பாரதியை சாரா தீ -- சாதி



"பாரதியும் சாதீயும்" -- பற்றி நண்பர் ஒருவர் சரியான தகவல்களை நான் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், பாரதி சாதி பற்றுள்ளவர் தான் என்றும் சற்று விரிவாகவே கூறியிருந்தார் (படிக்காதவர்கள் "பாரதியும் சாதீயும்" தலைப்பின் கீழ் வந்துள்ள கமெண்ட்ஸ் பகுதியை பார்க்கவும்).
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதன் முதலில் நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டால் எப்படி அதற்கு செயல்படனும்னு நமக்கு ஒரு கணம் தோன்றாது. கிட்டத்தட்ட அப்படி நிகழ்ந்ததுதான் பாரதியை பற்றிய அந்த கட்டுரை படித்த பொழுது ஏற்பட்டது. அதை எழுதியவர் பெயர் வே.மதிமாறன் , இவர் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார் என்று அவரது ஒளி (வீடியோ) காட்சி பார்த்த பொழுது தெரிந்து கொண்டேன். அவரது வலைத்தளத்திற்குரிய முகவரியை நான் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை அதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்து கொள்ள வேண்டியதாயிற்று. நிச்சயம் வரும் காலங்களில் அந்த வலைப்பதிவை கடந்து வர நேரிட்டால் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். அதனால் இதற்கு மேலும் காலம் கடத்த வேண்டாம் என்று இந்த பதிவை இடுகிறேன்.
பாரதியாரின் பல பாடல்கள் சாதி ஒற்றுமையை சுட்டிக்காட்டியுள்ளது. இது நமக்கும் தெரியும், உதராணத்திற்கு சிலவை இங்கே..
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதியராயினரும் ஒன்றே - அன்றி
வேறு குலத் தினராயினும் ஒன்றே
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்போர் அன்றோ
--இந்த வரிகள் "வந்தே மாதரம் என்போம்.." எனத்தொடங்கும் பாடலில் வரும் சரணம். "ஈனப் பறையர்களேனும்" -- என்று சொன்னதன் மூலம் தன்னுடைய பார்ப்பன குல அறிவை காட்டிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. தயவு செய்து அடுத்த வரியையும் பாருங்கள் அவர்கள் அனைவரும் என்நாட்டு மக்கள் என்று அவர் உரிமையுடன் கூறுவதை. முதல் வரியில் கண்டது தவறென்றால் இரண்டாவது வரியில் உள்ள உரிமையையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்..?
கடவுளை கூட "அவனே" என்று விளித்தல் நாம் பல பக்தி பாடல்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் கண்டதே. இது ஒரு வித உரிமை தான். பாரதி இங்கே சொன்னதும் அப்படித்தான், ஏன் பாரதியே பராசக்தியை அப்படி விளிப்பதை "காணி நிலம் வேண்டும் ... " பாடலில் காணலாம்.


இன்னொரு குற்றச்சாட்டாக "சிந்து நதியின் இசை நிலவினிலே.." எனத் தொடங்கும் பாடலில், "காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான், காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்..." 'காசி', 'காஞ்சி' இரண்டையும் இணைத்து பேசியதும் அவரது சாதி பற்றை விளக்குவதாக வே. மதிமாறன் சொல்லி இருந்தார். நான் இதை இப்படித்தான் பார்க்கிறேன், காசியிலிருந்து பேசும் புலவர்கள், காஞ்சியில் உள்ள சாமியாரிடம் தானே பேசுவார்கள் .. பின்ன ஈரோட்டில் உள்ள கவுன்சிலர் கூடவா பேசுவர் ...? ஒரு கவிஞன் என்பவன் எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் அல்லவா..? இதில் என்ன குறை...? ஏன் சிதம்பரம் அல்லது திருத்தணியை சொல்ல வேண்டியதுதானே..? அப்படின்னு இன்னொரு கேள்வியும் கேட்கலாம்...? காசியில் உள்ள "கா"வும் காஞ்சியில் உள்ள "கா" வும் தானே ஒரு எதுகை மோனைக்கு கூட சொல்லி இருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது..?


இதை எல்லாம் விட மிகப் பெரிய உண்மை, பாரதி தன்னை 'பகுத்தறிவாளி' என்று என்றாவது சொன்னாரா..? ஆரம்பம் முதல் கொண்டே அவர் 'காளியையும்' , 'சர்வேசரனையும்' ,'எமனை எட்டி உதைப்பேன்' என்று தானே சொல்லி வருகிறார் . அவர் இந்து கடவுளை துனைக்கழைத்தால் என்ன குற்றம்...? அவர் காசியையும், காஞ்சியையும் இணைப்பதில் தவறோ, வியப்போ இல்லையே..?


அப்புறம் இன்னொரு குற்றச்சாட்டு வர்ணாசிரமத்தை ஆதரித்தார் பாரதியார் என்பது. "வேதமறிந்தவன் பார்ப்பான்.." என்றார் சரி, ஆனால் தயவு செய்து அதற்கு கீழ் வரும் வரியையும் பாருங்கள் "தொண்டரென் றோர் வகுப்பில்லை .." என்று சொல்லி யாரும் அடிமை என்று இல்லை என்று சொல்கிறாரே..? அதை எப்படி எடுத்துக்கொள்வது..? அதே பாடலில் "சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தனில் செழித்திடும் வையம் ..." என்று சொல்கிறாரே அதை எப்படி எடுத்துக் கொள்வது..? பூனை பாட்டில் கூட வேறு வேறு வண்ணங்களில் இருந்தாலும் யாரும் ஓர் குலம் என்று சொல்கிறாரே அதில் என்ன சாதி பாகு பாடுகளை சொன்னார் பாரதி என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இன்னும் ஒரு படி மேலே போயி, எல்லா மதத்தினரும் ஒன்றே என்று சொல்கிறார். இப்படி அவர் மதநல்லிணக்கம், சாதி ஒற்றுமை என்ற விஷயங்களை தன் கவிதை நெடுக பதிய வைத்தே சென்றுள்ளார் .

அப்புறம் பாரதியின் போதை அடிமை பற்றி சொன்னார்கள், அதை பற்றிய தகுந்த விஷயங்கள் வலையில் கிடைக்க வில்லை, விளக்கமாக சொல்லும் புத்தகமும் கையில் இல்லை எனவே அதை பற்றி தெரிந்த வுடன், விளக்கமாக சொல்கிறேன்.

இறுதியாக ஒரு விஷயம்...பாரதியின் சில வரிகள் சொல்லி இருப்பதை மட்டும் பார்க்காமல், முழு பாடலையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது தெளிவாக விளங்கும். சம காலத்தில் எல்லாரும் விமர்சனத்திற்குள்ளாவது என்பது இயல்பு ஆனால் அந்த தனிப்பட்ட நபரின் மறைவுக்கு பின் வரும் சந்ததிகள் அவரது விமர்சனங்களை புறம் தள்ளி, அவரது பெருமைகளை எடுத்துரைப்பது அவரது விமர்சனத்தை மறைக்கும் எண்ணம் அல்ல. அவரது வாழ்க்கையின் அடி நாதமாக அமைந்த உயரிய கொள்கைகளுக்கு கொடுக்கும் மரியாதை. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொண்டாலும் மகிழ்வே.

பாரதியை தீண்டாத தீ சாதி.


4 comments:

Anonymous,  October 5, 2009 at 11:13 PM  

சார், சில பேர் வேலை மெனக்கேட்டு விளம்பரம் வாங்க இப்படி பாரதி திட்டி புழைப்பை ஓட்டுகிட்டு இருங்காங்க. அவர போட்ட புத்தகத்தை எல்லாம் அவரே படிப்பது இல்லை. சும்மா அந்த காமேடி பீஸை எல்லாம் லூஸ்ல விடுங்க.

passerby October 6, 2009 at 7:38 AM  

நான் இப்பதிவை முன்பு பார்க்கவில்லை.

படித்தேன். தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால், நான் சுட்டிய இப்பாடலை விட்டுவிட்டீர்கள்:

"முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்-ஓதுவார்;
மூன்று மழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்ம்மைப் பார்ப்பார்-இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்"
---------------------------------------------
இதற்கும் ஒரு சாக்கு வரலாம்.

மேலும் நீங்கள் பாரதியின் பாடல்களை அடிப்படையாக வைத்துத்தான் எழுதுகிறீர்கள். பாரதியின் தெளிவான கருத்துகள் அவர் கட்டுரைகளில் மண்டிக்கிடக்கின்றன.

என் கருத்துகள். இவற்றை tentative கருத்துகள் எனச் சொல்லலாம். ஏனெனின், நானும் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். என் வலை பதிவு தற்சமயம் பாரதி பற்றிய கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு வருகிறது. முடிவில் என் முடிபான கருத்து வரும்.

இங்கே என் tentative கருத்து என்னவென்றால்,

பாரதி இந்துத்வாவினரின் கருத்தையே சொல்கிறார். அஃதாவது, கீதையில் சொன்ன வருணக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறார். வருணக்கொள்கை கிருஷ்ணப்ரமாத்மா படைத்தது; தானே அதை மீறமுடியாது என்று ப்ரமாத்மாவே அதில் சொல்லியும் விட்டார்!

இக்கொள்கை இந்து மதத்தில் ஆணிவேராகும். அதில், சாதிகள் சொல்லப்படவில்லை. மாறாக, அவரவருக்கு விதிக்கப்பட்ட தொழிலை அவரவர் செய்துவந்தால் நாடு நலம்பெறும். இங்கு ஏற்றத்தாழ்வு இல்லை. இதன்படி, வேதம் ஓதுதல் பார்ப்பனருக்காகும். அவர்கள் அதைச்செய்தால், நாடு நலம் பெறும். பூனைப்பாட்டில் இதைத்தெளிவாக விளக்குகிறார்.

”ஒன்றாக வாழலாம்..வெவ்வேறு வருணத்தராயிருந்துகொண்டே..எப்படி வெவ்வேறு நிறத்துப்பூனைக்குட்டிகள் ஒர் தாய்க்குப் பிறந்து ஒன்றாக வாழ்கிறதோ அப்படி.”

மதிமாறன் என்ன சொன்னாரென்பது முக்கியமல்ல. நாம் எப்படி பாரதியைப் புரிந்துகொண்டோம் என்பதுதான் முக்கியம்.

நீங்கள் இந்து மதத்தைப் புரிந்தால்தான் பாரதியைப்புரிய முடியும்.

சாதி வேறு. வருணம் வேறு. சாதிகள் வேண்டா. வருணம் வேண்டும் என்பது பாரதியில் கொள்கை.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ ‘ஆனால், வருணங்கள் வேண்டும் பாப்பா. அது கிருஷ்ணபரமாத்மா தந்தது பாப்பா’

இதில் என்ன தவறு காண்கிறீர்கள்? ஒரு இந்துவானவன் இந்துமதக்கொள்கையை நம்புவது தவறா?

பாரதி, பகவத்கீதையும் மொழிபெய்ர்த்திருக்கிறார். படிக்கவும்.

முடிவெடுக்காதீர்கள் தயை செய்து. போகபோக உங்களுக்கு தெரியும்.

passerby October 6, 2009 at 7:46 AM  

உங்கள் தலைப்பு சரி; "பாரதியை சாரா - தீ...சாதி."

அவரைச்சாரவில்லை. மற்றவரைச்சார்ந்தது.

வருணக்கொள்கை சாதிகளைப்படைத்தது.
அதைச்செய்தவர் பார்ப்பனரென்று அவர்களைத்திட்டுகிறார் பாரதி.

தன்மீதி சாதியெனும் தீக்கதிர்கள் படாமல் பார்த்துக்கொண்ட பாரதி, மற்றவர்கள் மீது படாமல் பார்த்துக்கொள்ள முடியவில்லை. யாராலும் முடியவில்லை. இறுதியில் அந்நெருப்பில் வெந்தவர் தலித்துகள்.

passerby October 6, 2009 at 8:02 AM  

//அவரது வாழ்க்கையின் அடி நாதமாக அமைந்த உயரிய கொள்கைகளுக்கு கொடுக்கும் மரியாதை. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொண்டாலும் மகிழ்வே. //

இது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

பாரதியை எப்படி பார்க்கவேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் குறுக்கிடமுடியாது. பாரதி ஒரு பொதுச்சொத்து இன்று. அவரின் நூலகள் அரசுடைமையாக்கப்பட்டு விட்டன. எனவே, எவரும் தனியுரிமை கொண்டாடமுடியாது. பார்ப்பனர் வீட்டுச்சொத்தென்றால் அது பாரதிக்கு கெட்டபெயரைத்தான் தரும். அப்படித்தான் அவர்கள் நினைத்து தங்கள் வலைபதிவுகள் பாரதியின் படத்தைப் போட்டுக் கொண்டாடுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை - ஒரு சமூக நாயகன் (social hero) னின் பாதிப்பு விமர்சனத்துக்குள்ளாகவேண்டும் குணம் நாடி, குற்றம் நாடி. அவன் குற்றங்களும் தவறாமல் சுட்டிக்காட்டப்படவேண்டும். அது ஒரு சமூகக் கடமையாகும்.

உங்கள் கருத்து, ”குற்றங்கள் மறைக்கப்படவேண்டும். நல்லதை மட்டும் எடுத்துகொள்ளவேண்டும்” என்பதே. அப்படியென்றால், குற்றங்களைக் களைந்தபின்னரே, அவன் செயல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்படி நடக்கிறதா? இல்லையே!

A fair discussion on Bharati is essential in the interests of society.

We must respect the sentiments of dalits like madhimaaran and paarppanars like the Anonymous wrtier and other hero-worshppers of Bharati here.

Both views should be out in the open. Only then, it is possible for the public to exercise their choices.

We owe our duty to society, not to Bharati.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP