ஏர் இந்தியா ஒரு பயண அனுபவம்.

சொல்ல கடினமாத்தான் இருக்கு ஆனா இது எனக்கு நேர்ந்த அனுபவம். இந்த முறை சில பல காரணங்களால் ஏர் இந்தியாவில் பயணம் செய்யும் படி ஆகியது, உள்ளுக்குள்ளே ஒரு உதறுலுடன் தான் பயணித்தேன். பொதுவாக நாம் நியூயோர்க்கிலிருந்து சென்னை செல்கிறோம் என்றால் சென்னை வரை நமக்கு போர்டிங் பாஸ் நியூயார்க் கிலேயே கொடுத்து விடுவார்கள். இங்கே அது நடக்கவில்லை, கேட்டவுடன் கவுண்டரிலிருந்தவர் சற்றே பதற்றத்துடன் பக்கத்து கவுண்டரில் இருந்தவரிடம் விசாரித்தார், அவர் நமது தேசிய மொழியில் ஏதோ சொன்னார் (நாம எல்லாம் சுத்த தமிழருங்க அதனால தமிழை விட்டால் வேறு இந்திய மொழிகள் தெரியாது, சுருக்கமா சொல்லனும்னா நம்ம தமிழக முதல்வர் கலைஞர் மாதிரின்னு வச்சுக்குங்க) நமக்கு சுத்தமா புரியலை ஆனால் அவர் தலை அசைப்பிலிருந்து, சென்னை வரை கொடுக்க மாட்டர்கள் என்பது மட்டும் உறுதியானது. அதுவும் ஒரு விதத்தில் சரி தான் ஏனெனில் டெல்லி சென்றடைந்தவுடன் நமது லக்கேஜ் எல்லாம் அங்கே தான் எடுக்க வேண்டும் ஏனெனில் அதுதான் இந்தியாவில் நுழையும் இடம் எனவே அங்கு தான் சுங்க சோதனை (Customs) . அங்கு இறங்கி சென்னைக்கு போர்டிங் பாஸ் வாங்கி கொள்ளலாம் என்று நம்பி போனேன். அங்கு போனவுடன் எதிர் பார்த்தபடி ஆரம்பிச்சுட்டாங்க, அதாவது ஒரே முன்பதிவு என்னில் பயணம் செய்த என் மனைவிக்கும் மகளுக்குமான டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருந்தது ஆனால் எனக்கு உறுதி செய்யப் படவில்லை . எனக்கோ பயங்கர ஆச்சர்யம் அது எப்படின்னு கேட்டால் யாரும் பதில் சொல்ல வில்லை மாறாக செய்கை மூலமாகவே அடுத்து செல்லவேண்டிய கவுண்டரை பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கும் கிட்டத்தட்ட இதே பதிலை சொல்லி கடைசியாக ஒரு கவுண்டரில் நிப்பாட்டி என் பெயர் மற்றும் இதர விவரங்களை போனில் சொல்லி என் பயணசீட்டில் ஏற்கனவே பதிவாகியிருந்த அதே நம்பரை வாங்கி கொடுத்து இந்த நம்பரை சொல்லுங்க உங்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியை சொல்லி உடனே 200 ரூபாய் கேட்டார், அப்பொழுதுதான் புரிந்தது ஏன் அந்த அளவுக்கு அலைய விட்டார்கள் என்று.
இதை விட கொடுமை திரும்ப வரும் பொழுது தான், டெல்லியிலிருந்து நியூயார்க் வரை செல்வதற்கான பயணசீட்டை உறுதி படுத்தவில்லை, பிளைட் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே, இருக்கிற பட்சத்தில் அவர்கள் சொன்னதுதான் காமெடி நீங்கள் டெல்லி ஏர்போர்ட் வரி கட்ட வேண்டும் அதை அங்கே உள்ள கவுண்டரில் கட்டி விடுங்கள், அதுவும் எவ்வளவு தெரியுமா மூவாயிரம் ரூபாய். என்ன கொடுமை இது ஒவ்வொரு ஏர்போர்ட் வரியையும் பயணம் செய்பவர்களே செலுத்துவதாக இருந்தால் அது எப்படி. நான் இதற்கு முன் கிட்டத்தட்ட ஆறேழு முறை பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட இந்த மாதிரியான அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை, இந்த முறை ஏன் நிகழ்ந்தது தெரியும் இந்த முறை தான் ஏர் இந்தியாவில் முதல் முறையாக பயணம் செய்தேன் அது தான்.
உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வது ஏர் இந்தியாவில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக அல்ல, பயணம் செய்கிற பட்சத்தில் இதை எல்லாம் எதிர் கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு வர வேண்டும் என்பதற்காகவே


Read more...

ஊர் வலம்

"எம்மதமும் சம்மதம் ரஜினியே எம்மதம்" இந்த ஆட்டோ வாசகத்தை பார்த்தவுடன்தான் அப்பாடா ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்தோம்கிற திருப்தி வந்தது. சென்னையில் ஆங்காங்கே பாலங்கள் இருந்தும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. உங்கள் மேல் யாராவது இடிக்காமல் போனால் நீங்கள் தாராளமாக அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு தேங்காய் உடைக்கலாம். நிறைய கார்கள் அணிவகுத்தாலும் மின்னல் வேகத்தில் சாலை கடக்கும் அந்த மனிதர்கள் நம்மை மிரட்டிக்கொண்டே இருந்தனர். ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்ற பிறகுதான் பணத்தின் மதிப்பே புரிந்தது. அதாவது மண்டையில் ஒரு தட்டு தட்டி சார் நீங்க இப்போ இருப்பது தமிழ்நாட்டில் 2009 வருடத்தில் என்று சொன்னது போல் இருந்தது. ஒண்ணுமில்லை நாலு சாதா தோசை, இரண்டு செட் பூரி 150 ரூபாய் பில் வந்தது அப்படியே ஒரு கணம் உறைந்து நின்றேன், நெசமாவே இப்படிதானா இல்லை எனக்கு மட்டும் இப்படியான்னு அசந்து போயிட்டேன் . மக்கள் யாருமே நூறு ரூபாய் நோட்டெல்லாம் மாற்றுவதில்லை ஒன்லி ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டை மட்டும்தான் மாற்றுகிறார்கள் . இதற்கு மேலும் கருணாநிதி ஆட்சியை யாரவது குறை சொன்னால் அவரும் முதல்வனில் ரகுவரன் பேசுவது போல ... " மக்களை பாருங்க பாஸ்ட் புட் சாப்பிடுறாங்க, நகை கடைல கூட்டமா நிக்கிறாங்க, ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் கழக ஆட்சிக்கு பிறகு அதிகமாகியிருக்கு..." அப்படின்னு சொல்லுவாரு. பணத்தின் மதிப்பு குறைவது நாட்டுக்கு நல்லதா இல்லையா என்பதை நாம் தான் முடிவு பண்ணிக்கணும்.
இதெல்லாத்தையும் விட பெரிய கொடுமை வெயில் சும்மா வெளுத்து வாங்கிடுச்சு சென்னைல எங்க போனாலும் குளியலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் செல்வது என வழக்கமாக்கி கொண்டேன் ஓரளவு தப்பித்தேன்.

இது தவிர வழக்கம் போல் இடித்தால் ஒரு சாரி கூட சொல்லாமால் போவது, போக்குவரத்து நெரிசலில் கூட தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல், அதாவது பின்னால் வருபவனை முந்தவிடமால் செல்லும் ஓட்டுனர்கள், ஒரு வரிசை என்று ஒன்றிருந்தால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நான் இந்த மண்ணில் உங்களைப் போல் பிறக்கவில்லை என்று சொல்லும்விதமாக பட படவென முன்னேறி (!?) செல்லும் "முதல்வர்கள்", கோயிலுக்கு சாமி கும்பிட போன இடத்தில் கூட (உலகின் இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் திருப்பதியில்) நம் சட்டை பையில் உள்ள பணத்திற்கு தகுந்தவாறு சாமி தரிசனம் செய்ய வைக்கும் கடமை வாதிகளும், வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன் கூச்சப்படாமல் பத்து டாலர் கேட்கும் விமான நிலைய சிப்பந்திகளும், பார்கிங் டோக்கனில் எவ்வளவு ரூபாய் என்று கூட போடாமல் கண்ணியமாய் வசூல் பண்ணும் குத்தகைதாரர்களும், தட்டில் காசு போடாமல் சாமி கும்பிட்டால் சூடத்தை விட எரியும் பார்வை கொண்ட பூசாரியும், ஆங்காங்கே டிஜிட்டல் பேனர் வைத்து எல்லாரையும் இம்சிக்கும் குட்டி குட்டி அரசியல் தலைவர்களும், கடமை முடிக்க செல்லும் வீரன் தனது குறிக்கோள் ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்வான், மற்றவற்றை கண்டு கொள்ள மாட்டான் அது போலவே செல்லும் எதிர்புற வாகன ஓட்டிகளும் என அனைவரும் ஆஜர்.

நான் இதற்கு முன் நான்கு முறை இந்தியா சென்று வந்துள்ளேன் அப்பொழுதெல்லாம் தெரியாது மாற்றம் இந்த முறை தெரிந்தது விலை வாசியிலிருந்து, ஆங்காங்கே தென்பட்ட பாலங்கள் வரை. முன்பெல்லாம் வருடத்திற்கொருமுறை செல்வதால் அப்படி தெரியவில்லையா இல்லை இப்பொழுது இரண்டரை வருட இடை வெளியில் சென்றதால் அப்படி தெரிந்ததா தெரியவில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் மலர்ச்சிகானதாக இருந்தால் மகிழ்ச்சிதான்.


Read more...

புத்தகங்களில் புதையல் -- நிலமெல்லாம் ரத்தம்

நண்பர் புகழ் ஒளி சமீபத்தில் அளித்த அன்பளிப்பு "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகம். நானும் படிப்பதில் சோம்பேறி தான் ஆனால் உலகில் தற்போது உள்ள சில பிரச்சினைகளின் வேர் தேடலில் ஒரு வித சுகம் இருக்கிறது. அமெரிக்கா வந்த பிறகு அப்படி அறிந்து கொள்ள விரும்பிய பல விஷயங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை முக்கியமானது. இங்கு நியுயார்க்கில் ஏகப்பட்ட யூதர்களின் வழிபாட்டு தளங்களை காணமுடியும். அந்த அளவுக்கு யூதர்கள் நியுயார்க்கில் பரவி உள்ளனர். அதாவது இங்குதான் உலகின் பலம் வாய்ந்த பல தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் உள்ளன அவற்றின் முக்கியமானவற்றின் தலைமை மற்றும் துறை சார்ந்த பொறுப்புகளில் யூதர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பு நிலை பாட்டினை எடுத்துள்ளதாகவும் கேள்வி பட்டுள்ளேன். எனவே அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேட ஆரம்பித்ததுதான் இந்த தேடல். ஏற்கனவே இது சம்மந்தமாக "யூதர்கள்" என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், அதற்கிடையில் இந்த புத்தகம் கிடைத்ததால் இதை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயம் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த முதல் அத்தியாயம் முழுவதுமே அவரின் அருமை பெருமைகளை சொல்வதாகவே உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைவு பற்றி "எண்ணங்களில்" குறிப்பிடுகையில், அவரது நிலைப்பாடு ஒரு கட்டத்துக்கு பிறகாவது மற்ற நாடுகளுடன் நல்லுறவை பேணும் படி அமைந்திருந்தால் இந்த மாதிரியான ஒரு இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டினை எடுத்ததன் மூலமாகத்தான் யாசர் அராபத் என்ற போராளி இயற்கை மரணத்தை இந்த நூற்றாண்டிலும் எய்த முடிந்துள்ளது என்றே நம்ப தோன்றுகிறது.
பாலஸ்தீனை இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரித்து அந்த நாட்டுக்கான தூதுவர்களை எல்லாம் நியமித்துள்ளது. அராபத்தும் இந்தியாவுடன் நல்லுறவு பேணி வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே அதே மாதிரி காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவை ஆதரித்த ஒரே முஸ்லீம் நாடு பாலஸ்தீன்தான். காரணம் கிட்டத்தட்ட அதே தலைவலியை அவர்களும் இஸ்ரேல் என்ற ரூபத்தில் அனுபவித்து வருவதால். சில நாடுகள் இன்னும் பாலஸ்தீன் என்பதை ஒரு நாடாகவே அங்கீகரிக்காமல் உள்ள நாடுகளும் இருக்கின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

இஸ்ரேல் எவ்வாறு தனது கரத்தை அடுத்த நாட்டிற்குள் நுழைத்து நர்த்தனம் ஆடுகின்றது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளிக்காட்சி இந்த கட்டுரையுடன் தொடர்புடையதே தயவுசெய்து ஒலியுடன் ரசிக்கவும்..



Read more...

தரம் தாழ்ந்தவர் யார்..?

தரம் தாழ்ந்து போக போட்டி போடும் நம் தமிழக அரசியல் வாதிகளை நினைத்தால்.. ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு கருணாநிதி அளித்த பதில் அறிக்கை. இதில் மிகவும் தரம் தாழ்ந்தவர் யார் என்பது உங்களுடனே இருக்கட்டும் ஏன்னா அதை சொல்லி நம்மை நாம் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்பது என் நிலைப்பாடு.

என்னைப் பற்றி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறும்போது, "திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்'' என்று எழுதியிருக்கிறார். இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி வருவதால், இவர் எதை "மூலதனமாக'' வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்? என்று கேட்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.


Read more...

கலைஞனை மதிக்காத சமூகமே...!

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP