வாழ்க்கை படம் -- முள்ளும் மலரும்
சில திரை படங்கள் வெறும் படங்களாக மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கான பாடங்களாகவும் இருப்பதுண்டு. அதை விடவும் மேலே போய் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே, அதாவது அதுவும் ஒரு வாழ்க்கையாகவே ஆகி போவதுமுண்டு. அப்படி வாழ்க்கையான படங்களில் முள்ளும் மலரும் முதன்மையானது.
இந்த படத்தை பற்றி நான் இதுவரை கேட்டிராத , படித்திராத சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
--- கதாநாயகன் காளி சிவப்பு சிந்தனை கொண்டவர் என்பதை காண்பிப்பதற்காக காட்டப்படும் ஆரம்ப காட்சியில் சிவப்பு வண்ணம் கொண்ட காரை காண்பிப்பது.
--- படத்தின் முக்கிய கதா பாத்திரங்களான காளியும் அவரது தங்கை வள்ளியையும் காண்பிக்கும் போதுவரும் பின்னணி இசை, அவர்களுக்கு இடையே அவ்வப்பொழுது நிகழும் பாச பரிவர்த்தனைகளின் போதும் ஒலிப்பது எவ்வளவோ விஷயங்களை சொல்லி விடும் அதிசயம், பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழ் திரையுலகம் உணர ஆரம்பித்த பொழுது என்பதுகளின் ஆரம்பம் தான் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக காளி தன்னுடைய நண்பர்களிடம் தான் தனது தங்கையை சரி வர கவனிக்காதவன் என்று தன்னைப் பற்றி தனது மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்ததால்தான் தன்னுடன் வேலை பார்த்தவரை அடிக்க நேர்ந்தது என்பதை விவரிக்கும் போது அதை மறைந்திருந்து கேட்கும் தங்கை முகத்தை க்ளோசப்பில் காண்பிக்கும் பொழுது எழுப்பப்படும் பின்னணி அவளும் அதை புரிந்து கொண்டுவிட்டால் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
--- காளி தனது தங்கையை தனது மேலதிகாரிக்கு கட்டித்தர சம்மதிக்கும் அந்த வேளையிலும் மற்ற படங்களில் இருப்பதைப் போல் அல்லாமால் "எனக்கு உங்களை பிடிக்காது ஆனால் என் தங்கைக்கு உங்களை பிடித்திருப்பதால் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்.." என்று சொல்வது, தங்கைக்காக சம்மதித்திருந்தாலும் அவரைப்பற்றிய தனது எண்ணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை சொல்வது, அது சாதாரண திரை கதா பாத்திரமல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது.
--- இவ்வளவு அருமையாக நடிக்கக் கூடிய அந்த ரஜினி எப்பொழுது திரும்பவும் இந்த தமிழ் திரையுலகிற்கு கிடைப்பார்..?
--- கிட்டத்தட்ட 50 முறையாவது இந்த படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன், இத்தனை முறையில் ஒரு முறை கூட சலிப்பே ஏற்படாது இருப்பது யாரால் .. சிறந்த முறையில் இயக்கிய மகேந்திரனலா...? மிக சிறந்த முறையில் நடித்த ரஜினி,ஷோபா மற்றும் சரத்பாபுவினாலா ..? மிக சிறந்த ஒளிப்பதிவை தந்த பாலுமகேந்திராவினாலா ..? மிக சிறந்த பாடல்கள் மட்டுமில்லாது மிக சிறந்த இசை வழங்கிய இளையராஜாவினாலா ..? இப்படி எல்லோரும் தங்களது பங்கினை மிகச்சிறந்த முறையில் வழங்கியதால்தான். ஆம் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சியே. அப்படி அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய எந்த படமும் மேலே சொன்ன மாதிரி நம் வாழ்க்கை படம் ஆகியே தீரும்.
0 comments:
Post a Comment