இளையராஜாவிற்கு ஏன் aascar கிடைக்க வில்லை -- விகடன்.காம் கட்டுரை

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே இன்று ஆஸ்கருக்குச் சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டாடி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்பதில் அணுவளவும் மாறுபட்ட கருத்து இல்லை...
ஆனால், தமிழ்த் திரை இசையில் ஒரு சகாப்தமான இளையராஜாவை, இந்தச் சூழலில் நினைவுகூறுவதும் அவசியமே.

தமிழ்த் திரையுலகை இந்திய அளவில் கவனத்தைப் பெறச் செய்த கலைஞர்களில் முதல் வரிசை இடம் இளையராஜாவுக்கு உண்டு. அவரது அற்புதமான இசைப் படைப்புகள் பலவும் எவர் லாஸ்டிங் என்று சொல்லப்படுகிற ரகத்தைச் சார்ந்தவை!
தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படாத காலக்கட்டத்தில் தன்னால் இயன்ற வரையில் உலகத் தரத்துடன் போட்டியிட்டவர் இசை ஞானி!
* கடந்த 1976-ல் இருந்து இந்தியாவின் முன்னணி திரை இசைக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்வது.* 840-க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் பின்னணி இசையும், 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்தது.
* லண்டனில் சிம்பொனி இசையமைத்த முதல் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்று தந்தது...
இத்தகைய அரிய சாதனைகள் படைத்த அற்புதக் கலைஞன்... இந்தத் தலைமுறையினருக்கு ஏற்றாற் போல் கூட இசையமைத்து அதிரச் செய்து வருவதற்கு 'நந்தலாலா', 'நான் கடவுள்' சான்றுகள்!
உலகிலுள்ள திரைப்பட கலைஞர்களுக்கு 'ஆஸ்கர்'தான் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை ஏற்க முடியாது என்று திரையுலக ஜீனியஸ்கள் பலரும் அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் வருகின்றனர்.
ஆனால், உலக அளவில் ஒரு திரைக் கலைஞரின் புகழ் சென்றடைவதற்கு ஆஸ்கர் என்ற விருதுதான் முன்னிலைப் பெறுகிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை!
இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரேவுக்கு 1992-ல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே... அதே வருடத்தில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்கியது.
அதன்பின் தான் உலக அளவில் மட்டுமின்றி, சாதாரண ரசிகர்களிடையேயும் மகத்தான படைப்பாளி சத்யஜித் ரே பற்றி வெகுவாகத் தெரிய வந்தது என்பது உண்மை.
இப்படி உலக சினிமா கலைஞர்களுக்கு மிகச் சிறந்த அங்கீகாரமாகத் திகழும் ஆஸ்கர்... உன்னதக் கலைஞர் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லையே என்பது தமிழ் ரசிகர்கள் பலரது ஆதங்கமாக இருக்கலாம்.
ஆஸ்கர் என்பது, அதுவும் இசைக்கான ஆஸ்கர் என்பது ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும்... அது எப்படி இளையராஜாவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று வினவலாம்.
ரஹ்மானுக்கு அப்படி ஒரு வாய்ப்பாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படம் அமைந்துவிட்டது என்பதையும் அறிவோம்.
ஆஸ்கருக்குச் செல்லக்கூடிய வகையிலான ஆங்கிலப் படத்தில் இளையராஜா பணிபுரிய முடியாமல் போனதற்கு காரணமென்ன?
வாய்ப்பு..!
அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு அமையவில்லை...
இதற்குக் காரணம்... காலம்.
இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் இசை மீது மட்டுமே நாட்டம் செலுத்தினாரே தவிர, தனது இசைத் திறனை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அடிப்படையான வியாபார யுக்தி (இந்த யுக்தி ஒரு நல்ல கலைஞனுக்கு இருப்பதில் தவறேதுமில்லை) அவருக்கு இல்லை!
இப்படி... இளையராஜாவின் திறமையை உலக அளவில் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு காரணமான 'வாய்ப்பு' மற்றும் 'காலம்' ஆகியவற்றின் மீது தான் அவரது ரசிகர்களின் கோபமும் ஆதங்கமும் இருக்கிறது. இளையராஜாவுக்கு கிடைக்காத வாய்ப்புகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!
உலக அளவில் அங்கீகாரம் கிடைத்த பின்புதான் தாயகத்தில் உயரிய அங்கீகாரம் அளிக்கும் பழக்கத்தையும் மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கப்போவதற்கு முன்பே அவருக்கு உயரிய விருதுகளை மத்திய அரசு வழங்கினால், இந்தியாவை உலக நாடுகள் வெகுவாகப் போற்றும்.
ஆனால், பத்ம விருதுகளின் மூன்றாவது நிலையில் உள்ள பத்மஸ்ரீ விருதை (2000-ல்) மட்டுமே ரஹ்மானுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், இந்திய இசைமைப்பாளர் ரஹ்மானைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்குச் செல்கிறார். அங்கே 'அவார்ட்ஸ்' என்ற பக்கத்தை க்ளிக்கும் போது, முதலில் காணப்படுவது வெளிநாடு அளித்த உயரிய அங்கீகாரமான 'கோல்டன் குளோப்' விருதே! அதற்குப் பின்புதான் இந்தியா அளித்த பத்மஸ்ரீ இடம்பெறுகிறது.
இதைப் பார்க்கும்போது, 'உலக அளவில் சிறப்பாக அங்கீகரிகக்ப்பட்ட கலைஞனுக்கு, அவனது தாய்நாடு குறிப்பிடத்தக்க வகையில் உயரிய அங்கீகாரம் அளித்திருக்கவில்லையே," என்று தான் அந்த வெளிநாட்டவர் எள்ளி நகையாடுவார்.
ரஹ்மான் மட்டுமின்றி, அவரைப் போன்ற உயரிய கலைஞர்கள் பலருக்கும் காலதாமதமின்றி அங்கீகரிக்கும் வழக்கத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பது கலை விமர்சகர்களின் கருத்து.
உலக அளவில் கலைத்துறையில் இந்தியாவைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் வகையில் செயலாற்றி வரும் ரஹ்மானுக்கு காலதாமதமின்றி 'பாரத ரத்னா' விருது அளித்தால், இந்திய அரசின் அங்கீகாரத்துக்கே கெளரவமாக இருக்கக்கூடும்!
ரஹ்மானுக்காவது பரவாயில்லை... ஒரு பத்ம விருதைக் கொடுத்திருக்கிறது, மத்திய அரசு. ஆனால், இளையராஜாவுக்கோ... சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளோடு சரி!
ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, ஆஸ்கர் வரை இளையராஜா சென்று உரிய கவனத்தை ஈர்க்கவில்லையே என்று ஏங்கும் அவரது ரசிகர்களுக்கு... “அடுத்து வரும் மூன்று தலைமுறையினரின் ஐபாட்களில் கூட இளையராஜா பாடல்களுக்கு என்று ஒரு சிறப்பிடம் இருக்கும்" என்ற கணிப்பு மட்டுமே ஆறுதலைத் தரும்!


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP