வெல்லத்தான் நினைக்கிறேன் -- பா (ஹிந்தி)



இந்த படத்தின் டிரைலேர் பார்த்தேன். ஆஹா அற்புதம் ஒரு ரசிகனாக இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்று இந்த படத்தின் அவுட்லைனை படித்தவுடனேயே  நினைத்தேன், அதாவது அபிஷேக்பச்சனின் மகனாக அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று கேள்வி பட்டவுடனேயே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதெல்லாம் போக, இளையராஜாவின் இசை இந்த டிரைலரை பாருங்க (ஆடியோ உடன்) சும்மா பின்னி இருக்கிறார் ராஜா. இந்த இசை நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான் (அது ஒரு கனா காலம் பாடல்) . ரொம்ப நாளா நம்ம மக்கள் ஒரு விஷயம் சொல்லுவாங்க (ராஜா இசையை புரிந்தவர்கள் அல்ல) தமிழர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் ராஜா அப்படின்னு, ராஜாவின் பாடலை ஹிந்தி பேசும் மக்களும் கேட்டு ரசிக்கலாம் என்ன சரியான முறையில் அது அங்கே கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால் இதை ஒரு கடமையாகவே எடுத்துக்கொண்டு செயல்படும் பால்கி (இவர் தான் இந்த படத்தின் இயக்குனர்), அவர்கள் "ராஜாவின் இசையை இந்தியாவின் ஒரு பகுதிதான் (தெற்கு பகுதி) கேட்டிருக்கிறது இன்னொரு பகுதியும் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஏற்கனவே போட்ட பல பாடல்களின் மெட்டுகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். இவருடையை முதல் படமான சீனிகம் (CHEENIKUM) பாடல்கள் மிகப் பெரிய ஹிட் என்பதை ஹிந்தி நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையும் அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இந்த படத்தில் ராஜாவின் "சங்கத்தில் பாடாத.." மெட்டு  ஹிந்தியில் பாட போகிறது. இந்த படத்தின் டிரைலேர் பாருங்க அப்புறம் சொல்லுங்க ...


Read more...

நட்பு




வாழ்க்கை நாணயத்தின் பூ பகுதி
சாதி, மதம்,பேதம்  மறுத்த ஒரு பிரிவு
வானவில் தொலைத்த வண்ணம்
இதழ்,முத்தம் இவற்றைவிட நெருக்கமானது
சோக மேகங்கள் சூழும் போது இன்ப மழை தூவும் இனிய தட்ப வெப்பம்
உறவுப் பூக்களில் உதிரம் உதிர்த்த உதிரா  பூ


Read more...

உன்னைப்போல் ஒருவன் --- ஒரு பார்வை



ஒரு வழியா அந்த DVD  கடைக்காரர்  உன்னைப்போல் ஒருவன் DVD ஐ இந்த வாரம்தான் கொடுத்தார்.பொதுவா கமல் படங்களை நான் திரை அரங்கில்தான் பார்ப்பது ஆனால் இந்த முறை அப்படி செய்ய முடியவில்லை. (காரணம் இன்னொரு தனி பதிவில்)  நான் "THEWEDNESDAY" படத்தை கமல் எடுக்கப்போகிறார் என்பதைஅறியும் முன்னரே பார்த்தது.
இந்த படத்தை பற்றி அடிச்சு துவைச்சு நார் நாரா கிழிச்சு வலைப்பதிவில் தொங்க விட்டாச்சு, இனிமே நான் இதுல புதுசா சொல்ல ஏதுமில்லை போல தான் தோன்றுகிறது. ஆனால் அந்த கிழிசலை எல்லாம் கொஞ்சம் சேர்த்துவைத்து தைக்கலாம்னு நினைக்கிறேன்.
ஆனா அதுக்கு முன்னாடி கை வலிக்க குலுக்கலும், வாய் வலிக்க பாராட்டுகளும் மோகன் லாலுக்கு. கமலை சர்வசாதாரணமாக ஓரம் கட்டியிருக்கிறார் இந்த நடிப்பு புலி.
கிழிசல் (குற்றச்சாட்டு) --1 : "THE WEDNESDAY" மாதிரி இந்த படம் இல்லை.
ஒட்டு (நம்ம பதில்) -- 1: ஆமாம் இல்லை தான் ஏன்னா அந்த படத்தில் நடிச்சவங்க இந்த படத்தில் நடிக்கலை(எப்படி). பொதுவா நம்ம ஊர்ல இந்த படத்தை நான் ENGLISH லையே பார்த்துட்டேன் அது மாதிரி இல்லன்னு நிறையப்பேர் நிறைய தடவை சொல்லி கேட்டிருக்கிறேன். பாதிப்பு இல்லாத படைப்பு எதுதாங்க..? எல்லாமே இந்த உலகத்துல அப்படி தோன்றியது தான். நாம உட்பட. இங்கே எப்படி செய்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். நம்ம ஊர்ல ஒரு பாலத்தை இங்க நியூயார்க்-ல உள்ள ஒரு பாலத்தோட ஒப்பீட்டு சொல்லலாமா..? இருந்தாலும் நம்ம ஊருக்கு அது தனியா நன்மை சேர்க்குதுதானே? கமல் சொல்ற மாதிரி சொல்லனும்னா "வால்மீகி - ராமாயணம், கம்பர்-ராமாயணம் எது சிறந்தது..?" ரெண்டுமே நல்லது  இல்லைன்னு சொன்னா அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா அவன் எடுத்தா நல்லா இருக்கும் நாம எடுத்தா இப்படித்தான், அப்படின்னு நம்மை நாமே குறை பட்டுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அதுவும் நல்லா இருந்துச்சு இதுவும் நல்லா இருந்துச்சு.
கிழிசல் -- 2:  கமல் ஒரு நாத்திகவாதி அதுனால தான் வேணுமின்னே ஒரு ஹிந்து தீவிரவாதிய காட்டியிருக்கிறார். ஒரிஜினல் அது மாதிரி காட்டவில்லை.
ஒட்டு -- 2: ஹிந்து தீவிரவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து வருவதை சுட்டி காட்டுவதாக ஏன் அதை எடுத்துக்கொள்ளகூடாது. இப்ப உள்ள கருத்து சுதந்திர உலகில் காந்தியை,பாரதியை எல்லாம்  கூட மதவாதியா பார்க்கும் கொடுமை நடக்கும் போது இந்த மாதிரி குற்றச்சாட்டை கமல் பெருசா எடுத்துக்க வேணாமின்னு நினைக்கிறேன். இது கருத்து சுதந்திரத்தின்(!?) ஒரு பகுதி.
கிழிசல் -- 3: கமல் ஒரு ஹிந்து வெறியர், அதாவது மனசளவில், அதனாலத்தான் முஸ்லீம்  மட்டும் தீவிரவாதம் செய்வது போல் காட்டியுள்ளார்.
ஒட்டு -- 3: அப்ப முன்னாடி சொன்ன கிழிசல் பொய்யா..? சரிங்க கமலை விடுங்க ஒரிஜினல் "THE WEDNESDAY" படத்துல அப்படித்தானே காண்பிச்சாங்க அதுல நஸ்ரூதின்ஷா என்ற ஒரு முஸ்லீம் தானே நடித்திருந்தார்...? ஏன் அந்த படத்தை குறை சொல்லல..? சரிங்க அவ்வளவு ஏன் ஒரு முஸ்லீம் போலீஸ் ஆபிசர் தானே தீவிரவாதிகளை மிக சரியாக கையாளுவதை போல காண்பிக்கிறார்..? விஜயகாந்த் படத்துல கூடத்தான் காண்பிச்சாங்க இது மாதிரி அப்பவெல்லாம் இந்த மாதிரியான விமர்சனம் வரலையே..? வடிவேலு சொல்ற மாதிரி  ஒரு பத்து பேரு மூத்தற சந்துக்குள்ள வைத்து அடி அடின்னு அடிச்சுட்டு இன்னொரு வண்டில ஏத்தி அங்க உள்ள முட்டு சந்துல வச்சு அடி அடின்னு அடிச்சுட்டு, இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் நல்லவன்டா பேசாம விட்டுருவோம் அப்படின்னு கமலை விட்டாதான் உண்டு போல. இதுக்கு மேல இதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
கிழிசல் -- 3: ஒரு பொண்ணு சிகரட் குடிக்கிற மாதிரி காண்பிக்கிறது எல்லாம் ஓவர்.
ஒட்டு -- 3: ஏன் சென்னைல சாப்ட்வேர் ல, மல்டி நேஷனல் பேங்க் ல வேலை செய்யுற இடத்துல உள்ள புகை பிடிக்கும் இடத்தை போயி பார்த்ததில்லையா..? யாரை காட்டி இருக்கிறார் ஒரு தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபர் பெண்ணை தானே அப்படி காண்பிக்கிறார். கிராமத்தில் உள்ள குப்பம்மாவும்,சுப்பம்மாவும் புகை பிடிக்கிற மாதிரியா காண்பித்துள்ளார்..? உங்களுக்கெல்லாம் ஒரு புள்ளிவிவரம் தெரியுமா உலகில் அதிகம் புகை பிடிக்கும் பெண்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இருப்பது மூன்றாமிடத்தில். இதுல எது ஓவர்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

