ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3


என்னடா "தளபதி" இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தந்திடுச்சென்னு நினைச்சப்ப, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக "குணா" பார்க்க போனேன், எப்படியா இருந்தாலும் நம்மாளுதானே இசை. படம் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதை வெளில சொல்லிக்கலை. இந்த சமயத்துல ரஜினி-ன் அடுத்த படமான "அண்ணாமலை" இளையராஜா இல்லாம எடுக்கபட்டுச்சுன்னு, கேள்வி பட்டு ரொம்பவே நொந்து போயிட்டேன். இந்த முறை ரஜினி பிரிஞ்சதை ஏத்துக்க முடியலை, இந்த படத்தையே பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது கூட இளையராஜவிற்காக இல்லைன்னு நான் நம்பினேன். ஏன்னா ரஜினியை அவரது நடிப்புக்காக எத்தனை பேரு ரசித்தார்கள் என்று தெரியாது. ஆனா ரஜினி நட்பிற்கு, தன்னை வளர்த்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர் அப்படிங்குற குணத்தினாலேயே தான் எனக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சது. அப்படிப்பட்ட ரஜினி ராஜாவுடனான தனது நட்பை துண்டிச்சுக்கிட்டாரே அப்படின்னு நினச்சு மனசு ரொம்ப வெறுத்துடுச்சு அதனாலத்தான் அந்த படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அந்த படம் கூட பாலச்சந்தர் என்ற தனது குருவின் மேல் கொண்ட பக்தியினால பண்றார்னு நம்ப மனம் மறந்தது. அதாவது என்னையும் அறியாமல் ராஜாதான் என் மனசில் ஆழமா பதிஞ்சுட்டார். அப்படிங்கிறதை இந்த விஷயம் நன்கு உணர்த்தியது. சரி இனிமேல் நம் விருப்ப லிஸ்ட்-ல் ரஜினி இல்லை. அடுத்த வாரத்தில் இன்னொரு அடி, அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் ஒரு படத்தை மணிரத்தினம் இயக்குவதாகவும் அதற்கு ராஜா இசை இல்லைன்னும் ஒரு செய்தி. என்னடா இது நமக்கு வந்த சோதனை பின்ன சின்ன வயசிலிருந்து முதலிடத்தில் இருந்த ரஜினியையே ஒதுக்கியாச்சு. இப்ப என்னடான்னா விருப்ப இயக்குனரையும் இழக்கணும் போல இருக்கே. அப்போ மணிரத்தினம் பல கல்லூரி மாணவர்களின் விருப்ப இயக்குனர். சாமி கும்பிடுரப்ப எல்லாம் இந்த செய்தி பொய்யா இருக்கணும்னு வேண்ட ஆரம்பிச்சேன். ஆனா நான் சாமியை  சரியா கும்பிடலை போல, என் வேண்டுதல் பலிக்கல. அந்த படத்துக்கான விளம்பரம் வந்துச்சு, அதில் இசை ஏ.ஆர்.ரஹ்மான் அப்படின்னு போட்டிருந்துச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா ராஜா பார்க்காத ஆளுங்களா..? நிச்சயம் ராஜா ஜெய்ப்பார் அப்படின்னு நான் ஆணித்தனமா நம்புனேன். படம் ரிலீஸ் ஆகி மக்கள் எல்லாம் அந்த படத்தின் பாடலகளை வெகுவாக பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் கூட முதன் முதலாக சண்டை எல்லாம் போட்டேன். எல்லாரும் சொன்னார்கள் இதுல என்ன இருக்கு அன்றைக்கு எப்படி ராஜ பெரிய ஆளா ஆனாரோ அது மாதிரிதான் இதுவும் மேலும் ராஜாவும் சும்மா இல்லை அவரு நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணிட்டார்னு. மனம் நம்ப மறுத்துச்சு, கிட்டத்தட்ட இந்த கால கட்டத்துல தான் நான் முழு பைத்தியமானேன். அது எப்படி இவ்வளவு சாதனைகள் செஞ்ச ஒரு ஆளு ஒரு படத்துலையே கீழே போயிருவார்..? குமுதம் இதழில் "ரோஜா" படத்துக்கான விமர்சனத்துல இசை பற்றி குறிப்பிடும் போது "பாடல்களில் ஒரு புது தொனி தெரிகிறது. (இளையராஜாவிற்கு ஒரு சக்களத்தி)" அப்படின்னு போட்டிருந்தார்கள். ராஜாவிற்கு போட்டியா..? ஹ ஹா..எத்தனை பேரை பார்த்தவர்  ராஜா..? டி.ராஜேந்தர்,சங்கர்-கணேஷ்,பாலபாரதி,தேவா,ரவீந்திரன்,தேவேந்திரன் இப்படி பல பேரை சம காலத்தில் சர்வ சாதரணமாக ஓரம் கட்டியவர். அந்த பட்டியலில் இந்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்று.  ராஜாவை பற்றிய விஷயங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தின் பெயரும் விருப்ப லிஸ்டிலிருந்து தூக்கியாச்சு. "புதிய முகம்" என்று ஒரு படம் அதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அப்படின்னு சொன்னாங்க. அந்த படத்தை பார்த்தேன், அந்த படத்திலும் ஒரு குறை தெரிந்தது. சொல்ல மறந்துட்டனே "ரோஜா" படம் பார்த்த பொழுது எல்லோரும் படத்தையும் இசையையும் சொன்னபொழுது என் மனதில் அந்த படத்தை பற்றி ஆஹா என்றோ ஓஹோ என்றோ தோன்றவில்லை. சொல்லப் போனால் அந்த படத்தின்  பின்னணி இசையில் ஒரு குறையே தென்பட்டது. இதை சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் எனக்கு முழு பைத்தியம் பிடித்ததை உறுதி செய்தார்கள்.
சரி இனிமே நாம என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க. இந்த சமயத்துல கூட எனக்கு உதவியது ராஜாவின் பாடல் தான். 'எது வந்தால் என்ன எது போனால் என்ன என்றும் மாறாது வானம் தான்..". வான் போல இளையராஜா இருக்க என்ன கவலை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் கமலின் "தேவர் மகன்" வெளிவந்தது. எல்லா பாடலும் அருமையா இருந்துச்சு. ஆனா பாருங்க எல்லா ஊடகங்களிலும் விமர்சனங்களிலும் ரொம்ப அருமை பெருமையா எழுதாமல் இதெல்லாம் இளையராஜாவின் கடமை அதாவது இளையராஜாவிற்கு சாதரண விஷயம் என்பது போல. அடுத்து "ஜென்டில் மேன்","காதலன்" அப்படின்னு ஹிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால் அந்த காலத்திலும் இளையராஜா கொஞ்சம் கூட தரம் குறையாமல் பாடல்களை கொடுத்தார் உதாரணத்திற்கு சிலவை இங்கே "ராஜகுமாரன்","வள்ளி","சிறைச்சாலை","மகாநதி","பிரியங்கா","மகளிர் மட்டும்" இப்படி பல படங்கள் இவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு  எல்லாம் பெரிய அளவில் பேச படவில்லை, ராஜாவின் ரசிகர்களை தவிர. அல்லது இவை அந்த  பாடல்களுக்குரிய தகுதியான இடத்தை பெறவில்லை. இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தது..? ராஜாவை எல்லாரும் ஒதுக்கிய பொழுது என்னை போன்ற (முழு அல்லது அரை) பைத்தியங்களை எல்லாம் ஒரு தனி தீவில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டதை போலவே நான் உணர்ந்தேன்.  இதன் பிறகு ராஜா எவ்வளவோ ரொம்ப ரொம்ப சாதரண படங்கள் பண்ணி இருக்கிறார், சில படங்கள் ரிலீஸ் ஆகமலே இருந்திருக்கின்றன (பரணி,பூஞ்சோலை,காதல் சாதி இன்னும் பல)
 ஆனால் எந்த படமானாலும் அந்த படத்தின் ஆடியோ கேசட் அல்லது சி.டி. வாங்குவதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்தேன்.  இன்னும் ஞாபகம் இருக்கிறது அன்று "தேவதை" படத்தின் ஆடியோ ரிலீஸ் என்று. சாப்பிட வைத்திருந்த காசில் ஆடியோ கேசட் வாங்கிவிட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்தே நான் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். இதை நான் பெருமையாக இப்பொழுது கூட நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக இது எல்லாம் அதி  அற்புதமான இசையை வழங்கிய ஒரு மகா கலைஞனுக்கு செய்யும் ஒரு கடமையாகவே பார்த்தேன், பார்க்கிறேன். மேற்சொன்ன அந்த  படத்தின் பாடல்களிலும் நான் "இளமை ஊஞ்சலாடுகிறது" -வில் பார்த்த ராஜா தெரிகிறார். எல்லாரும் சொன்னாங்க ராஜா ஹிட் டைரக்டர்களின்  படத்திற்கு இசை அமைப்பதில்லை, அவர் முன்னாடி பண்ண மாதிரி அவர் இசை அமைச்சாலே படங்கள் ஓடணும்னு எதிர்பார்க்க முடியாது, அவரால் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாதிரி இசை அமைப்பதில்லை, அவருக்கு தலைகனம் அதிகம், இயக்குனர்கள் சொல்வதை கேட்பதில்லை தனக்கு தோன்றியவற்றை தான் இசை அமைக்கிறார், இப்படி பல குற்றச்சாட்டுகள். நான் எதையும் நம்புவதில்லை, சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் (ஒரு வெறியனா) என்னிடத்தில் நியாயமான பதில்கள் இருக்கு. ஒரு விஷயம் ராஜா 90 களுக்கு பிறகு நல்ல பாடல்களை தருவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு லிஸ்ட்..
பூமணி, ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி,கட்டுமரக்காரன்,பூந்தோட்டம்,அவதாரம்,வீட்ல விசேஷங்க, காக்கை சிறகினிலே,இவன்,HOUSEFULL,காதல் கவிதை,என்னருகே நீ இருந்தால், சக்கரை தேவன்,வியட்நாம் காலனி,பிரியங்கா,ஜூலி கணபதி,காத்திருக்க நேரமில்லை,காதல் சாதி(வெளியாகவில்லை இதுவரை)
இந்த லிஸ்ட் இன்னும் பெரியது, இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் கேட்டுவிட்டு இந்த பாடல்கள் ஏன் அவை வெளிவந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் போனது என்பதற்கு காரணம் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் இளையராஜா ஏன் ஹிட் இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்றும், ஏன் தனக்கு தோன்றியவற்றை மட்டும் இசை அமைக்கிறார் என்றும்.   இதோ இன்றைக்கு இந்த அளவு வந்தபிறகும் கூட இளையராஜாவை அந்த இடத்திலிருந்து இறக்க மனசு வரவில்லை, எனக்கு தெரிந்து இறக்கும் வரை இப்படியேதான் இருப்பேன். இதை பிடிவாதம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏன்னா இன்றைய பழசி ராஜா வரை ராஜாவின் பாடல்களை என்னால் அன்று எப்படி "முரட்டு காளையை" ரசித்தேனோ அதே முழு மனதுடன் ரசிக்க முடிகிறது.
நான் அடித்து சொல்றேன் வருங்காலங்களில்  இளையராஜாவால் இன்னொரு "மௌன ராகம்","சிந்து பைரவி","முதல் மரியாதை" தர முடியும். இதற்கு அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உதவுவான்.  இளையராஜாவை இன்று மதிக்காமல் அல்லது அவரது இசையை உதாசீனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராஜா ஒரு இசை பெருங் கடல் அதை நீங்கள் போற்றி புகழ வேண்டாம் எங்களைப் போல், ஆனால் குறைந்த பட்சம் குறை சொல்லாமலாவது இருக்கலாமே. இதை நீங்கள் ராஜாவுக்கு செய்யும் மரியாதையாக கூட நினைக்கவேண்டாம், இசைக்கு செய்யும் மரியாதையாக நினையுங்கள். இசை வேறுபாடுகளை களைய கூடியது, இங்கு வேண்டாமே விரோதம்.   இதை சொன்னால் என்னை கிறுக்கன் என்கிறார்கள்.


1 comments:

isaignanibakthan January 7, 2011 at 5:07 AM  

முதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகை தருகிறேன்.. மிகவும் சிறப்பான 'எண்ணங்கள்'..
இசைஞானியைக் குறித்த உங்கள் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!!

வாழ்க இசைஞானி,

இசைஞானி பக்தன்.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP