தேர்தல் சொல்லிய பாடங்கள்...
இந்த தேர்தல் முடிவுகள் பல நல்ல பாடங்களை அரசியல் கட்சிகளுக்கு கற்று கொடுத்திருக்கிறது. இதிலிருந்து பாடங்களை கற்று அடுத்த கட்டத்திற்கு செல்வது அந்தந்த கட்சி தலைவர்களின் கைகளில்தான் உள்ளது.
பாடம்-1: மக்கள் எல்லா விசயங்களையும் தெளிவாக சீர் தூக்கி பார்த்து ஓட்டளிக்க தவறவில்லை. குறிப்பாக தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்துள்ளனர்.
பாடம்-2: தேர்தலுக்கு தேர்தல் சுய லாபத்திற்காக அணி மாறிவிட்டு ஒப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லிவிட்டு செல்லும் அரசியல் கட்சிகளுக்கு இனியும் பொறுமையாக வாக்களிக்க தயாராக இல்லை .
பாடம்-3: இலங்கை பிரச்சனையில் இங்கிருந்து கொண்டு குரல் கொடுக்கும் "பின்னணி குரலார்களை" இனியும் நம்ப தயாராக இல்லை. குரல் கொடுப்பவர்கள் ஒரு உண்மை நிலையை இங்கே எடுத்து சொல்லவில்லை, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகாவே ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அந்த இடைப்பட்ட காலத்தில் ஏன் தங்களது அரசியல் ரீதியான உறவுகளை மற்ற நாடுகளுடன் வளர்த்துக்கொள்ளவில்லை..? குறிப்பாக இந்தியாவுடனான. இன்று தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தவுடன், உலக நாடுகளின் சொல்படி எல்லாம் கேட்கிறோம் என்று ஆதரவு கரம் நீட்டுவது ஏன்...? அதை செய்ய வேண்டியது ஜன நாயகத்தில் கலக்க விரும்புவர்கள் செய்யவேண்டிய ஒன்று. அதை செய்ய மறந்ததன் மூலம் அல்லது மறுத்ததன் மூலம் அவர்கள் அடைந்ததுதான் இன்றைய அவர்களது நிலை. அதை ஏன் இங்கே ஆதரிப்போர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் அதை புரிந்துகொண்டுள்ளனரா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் தங்களை மதித்து தங்களை தேடி பதவி இருக்கும் போது வராதவர்கள் பதவி போன பின்போ ஆபத்து நேரத்தில் கூப்பாடு போடுவதையோ அவர்கள் கேட்க தயாராக இல்லை. பாலசிங்கம் உயிரோடிருந்திருந்தால் அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க பட்டிருந்தால் நிச்சயம் அவர் இதை நடத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். தனி ஈழமோ, ஒன்றினைந்த உறவோ அதை உலக நாடுகளின் தலைவர்களை நேரடியாக சந்திப்பதன் மூலமாக நிறைவேற்றியிருக்க வேண்டியது அவர்களின் கடமை. அதை அவர்கள் விடுத்து. இன்று சோனியா வரவில்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..?
பாடம்-4: இயக்குனர் சீமான் போன்றோரின் நிலை மாறிய நிலை கண்டு மக்கள் சற்றே குழம்பியும் போனார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும், வேலு நாச்சியாருக்கே வாக்களியுங்கள்... போன்ற வசனங்கள் நன்றாக இருந்தாலும் காட்சியுடன் ஒட்டவில்லை. அப்படி என்ன சீமான் அவர்களே உங்களுக்கு நம்பிக்கை தந்தது ஜெ.வின் பேச்சு? மக்களுக்கு புரிந்தது அதாவது "உங்கள் சொந்தங்களுக்கு" புரிந்தது. இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
பாடம் 5: அ.தி.மு.க தலைமைக்கு தேர்தல் நெருங்க நெருங்க தான் மக்கள் பிரச்சனைகள் நினைவுக்கு வந்து அது சம்மந்தமாக அறிக்கை விடுவதும், அதன் முழு வீரியம் தெரியாமல் அதை பற்றி பேசுவதும், மாற்று கட்சி தலைவர்களை வரைமுறையின்றி விமர்சனம் செய்வதும்தான் ஒரு "வெற்றி வீராங்கணை"க்கு அழகா...?
பாடம் 6: இலவசம் நடுத்தரத்திற்கு வேண்டுமானால் எரிச்சலைத்தரலாம் ஒரு நாளுக்கு வெறும் 20 ரூ சம்பளம் வாங்கும் ஏழைகளுக்கு அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அவை தங்களை வந்தடைந்ததா என்பதை பற்றி மட்டுமே. நலத்திட்டங்களை அறிவித்து விட்டு அதைப் பற்றி பேச்செடுக்காமலே காலம் கடத்துவது என்பதெல்லாம் மலையேறி போன காலமாகிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் சொன்னதை நிறைவேற்றியவர்களை மக்கள் வரவேற்கவே செய்வார்கள்.
இப்படி பல பாடங்களை சொல்லியிருக்கிறது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல். தயவு செய்து மக்களை புரிந்து கொள்ளுங்கள் அரசியல் வாதிகளே, ஏனெனில் நீங்கள் அவர்களுக்காகத்தான்.
0 comments:
Post a Comment