வித்தியாசத்திலும் ஒரு வித்தியாசம்
ஹிந்து ஆங்கில பத்திரிக்கையில் வாராவாரம் "பிடித்தது -- பிடிக்காதது" என்ற தலைப்பில் பிடித்த படத்தை பற்றியும் பிடிக்காத படத்தை பற்றியும் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் சொல்வது வழக்கம். இது ஒரு வித்தியாசமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரி சிலர் சொல்லி வருவர் இந்த வாரம் "பார்த்திபன் கனவு" பட இயக்குனர் கரு.பழனியப்பன் சொல்லி இருந்தார் வித்தியாசமாக அதே சமயம் சுவாரஸ்யமாக இப்படி....
எனக்கு "வாரணம் ஆயிரம்" படம் பிடிக்கும் ஏன்னா ஒரு தந்தை - மகனுக்கு இடையேயான உறவை இந்த அளவுக்கு கேவலமாக யாரும் சொன்னதில்லை. அதுவுமில்லாமால் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் போது இன்னும் நிறைய மெனக்கிட வேண்டும் என்று இந்த படம் சொல்லித்தந்தது. அது மட்டுமில்லாமல் கெளதம் மேனன் என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு வெறும் காட்சிகளின் கோர்வை மட்டும் இந்த மாதிரி படத்திற்கு போதாது நல்ல களமும் அவசியம் என்று சொன்னதற்காக இந்த படம் எனக்கு பிடிக்கும்.
எனக்கு பிடிக்காத படம் "அவள் அப்படிதான்" படம். இந்த படத்தை ருத்ரையா இயக்கி இருந்தார், இந்த படம் வெளி வந்த ஆண்டும் நான் பிறந்த ஆண்டும் ஒண்ணுதான். இந்த படத்தை எனது பதினைந்தாவது வயதில் பார்த்தேன், அப்பொழுதும் இதில் வரும் பாத்திரங்களின் படைப்பு புதிதாக உணர முடிந்தது.
இப்பொழுது பார்த்தாலும் அப்படிதான். இந்த படத்தை எந்த படத்துடனும் ஒப்பிட முடியாத இதன் உயர்ந்த தரம் என்ற உண்மை எனக்கு பிடிக்கவில்லை (??!!)
மேலும் இந்த படத்தில் இரண்டே அற்புதமான பாடல்கள் அவற்றை கூட நாம் ரசிக்கவில்லை என்ற உண்மை எனக்கு பிடிக்கவில்லை(???!!!).
இப்படியாக வித்தியாசாமான இந்த பகுதியை மேலும் வித்தியாச படுத்தி இருந்தார் கரு. பழனியப்பன். எல்லாரும் தனக்கு மணிரத்தினம் பிடிக்கும் பாலச்சந்தர் பிடிக்கும், பாரதிராஜா பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, எனக்கு மணிவண்ணன் பிடிக்கும் என்று சொன்னார் இவர் . ஏன்னா மணிவண்ணன் தான் "நூறாவது நாள்" மாதிரியான த்ரில்லர் கொடுப்பார் "கோபுரங்கள் சாய்வதில்லை" மாதிரி குடும்ப படமும் கொடுப்பார், "அமைதி படை" மாதிரி அரசியல் நையாண்டி படம் கொடுப்பார், "பாலைவன ரோஜாக்கள்" மாதிரியான எழுச்சி படமும் கொடுப்பார், "முதல் வசந்தம்" மாதிரியான கிராமத்து கதைகளையும் கொடுப்பார். ஒரு இயக்குனர் என்பவர் எல்லா மாதிரியான படங்களையும் கொடுக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் அந்த வகையில் அவரை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். அதை நான் வழி மொழிகிறேன்.
0 comments:
Post a Comment