்கென ஒரு இடம் ஒதுக்கி விடுகிறார். அங்கு இருக்கும் மாங்காட்டு சாமியார் யாருடனும் பேசாமலும் யாரையும் கண் திறந்து பார்க்காமலும் இருக்கிறார். அவரே ருத்ரனின் பேச்சை கேட்டவுடன் கண் திறந்து ருத்ரனை பார்க்கிறார். அந்த அளவுக்கு ருத்ரன் அங்கிருப்பவர்களை பாதிக்கிறார் இந்நிலையில் தாண்டவன் மாதிரியே பக்கத்து மாநிலமான கேரளாவில் தொழில் செய்யும் இன்னொரு நபரும் தாண்டவனை சந்தித்து உருப்படிகளை, அந்த ஊனமுற்றவர்களை அப்படித்தான் அழைக்கிறார்கள், மாற்றுவது குறித்து பேச வருகிறார். அவரால் கோரமுகம் கொண்ட ஒரு பணக்காரருக்கு அம்சவல்லியை தாரை வார்க்க தயாராகிறார் தாண்டவன். அம்சவல்லி தப்பிப்பதற்காக மலை மேல் இருக்கும் ருத்ரனிடம் தஞ்சம் அடைகிறார். அங்கு ருத்ரன் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே முடிவு.
இந்த கதையில் பிச்சை எடுப்பவர்களின் அன்றாட வாழ்க்கை காண்பிக்கப் படும் விதம் என்னைப் போல் வெளிநாட்டில் வந்து வேலைப் பார்க்கும் குறிப்பாக மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. எனவே பொது மக்களே தயவு செய்து மென்பொருள் துறையை இனிமேலாவது சபிக்காதீர்கள். அந்த நிழல் உலகத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே நம்மை உலுக்கி எடுக்கிறது. ருத்ரனாக வரும் ஆர்யாவின் நடிப்பு அவருடைய நடிப்புலக பயணத்தில் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பத்தையே காட்டுகிறது . அவர் மட்டுமல்ல அம்சவல்லியாக வரும் பூஜாவும் அப்படித்தான் தெரிகிறார். இதில் பூஜா படி மேலே சென்று நிஜமாகவே பிச்சை எடுத்தாராம் (45 நிமிடத்தில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய் வசூல் பண்ணியாதாக சொன்னார்). அவர் கண் தெரியாதவராக இருப்பதற்காக அவர் அணிந்திருந்த லென்ஸ் அவரை நிஜமாகவே இருட்டு உலகத்தில் தான் வைத்திருக்குமாம். இப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறார்கள் அனைவரும். ஆர்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த படத்துக்காக அனைத்து வாய்ப்புகளையும் இழந்து தன்னுடைய பங்களிப்பை பலப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்ல சிறு சிறு கதா பாத்திரங்களில் வருபவர்கள் கூட அட்டகாசமாக நடித்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். பல பேர் புது முகங்கள் என்பது ஆச்சர்யம்.
சமீபத்தில் ஒரு தொலைகாட்சியில் பாலா சொன்னது மாதிரி படத்தின் முதல் நாயகன் இளையராஜா தான். ராஜா ரமண மாலையில் கொடுத்த பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் இந்த முறை மதுபாலகிருஷ்ணன் குரலில் தேனாய் வந்திறங்குகிறது நம் காதுகளில். துவக்கப்பாடல் கதாநாயகர்களின் துவக்கப்பாடல்களின் வரிசையில் ஒரு புது அத்தியாயம். அந்த உடுக்கை சத்தம் மிரட்டுகிறது. சில இடங்களில் வசனமின்றியே பல விஷயங்களை இசையால் உணர்த்தி இருக்கிறார் ராஜா. இந்த பின்னணி இசைக்கு எந்த விருது கொடுத்தாலும் அது சாதரணமானதுதான்.
ஒளிப்பதிவு காட்சிகளை உறுத்தாமல் படம் பிடித்திருப்பதே ஆர்தர் வில்சனின் பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். படக் கோர்வையும் அப்படியே உள்ளது. வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்து ஒரு புது வீச்சை தந்திருக்கிறது. விரக்கதியின் விளிம்பில் கடவுளை திட்டுமிடமும், இறுதிக் காட்சியில் அம்சவல்லி பேசும் வசனங்களும் படம் எதை பத்தி சொல்ல வருகிறது என்பதை தெளிவாக கோடிட்டு காண்பித்திருக்கிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிற படம். அந்த திருப்தியும் நீண்ட நாட்களுக்கு நம் நினைவில் இருக்கும்.
0 comments:
Post a Comment