நிறைகள்: குத்து பாட்டு இல்லாமை, ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லாமை, காட்சி அமைப்புகளில் நிதானம் தெரிந்தாலும், காட்சி ஓட்டத்தில் அது தெரியாமல் இருத்தல், முக்கியமா படத்துல காமெராவும்,இசையும் தேவையான அளவே தங்களின் பங்களிப்பை செய்திருப்பதே பெரிய பிளஸ்.

குறைகள்: வேக வேகமாக அதுவும் ஆங்கிலத்தில் பேசப்படும் வசனங்கள் நமக்கு ஒத்து வருமா..? "நம்ம பய மெதுவாத்தான் வருவான்.." அப்படின்னு வசனம் எழுதுனவர் படத்துலையே இப்படியான்னுதான் கேட்க தோணுது. "ஒன்ன மாதிரியான ஆளுகிட்ட எல்லாம் முதலமைச்சர் பேசுவாரா..?" அப்படின்னு மோகன்லால் கேட்டதும் "என்கிட்டே ஒட்டு கேட்டு வர்றப்ப அப்படி எதுவும் சொல்லலியேன்னு.." கமல் சொல்வதும், நல்லாத்தான் இருக்குது ஆனா எல்லா படங்களுக்கும் சென்சார் அனுமதிக்குமா..? இல்லை தற்போதைய அரசுதான் அனுமதிக்குமா..? கூந்தல் உள்ளவ முடிஞ்சுக்குறா அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.


Read more...

காட்சிகளில் கவிதை -- ஒரு பாடல் பார்வை

 பாலுமகேந்திரா "காமிரா கவிஞர்" என்று சொல்லப்படுபவர். இந்த காட்சியை பாருங்கள் அந்த பாராட்டுதலுக்கு அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்று தெரிந்துகொள்வீர்கள் . இந்த பாடலில் வைரமுத்துவின் சொல்லாட்சியும் அற்புதம். பொதுவாக இந்த மாதிரியான தத்துவ பாடலில் "எல்லாமே பொய்.. ஏன் வாழவேண்டும்" என்றெல்லாம் தொனிக்க பாடல் எழுதுவார்கள். ஆனால் இந்த பாடலில் இறுதியில் "பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.." என்று வாழ்வதற்கு அச்சாரமாயுள்ள உழைப்பை பேணும் படி சொல்வது மிகவும் அருமை. இந்த பாடலை காட்சி படுத்திய விதத்தை பாருங்கள் எந்தெந்த வரிகளுக்கு எந்த மாதிரியான காட்சியமைப்பு என்பதோடு அந்த லைட்டிங் அமைப்புகளும் மனதை இந்த பாடலோடு ஒன்றச்செய்து விடுகின்றன. இன்னொருமுறை பாருங்க வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.


Read more...

அட ஆமாம் இல்லை


"அட இதுதான் இதுல மேட்டரா..?" "அட இது எப்படி நமக்கு தோணாமல் போயிற்று..?" "அட இதுல இப்படி ஒரு ஆச்சர்யம் இருக்கா..?"  இப்படி நம்மை கேட்க வைத்த
 சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கலாம். நம்மில் ஏற்படும் பெரிய பெரிய மாற்றங்களுக்கு, நல்ல சிந்தனைகளுக்கு  அன்றாடம் நாம் சந்திக்கும் சாதரண  மனிதர்களின் ஒரு சொல் கூட காரணமாக இருக்கலாம்.      சில விடயங்கள் நாம்  எதிர்பார்க்காத அல்லது மிகவும் பரிச்சயமில்லாத  ஒருவர் மூலமாக நம்மை வந்தடையும் ஆனால் அதைத்தான் நாம் வாழ்கை முழுமைக்கும் பயன்படுத்துவோம். சில பேர் சொல்வதை போல "சத்தியசோதனை" படித்தேன் சத்தியம் தவறாமல் நடக்க கற்றுக்கொண்டேன் அப்படின்னு என்னால சொல்ல முடியல. ஏன் நீங்க கூட அப்படித்தான்னு நான் நினைக்கிறேன். ஒரு சில விடயங்களை ஒரு சிலர் சொல்வதால் மட்டுமே அது நமக்கு பிடித்துபோகிறது. ஆனால் பெரும்பாலான விடயங்கள் நமக்கு பிடித்து போவதற்கு அதை சொல்லும் நபரை விட சொல்லப்படும் காலமும் நேரமும் முக்கியம் அப்படின்னு நான் நினைக்கிறேன்.அது வரலாற்று  உண்மையாக இருந்தாலும் கூட.
ஒரு நண்பரை, நண்பரின் உறவினர் என்று கூட சொல்லலாம், அவர் பெயர் கோபி. அவருடன் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது காரில் ஒரு தத்துவ பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அவர் கேட்டார் "பெரும்பாலனவர்களுக்கு ஏன் தத்துவ பாட்டு பிடிக்குது தெரியுமா..?" அப்படின்னு "தெரியலையே" அவர் சொன்னார் "நம்மில் பெரும்பாலனவர்கள் நிச்சயம் தத்துவ பாடலில் அடிக்கடி வரும் தோல்வி,துரோகம்,ஏமாற்றம் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம் அதனால்தான் அது பிடிக்கிறது". என்றார். நான் அப்படியே ஒரு கணம் உறைந்தே போனேன். அட ஆமாம் இல்லை  என்று தோன்றியது. இதுல மிகப்பெரிய உண்மை இருக்குது. எந்த ஒரு சிறு நிகழ்வும் நம்மை பாதிக்கிறது என்றால் அது நம்மை கடந்து போனதாக இருக்கும் இல்லை நம்மை கடக்க கூடாது என நம் மனம் எண்ணியதாக இருக்கும். அதில் ஒளிந்திருப்பது ஒரு சுயபட்சாதாபமோ அல்லது சுயநலமோ தான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பாட்டு கேட்டு வருகிறேன், இது நமக்கு தோணலையே. அப்படின்னு அவர் சொன்னதும் தோணியது. என்னை விட வயதில் பத்து வயது சின்னவர்தான் என்றாலும் அவர் சொன்னதை நான் பல சந்தர்பங்களில் நினைப்பதுண்டு. அவரையும் தான்.
அமெரிக்க கனவில் மிதந்து கொண்டே அலுவலகம் போன நாட்களில் அங்கு கூட வேலை பார்க்கும் நண்பர் சேதுசரவணன் என்பவர் கேட்டார். "நாம எல்லாம் ஏன் அமெரிக்கா போயி அங்க வெள்ளைகாரனுக்கு உழைச்சு கொட்டுறதை பெருமையா நினைக்கிறோம்னா, அதுக்கு காரணம் நம்ம உடம்புல ஓடுற அடிமை ரத்தம்தான்" அப்படின்னு சொன்னார். இதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது அது இப்படி நீ அப்படி சொல்லலாம்னு சொன்னேன் சண்டை போட்டேன். ஆனா அமெரிக்கா வந்த பிறகும், அமெரிக்காவிலிருந்து இந்தியா போய் வரும்போதும், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அவர் சொன்னது உண்மைதான் என உணரவைத்தன. இங்கு நான் பார்க்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஒரு அமெரிக்கன் நண்பர் இருக்கிறார் என்று சொல்வதையே பெருமையாக கருதுகின்றனர்.  (இங்கு நான் அமெரிக்கன் என்று குறிப்பிடுவது அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்களை. ஆமாம் வெள்ளையர்கள் ஒன்றும் இந்த அமெரிக்க நிலத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல இங்கிருந்து செவ்விந்தியர்களை வெள்ளைக்காரன் பாணில சொல்றதுன்னா நேடிவ்  அமெரிக்கன்ஸ், அவுங்களை எல்லாம் துரத்திட்டு ஆக்கிரமிச்ச பகுதிதான் இது).  அதாவது வெள்ளைக்காரர்கள் மன ரீதியாக நம்மை மாற்றியமைத்ததுதான் இதற்கான காரணம். நம்ம பாட்டன், முப்பாட்டன் மட்டுமல்ல நமக்கும் அதே உணர்வு இருக்குன்னா அதன் வீரியம் புரிகிறது.  அட ஆமாம் இல்லை ன்னு நானும் அதை சந்திக்க நேர்ந்த பொழுதுதான் தோன்றியது.  "அப்ப நாம காலா காலத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து இந்த மண்ணுக்கு உரமாக வேண்டியது தானா..?" அப்படிங்குற ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை அவருக்கிட்ட கேட்டப்ப அவரு சொன்னது "நாம வெள்ளைகார வுங்கலால மட்டுமல்ல பல வேற்று தேசத்து நாட்டவர்களால் படையெடுக்கப்பட்டு ஆளப் பட்டிருக்கிறோம். எனவே அது அவ்வளவு சீக்கிரமா நம்ம உடம்புல(மனசுல) இருந்து போகாது, ஆனா நாம கொடுக்கிற நல்ல சூழலால நம்ம குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இந்த மாதிரியான அடிமை புத்தியிலிருந்து விடுபட நிறைய வாய்ப்பிருக்குது. இது எனக்கு எங்க சிதம்பரம் காலேஜ் பேராசிரியர் ஒருவர் சொன்னார்". இவ்வாறாக நண்பர் சொன்னதை நான் பலமுறை உணர்ந்ததோடு மட்டுமல்ல வெள்ளைக் காரர்களுக்கென்று கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும், அதாவது எதிரிலிருப்பவன் வெள்ளைக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம், குறைத்துக்கொண்டுள்ளேன். அப்ப நீ சுத்தமா அதை போக்கலையா அப்படின்னு கேட்டா நண்பர் சொன்னதுதான் "அவ்வளவு சீக்கிரம் இந்த அடிமை புத்தி போகுமா..?"
இது மட்டுமில்ல இன்னும் பல விடயங்கள்  நம்மை சும்மா அப்படி கடந்து போகிறவர் கூட சொல்லிவிட்டு போயிருக்கிறார், அவற்றை அப்பப்ப உங்ககிட்ட சொல்றேன்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP