இலங்கை பிரச்சனையும்... அனுமார் வாலும்.
1983-- என்று நினைக்கிறேன் எங்கள் வீட்டிற்கும் எதிர் வீட்டில் உள்ளவர் இலங்கை சென்றார். அப்பொழுதெல்லாம் வெளிநாடு சென்றாலே பணம் சம்பாதிப்பதற்காகத்தான் செல்வர் என்பது எனது எண்ணமாய் இருந்து வந்தது. அது ஓரளவு உண்மையும் கூட. அப்படி சென்று திரும்புவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று பார்ப்பது ஒரு வழக்கம், அப்பதானே சாக்கலேட் , பிஸ்கட் எல்லாம் கிடைக்கும் (எப்படி..!). அப்படி அவரை பார்க்க சென்றிருந்த போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது, "கொழும்பு மிகவும் சுத்தமா தண்ணீர் போட்டு துடைத்து வைத்தது போல இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட வாகன விதி முறைகள் என்று பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது. மேலும் நம்ம ஊர் ரெண்டு ரூபாய் அந்த ஊர் ஒரு ரூபாய்க்கு சமம்.." அப்படின்னு சொன்னார். இப்படி அறிமுகமான இலங்கையில் அடுத்த சில மாதங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விட பட்டதாக சொல்லி எங்க பள்ளி கூடத்தில் திரைப்படம் காண்பித்தார்கள். அதை காப்பாற்ற இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் செயல் பட்டு வருவதாகவும் அதன் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் ஒன்று எங்கள் ஊரில் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமிழ் பேசினாலும் விநோதமாகவே இருந்தது அந்த மொழி, அப்புறம் தான் தெரிந்தது அதுதான் சுத்த தமிழ் என்று. ஆனால் காலம் ஒருண்டோடினாலும் அங்கு நடக்கும் விடயங்கள் எதுவும் மாறவில்லை. இலங்கேஸ்வரனை எதிர்க்க சென்ற அனுமன் தனக்கு சபையில் மரியாதை செய்யப்படாதது கண்டு தனது வால் மூலம் இருக்கை ஏற்படுத்திக்கொண்டார் என்று இராமாயணம் சொல்கிறது. அந்த வாலை போலவே வளர்ந்து கொண்டே போவது நாம் சார்ந்த தமிழ் சமுதாயத்துக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகத்திற்கும் நல்லதில்லை.
இந்தியா ஏன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை, ஆட்சியிலிருக்கும் நடுவண் அரசு காங்கிரஸ் அதன் முக்கியமான தலைவரான ராஜிவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் என்ற எண்ணமும் ஒரு காரணம். விடுதலை புலிகளை ஆதரிப்பவர்களை கேட்டால் அது ஒரு தவறு அதை மறந்து விடுங்கள் என்று சுலபமாக சொல்வதுண்டு. அதே மாதிரி ஏன் விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை மன்னித்திருக்க கூடாது அவர் தவறு செய்யிதிருக்கிற பட்சத்தில் என்று காங்கிரசும் ஒரு கேள்வி எழுப்பலாம். வன்முறைக்கு வன்முறை தீரவில்லை என்ற தீர்வினை மட்டுமே இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக தரமுடியும். இதை உணர்ந்து இலங்கை அரசும் அதன் வன்முறை போக்கை கை விடுத்து பேச்சு வார்த்தைக்கு உடன் படவேண்டும். அமெரிக்க நாடுகளும், ஐரோப்பா நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிடுவது இலங்கை அரசின் வன்முறை போக்கை கை விடுக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதை விடுத்து படையை அனுப்புவது போர் புரிவது என்று மீண்டும் இன்னொரு பிரச்சனைக்கு விதையாவதை விட, அமைதி பேச்சின் மூலம் விடை கண்டு உலகில் நடை பெரும் இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பிரச்னையை முன்னுதராமாக ஆக்கலாம்.
0 comments:
Post a Comment