அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 4

சென்ற மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்-ல் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது எனக்கு பக்கத்தில் அருகில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பயணம் செய்தார். படிப்பதற்காக ஒரு வரலாற்று புத்தகத்தை நான் எடுத்தவுடன் அவர் மிகவும் பிரகாசமானார். அது என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருந்தார், நானும் பதிலுக்கு விசாரித்த பொழுதுதான் தெரிந்தது அவர் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்று. அவர் பெயர் ராம.சுப்புராம் திருமயம் தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது நம்ம நாட்டுல மட்டும் ஏன் ஒரு சாதாரண குடிமகனுக்கு நியாயமான அரசாங்க வேலைகள் எதுவும் கையூட்டு இல்லாமல் நடப்பதில்லையே என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் "முதல்ல உங்கள மாதிரி கேள்வி கேக்குறவுங்க எல்லாம் அரசியலுக்கு வரணும். அரசியல்ல இருக்குறவுங்களுக்கும் குடும்பம் இருக்குதுல்ல அவுங்க வருமானத்துக்கு அரசியலை நம்பாமல் இருக்கணும், உங்களை மாதிரி ஆளுங்க வெளி நாட்டில் சம்பாதிக்கும் போதே தங்களது குடும்பத்திற்கு தேவையானவற்றை சேர்த்து விடுவீர்கள், அதனால் உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அரசியலை ஒரு தொழிலாக பார்க்காமல், சேவைக்கான ஒரு களமாக கருதி செயல்படுவீர்கள் அப்பொழுது நீங்கள் எதிர் பார்க்கிற மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறும்..." என்றார். கூடுதல் தகவலாக அவர் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சிங்கபூரில் வேலை பார்த்ததாகவும் அதனால் அவர் குடும்பம் வருமானத்திற்கு அரசியலை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார். ஒரு கணம் யோசித்து பார்த்தால் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதிலும் ஒரு குறை சொல்ல முடியும், ஏழையின் பிரச்சனைகளை அவர்களில் ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும் என்றும் வாதிடலாம். அரசியலை சேவைக்குரிய தளமாக மாற்ற இன்னும் பல வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம் சொல்லப்போனால் பல தலைமுறை தங்களது வாழ்நாளை பலியிட வேண்டி வரலாம், இதற்கு பேசாமல் அரசியலை ஒரு தொழிலாகவே அங்கீகரித்து விட்டால் என்ன..? எப்படி விப்ரோ, இன்போசிஸ் போன்ற கம்பனிகள் இருக்கிறதோ அது மாதிரி தி.மு.க,அதிமுக என இரண்டு நிறுவனங்கள். ஒரு நிறுவனம் எப்படி தனது பங்குகளை வெளியிடும் முன்பு தனது நிறுவனத்தின் குறைகளையும் நிறைகளையும் வெளியிடுகிறதோ அது போல தேர்தல் என்று ஒன்று வரும் பொழுது அந்தந்த கட்சிகளின் நிறை குறைகளை வெளியிடலாம். பொதுவாக வெகு சிலரே தன் மேல் உள்ள குற்றத்தை ஒத்துக்கொள்வதில்லை, அதுபோல்தான் ஒரு நிறுவனமோ அல்லது கட்சியோ இருக்கப்போகிறது, ஒரு நிறுவனம் வெளியிடும் குறைகளை சரி பார்க்க ஒரு தணிக்கை துறை இருக்கிறதோ அது மாதிரி ஏன் தேர்தல் ஆணையமோ இல்லை வேறு ஒரு தணிக்கை துறையோ செயல்படலாம். இப்படியெல்லாம் இருந்தால்தான் கார்ப்பரேட் காலத்தில் ஜனித்த வருங்கால தலைமுறைக்கு அரசியல் (கட்சிகளின்) மீதான நம்பிக்கை இருக்கும்.



பின் குறிப்பு: ஒரு அரசியல் வாதி இப்பொழுதுள்ள வசதி காலத்தில் முடிந்த அளவு தொடர் வண்டியில் எல்லாம் பிரயாணம் செய்வது என்பது நிச்சயம் ஆச்சர்யமான ஒரு விஷயம் தான்.


Read more...

நிருபர்களை மீட்ட கிளின்டன்

சில மாதங்களுக்கு முன்னால் வட கொரியா அரசாங்கத்தால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டை சேர்ந்த இரு நிருபர்கள் மீட்கப் பட்டிருக்கிறார்கள். என் வாழ் நாளில் நான் முதல் முறையாக கேள்வி படுகிறேன், ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாததால், தனது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரை அனுப்பி மற்றொரு நாட்டால் சிறை பிடிக்கப்பட்ட நிருபர்களை மீட்டு எடுத்திருக்கிறது. அந்த முன்னாள் குடியரசு தலைவர் பில் கிளின்டன். நம் நாட்டை சேர்ந்த சப்ரஜித் சிங் என்பவர் கிட்டத்தட்ட இதே மாதிரியான காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவரை மீட்க அவரது குடும்பத்தினர் போராடி வருவதை, நாம் செய்திகளில் பார்த்திருக்கலாம். அவரை மீட்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பத்தாதோ என்றே தோன்றுகிறது, குறைந்த பட்சம் இதை பார்த்தபிறகாவது அப்படி தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் இப்படியும் நினைக்க தோன்றுகிறது அமெரிக்கா தனது "உலக தலைமை"யை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளதோ என்று. உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள்.


Read more...

அச்சமுண்டு அச்சமுண்டு = அச்சமில்லை அச்சமில்லை

அருண் வைத்தியநாதன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனர், சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் சிவாஜி படத்தின் வெளியீடு சம்மந்தமாக சந்தித்ததில் நண்பராகி விட்டவர். இந்த "அச்சமுண்டு அச்சமுண்டு" படத்தின் கதையையும் அப்பவே சொன்னார். அதாவது அவுட் லைன் மட்டும். பேசிக்கொண்டிருக்கும் போது நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதை இப்போது நடை முறையிலும் செய்திருக்கிறார் என்று படத்தின் காட்சிகளும், பத்திரிகைகளில் வரும் பாராட்டுகளும் மற்றும் தொலைக்காட்சி விமர்சனங்களும், மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. அவரை தெரிந்தவர் என்ற முறையில் அவருக்கு கிடைக்கும் இந்த பாராட்டுகள் என்னையும் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது.
இந்த படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை, ஆனால் தொலைகாட்சியில் பார்த்த சில காட்சிகள், இந்த படத்தை பற்றிய ஹாசினி பேசும் படம் விமர்சனம், இவை அனைத்தும் "அச்சமுண்டு அச்சமுண்டு" படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நல்ல இயக்குனர் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று நாம் "அச்சமின்றி அச்சமின்றி" சொல்லலாம் போல தான் தோன்றுகிறது. வாழ்த்துகள் அருண்.


Read more...

ஏர் இந்தியா ஒரு பயண அனுபவம்.

சொல்ல கடினமாத்தான் இருக்கு ஆனா இது எனக்கு நேர்ந்த அனுபவம். இந்த முறை சில பல காரணங்களால் ஏர் இந்தியாவில் பயணம் செய்யும் படி ஆகியது, உள்ளுக்குள்ளே ஒரு உதறுலுடன் தான் பயணித்தேன். பொதுவாக நாம் நியூயோர்க்கிலிருந்து சென்னை செல்கிறோம் என்றால் சென்னை வரை நமக்கு போர்டிங் பாஸ் நியூயார்க் கிலேயே கொடுத்து விடுவார்கள். இங்கே அது நடக்கவில்லை, கேட்டவுடன் கவுண்டரிலிருந்தவர் சற்றே பதற்றத்துடன் பக்கத்து கவுண்டரில் இருந்தவரிடம் விசாரித்தார், அவர் நமது தேசிய மொழியில் ஏதோ சொன்னார் (நாம எல்லாம் சுத்த தமிழருங்க அதனால தமிழை விட்டால் வேறு இந்திய மொழிகள் தெரியாது, சுருக்கமா சொல்லனும்னா நம்ம தமிழக முதல்வர் கலைஞர் மாதிரின்னு வச்சுக்குங்க) நமக்கு சுத்தமா புரியலை ஆனால் அவர் தலை அசைப்பிலிருந்து, சென்னை வரை கொடுக்க மாட்டர்கள் என்பது மட்டும் உறுதியானது. அதுவும் ஒரு விதத்தில் சரி தான் ஏனெனில் டெல்லி சென்றடைந்தவுடன் நமது லக்கேஜ் எல்லாம் அங்கே தான் எடுக்க வேண்டும் ஏனெனில் அதுதான் இந்தியாவில் நுழையும் இடம் எனவே அங்கு தான் சுங்க சோதனை (Customs) . அங்கு இறங்கி சென்னைக்கு போர்டிங் பாஸ் வாங்கி கொள்ளலாம் என்று நம்பி போனேன். அங்கு போனவுடன் எதிர் பார்த்தபடி ஆரம்பிச்சுட்டாங்க, அதாவது ஒரே முன்பதிவு என்னில் பயணம் செய்த என் மனைவிக்கும் மகளுக்குமான டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருந்தது ஆனால் எனக்கு உறுதி செய்யப் படவில்லை . எனக்கோ பயங்கர ஆச்சர்யம் அது எப்படின்னு கேட்டால் யாரும் பதில் சொல்ல வில்லை மாறாக செய்கை மூலமாகவே அடுத்து செல்லவேண்டிய கவுண்டரை பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கும் கிட்டத்தட்ட இதே பதிலை சொல்லி கடைசியாக ஒரு கவுண்டரில் நிப்பாட்டி என் பெயர் மற்றும் இதர விவரங்களை போனில் சொல்லி என் பயணசீட்டில் ஏற்கனவே பதிவாகியிருந்த அதே நம்பரை வாங்கி கொடுத்து இந்த நம்பரை சொல்லுங்க உங்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியை சொல்லி உடனே 200 ரூபாய் கேட்டார், அப்பொழுதுதான் புரிந்தது ஏன் அந்த அளவுக்கு அலைய விட்டார்கள் என்று.
இதை விட கொடுமை திரும்ப வரும் பொழுது தான், டெல்லியிலிருந்து நியூயார்க் வரை செல்வதற்கான பயணசீட்டை உறுதி படுத்தவில்லை, பிளைட் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே, இருக்கிற பட்சத்தில் அவர்கள் சொன்னதுதான் காமெடி நீங்கள் டெல்லி ஏர்போர்ட் வரி கட்ட வேண்டும் அதை அங்கே உள்ள கவுண்டரில் கட்டி விடுங்கள், அதுவும் எவ்வளவு தெரியுமா மூவாயிரம் ரூபாய். என்ன கொடுமை இது ஒவ்வொரு ஏர்போர்ட் வரியையும் பயணம் செய்பவர்களே செலுத்துவதாக இருந்தால் அது எப்படி. நான் இதற்கு முன் கிட்டத்தட்ட ஆறேழு முறை பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட இந்த மாதிரியான அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை, இந்த முறை ஏன் நிகழ்ந்தது தெரியும் இந்த முறை தான் ஏர் இந்தியாவில் முதல் முறையாக பயணம் செய்தேன் அது தான்.
உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வது ஏர் இந்தியாவில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக அல்ல, பயணம் செய்கிற பட்சத்தில் இதை எல்லாம் எதிர் கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு வர வேண்டும் என்பதற்காகவே


Read more...

ஊர் வலம்

"எம்மதமும் சம்மதம் ரஜினியே எம்மதம்" இந்த ஆட்டோ வாசகத்தை பார்த்தவுடன்தான் அப்பாடா ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்தோம்கிற திருப்தி வந்தது. சென்னையில் ஆங்காங்கே பாலங்கள் இருந்தும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. உங்கள் மேல் யாராவது இடிக்காமல் போனால் நீங்கள் தாராளமாக அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு தேங்காய் உடைக்கலாம். நிறைய கார்கள் அணிவகுத்தாலும் மின்னல் வேகத்தில் சாலை கடக்கும் அந்த மனிதர்கள் நம்மை மிரட்டிக்கொண்டே இருந்தனர். ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்ற பிறகுதான் பணத்தின் மதிப்பே புரிந்தது. அதாவது மண்டையில் ஒரு தட்டு தட்டி சார் நீங்க இப்போ இருப்பது தமிழ்நாட்டில் 2009 வருடத்தில் என்று சொன்னது போல் இருந்தது. ஒண்ணுமில்லை நாலு சாதா தோசை, இரண்டு செட் பூரி 150 ரூபாய் பில் வந்தது அப்படியே ஒரு கணம் உறைந்து நின்றேன், நெசமாவே இப்படிதானா இல்லை எனக்கு மட்டும் இப்படியான்னு அசந்து போயிட்டேன் . மக்கள் யாருமே நூறு ரூபாய் நோட்டெல்லாம் மாற்றுவதில்லை ஒன்லி ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டை மட்டும்தான் மாற்றுகிறார்கள் . இதற்கு மேலும் கருணாநிதி ஆட்சியை யாரவது குறை சொன்னால் அவரும் முதல்வனில் ரகுவரன் பேசுவது போல ... " மக்களை பாருங்க பாஸ்ட் புட் சாப்பிடுறாங்க, நகை கடைல கூட்டமா நிக்கிறாங்க, ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் கழக ஆட்சிக்கு பிறகு அதிகமாகியிருக்கு..." அப்படின்னு சொல்லுவாரு. பணத்தின் மதிப்பு குறைவது நாட்டுக்கு நல்லதா இல்லையா என்பதை நாம் தான் முடிவு பண்ணிக்கணும்.
இதெல்லாத்தையும் விட பெரிய கொடுமை வெயில் சும்மா வெளுத்து வாங்கிடுச்சு சென்னைல எங்க போனாலும் குளியலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் செல்வது என வழக்கமாக்கி கொண்டேன் ஓரளவு தப்பித்தேன்.

இது தவிர வழக்கம் போல் இடித்தால் ஒரு சாரி கூட சொல்லாமால் போவது, போக்குவரத்து நெரிசலில் கூட தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல், அதாவது பின்னால் வருபவனை முந்தவிடமால் செல்லும் ஓட்டுனர்கள், ஒரு வரிசை என்று ஒன்றிருந்தால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நான் இந்த மண்ணில் உங்களைப் போல் பிறக்கவில்லை என்று சொல்லும்விதமாக பட படவென முன்னேறி (!?) செல்லும் "முதல்வர்கள்", கோயிலுக்கு சாமி கும்பிட போன இடத்தில் கூட (உலகின் இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் திருப்பதியில்) நம் சட்டை பையில் உள்ள பணத்திற்கு தகுந்தவாறு சாமி தரிசனம் செய்ய வைக்கும் கடமை வாதிகளும், வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன் கூச்சப்படாமல் பத்து டாலர் கேட்கும் விமான நிலைய சிப்பந்திகளும், பார்கிங் டோக்கனில் எவ்வளவு ரூபாய் என்று கூட போடாமல் கண்ணியமாய் வசூல் பண்ணும் குத்தகைதாரர்களும், தட்டில் காசு போடாமல் சாமி கும்பிட்டால் சூடத்தை விட எரியும் பார்வை கொண்ட பூசாரியும், ஆங்காங்கே டிஜிட்டல் பேனர் வைத்து எல்லாரையும் இம்சிக்கும் குட்டி குட்டி அரசியல் தலைவர்களும், கடமை முடிக்க செல்லும் வீரன் தனது குறிக்கோள் ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்வான், மற்றவற்றை கண்டு கொள்ள மாட்டான் அது போலவே செல்லும் எதிர்புற வாகன ஓட்டிகளும் என அனைவரும் ஆஜர்.

நான் இதற்கு முன் நான்கு முறை இந்தியா சென்று வந்துள்ளேன் அப்பொழுதெல்லாம் தெரியாது மாற்றம் இந்த முறை தெரிந்தது விலை வாசியிலிருந்து, ஆங்காங்கே தென்பட்ட பாலங்கள் வரை. முன்பெல்லாம் வருடத்திற்கொருமுறை செல்வதால் அப்படி தெரியவில்லையா இல்லை இப்பொழுது இரண்டரை வருட இடை வெளியில் சென்றதால் அப்படி தெரிந்ததா தெரியவில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் மலர்ச்சிகானதாக இருந்தால் மகிழ்ச்சிதான்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP