முரண்பாடுகளும்.. சமன்பாடுகளும்..
சமீபத்தில் நடந்த கலைஞர் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை தொலைக்காட்சி வழி பார்க்க நேர்ந்தது. வழக்கம் போல் அவரவர் தங்களது ஜால்ரா வேலையை செவ்வனே செய்த மாதிரி தான் தோன்றியது. கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களும் கலந்தாய்வு செய்யப்பட தலைப்பும்...
கலைஞருக்கு அண்ணா விருது கிடைக்க காரணம்..
பேச்சு ஆற்றலே -- ஜெகத்ரட்சகன் (மத்திய அமைச்சர் )
பகுத்தறிவே -- ஆ.ராசா(மத்திய அமைச்சர்)
ஏழையின் சிரிப்பில் இறைவனை(!?) கண்டவர் -- பொன்முடி (தமிழக அமைச்சர்)
அரசியல் நாகரீகம் -- சுப.வீரபாண்டியன்
எழுத்தாற்றல் -- வைரமுத்து
நடுவராக -- கவிஞர் வாலி
சிறப்பு விருந்தினர் - ரஜினிகாந்த்
ஆ.ராசா பேசிய தலைப்பில் பகுத்தறிவிற்கும் நாத்திகத்திற்கும் வேறுபாடு இருப்பதாக சொன்னார். ஆனால் கடைசியில் இரண்டும் ஒன்று என்பது போலவே பேசிவிட்டு அமர்ந்தார். அது சரி அப்படிப்பட்ட பகுத்தறிவாளர் எப்படி ஏழையின் சிரிப்பில் "இறைவனை" காணமுடியும் ? நமக்கெதுக்கு வம்பு அப்புறம் இதுக்கொரு கவியரங்கமோ வழக்காடு மன்றமோ நடக்கும். வருடந்தோறும் இமயமலை சென்றுவரும் ரஜினிகாந்த் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார்..? அது சரி "அதிகார மைய" அழைப்பை எப்படி அவரால் தட்ட முடியும். எந்திரன் வேறு தாயாராகி கொண்டிருக்கிறது.
இந்த முரண்பாடு முடிச்சுகளில் சிலவை இங்கே
1. வைரமுத்து பேசும் போது சொன்னார் "கிணறு வெட்ட பூதம்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள், அதில் 'பூதம்' என்பது பேயையோ பூதத்தையோ குறிப்பன அல்ல என்றும். கிணறு வெட்டும் போது "குவியும் மண்" ஐம்பூதங்களில் முதல் பூதம் என்றும், கிணறு வெட்டும் போது தோன்றும் "வாயு" இரண்டாம் பூதம் என்றும், கிணறு வெட்டியவுடன் வரும் "நீர்" மூன்றாம் பூதம் என்றும், அந்த நீரில் தெரியும் "வானம்" நான்காம் பூதம் என்றும், தோண்டப்படும் "நிலம்" ஐந்தாம் பூதம் என்றும் சொன்னார். இதில் அவர் நாத்திகத்தையும் இணைத்து பேசினார். புரியுது, புரியுது நீங்க கேட்பீங்க இந்த ஐம்பூதங்களை சொன்னதே ஆன்மிகம் தான்னு?
இதுல குறிப்பிட்டு சொல்றது என்னன்னா "ரஜினிகாந்த் அவர்களே நன்றாக கவனியுங்கள் இதை" அப்படின்னு சொல்லிட்டு இதை சொன்னார் வைரமுத்து. ரஜினியால் என்னத்தை சொல்லமுடியும்..?
2. அதே வைரமுத்து திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் போது சொன்னார் தனது ஐந்து புலன்களையும் அடக்க தெரிந்த ஒருவனது வாழ்க்கை ஏழேழு ஜென்மத்திற்கும் பாது காப்பதாக இருக்கும் என்ற பொருள் பட வந்த திருக்குறளுக்கான விளக்கத்தில் கலைஞர் தனது விளக்க உரையில் "தனது வாழ் நாள் " முழுமைக்கும் என்று சொல்லி இருப்பார், என்று சொன்னார். அப்படி என்றால் ஒரு மனிதனின் வாழ்நாள் ஏழேழு பிறப்பும் என்று கொள்ளலாமா...? அப்படி சொன்னாலே அவர் பகுத்தறிவு "நெறி"இலிருந்து விலகியதாகிவிடுமே ...?
இதற்கு முன்பு ஒரு இடுகையில் சோ திருக்குறளையும் இந்து மதத்தையும் தொடர்பு படுத்தி சொல்லும் போது இதே திருக்குறளை தான் சொல்வார். அதை மீண்டும் ஒரு முறை பாருங்கள். வைரமுத்து பாணியில் சொல்வதென்றால் "திருக்குறளுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள நெருக்கம் தூரம் குறைந்தது, திருக்குறளுக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள நெருக்கம் துவாரம் கொண்டது".
முரண்பாடுகள் மட்டும் நம் கண்ணுக்கு தெரியவில்லை அதில் சில சங்கதிகளும் இருந்தன அவை...
.....> "நம்மை பிரித்தாளும் 'சதி"க்கு கால் முளைத்து தான் 'சாதி' ஆனது " என்று கலைஞர் எழுதிஇருந்ததாக சொன்னார் வைரமுத்து. கலைஞரின் மொழி ஆளுமைக்கு இதுவும் ஒரு உதாரணம்.
......>"கலைஞர் சிறையிலிருந்து சட்டசபைக்கு திரும்ப வருகிறார் அப்பொழுது காங்கிரசை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் கேட்டார் "மாமியார் வீடு எப்படி இருந்தது..?" கலைஞர் பதிலாக "உங்க வீடு நன்றாகவே இருந்தது" என்று" ஜெகத்ரட்சகன் சொன்னது. இதுவும் கலைஞரின் சமயோசித திறனுக்கு இதுவும் ஒரு சான்று.
.......>"உலக உவமைகளில் கலைஞரின் உவமை ஒப்பிட முடியாதது. என்னுடைய சுயநலத்திலும் பொதுநலம கலந்திருக்கிறது என்பதை சொல்ல "அழுக்கை தின்று மீன் எப்படி தடாகத்தை சுத்தப் படுத்துகிறதோ" என்ற உவமை." இதை எழுதிய போது கலைஞர்களுக்கு 23-வயதுதானாம். அறிவியல் ரீதியாகவும் இதில் உண்மை உண்டு அதே போல் உவமையும் சால பொருந்துகிறது. கலைஞரின் சொல்வன்மைக்கு இதுவும் ஒரு சான்று.
0 comments:
Post a Comment