வால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்
ராஜாவின் பேச்சு சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறை அல்ல ஆனால் இந்த முறை நடந்திருக்கும் தோற்றம் ராஜாவை பற்றிய தோற்றத்தை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. ராஜா சமீபத்தில் நடந்த வால்மீகி பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது இது தான் (ஒரு இணையதளத்தில் வந்த ஒளிஒலி காட்சியை பார்த்த பிறகு இதை எழுதுகிறேன்
இயக்குனர் மிஷ்கின் பேசும் பொழுது ".. இப்பொழுதுள்ள உதவி இயக்குனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் ஒரு படமாவது தயவு செய்து ராஜா சாருடன் பண்ணுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை ஒரு முழுமை பெறும். நான் அவருடன் படம் பண்ணும் பொழுது பலரும் என்னை பயமுறுத்தினார்கள், அவர் சீனியர் நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்க மாட்டார். நம்புங்கள் அவர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் என்னை கலந்தாலோசித்த பிறகே பண்ணினார்..." இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், " சினிமா விழாக்களில் நான் அதிகமாகப் பங்கேற்பதில்லை. அதற்கு காரணம், ஒன்று தன்னைப் பற்றி அதிகம் புகழ்ந்துபேச வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டும். பெரும்பாலும் உண்மையைப் பேச முடிவதில்லை.
மேடைகளில் பேசும் பலரும் மனதார வாழ்த்துவதில்லை. சரி, ஏதோ நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் வாழ்த்துகிறார்கள். உண்மை இல்லாத இடங்களைத் தவிர்ப்பதற்காகவே விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். விகடன் நிறுவனத்துக்காக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன்.
ஒரு புதிய இயக்குநரின் படத்தில் பணியாற்றுவது குறித்து பலரும் பேசினார்கள். நான் ஏற்கெனவே பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், இளைஞர்கள் பலரும் வளர்ந்த பின், 'இமேஜ்' என்ற வளையத்துக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டாலே இப்போதுள்ள இயக்குநர்களை இமேஜ் ஆட்டிப்படைக்கிறது. வெற்றிப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஆனால் நல்ல படத்தைத் தருவதுதான் முக்கியம். பணத்தை மட்டுமே தருகிற வெற்றி முக்கியமல்ல.திறமையுள்ள புதுமுக இளைஞர்களை ஊக்குவிப்பதுதான் என் லட்சியம். நான் இப்போதுள்ள நிலைக்குக் காரணம் அன்று பஞ்சுஅருணாசலம் என்னை ஊக்குவித்து வாய்ப்பளித்ததுதான். அதனால்தான் ஷங்கரின் உதவியாளர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அவருடைய திறமைக்காக இசையமைத்தேன்.
வெற்றி என்றால் அர்த்தம் என்ன? வெற்றி பற்றி நாம் பேசக்கூடாது. ஓடுகிறவன், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடினால்தான் வெற்றி. நதியைப்போல, காற்றைப்போல, வானத்தைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.சப்தஸ்வரங்கள்தான் எனக்கு உறவினர்கள். வேறு யாரும் கிடையாது. இங்கே டைரக்டர் மிஷ்கின் பேசும்போது, உதவி இயக்குனர்கள் எல்லோரும் இயக்குனராகும்போது, ஒரு படத்திலாவது என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்.
இந்த மேடையில், எனக்கு உள்ள ஒரே மீடியேட்டர் மிஷ்கின்தான். எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார். எனக்கு யாரும் தேவையில்லை. நான் ராகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் என்னை, "இங்கேயே கிடடா நாயே" என்று சொல்லிவிட்டான். அந்த சப்தஸ்வரங்களுடனே நான் கிடக்கிறேன். அங்கிருந்து நான் வெளியே வரவே மாட்டேன்,'' என்றார் இளையராஜா.
இங்கே இளையராஜா சொன்னதை நான் இப்படித்தான் பார்க்கிறேன் .. "எனக்காக இங்கே பரிந்து பேச மிஷ்கின் மட்டும் தான் இருக்கிறார். அதுவும் தேவை இல்லை ஏனெனில், நான் ராகங்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருப்பேன். ஒருவர் வேலை கொடுத்துதான் நான் இசையை தொட வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை அது கூடவே வாழவேண்டும் என்பது இறைவன் எனககு இட்ட கட்டளை அதன் படி நான் வாழ்கிறேன்".
இங்கே எல்லாமே வியாபாரமாகி போய்விட்டதே என்ற வருத்தம் ராஜாவை ரொம்பவே வாட்டி விட்டது என்றே தோன்றுகிறது. தன்னை அறிமுகப் படுத்திய பஞ்சு அருணாச்சலத்திற்கு இன்றைய தேதி வரை இலவசமாகவும், தனது பால்ய கால நண்பரான சங்கிலிமுருகன் படத்திற்கு மிக சிறப்பான பாடல்களை தருவதுடன் தொடர்ந்து அவர் படங்களுக்கு கால்ஷீட் தருவது, பாலு மகேந்திரா,கமலகாசன் போன்றவர்களின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது, போன்றவை வியாபாரத்தையும் மீறி ராஜா எதிர்பார்க்கும் அந்த ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைப்பதானால்தான். இதை அனைவரும் அறிவர், ராஜா அதை மிஷ்கின் இடத்திலும் எதிர் பார்த்து ஏமாற்றத்தின் மூலமும் அப்படி பேசியிருக்கலாம்.
இது எல்லாத்தையும் விட முக்கியம் வால்மீகி பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருப்பது தான். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. குறிப்பாக "கூட வருவியா ..." நம்மையும் இசையின் கூடவே இழுத்துக்கொண்டு போவதை நீங்களும் உணர்வீர்கள்.
இதை போன்ற இசை தருகிற ராஜா போன்றவர்களை தயவு செய்து சின்ன சின்ன காரணங்களை காட்டி ஒதுக்காதீர்கள் அது நம்மை போன்றவர்களுக்கு தான் பேரிழப்பு..(நம்மை என்று நான் சொல்வது தமிழர்களை மட்டுமல்ல .. இசை ரசனை கொண்ட அனைவரையும் தான்.)
0 comments:
Post a Comment