ஹிட்லரை காந்தியால் வெல்ல முடியுமா.?

எனககு பிடித்த எழுத்துக்களில் ஜெயமோகன் எழுத்துக்களும் உள்ளது. சிவாஜி நடிப்பை பற்றி அவர் எழுதியதை சரி என்றே நான் அந்த கட்டுரையை படிக்கும் முன்பே எனககு தெரிந்த நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். அந்த வகையில் நான் ஒரு காலகட்டத்தில் காந்தியின் போராட்டம் குறித்தும் அவரது வெற்றி குறித்தும் சந்தேகமும், மறுப்புடமை கொண்டவர்களின் பேச்சை அடிக்கடி கேட்க நேர்ந்தது. அந்த கால கட்டத்தில் எனக்கும் காந்தியின் கொள்கைகள் தான் நம் நாட்டை மிகவும் பின் நோக்கி அழைத்து சென்றுள்ளதோ என்ற எண்ணம் இருந்தது. அதை இப்பொழுது யோசித்து பார்க்கும் பொழுது காந்தி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, அதுவும் அது உலகளாவியது என்பதை கேட்கும் பொழுது எனக்குள் இது எப்படி சாத்தியம் ... நான் வணங்கும் முருகனுக்கும், பிள்ளையாருக்கும், கிருஷ்ணருக்கும் கிடைக்காத உலகளாவிய அங்கீகாரம் எனககு இரண்டு தலை முறைகள் முன்னாள் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைத்தது என்று எண்ணும் பொழுது இன்னும் அதிகரித்தது அந்த சந்தேகம். இதை பொறாமை அப்படின்னு கூட சொல்லலாம் அது மிகை படுத்தலாக இருந்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. அவரது சுய சரிதையை பார்க்கும் பொழுது (நான் இதை முழுமையாக படித்ததில்லை) ஒரு சாதாரண மனிதன் எப்படி மகாத்மா ஆக முடிந்தது என்பதை சொன்னதன் மூலம் இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா ஜீவன்களுமே தங்களை மகாத்மாவாக உயர்த்திக்கொள்ள தகுதி படித்தவை என்றும் அது அந்த மனிதன் தனது ஏதாவது ஒரு காலகட்டத்தில் தன்னை அஹிம்சா மற்றும் உண்மை வழி திருப்பி கொண்டு அதற்காகவே வாழ்ந்து மடிவது. நான் சொல்ல வந்தது இதுதான் அதாவது ஒரு வாசகர் ஜெயமோகன் வலைப்பதிவில் கேட்டிருந்தார்
"நீங்கள் இட்லர் போன்றவர்களிடம் கூட காந்திய அணுகுமுறை வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா? உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து இட்லரை கொன்றிருக்காவிட்டால் அவனை வென்றிருக்க முடியுமா?
மேலும் காந்தி மக்களை ஒன்று திரட்டினார் என்பது சரி. ஆனால் விடுதலையை அவரா வாங்கி தந்தார்? அப்பொ்ழுது இருந்த ஆங்கில அரசு காலனியாக்க கொள்கையை கைவிட்டது தானே அதற்கு காரணம்."

இதற்கு பதிலாக ஜெய மோகன் சொன்னது இது ....

நீங்கள் படித்த அரசியல் எது என்பதில் ஐயமில்லை, நம்முடைய முதிரா மார்க்ஸியர்களின் ஒன்றரையணா வரலாறு. தயவுசெய்து அதை மறுபரிசீலனைசெய்யுங்கள். இல்லையேல் நீங்கள் மெல்லமெல்ல ஒரு அறிவாளராக [elite] உங்களைக் கருதிக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். கோடிக்கணக்கான மக்களை, அவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் வரலாற்றையும் பண்பாட்டையும், நிராகரித்து அவர்களுக்கு மேல் ஒரு உன்னத இடத்தில் உங்களை நிறுவிக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். மக்களை விடுதலைசெய்பவராகவும், மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு கொண்டவராகவும் உங்களை எண்ணிக்கொள்வீர்கள். ஒரு சிந்தனையாளன் சென்று சேரக்கூடிய ஆக அசிங்கமான இடம் அதுவே.அந்த இடத்தில் நின்றுகொண்டால் உங்களுக்கு அலாதியான அதிகாரம் ஒன்று கைவருகிறது. நீங்கள் அப்போது மக்களில் ஒருவர் அல்ல. ‘நம்ம மக்களுக்கு அறிவே கெடையாது’ என்று சலித்துக்கொள்ளும் மேம்பட்ட உயிரினம், அறிவுஜீவி. சோற்றாலடித்த பிண்டங்கள் என்றும் காசுக்கு விலைபோகும் விபச்சாரக்கும்பல் என்றும் கோடிக்கணக்கான மக்களை நீங்கள் வசைபாடலாம். வாய்ப்பு கிடைத்தால் அம்மக்களை துப்பாக்கி முனையில் நீங்கள் விரும்பியபடி கொண்டுசெல்லலாம். அவர்களின் நலனுக்காக அவர்களை எந்தப் போரிலும் ஈடுபடுத்தலாம். அவர்களின் எதிர்காலத்துக்காக அவர்களைக் கொன்றொழிக்கலாம். ஹிட்லரும், ஸ்டாலினும், மாவோவும், போல்பாட்டும், கிம் இல் சுங்கும் செய்ததுபோல.
அதன்பின் நீங்கள் கட்டளையிடுவதைச் செய்து, உங்கள் கோட்பாடுகளுக்கு நிரூபணங்களாக அமைந்து, உங்கள் சோதனைகளுக்கு எலிகளாக மாறி வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் மக்கள். இல்லாவிட்டால் மடியத்தக்கவர்கள்.. பல வருடங்களுக்கு முன் படித்த இக்கவிதை நினைவுக்கு வருகிறது–
தீர்வு
பெர்டோல்ட் பிரெஹ்ட்
ஜூன் பதினேழு கிளர்ச்சிக்குப்பின்னர்எழுத்தாளர் சங்கச் செயலாளர்ஸ்டாலின்கிராடில் வினியோகிக்கப்பட்டதுண்டுப்பிரசுரத்தில் சொன்னார்,மக்கள் அரசாங்கத்தின்நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.இரட்டை முயற்சி செய்தால் மட்டுமேஇனி அதை மீட்டெடுக்க முடியும்.இந்த நிலையில்அரசாங்கமேமக்களைக் கலைத்துவிட்டுவேறு மக்களை தேர்வுசெய்வதல்லவா எளிது?
நீங்கள் சொல்லும் வரலாற்றில் உள்ள மாபெரும் பிழையை உணர்த்தவே இதை எழுதினேன். வரலாறு என்று சொல்வது மக்கள். கோடானுகோடி மக்கள். அவர்களின் ஒடுமொத்த ஆசைகளும் கனவுகளும் பலங்களும் பலவீனங்களும்தான் வரலாற்றை முன்னகரச்செய்கின்றன. அந்த மக்களை தொகுத்து முன்னெடுப்பவனே வரலாற்றை முன்னெடுக்கிறான். காந்தி மக்களை திரட்டினார், ஆனால் வரலாறு தானாகவே நிகழ்ந்தது என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள அன்றைய இந்திய சமூக சித்திரத்தை ஓரளவேனும் புரிந்துகொண்டிருக்கவேண்டும். இந்தியாவில் நேரடியாக மக்கள் அரசியலில் பங்கேற்கும் மரபு இருக்கவில்லை. எனென்றால் இங்கே இருந்தது மன்னர் ஆட்சி. இந்தியாவில் மன்னர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாக இருந்தது மரபு மட்டுமே. அம்மரபை நிலைநிறுத்துபவர்கள் என்ற முறையில் மன்னர் மேல் மக்களுக்கு மறைமுக அதிகாரம் இருந்தது அவ்வளவுதான்.மக்களாட்சி என்பது இருநூறு வருடச் சிந்தனைக் கொந்தளிப்பினால் ஐரோப்பாவில் உருவானது.
பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவில் வலுவான அரசுகள் இல்லாமல் படையெடுப்புகளில் தேசம் சிதைந்து கிடந்த போது வெள்ளையர் வந்தனர். நிலையான அரசையும் சட்டம் ஒழுங்கையும், மேலான நீதி நிர்வாகத்தையும் அளித்தனர். ஆகவே இந்திய மக்களில் பெரும்பாலானவரக்ள் பிரிட்டிஷ் அரசை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் ஒரு பெரும்பகுதியினர் தங்கள் மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள். அம்மன்னர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தார்கள். இந்தியாவை பிரிட்ட்ஷார் ஆண்டது இந்த மாபெரும் நாடு அவர்களை முழுக்க ஏற்றுக்கொண்டிருந்தது என்பதனாலேயே.
ஆரம்பத்தில் சிலரே பிரிட்டிஷ் அரசின் மறைமுகச் சுரண்டல் நாட்டை ஓட்டாண்டியாக்குவதை உணர்ந்தார்கள். இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு எதிராக எழுந்த ஆரம்பகால கிளர்ச்சிகள் அனைத்துமே மிகையான வரிவசூல்முறைகளுக்கு எதிராக எழுந்தவை. கட்டபொம்மன், பழசிராஜா, வேலுத்தம்பி தளவாய், அல்லூரி சீதாராம ராஜு…அவையெல்லாமே அடக்கப்பட்டன.
பின்னர் படித்த வற்கம் ஒன்று இந்தியாவில் உருவாகி அவர்கள் அறிவுபூர்வமாக பிரிட்டிஷ் சுரண்டலை உணர்ந்தார்கள். மாபெரும் வங்கப்பஞ்சம் போன்றவை அதற்கான கண்கூடான ஆதாரங்களாக அமைந்தன. சுதந்திரம் குறித்தும் சுயாட்சி குறித்தும் கருத்துக்கள் உருவாயின. ஆனால் அவையெல்லாம் மிகச்சில நடுத்தரவற்க படிப்பாளிகள் மத்தியிலேயே இருந்தன.
அந்த எண்ணங்களை கோடானுகோடி இந்தியர் நடுவே கொண்டுசென்றவர் காந்தி. பிரிட்டிஷாரின் மறைமுகச் சுரண்டலை அப்பட்டமாக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன அவரது போராட்டங்கள். அன்னியத்துணி புறக்கணிப்பு, உப்பு காய்ச்சுதல் என எல்லா போராடன்களும் உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சியின் மேலோடமான நியாயத்தன்மைக்குள் இருக்கும் பொருளாதாரச் சுரண்டலை வெளிக்காட்டக்கூடியவை. அப்போராட்டங்களில் கோடிக்கணக்கான மக்களைப் பங்குபெறச்செய்தார். அந்த நோக்கத்துக்காகவே அவற்றை அவர் மிக எளிமையானவையாக அமைத்தார்.’நம்ம கடல், நம்ம தீ, நான் ஏன் உப்பு காய்ச்சக்கூடாது?’ என்ற எளிய கேள்வி ஒரு புதிய சமூக உருவாக்கத்துக்கான அடிப்படை.
அப்படி கோடிக்கணக்கான மக்கள் அரசியலுணர்வு பெற்றபின் அம்மக்களை சமூக மாற்றத்துக்கான செயல்களில் ஈடுபடச்செய்தார். கிராமப்பொருளாதாரத்தை மறு அமைப்புசெய்தல், சுகாதார உணர்வை உருவாக்குதல், கிராப்புறக்கல்வியை பரவலாக்குதல் என அதன் படிகள் பல. காந்திய இயக்கத்தால்தான் சாதியின் தனியறைகளுக்குள் வாழ்ந்த நம் சமூகம் ஒரு பொதுவெளிக்கு வந்தது. அங்கே அது மோதல்கள் முரண்பாடுகள் வழியாக ஒரு சமரசத்தளத்தைக் கண்டடைந்தது.
காந்தியை பத்தொன்பதாம் நூற்ராண்டு மார்க்ஸியத்தை வைத்து புரிந்துகொள்ள முடியாது. நம் கட்சி மார்க்ஸியர் அதையெ செய்கிறார்கள். அதற்கு ஓரளவாவது அண்டோனியோ கிராம்ஷியை அறிந்திருக்கவேண்டும். மேலைமார்க்ஸியத்தின் அடிப்படைகளை பரிச்சயம்செய்துகொண்டிருக்கவேண்டும். மார்க்ஸிய மத நம்பிக்கையாளர்களிடம் அதை எதிர்பார்க்க இயலாது
அதாவது, கிராம்ஷியின் மார்க்ஸியக் கலைச்சொல்லால் சொல்வதாக இருந்தால், காந்தி இந்தியாவில் ஒரு நவீன சிவில்சமூகத்தை [Civil society ] அமைத்தார். அந்த சிவில் சமூகம் பிரிட்டிஷாரை புறக்கணிக்க ஆரம்பித்தது. அந்தப்புறக்கணிப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் பிரிட்டிஷாருக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்திய சமூகம் கொடுத்த அனுமதியின் பேரில் இந்தியாவை ஆண்டவர்கள்.
எந்த ஒரு அரசும் அந்த சமூகம் அளிக்கும் கருத்தியல் அங்கீகாரம் மூலமே அதிகாரத்தில் இருக்கிறது. அதாவது அரசாங்கத்துக்கு அந்த சமூகம் மீது ஒரு கருத்தியல் ஆதிக்கம் இருக்கிறது. அதையே அது நேரடி அதிகாரமாகச் செயலாக்குகிறது. இந்தக் கருத்தியல் அதிகாரத்தை மார்க்ஸியக் கலைச்சொல்லால் ‘கருத்ததிகாரம்’ [Hegimony] என்று சொல்லலாம். அந்த ஆதிக்கத்தை மெல்ல மெல்ல பிரிட்ட்டிஷ் அரசு இழந்தது.
சிவில்சமூக உருவாக்கத்துக்கு நிகராகவே மெல்லமெல்ல ஓர் அரசியல் சமூகத்தையும் [Political society]காந்தியப்போராட்டம் உருவாக்கி எடுத்தது. தன் போராட்டங்களில் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தார் காந்தி. அதை மீண்டும் மார்க்ஸியக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமானல் நிலையுத்தம் [Static war] எனலாம். பேச்சுவார்த்தையில் அடைவனவற்றை முழுமையாகச் சொந்தமாக்கிக் கொண்டார். வரலாற்றைப் பார்த்தால் 1920 முதல் படிப்படியாக பிரிட்டிஷார் இறங்கி வந்திருப்பதை காணலாம். ஏனென்றால் அவர்கள் மக்கள் சக்தியை அஞ்சினார்கள்.
அதன்படி முதலில் இந்தியாவெங்கும் மாகாண அரசுகள் அமைந்தன. அந்த அரசில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது. ஆட்சியமைத்தது. சட்டங்கள் இயற்றியது. அதே சமயம் மைய அதிகாரத்துடன் போராடியது. அவ்வாறாக ஜனநாயகத்துக்கு நாம் பழகினோம். இன்று ஐரோப்பா அல்லாத நாடுகளில் வலிமையான ஜனநாயகம் வேருன்றியிருக்கும் நாடாக இந்தியா இருக்கிறதென்றால் அதற்கான காரணம் அந்த ஜன்நாயகப் பயிற்சிதான். ஒரு கட்டத்தில் அந்த அதிகாரத்தை உதறி மேலும் உரிமைக்காக முன்னகர்ந்தது காந்தியின் இயக்கம்.
இதன் கடைசி விளைவே நாம் பெற்ற சுதந்திரம். அந்தச் சுதந்திரம் வெள்ளையர் தட்டில் வைத்து கொடுத்துச் சென்றதல்ல. பல ஆப்ரிக்க நாடுகளில் மேலும் முப்பது வருடம் ஆங்கில ஆதிக்கம் நீடித்தது. ஏன், தென்னாப்ரிக்காவில் தொண்ணூறுகள் வரைகூட நீடித்தது அது. உங்கள் கோட்பாட்டின் படி பார்த்தால் தென்னாப்ரிக்க விடுதலையும் மண்டேலாவின் போராட்டத்தின் விளைவு அல்ல. ஆங்கிலேயர் மனமுவந்து அளித்தது.
மண்டேலா பேச்சுவார்த்தைகள்தானே செய்துகொண்டிருந்தார் என்று சொல்லலாமே? வெள்ளையருடன் பேசி சம்மதிக்க வைத்து அவர் விடுதலை பெற்றார் எனலாமே? அது போராட்டமே அல்ல சமரசம்தான் எனலாமே? ஆனால் அவரது வழியும் காந்தியம்தான். ஒருபக்கம் அவர் தென்னாப்ரிக்க பழங்குடிச் சமூகத்தை ஒரு நவீன ஜனநாயகச் சிவில்சமூகமாக உருவாக்கிக் கொண்டிருந்தார். மறுபக்கம் வெள்ளையர்களின் கருத்தியல்மேலாத்திக்கத்தை தகர்த்தார். அதுவே விடுதலையை சாத்தியமாக்கியது.
கடைசியாக, ஹிட்லரிடம் செல்லுபடியாகுமா சத்யாக்ரகம் என்னும் கேள்வி. காந்தியப்போராடம் என்பது ஒருவகை மன்றாடல் என்ற அளவில் புரிந்துகொண்ட மூடத்தனத்தின் விளைவு இது. டொமினிக் லாப்பியர்- லாரி காலின்ஸ¤க்கு அது புரியாததில் வியப்பும் இல்லை. அவர்களின் மனமே இயந்திரத்தன்மை கொண்டது. மேலும் அவர்களின் வெள்ளைய மேட்டிமையுணர்வு என்பது அந்நூலிலிலும் வலுவாகவே உள்ளது. காந்திக்கு நிகரான வரலாற்று நாயகனாக அவர்கள் மௌண்ட் பாட்டனை நிலைநாட்டுகிறார்கள். இந்தியாவுக்கு வெள்ளையர் விடுதலை ‘கொடுத்ததாகச்’ சொல்ல முனைகிறார்கள்.
ஹிட்லரின் வலிமை அவர் ஆயுதங்களில் இருக்கவில்லை. அவர் தன் சமூகத்தின் அங்கீகாரத்தை வென்றதில் இருக்கிறது. அந்தச் சமூகம் அவருடன் உறுதியாக நின்றது. ஹிட்லரை ஆதரித்த ஜெர்மனிய மக்கள் அனைவருமே பாவத்தில் ஊறிய குரூரமான மிருகங்கள் அல்ல. அவர் செய்தவையும் செய்யபோனவையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. போருக்குப்பின் தெரிந்த போது அவர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள். தேசியவெறியால் இனவெறியால் இட்டுச்செல்லப்பட்டார்கள் அவர்கள்.
அம்மக்களில் இருந்து உருவான ஒரு மாபெரும் சத்யாக்ரகப்போராட்டம் அம்மக்களின் மனசாட்சியுடன் பேசியிருக்க முடியும். அவர்களுக்கு உண்மையைச் சொல்லியிருக்க முடியும். போருக்குப்பின் அவர்களில் எழுந்த மனசாட்சியை போருக்கு முன்னரே கண்விழிக்கச் செய்திருக்கமுடியும். அதைச்செய்யும் வாய்ப்பிருந்தவர்கள் அங்கிருந்த இடதுசாரிகள். ஆனால் அவர்கள் வன்முறைப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதற்கான உதவிகளுக்காக சோவியத் ருஷ்யாவை நம்பியிருந்தார்கள். தேசியவெறி இயக்கமான நாசி இயக்கம் மிக எளிதாக இதைப்பயன்படுத்தியே அவர்களை ஓரம் கட்டியது.
ஹிட்லரை ஆதரித்த மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் அந்த அரசு மீது போர்தொடுத்தது ஐரோப்பிய உலகம். தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதனால் அம்மக்கள் அவ்வரசுக்கு உறுதியான ஆதரவளித்து கூடவே நின்றார்கள். உலகப்போர் அத்தனை நீண்டமைக்கும் பேரழிவுகள் இரு தரப்பிலும் உருவானமைக்கும் காரணம் அதுவே. இன்று ஹிட்லர் தோற்றமையால் அவ்வழி சரியே என்று பேசுகிறோம். வென்றிருந்தாரென்றால்? அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன என்பதை உலகப்போரை கூர்ந்து வாசித்த எவரும் அறிவார்கள். வென்றிருந்தாரென்றால் உலகமும் ஜெர்மனியும் மேலும் பேரழிவுக்குச் சென்றிருக்கும்.
ஹிட்லரிடம் அல்லது அதேபோன்ற சர்வாதிகாரியிடம் ஒரு சத்யாக்ரகப்போராட்டம் என்ன செய்யும்? அவரது அதிகாரத்தை அளிக்கும் சிவில்சமூகத்தின் மனத்தை மாற்றி அவரை தனிமைப்படுத்தும். ஒருவேளை அதற்கு சற்று காலம் தேவைப்படலாம். ஆனால் வன்முறை உருவாக்கும் அழிவுகளுடன் ஒப்பிடும்போது அதன் இழப்புகள் குறைவு, வெற்றி அனேகமாக உறுதிப்பட்ட ஒன்று.
சத்யாக்ரகம் போன்ற ஒரு போர்முறையை நாம் கற்பனாவாதம் சார்ந்து மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அது அறவுணர்வுகொண்டவர்களின் மனசாட்சியுடன் பேசும் என்பது உண்மை. அதைவிட முக்கியமான உண்மை என்பது அது கோடிக்கணக்கான மக்களின் யதார்த்த உணர்வுடன் பேசும் என்பது. எளிய மக்கள் வாழ விரும்புகிறார்கள். போரிடுவதற்கும் சாவதற்கும் அல்ல. எப்படியாவது தங்கள் லௌகீக அவலத்தை வென்று சற்று மேலான ஒரு வாழ்க்கையை நோக்கி நகரவே ஆசைப்படுகிறார்கள்.
உதாரணமாக இன்று போர்வெறியர்களாகச் சித்தரிக்கப்படும் சிங்கள மக்களேகூட இரண்டு முறை போரை நிறுத்திவிட்டு சமாதானத்துக்கு செல்வோம் என்ற உறுதிமொழியுடன் தேர்தலில் நின்ற இரு தலைவர்களை -சந்திரிகா குமாரதுங்கவையும் ரனில் விக்ரமசிஙவையும்– பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெறச்செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தமிழ் மக்களை ஒழிக்க அவர்கள் எண்ணுகிறார்கள் என நான் நினைக்கவில்லை. பட்டினியிலும் புறக்கணிப்பிலும் வாழும் மக்கள் எங்குமே ஒன்றுதான். அவர்கள் தேடுவது எப்படியாவது வாழ்ந்து விடமுடியாதா என்ற நம்பிக்கையை மட்டுமே..
காந்தியம் என்பது கோட்பாடு கொள்கை ஆகிய அனைத்துக்கும் மேலாக எளிய மக்களை முன்வைத்து நடத்தப்படும் உரிமைப்போராட்டம். தன் கனவுகளுக்காக அம்மக்களைப் பலியிடுவதில் நியாயமில்லை என உணர்ந்த ஒரு ஞானியின் வழிமுறை அது. மக்களை கலைத்துவிட்டு தங்களுக்குரிய மக்களை தேர்வு செய்ய விரும்பும் மேட்டிமையாளர்கள் அதை எதிர்ப்பது என்பது தீமை நன்மைக்கு எதிராக கொள்ளும் வெறி மட்டுமே.
--நான் சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்தது. நான் முன்னமே சொன்னது போல் எனது கருத்துக்களுடன் மிகவும் ஒத்துபோக இருந்ததால் இந்த கட்டுரை உங்கள் பார்வைக்காக.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP