யாருக்காக ஜனநாயகம்..?

அமெரிக்காவில் தற்பொழுது ஒரு தலை போகிற பிரச்சனையாக பார்க்கப்படுகிற ஒன்று, மக்களுக்கான மருத்துவ காப்பீட்டை அரசாங்கமே நடத்த விருப்பது குறித்துதான். இதன் பலனாக குறைந்த கட்டணத்தில் மருத்துவ காப்பீட்டை மக்கள் பெற முடியும், மேலும் தற்பொழுது உள்ள தனியார் மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை களைய முடியும் என்றும் அரசாங்கம் உறுதி அளிக்கிறது.
மக்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால், குறைந்த கட்டணத்தில் கொடுப்பதென்றால் அது கடைசியில் தங்கள் தலையிலயோ அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் தலையிலயோ "கூடுதல் வரியாக" தான் விழும் என்ற அச்சத்தின் காரணமாகவும், மேலும் அரசாங்கம் பல விஷயங்களில் இப்படித்தான் கையிலெடுத்து தோல்வி அடைந்திருக்கிறது என்றும், வாதிடுகிறார்கள்.
சரி அரசாங்கம் குறைந்தவிலையில் கொடுப்பதால் அது ஏழைகளுக்கு சாதகமாத்தானே அமையும் என்று நானும் மேலெழுந்த வாரியாக நினைத்தேன், ஆனால் இது சம்மந்தமாக இன்று (08/11) நடந்த ஒரு கருத்தரங்கு ஒன்றில் மக்கள் எடுத்து வைத்த வாதங்கள் எனது எண்ணத்தை மறுபரீசிலனை செய்ய வைத்தது. அதற்கு முன் கருத்தரங்கு எப்படி நடந்தது என்பதை பார்க்கும் பொழுது சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் அமெரிக்காவில் நன்கு வேரூன்றி இருக்கிறது என்பதை பறைசாற்றுவதாகவே இருந்தது. நான் பார்த்தது பென்சில்வானியா மாகாணத்தின் செனட்டர் (நம்மூர் எம்.பி) ஆர்ளேன் ஸ்பெக்டர், தனது மாகாண மக்களுக்கு அமுல் படுத்தப்போகிற இந்த திட்டத்தை பற்றிய ஒரு கலந்தாய்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அதன் நேரடி ஒளிபரப்பை தான். ஸ்பெக்டர் அவர்களுக்கு என்பது வயது, இந்த வயதிலும் அவர் நிதானமாகவும் பொறுப்பாகவும் பதில் அளித்த விதத்தை வைத்துதான் அமெரிக்காவின் ஜனநாயகம் பற்றிய நன்மதிப்பை தோற்றுவித்தது. இதே மாதிரி நம்மூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களோ இது மாதிரி ஒரு சட்டம் அமுல் படுத்துவதற்கு முன் அவர்களது தொகுதி பொது மக்களுடன் ஒரு கலந்தாய்வு செய்தால் எப்படி இருக்கும்..?
இது நம்மை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டை நமது ஜனங்களும் அறிந்து கொள்ள உதவுமே, மேலும் காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுறது, இல்லை ஓட்டே போடாமல் டிவி பார்த்துகிட்டு வீட்ல உட்காந்து இருக்கிறது, சட்டம் என்னவென்று புரியாமலே அதை பயன்படுத்த நினைப்பவர்களும் நிச்சயம் அவர்களது தவறை புரிந்து கொள்ள உதவும். நிச்சயம் நாம் இதை நடத்தலாம், ஏன்னா அமெரிக்காவிடமிருந்து டிஸ்கொதெஃ, பிசா, பௌலிங், அடுக்கு சினிமா கொட்டகைகள், மால் என எல்லாவற்றையும் இறக்குமதி செய்யும் நம் நாட்டில் ஏன் இந்த மாதிரி ஜனநாயகத்துக்கு தேவையான (ஆரோக்கியமான) விஷயங்களை இறக்குமதி செய்யக்கூடாது..? அல்லது முடியாது ...? ஜனநாயகம் யாருக்கானது ..மக்களுக்கானது தானே அவுங்களுக்கு தேவையானதை ஏன் அரசாங்கமே முன்னின்று "இறக்குமதி" செய்யக்கூடாது...?


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP