அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 4
சென்ற மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்-ல் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது எனக்கு பக்கத்தில் அருகில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பயணம் செய்தார். படிப்பதற்காக ஒரு வரலாற்று புத்தகத்தை நான் எடுத்தவுடன் அவர் மிகவும் பிரகாசமானார். அது என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருந்தார், நானும் பதிலுக்கு விசாரித்த பொழுதுதான் தெரிந்தது அவர் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்று. அவர் பெயர் ராம.சுப்புராம் திருமயம் தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது நம்ம நாட்டுல மட்டும் ஏன் ஒரு சாதாரண குடிமகனுக்கு நியாயமான அரசாங்க வேலைகள் எதுவும் கையூட்டு இல்லாமல் நடப்பதில்லையே என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் "முதல்ல உங்கள மாதிரி கேள்வி கேக்குறவுங்க எல்லாம் அரசியலுக்கு வரணும். அரசியல்ல இருக்குறவுங்களுக்கும் குடும்பம் இருக்குதுல்ல அவுங்க வருமானத்துக்கு அரசியலை நம்பாமல் இருக்கணும், உங்களை மாதிரி ஆளுங்க வெளி நாட்டில் சம்பாதிக்கும் போதே தங்களது குடும்பத்திற்கு தேவையானவற்றை சேர்த்து விடுவீர்கள், அதனால் உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அரசியலை ஒரு தொழிலாக பார்க்காமல், சேவைக்கான ஒரு களமாக கருதி செயல்படுவீர்கள் அப்பொழுது நீங்கள் எதிர் பார்க்கிற மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறும்..." என்றார். கூடுதல் தகவலாக அவர் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சிங்கபூரில் வேலை பார்த்ததாகவும் அதனால் அவர் குடும்பம் வருமானத்திற்கு அரசியலை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார். ஒரு கணம் யோசித்து பார்த்தால் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதிலும் ஒரு குறை சொல்ல முடியும், ஏழையின் பிரச்சனைகளை அவர்களில் ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும் என்றும் வாதிடலாம். அரசியலை சேவைக்குரிய தளமாக மாற்ற இன்னும் பல வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம் சொல்லப்போனால் பல தலைமுறை தங்களது வாழ்நாளை பலியிட வேண்டி வரலாம், இதற்கு பேசாமல் அரசியலை ஒரு தொழிலாகவே அங்கீகரித்து விட்டால் என்ன..? எப்படி விப்ரோ, இன்போசிஸ் போன்ற கம்பனிகள் இருக்கிறதோ அது மாதிரி தி.மு.க,அதிமுக என இரண்டு நிறுவனங்கள். ஒரு நிறுவனம் எப்படி தனது பங்குகளை வெளியிடும் முன்பு தனது நிறுவனத்தின் குறைகளையும் நிறைகளையும் வெளியிடுகிறதோ அது போல தேர்தல் என்று ஒன்று வரும் பொழுது அந்தந்த கட்சிகளின் நிறை குறைகளை வெளியிடலாம். பொதுவாக வெகு சிலரே தன் மேல் உள்ள குற்றத்தை ஒத்துக்கொள்வதில்லை, அதுபோல்தான் ஒரு நிறுவனமோ அல்லது கட்சியோ இருக்கப்போகிறது, ஒரு நிறுவனம் வெளியிடும் குறைகளை சரி பார்க்க ஒரு தணிக்கை துறை இருக்கிறதோ அது மாதிரி ஏன் தேர்தல் ஆணையமோ இல்லை வேறு ஒரு தணிக்கை துறையோ செயல்படலாம். இப்படியெல்லாம் இருந்தால்தான் கார்ப்பரேட் காலத்தில் ஜனித்த வருங்கால தலைமுறைக்கு அரசியல் (கட்சிகளின்) மீதான நம்பிக்கை இருக்கும்.
பின் குறிப்பு: ஒரு அரசியல் வாதி இப்பொழுதுள்ள வசதி காலத்தில் முடிந்த அளவு தொடர் வண்டியில் எல்லாம் பிரயாணம் செய்வது என்பது நிச்சயம் ஆச்சர்யமான ஒரு விஷயம் தான்.
0 comments:
Post a Comment